காலா சோனா!இந்தியாவை ஆட்டிப் படைக்கும் போதைப் பொருள்



சில பாயசங்களின் சுவையைக் கூட்டுவதற்காக எள்ளு மாதிரியான கருப்பு நிறத்திலான ஒரு வஸ்துவை நம் தாய்மார்கள் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். அதன் பெயர் கசகசா.
பாப்பி (poppy) எனும் செடியிலிருந்து இந்த கசகசா வருகிறது. விஷயம் இதுவல்ல. இந்த பாப்பி செடியிலிருந்துதான் ஓப்பியம், ஹாசிஷ், ஹெராயின், மார்ஃபின் போன்ற  பல போதை வஸ்துகளும் உருவாகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 35 லட்சம் கிலோ  போதைப் பொருட்களை மத்திய அரசு கைப்பற்றியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். இதன் மதிப்பு 1881 கோடி ரூபாய்.

இந்நிலையில் இந்தியாவில் சுமார் 8 கோடி போதைப்பொருள் அடிமைகள் இருப்பது பற்றியும், இந்தியாவில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குறித்தும் சசிகுமாரிடம் கேட்டோம்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்து, ஒன்றிய அரசின் சி.பி.ஐ மற்றும் போலீஸ் துறைகளில் வேலை செய்கிறார் இவர். இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் பற்றியதே இவரது முனைவர் பட்ட ஆய்வு. இப்போது ராஞ்சியில் உள்ள போலீஸ் அகாடமியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.  

‘‘பாப்பி செடிகளை வளர்ப்பது சுலபமல்ல. ஆனால், அவை வளர்ந்து பூத்துக்குலுங்கினால் பண மழைதான். அதனால்தான் பாப்பியை இந்தியில் ‘காலா சோனா’ என்கிறார்கள்.
காலா சோனா என்றால் கருப்புத்தங்கம் என்று பொருள். இந்த பாப்பி செடிகள் வளரும் தட்பவெப்பநிலை ஆசிய நாடுகளில்தான் நிலவுகிறது. உலகில் விளையும் பாப்பி செடிகளில் 80 சதவீதம் ஆப்கானில் விளைகிறது. பாப்பி செடியில் பூக்கும் மலரின் நடுப்பக்கத்தில் ஒரு விதை இருக்கும்.

இந்த விதையைச் சுரண்டினால் பால் வரும். இந்தப் பால் போகப்போக கறுப்பாகி இறுக்கமாகும். இதுதான் ஓப்பியம். இது முக்கிய போதைப்பொருள். உண்மையில் உலகளவில் இயற்கையாக விளையும் போதைப் பொருட்கள் மூன்று. முதலாவது, பாப்பி செடியும், அதிலிருந்து வரும் ஓப்பியமும். அடுத்து, கோகோ (coco leaf) இலை. மூன்றாவது, கஞ்சா என்று சொல்லப்படும் ஒருவகை புல் வடிவிலான கனபீஸ் (cannabis). கோகோ இலைகளிலிருந்துதான் கோகைன் வருகிறது. கனபீஸிலிருந்துதான் கஞ்சா கிடைக்கிறது. கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில்தான் அதிகமாக கோகோ விளைகிறது.

கஞ்சாவைப் பொறுத்தளவில் இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் விளைச்சல் அதிகம். அதனால்தான் தமிழ்நாட்டில் வேறு எந்த போதைப் பொருட்களையும்விட கஞ்சா அதிகமாக இருக்கிறது...’’ என்கிற சசிகுமார், மருத்துவக்காரணங்களுக்காக பாப்பி விளைச்சலுக்கு இந்திய அரசே அனுமதி வழங்கினாலும், அது எப்படி போதைப்பொருளாக பரிணமித்தது என்பது பற்றியும் விவரித்தார்.  

‘‘ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தான் பாப்பி விளைவிக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இங்குள்ள 26 மாவட்டங்களில் இந்தச் செடி வளர்க்கப்படுகிறது.
இயற்கையான போதைப் பொருட்கள் ஒவ்வொன்றும் தீவிரத்தில் வேறுபடும். உதாரணமாக பாப்பியிலிருந்து எடுக்கப்படும் கசகசாவில் போதையில்லை. அதேபோல பாப்பியிலிருந்து எடுக்கப்படும் மார்ஃபின் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புற்றுநோயைச் சமாளிக்கும் முக்கிய மருந்துப்பொருள் இந்த மார்ஃபின். அதேநேரம் மார்ஃபினை போதைப்பொருளாகவும் பயன்படுத்தலாம். ஒரு காலத்தில் மார்ஃபினை ஏற்றுமதி செய்ததன் மூலம் இந்தியாவிற்கு நிறைய லாபம் கிடைத்தது.

பொதுவாக இயற்கையாக தீவிரம் குறைந்த போதைப் பொருட்களுடன், சில ரசாயனங்களைச் சேர்ப்பதன் மூலம் மேலும் தீவிரமான போதைப் பொருட்களை உருவாக்கமுடியும் என்று கண்டுகொண்டார்கள். இதை செமி சிந்தடிக் முறை (semi synthetic) அல்லது பாதி செயற்கையான முறையில் உருவாக்குவது என்று சொல்வார்கள்.

இந்த பாதி செயற்கையான முறையால் உருவான போதைப் பொருட்களால்தான் இயற்கையான போதைப் பொருட்களுக்கு உலகளவில் பெரிய மார்க்கெட் உண்டானது.
உதாரணமாக, செமி சிந்தடிக் முறையால் ஓப்பியத்திலிருந்து உருவாக்கப்படும் ஹெராயின். பாப்பி விளைவிக்கும் விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் விலையைவிட, போதை மாஃபியாக்கள் ஓப்பியத்துக்கு கொடுக்கும் விலை மிக அதிகம்.

உதாரணமாக, ஒரு கிலோ ஓப்பியத்துக்கு அரசு 1,500 ரூபாய் கொடுத்தால், மாஃபியாக்கள் 15,000 ரூபாய் கொடுப்பார்கள். இதனால்தான் விவசாயிகள் அரசுக்குக் கணக்கு காண்பிக்க வேண்டுமே... லைசென்ஸ் ரத்தாகக் கூடாதே... என்பதற்காக கொஞ்சம் ஓப்பியத்தை அரசுக்கும், மற்றவற்றை  மாஃபியாக்களிடமும் விற்க ஆரம்பித்தார்கள். அத்துடன் அரசு அனுமதித்த விளைச்சல் நிலங்கள் போக, மற்ற இடத்திலும் பாப்பியை  விளைவிக்க ஆர்வம் காட்டினார்கள். கடைசியில் இது இந்தியாவில் போதைப்பொருட்களின் ஆதிக்கத்தைத்தான் ஏற்படுத்தியது...’’ என்கிற சசிகுமார், இந்த ஓப்பியம் கசகசா, மார்ஃபின் போல் இன்னும் எப்படியெல்லாம் மாறியது என்று விளக்கினார்.

‘‘பாதி செயற்கையான முறைப்படி ஓப்பியத்திலிருந்து ஹெராயினும், கஞ்சாவிலிருந்து கஞ்சா சாக்லேட்டும் உருவாகின்றன. ஆஃப்கானில் ஓப்பியம் பயிரிடுவது தடை செய்யப்படும் என்று புதிய ஆப்கான் அரசு சொல்லியிருக்கிறது. அதனால் இந்தியாவின் ஓப்பியத்துக்கு அதிக டிமாண்ட் இருக்கும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடன் இந்தியாவிலிருந்து போதைப் பொருட்கள் கைமாறுவது சர்வசாதாரணமாக நடந்தது. ஆப்கானின் இன்றைய கெடுபிடியால் இந்தியாவில் ஓப்பியம், ஹெராயினின் கடத்தல்கள் அதிகமாகும். தவிர, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாமிலிருந்து அசாம், மிசோரம், மணிப்பூர் வழியாக செமி சிந்தடிக் போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் படையெடுக்கின்றன. பிறகு வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவது அரங்கேறுகிறது.

மொத்தத்தில் இந்தியா என்பது போதைப் பொருட்களின் உற்பத்தி, சந்தை, டிரான்சிட் எனும் ஒரு கடத்தும் பாதை என்ற ரீதியில் விரிந்து கிடக்கிறது. உற்பத்திக்கு வடநாடுகள், சந்தைக்கு மும்பை, டிரான்சிட்டுக்கு அசாம், பயனாளிகள் என்பதற்கு பஞ்சாப் என்று இந்த போதையின் பாதை பரந்திருக்கிறது.

இது தவிர ப்யூர் எனும் தூய்மையான போதைப்பொருட்களும் உண்டு. உதாரணமாக எல்.எஸ்.டி (LSD), எக்ஸ்டசி போன்றவை. இவை மற்ற போதைப் பொருட்களைவிட விலை அதிகம். இவை வெறும் ரசாயனங்களை மட்டுமே கொண்டது....’’ என்று சசிகுமார் முடிக்க,  தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை குறித்து சிரில் அலெக்சாண்டரிடம் கேட்டோம். சென்னையில் இயங்கும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் இவர்.

‘‘சில மாதங்கள் மட்டும் போதைப்பொருட்களைப் பிடிப்பது, பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவை இந்த விஷயத்தில் பலனளிக்காது. போதைப் பொருட்கள் இந்தியாவின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் வருவது. ஓர் உணவுப் பொருளுக்கான தடை என்பது ஒரு வருடத்துக்கே நடைமுறைபடுத்தப்படும். மறுபடியும் அதற்கு தடை வேண்டுமென்றால் அரசுதான் அறிவிக்க வேண்டும். இது ஒரு ஒன்றிய அரசு சட்டம்  என்பதால் மாநில அரசுகளும் இந்தச் சட்டத்தின்படியே சில போதைப் பொருட்களைத் தடை செய்யும்.

ஆனால், ஒன்றிய அரசு வருடந்தோறும் தடைச்சட்டத்தை புதுப்பிக்காதபோது, அந்தப் பொருட்களை விற்பது தடையில்லை என்று ஆகிவிடும். இதை வைத்தே சில போதைப்பொருள் விற்பனையாளர்கள் சட்டத்தின் முன் நிரபராதி என்று விடுதலையாகிவிடுவார்கள்.

உண்மையில் மாநில அரசுகள் என்றைக்குமான தடை சட்டத்தை கொண்டு வந்தால்தான் 10 வருடத்திலாவது இந்த போதைப்பொருட்களை ஒழிக்கலாம். அத்துடன் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் ‘நார்காடிக்ஸ்’ எனும் போதைப்பொருள் ஒழிப்புத் துறையில் போதுமான ஆட்கள் இல்லை. நார்காடிக்சுக்கு தெரியாத விஷயங்கள் போலீசுக்கு தெரியும் என்று சொல்கிறார்கள்.

ஆகவே, நேர்மையான போலீஸ் அதிகாரிகள், போதுமான போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஊழியர்கள், தீர்க்கமான சட்டம் போன்றவை இருந்தால்தான் இந்த விஷயத்தை திறமையாக சமாளிக்கலாம்...’’ என்று முடித்தார்  சிரில் அலெக்சாண்டர்.

டி.ரஞ்சித்