சிங்கப்பூர் யூடியூபர்ஸ்
இணைய சேவை அறிமுகமாவதற்கு முன்பே தகவல் பரிமாற்றத்துக்கான தொழில்நுட்பத்தை கைவசம் வைத்திருந்த ஒரு நாடு, சிங்கப்பூர். இன்று அதிவேக இணைய சேவையைத் தன்வசம் வைத்திருக்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றும், சிங்கப்பூர்தான். தவிர, யூடியூப்பிலும் அடித்து விளையாடுகிறது. அங்கே நகைச்சுவை, சமையல், லைஃப்ஸ்டைல், சினிமா... என எல்லா துறைகளிலும் யூடியூப் சேனல்கள் தூள் கிளப்புகின்றன. அதில் சிலவற்றைப் பற்றிய அறிமுகம் இதோ...
 டிஃப் வித் மீ (TiffwithMi)
சிங்கப்பூரில் பிரபலமான சகோதரிகளாக வலம் வரும் டிஃபானி - மிச்சியின் சேனல் இது. தங்களின் லைஃப் ஸ்டைலை மற்றவர்களுடன் பகிர்வதற்காக டிஃபானியும், மிச்சியும் சேர்ந்து இந்தச் சேனலை ஆரம்பித்தனர். சகோதரிகளின் லைஃப் ஸ்டைல், சேட்டைகள், சின்னச்சின்ன சண்டைகள், அன்புப் பரிமாற்றங்கள்தான் இந்தச்சேனலின் மையம். இந்தச் சகோதரிகள் சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர்வாசிகள் என்பதால் சீன மொழியிலேயே வீடியோவை வெளியிடுகின்றனர்.
ஆங்கிலத்தில் சப்டைட்டில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு வீடியோவை பதிவு செய்கின்றனர். ‘24 மணி நேரம் என் சகோதரியைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்?’ என்ற வீடியோ 31 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி வைரலானது. ஜூன் 8, 2015ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 7.04 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவான வீடியோக்கள் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.
 ஜியான்ஹாவ் டான் (JianHao Tan)
சிங்கப்பூரைச் சேர்ந்த யூடியூப் சேனல்களில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல் இது. இந்தச் சேனலை ஜியான்ஹாவ் டான் என்ற இளைஞர் நிர்வகித்து வருகிறார். 17 வயதில் பொழுதுபோக்குக்காக யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்தார் ஜியான்ஹாவ். பிறகு யூடியூப்பே அவரது முழுநேர வேலையாகிவிட்டது. பள்ளி மாணவர்களை மையமாக வைத்த நகைச்சுவை வீடியோக்கள்தான் இந்தச் சேனலில் ஸ்பெஷல்.
 ‘பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்கள்’, ‘தேர்வுக்கும் முன்பு தயாராகும் 12 விதமான மாணவர்கள்’, ‘மோசமான ஆசிரியர் கிடைத்தால் வகுப்பு எப்படியிருக்கும்?’, ‘நல்ல மாணவர்கள் Vs கெட்ட மாணவர்கள்’, ‘தேர்வு முடிவு வந்தபிறகு மாணவர்களின் நிலை’... என மாணவர்களின் வாழ்க்கையைப் பகடி செய்யும் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
உலகின் எந்த மூலையிலிருக்கும் மாணவனுக்கும் இந்த வீடியோக்களில் வரும் நிகழ்வுகள் பொருந்திப்போவதால் உலகளவில் இந்தச் சேனலுக்குப் பார்வையாளர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது பயணம் சம்பந்தமான வீடியோக்களையும் பதிவிடுகிறார் ஜியான்ஹாவ். செப்டம்பர் 11, 2010ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 54.4 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் 162 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.
வா!பனானா (Wah!Banana)
‘‘எங்களின் வீடியோக்களைப் பார்க்கும் ஒவ்வொரு முகத்திலும் சிரிப்பைக் கொண்டுவருவதுதான் எங்களது நோக்கம்’’ என்ற கொள்கையுடன் இயங்கிவரும் சிங்கப்பூரின் முதன்மையான நகைச்சுவை யூடியூப் சேனல் இது. அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் நாம் பார்க்கின்ற காட்சிகளில் உள்ள நகைச்சுவை அம்சங்களை வீடியோவாக்கித் தருவது இதன் சிறப்பு.
லிங்கி ஜியோங், ஜேஸன் ஹாவ், கிரைசான் லீ, பெஞ்சமின் ஜோங், டெரன்ஸ் தென், ஆட்ரி கோ ஆகியோர் இந்தச் சேனலை நிர்வகித்து வருகின்றனர்.
இந்தச்சேனலில் காணக்கிடைக்கும் ‘உன் அம்மா Vs என் அம்மா’, ‘விகாரமான சூழ்நிலைகள்’, ‘கற்பனையான வாடிக்கையாளர்கள்’, ‘முதலாளியைவிட தொழிலாளி பணக்காரராக இருந்தால்’, ‘யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறதுக்கு முன்பும், பின்பும்’, ‘சலூனுக்கு வரும் விதவிதமான வாடிக்கையாளர்கள்’... போன்ற வீடியோக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
நகைச்சுவைகள் படு லோக்கலாக இருப்பதால் சிங்கப்பூரைத் தாண்டியும் அப்ளாஸை அள்ளுகின்றன. செப்டம்பர் 22, 2012ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 13 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பகிரப்பட்டுள்ள வீடியோக்கள் 48 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
பெக்கி நியோ(Peggie Neo)
யூடியூப்பில் விதவிதமான உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டே, அந்த உணவைக் குறித்த அனுபவங்களைப் பார்வையாளர்களுடன் பகிரும் வீடியோக்களைப் பார்த்திருப்போம். இத்தகைய வீடியோக்களை ‘முக்பாங்’ என்று அழைக்கின்றனர். 2010ல் முக்பாங் வீடியோக்கள் தென் கொரியாவில் பிரபலமாக இருந்தன.
இப்போது உலகமெங்கும் முக்பாங் வீடியோக்கள் பட்டையைக் கிளப்புகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரின் நம்பர் ஒன் முக்பாங் யூடியூப் சேனலாக மிளிர்கிறது பெக்கி நியோ. 36 வயதான பெக்கி நியோ என்ற பெண் இச்சேனலை நிர்வகித்து வருகிறார்.
உலகிலேயே சூடான சிப்ஸ், ராட்சத பீட்சா, நான்கு பர்கர், 2 கிலோ எடையுள்ள அசைவ உணவு... என ஏராளமான உணவுகளைச் சுவைத்துக்கொண்டே அதுகுறித்த வர்ணனைகளை தெறிக்கவிடுவது பெக்கியின் ஹைலைட்.
இதுபோக உணவுச் சவால்களையும் வீடியோவாக்கி பின்னூட்டங்களைக் குவிக்கிறார். தவிர, சந்தைக்கு வரும் புதுவிதமான உணவுகளை அறிமுகப்படுத்துவதையும் ஒரு வாடிக்கையாக வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கும் பெக்கி எப்படி இவ்வளவு உணவுகளை உள்ளே தள்ளுகிறார் என்பதே பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. செப்டம்பர் 26, 2015ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 10.8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பதிவான வீடியோக்கள் 20 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.
நைட் அவுல் சினிமாட்டிக்ஸ் (Night Owl Cinematics)
பயணம், லைஃப்ஸ்டைல், நகைச்சுவை, உணவு, சினிமா... என பல துறைகளைச் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு அசத்துகிறது இந்தச் சேனல். ரியான் டான் - சில்வியா சான் தம்பதியினரால் உருவாக்கப்பட்டது இந்தச்சேனல். ஒளிப்பதிவு, இயக்கத்தை ரியான் பார்த்துக்கொள்ள, சில்வியா பிசினஸை நிர்வகிக்க சேனல் வளர்ந்தது.
சிங்கப்பூரின் கலாசாரத்தைப் பிணைத்து வீடியோக்களைப் படைப்பது இவர்களது தனித்துவம். யூடியூப் வீடியோக்கள் மூலமே சிங்கப்பூரின் சக்தி வாய்ந்த தம்பதியாக ரியானும், சில்வியாவும் வலம் வந்தனர். சமீபத்தில் இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுவிட்டாலும் அது சேனலின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ‘டேட்டிங் Vs திருமணம்’, ‘செல்லப்பிராணிகள் பேச ஆரம்பித்தால் எப்படியிருக்கும்?’, ‘நாம் ஏன் உடன் வேலை செய்பவர்களை வெறுக்கிறோம்?’, ‘சிங்கப்பூரின் ஜென் இஸட்’... என விதவிதமான வீடியோக்கள் சேனலை அலங்கரிக் கின்றன.
செப்டம்பர் 12, 2011ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 9.62 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பதிவான வீடியோக்கள் 33 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.
த.சக்திவேல்
|