ஓல்டு மன்க்



காதலும், நகைச்சுவையும் கலந்துகட்டி அடித்து ஆடியிருக்கும் கன்னடப்படம், ‘ஓல்டு மன்க்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.படத்தின் கதை சொர்க்கத்தில் ஆரம்பிக்கிறது. கடவுள் கிருஷ்ணாவின் மனைவி ருக்மணி கோபத்தில் இருக்கிறார். காரணம், ருக்மணியின் பிறந்த நாளை கிருஷ்ணா மறந்துவிட்டார். இந்நிலையில் நாரதர் கேக்குடன் வந்து ருக்மணியை வாழ்த்துகிறார். இந்தச் சம்பவம் ருக்மணிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் சண்டையை மூட்டுகிறது.

கோபமடையும் கிருஷ்ணா, நாரதரை பூமிக்கு அனுப்புகிறார். பூமியில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பது நாரதருக்குக் கிருஷ்ணா விதித்த நிபந்தனை.
அப்படி காதல் திருமணம் செய்தால் மட்டுமே நாரதரால் சொர்க்கத்துக்குத் திரும்ப முடியும். பூமியில் அப்பண்ணா என்ற பெயரில் பிறக்கிறார் நாரதர். காலம் காலமாக காதல் திருமணத்துக்கு எதிரான ஒரு குடும்பம் அப்பண்ணாவுடையது. பூமியில் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தாரா நாரதர்... என்பதே நகைச்சுவையான திரைக்கதை.

எல்லாவற்றையும் மறந்து மனம் விட்டு சிரிக்க வைக்கிறது இந்தப் படம். படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் நாரதர், அப்பண்ணா என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சீனி எனும் எம்ஜி சீனிவாஸ்.

தொகுப்பு: த.சக்திவேல்