கொரோனாவிலிருந்து பிழைத்த உலகின் அதிக வயதானவர்!



பிரான்ஸில் பிறந்து, வளர்ந்தவர் லூசிலி ராண்டன். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனாதைக் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக பணி செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 28 வருடங்களுக்கு மேலாக இந்தப் பணியில் தொடர்ந்தவர், கடவுளுக்குச் சேவை செய்ய கன்னியாஸ்திரியானார். அதற்குப் பிறகு தனது பெயரை ஆந்த்ரே என்று மாற்றிக்கொண்டார்.  

இன்றும் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையைத் தொடரும் லூசிலியை சகோதரி ஆந்த்ரே என்று பிரான்ஸ் தேசமே அழைக்கிறது. ஆம்; பிரான்ஸ் தேசத்திலேயே அதிக வயதானவர் இவர்தான்.
உலகில் அதிக வயதானவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருந்த கேன் தனாகா என்பவர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார். அதனால் உலகில் அதிக வயதான வாழும் மனிதர் என்ற பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் சகோதரி ஆந்த்ரே.  

இப்போது ஆந்த்ரேவின் வயது 118. தவிர, உலகின் அதிக வயதான கன்னியாஸ்திரி, கோவிட்டிலிருந்து பிழைத்த உலகின் அதிக வயதானவர் போன்ற பட்டங்களுக்கும் சொந்தக்காரர் இவர். சாக்லேட் போன்ற இனிப்புகளும், தினசரி அருந்தும் ஒரு கிளாஸ் ஒயினும்தான் தனது வயதின் ரகசியம் என்கிறார் ஆந்த்ரே.

த.சக்திவேல்