உஷ்ஷ்ஷ்! அது மட்டும் சீக்ரெட்... கண்சிமிட்டும் கீர்த்தி ஷெட்டி



‘உப்பண்ணா’ தெலுங்குப் படத்தில் விஜய்சேதுபதிக்கு மகள்; ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் நானியுடன் ஒரே முத்தம்... ஓஹோவென வைரல் ஹிட்;  இதோ பட்டையைக் கிளப்பும் லிங்குசாமி இயக்கத்தில் ராம் நடிக்கும் ‘த வாரியர்’ பட புல்லட் சாங்...; டப்ஸ்மாஷ் ஸ்டார்... என கீர்த்தி ஷெட்டியின் கிராஃப் எகிறத் தொடங்கியுள்ளது. எல்லாவற்றுக்கும் சிகரமாக இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஹீரோயினும் கீர்த்திதான். போதாதா..? யாருப்பா அந்த பொண்ணு... என கோலிவுட் வட்டாரம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்ட்ரோ ப்ளீஸ்..?

எந்த ஒரு சினிமா பின்னணியும் கிடையாது. சினிமாவைப் பத்தி பெருசாவும் எனக்கு எதுவும் தெரியாது. நடிப்பதற்காக முறைப்படி டிரெயினிங் கூட எடுத்துக்கல. ஆனா, நான் ஓகே சொல்கிற கேரக்டர் ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசமா இருக்கணும்னு மட்டும்தான் மனசுல வச்சுக்குவேன். கதை கேட்கும் போது கூட நானும், அம்மாவும் சேர்ந்துதான் கேட்போம். ரெண்டு பேரும் சேர்ந்து இந்த கேரக்டர் எந்த அளவுக்கு எனக்கு சூட்டாகும்... முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் என்ன வித்தியாசம்... இப்படி பேசி முடிவு எடுத்துதான் ஓகே சொல்வோம். ( கீர்த்தி ஷெட்டி பிறந்தது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில். 2003 செப்டம்பர் 21ல் பிறந்த கீர்த்திக்கு வயசு பதினெட்டு.)

உங்க சினிமா கரியருக்கு இன்ஸ்பிரேஷன் யார்?

அமீர்கான் சாரைப் பார்த்தால் நாம கொடுத்த காசு வீண் போகலைன்னு தோணும். அவருடைய பெர்ஃபாமென்சும் சரி... டெடிகேஷனும் சரி... இப்ப வரைக்கும் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனா, ரோல்மாடலா இருக்கு. அவருடைய கேரக்டர் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிச்சயம் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. அதைத்தான் நானும் மனசுல எடுத்துக்கிட்டேன்.

(சைக்காலஜி படித்த கீர்த்தி ஷெட்டிக்கு துளு, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் புரியும். பல மொழிகளுக்கு சொந்தக்காரர்).ரொம்ப சின்ன வயதிலேயே நடிக்க வந்துட்டீங்க... இப்ப உங்க சினிமா பயணம் எப்படி இருக்கு? ஆமா... 13 வயசுல விளம்பரப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பவே எனக்கு நிறைய பேரை சந்திக்கவும், மனிதர்களைப் புரிஞ்சுக்கவும் பிடிச்சிருந்தது.

தொடர்ந்து இருபதுக்கும் மேலான விளம்பரப் படங்கள்... அதன் மூலமா விஜய் சேதுபதி சார் கூட ‘உப்பண்ணா’ படத்தில் வாய்ப்பு கிடைச்சது. முதல் படமே நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கற கேரக்டரா அமைஞ்சதுதான் எனக்கு பிளஸ். அந்தப் படம் கொடுத்த வாய்ப்புதான் அடுத்தடுத்த படங்கள் எனக்கு ஸ்பெஷல் கேரக்டர்களா கொண்டுவந்து சேர்த்ததுன்னு சொல்லலாம். நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன்... எதையும் எதிர்காலத்துக்காக திட்டமிடவும் மாட்டேன். இந்த நிமிஷம் கிடைச்சிருக்கு, முழுமையா சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பேன்.
அப்படித்தான் இப்ப எனக்கு கிடைச்சிட்டு இருக்கற ஒவ்வொரு வாய்ப்பையும்  பயன்படுத்தி என்னால என்ன உழைப்பைக் கொடுக்க முடியுமோ கொடுக்கறேன்.

ஆனா, நிச்சயமா சினிமாவில் என்னுடைய பயணம் தொடரணும் அப்படிங்கறது மட்டும்தான் என்னுடைய எண்ணம். (மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தியின் அப்பா கிருஷ்ணா ஷெட்டி, ஒரு பிசினஸ்மேன். அம்மா  நித்தி ஷெட்டி ஃபேஷன் டிசைனர்). உங்க ட்ரீம் ரோல் என்ன? நடிக்கிற ஒவ்வொரு கேரக்டருமே எனக்கு ட்ரீம் ரோல்தான். எந்த கேரக்டர் என்னுடைய ஆக்டிங்குக்கு சவால் கொடுக்குமோ அதுதான் என்னுடைய ட்ரீம் ரோல். கூடவே ஆக்‌ஷன், ஸ்டண்ட் பேக்ரவுண்ட்ல ஒரு படம் செய்யணும்னு சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை இருக்கு.

(கீர்த்தி ஷெட்டிக்கு ஒரு சகோதரன், ஒரு சகோதரி. முதல் படமாக ஹ்ருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ இந்திப் படத்தில் வரும் மாணவர்களில் ஒருவராக நடித்திருப்பார்).
ஹீரோயின்களின் சம்பளம்... வளர்ந்து வரும் நடிகையாக உங்களின் பார்வை என்ன?

நான் கேள்விப்பட்ட வரைக்கும் முன்பு இருந்த நிலையை விட இப்ப எவ்வளவோ மாறி யிருக்கு. முன்பெல்லாம் ஹீரோவுடைய சம்பளத்தை கணக்கிடும் போது ஹீரோயின்கள் சம்பளம் ஏணி வைத்தால் கூட எட்டாது. இப்ப அந்த நிலை மாற ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சிலகாலத்துல நிச்சயம் இதில் பெரிய சேஞ்ஜ் உண்டாகும்னு நம்புறேன்.
(கீர்த்தி ஷெட்டிக்கு கேரளாவும் கேரளாவைச் சார்ந்த இடங்களும் எப்போதும் ஃபேவரைட்).

‘உப்பண்ணா’ தொடங்கி ‘ஷியாம் சிங்கா ராய்’ வரையிலும் உங்கள் கேரக்டரில் ரொமான்டிக் அதிகமாகவே இருக்கு... எப்படி ஹேண்டில் செய்யறீங்க..?
நான் முதல் படம் செய்யும்போது மைனர்.அப்போதிருந்து இப்போது வரையிலும் எங்க அம்மா எப்பவுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பாங்க. ‘உப்பண்ணா’ படத்தினுடைய பாடல் காட்சிகள் மேக்கிங்கில் கூட பிருந்தா மாஸ்டர் கூடவே இருந்தாங்க. என்னுடைய கேரக்டரையும் சரி அந்த காட்சிகளையும் சரி  ரொம்ப பக்குவமா செய்தாங்க... நிறைய கேமரா டிரிக்ஸும் அதிலே இருக்கு.

(கிரிக்கெட் மேட்ச்சை ஆர்வமாகப் பார்க்கும் கீர்த்தி, எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆட்டம் என்றால் உலகத்தையே மறந்து டிவி முன்பு அமர்ந்து
விடுவாராம்).லிங்குசாமியின் ‘த வாரியர்’?

தமிழ்ப் படங்களில் எனக்கு ரொம்ப ஃபேவரைட் ‘பையா’ படம். அந்தப் படத்துல ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு சூப்பரா இருக்கும். அந்தப் படத்தினுடைய டைரக்டர் லிங்குசாமி சார் கூட வேலை செய்யறதை என் அதிர்ஷ்டமா நினைக்கறேன். படத்துல ஹீரோவா ராம் போத்தினேனி. அவர் ஒரு பவர் ஹவுஸ்னுதான் சொல்லணும். எங்கிருந்து அப்படி ஒரு
எனர்ஜி கொடுப்பார்னு தெரியாது. அவரைப் பார்க்கும்போது நாம இன்னும் எனர்ஜியா டான்ஸ் ஆடணும்னு தோணும். அப்படித்தான் ‘புல்லட்...’ சாங் இப்ப செம ஹிட் ஆகியிருக்கு.

(கீர்த்திக்கு ஃபிட்னஸ், உடற்பயிற்சி, டயட்... இந்த வார்த்தைகள் எல்லாம் அலர்ஜியாம். ஆனால், அவரின் ஒரே  ஃபிட்னஸ் சீக்ரெட் டான்ஸ்).
வெல்கம் டு தமிழ் சினிமா?

ஆக்ச்சுவலி ‘உப்பண்ணா’ படம் தமிழ்ல டப்பிங்கூட ஆகலை... ஆனா, விஜய் சேதுபதி சார் நடிச்ச காரணம் தமிழ்மக்கள் கிட்ட ரீச் ஆகியிருக்கு. அப்போ இருந்தே எனக்கு தமிழ் மக்கள்கிட்ட இருந்து ஆதரவு கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு சப்போர்ட் தமிழ் ஆடியன்ஸ் கிட்டயும் கிடைக்கும்னு... ரொம்ப நன்றி. (சூர்யா - இயக்குநர் பாலா காம்போவில் ‘சூர்யா 41’ படத்தின் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அந்தப் படம் குறித்த கேள்விக்கு மட்டும் அவரின் பதில் ‘உஷ்ஷ்ஷ்ஷ்...’).

ஷாலினி நியூட்டன்