நள்ளிரவு... குழந்தை வரம்... கண்ணீர் மல்கி மடியேந்தி நின்ற பெண்கள்...



கிராமங்கள் தோறும் புத்தெழுச்சி பெறும் ‘பொன்னர் சங்கர்’ கதைப்பாட்டு

நடுச்சாமம். ஆயிரக்கணக்கில் பெருங்கூட்டம். மக்களின் ஆரவாரம். ஆங்காங்கே கண்களைப் பறிக்கிறது ஒளிரும் ட்யூப் லைட், எல்இடி, விளக்குகள் வெளிச்சம்.
கூட்டத்தின் முன்னே சிறிய அலங்காரப் பந்தல், சாமி படங்கள். பூஜை மணிச்சத்தம். உடுக்கடி சத்தம் காதைப் பிளக்கிறது. உடுக்கடிக்காரர் ஒப்பாரிப் பாட்டுப் பாட பெண் வேடமிட்ட இருவர் பின்பாட்டுப் பாடிக் கொண்டே ஆடுகின்றனர். ‘‘தாமரை நாச்சியும் வந்தாரே... எங்க குன்னுடையாரும் சென்றாரே..!’’
‘‘ஆகா... நாங்க தவசு மலை வந்தோமே... ஆ... அந்த மாயவரு அருளாலே..!’’
‘‘எங்க ஈசுவரன் வருவாரே..!’’

‘‘ஆமா, எங்க ஈசுவரன் வருவாரே..!’’
‘‘அந்த ஈசுவரியும் தருவாளே... பிள்ளை வரம் தருவாளே!’’
‘‘ஈசுவரியும் வருவாளே..!’’
ஒப்பாரிப் பாடல். அழுகை
யுடன் ஒலிக்கிறது.

ஒரு கட்டத்தில் உடுக்கடிக்காரர்கள் முன்னிலையில் இளம்பெண்கள், நடுத்தர வயது பெண்கள் முப்பது நாற்பது பேர் அணிவகுக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே வயதில் பெரியவர் ஒருவர். வரிசையாக இருக்கும் மலர் மாலைகளை எடுத்து ஒரு பெண்ணிடம் கொடுக்கிறார். அதை வாங்கிய அந்தப் பெண் வரிசையாக நின்ற மற்ற பெண்களின் கழுத்தில் அணிவிக்கிறார்.
அப்படி மாலை ஏற்கும் ஒவ்வொரு பெண்ணும் மாலை அணிவிக்கும் பெண்ணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். பிறகு அப்படியே மண்டியிட்டு வரிசையாக முந்தானையின் ஒரு முனையை ஏந்தி நிற்கிறார்கள். பூஜை மணிச்சத்தம் கூடுதலாகிறது. உடுக்கடி சத்தமும்  உச்சஸ்தாயிக்கு எட்டுகிறது.  

அந்தப் பெண்கள் மடியேந்தி நின்றதற்கு அருகாமையிலேயே சுமார் 80 அடி உயரத்தில் பெரிய பரண். மூங்கில், பாக்குத் தப்பைப் பூட்டுகளால் கட்டப்பட்டு, அதன் மேலே செல்ல மரக்கட்டை படிக்கட்டுகள். அதன் பெயர் தவசுமலை என்று சொல்கிறார்கள். அந்த தவசுமலையைச் (பரண்கம்பத்தை) சுற்றி உடுக்கடிக்காரர்கள் பாடிக் கொண்டே ஆடியபடி சுற்றி வருகிறார்கள். அவர்கள் முன்னே மடியேந்தின பெண்கள் பயபக்தியுடன் நிற்கிறார்கள்.

உடுக்கடிப் பாட்டுப் படிப்பவர்கள் அவர்களுக்கு தீர்த்தம், திருநீறு தெளிக்கிறார்கள். அப்படியே ஓயாது உடுக்கடிப் பாடலைப் பாடிக்கொண்டே அந்த பரணின் மீது ஏறுகிறார்கள். உச்சியில் வீற்றிருக்கும் தெய்வச்சிற்பங்களுக்கு ஊதுபத்தி கற்பூரம் கொளுத்துகிறார்கள். ஆரத்தி எடுத்து தீபாராதனை காட்டுகிறார்கள். தொடர்ந்து அங்கேயே நின்று மறுபடி ஓங்காரமெடுத்துப் பாடுகிறார்கள்.

 ‘‘யேய்ய்... எம் மனசு நட்டமில்லே... யே... யேங்களுக்கு மக்களில்லே... நான் புள்ளே பெக்கவே...
அட, ஈசுவரா... நீ மனசு வைக்கோணும்... யே ஈசுவரி...
மனசு நீ வைக்கோணும்...
 நீ எந்த மூலைல இருந்தாலும் இங்கே வந்திரணும்...’’
‘‘ஆமா... நீ எந்த மூலைல இருந்தாலும்..!’’
‘‘ஓடோடி வந்திரணும்..!’’
‘‘ஆமா ஓடோடி வந்திரணும்..!’’
‘‘நீ வாராது போனாலும்..!’’
‘‘நாங்க திரும்பிப் போகலையே...!’’
‘‘உயிரே போனாலும்..!’’
‘‘இந்த தவசு மலையில் மடிவோமே..!’’

சரியாக இரவு பதினோரு மணிக்கு தொடங்கிய ஒப்பாரிப் பாடல் ஓயாமல் ஒன்றரை மணி நேரம் ஒலிக்கிறது. அதைக் கேட்டு கண்ணீர் உகுக்காத பெண்கள் இல்லை. குறிப்பாக மடியேந்தி மண்டியிட்டிருந்த பெண்கள் சிலர் கண்களில் கண்ணீர் ஆறாய் பொங்குகிறது. அதில் இரங்கியோ, உடுக்கடிப் பாடல் பாடியவர்களின் ஒப்பாரிப் பாடலில் இரக்கம் கொண்டோ ஈசுவரனும் ஈசுவரியும் தபசு மலையேறி வருகிறார்கள். இதற்காகவே வேடமிட்டுள்ளனர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையில்லாத தாமரை நாச்சிக்கும், குன்னுடையார் கவுண்டருக்கும் பிள்ளை வரம் கொடுக்கிறார்கள் சிவ பார்வதி. அந்த வரம் வாங்கிய உடுக்கடி கதைப்பாடல் பாடியவர்கள் கீழே பிள்ளை வரம் ஏந்தி மடியேந்தி கண்ணீர் மல்க அமர்ந்திருந்த பெண்களுக்கும் பிள்ளை வரம் கொடுப்பதாகக் கருதி எலுமிச்சை கனியை மடியில் தபசு கம்பத்தின் உச்சியிலிருந்தே போடுகிறார்கள்.

என்ன இது..? எதற்காக இப்படியொரு வைபவம், சடங்கு..?

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைத் தவிர மற்றவர்களுக்கு இது புரிவது கொஞ்சம் கஷ்டம். கோவை மண்டலத்தில் கூட இந்த தலைமுறையினருக்கு இந்த நிகழ்வு பிடிபடாது. அதற்கு முந்தைய தலைமுறைக்கு சொன்ன முறையிலிருந்தே தெரிந்திருக்கும்.

இது ‘அண்ணன்மார் கதைப் பாடல்’ எனப்படும் ‘குன்னுடையான் கதை’. இன்னமும் புரிகிற மாதிரி சொல்லுவதென்றால் கலைஞர் கருணாநிதி எழுதினாரே ‘பொன்னர் சங்கர்’ கதை... அதை திரைப்படமாகவும் எடுத்தார்களே... அந்த பொன்னர் சங்கரின் அப்பா, அம்மாதான் குன்னுடையான், தாமரைநாச்சி. அவர்கள் ஈசுவரன், ஈசுவரி வரம் பெற்று பிறந்தவர்கள்தான் பொன்னர், சங்கர் மற்றும் அவர்களுடைய தங்கை அருக்காணித்தங்கம்.

இன்றைக்கு நாற்பது வருஷங்களுக்கு முன்பு கொங்கு மாவட்டங்களில் இது பிரசித்தம். இரவு நேரங்களில் பெட்ரோ மாக்ஸ் விளக்கு மற்றும் தீப்பந்தங்கள் வெளிச்சத்தில் நள்ளிரவு கடந்தும் நடக்கும் இந்த குன்னுடையான் கதைப்பாட்டு தொடர்ந்து 30 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை நீளும். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளாக இருக்கும்.
அதாவது தாமரை பிள்ளை வரம் வேண்டி தவசு மலையேறி தவம் இருந்து அழுவது போலவே காட்சிகளை தத்ரூபமாக அமைத்திருப்பர். அப்போது ஈசுவரனும் ஈசுவரியும் வேடமிட்ட நபரை வைத்து வரம் கொடுக்கவும் செய்வர்.

பொன்னர் சங்கர், அருக்காணித் தங்கம் கருவுற்ற அடுத்தநாள் நிகழ்வில் நிஜமாகவே வளைகாப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடக்கும். இதிலும் குழந்தையில்லாத பெண்கள் பங்கேற்பர்.

அதேபோல் குழந்தை பிறந்த பின்பு அசலாகவே தொட்டில்கள் கட்டி ஆட்டுவர். குழந்தையில்லாத பெண்களே இந்தத் தொட்டில்களை ஆட்டுவர். இப்படியே பொன்னர் சங்கர் திருமணம், அவர்கள் யுத்தத்தில் மாண்டு படுகளத்தில் கிடப்பது, தலையூர்க்காளி என்பவருடன் போர்தொடுப்பது, அறுபதடி கொம்பன் என்ற பன்றியை வீழ்த்துவது எல்லாமே அசலாக காட்சி ரூபமாகவே நடத்துவர்.

அதில் ஒன்றுதான் மேற்கண்ட தவசுமலையேறி தாமரை நாச்சியும், குன்னுடையானும் கண்ணீர் விட்டு அழுது தவமிருக்கும் காட்சி. இந்நிகழ்ச்சி சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள நம்பியாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 48 நாட்கள் நடந்த இந்த நிகழ்வை ஊர்க்காரர்கள் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இந்த கிராமம் மட்டுமல்ல, கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வழக்கொழிந்து போயிருந்த இந்தக் கதைப்பாடல்கள் இப்போது கொங்கு கிராமங்களில் புத்தெழுச்சி பெற்று வருகிறது என்று சொல்கிறார்கள் இந்த உடுக்கடி கதைப்பாட்டு படிப்பவர்கள்.

முன்பெல்லாம் முப்பது நாள், நாற்பத்தெட்டு நாள் கதைப்பாட்டு நடத்த நிறைய செலவாகும், நேரமும் விரயமாகும் என்று ஒரே நாளில், ஒரு வாரத்தில் சுருக்கமாகக் கதையைப் பாட வைத்து முடித்துக் கொள்வது நடந்து வந்தது. திரைப்படங்கள், டிவி, சீரியல்கள், செல்போன், ஆண்ட்ராய்டு மொபைலில் அத்தனை படங்களும், ஆட்டம் பாட்டம் கூத்துகள் பார்க்க சகல செளகரியங்கள் இருந்தாலும், இந்த ஆதிகாலப் பாட்டுப்படிப்பதைப்  பார்க்கவும், கேட்கவும் பல்லாயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

நம்பியாம்பாளையம் கிராமத்தில் இந்த தவசுக்கம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டும் ஐயாயிரம் பேருக்கு மேல் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் இருபது முப்பது கிராமங்களும் திரண்டிருந்தன. இதேபோல் மற்ற நாள் நிகழ்ச்சிகளுக்கும் கூட கூட்டம் கட்டுக் கொள்ளாமல் வந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் திருமூர்த்தி தலைமையிலான குழு.

‘‘எட்டு வருஷம் முன்னால குன்னுடையான் கவுண்டன் கதை நடத்தியிருக்கோம். மழை மாரி பேஞ்சுது. கோயில்கள்ல பூஜை, திருவிழா எல்லாம் நடந்தது. மக்களும் மகிழ்ச்சியா இருந்தாங்க.
இப்ப ஒண்ணுமே சரியில்லைங்க. மூணு கோயில்கள் புதுப்பிக்க முடியலை. திருவிழா நடத்த முடியலை. ஒரு கோயில் பிரச்னையில் பூட்டிக்கிடக்கு. இதெல்லாம் மாற குன்னுடையான் கவுண்டன் கதை படிக்கலாம்னு 80 வயசு ஊர்ப்பெரியவர் ஒருத்தர் சொன்னார். அதுதான் இதை ஏற்பாடு செஞ்சோம்.

முந்தியெல்லாம் வருஷா வருஷம் இந்தக் கதைப்பாட்டு நடத்துவோம். இப்ப செலவு நாலஞ்சு லட்சம் ஆகுது. பொதுக்காரியம். ஊர்கூடித் தேர் இழுக்கணும்ல? அதுதான் இழுக்கறோம். இந்த தவசுமலை நிகழ்ச்சி மாதிரியே முந்தின நாள் தாமரை நாச்சிக்கு குழந்தை வரம் வேணும்னு தேர் இழுத்தோம். 2000 பேருக்கு அன்னதானம் வச்சோம்.

இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செலவு. அந்த செலவுகளை ஊர்ப்பெரியவங்க ஏத்துக்கிறாங்க. இப்படி கதைப்பாட்டு படிச்சா, அதைக் கேட்க வர்றவங்கள்ல குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை கிடைக்கும். கல்யாணமாகாதவங்களுக்கு கல்யாணம் ஆகும். மழை மாரி பொழியும். ஊருக்குள்ளே சண்டை சச்சரவு இருக்காது. தொழில் பெருகும். மக்கள் மகிழ்ச்சியா இருப்பாங்க. இதெல்லாம் அனுபவிச்சிருக்கோம். அதுதான் இப்ப நாங்க இதை செய்யறோம்!’’ என்கிறார் திருமூர்த்தி.

இந்த உடுக்கடிகதைப்பாடல் குழுவுக்கு காமராஜ் என்பவர் தலைவர். 28 வயது இளைஞராக இருந்தார். ‘‘எனக்கு சொந்த ஊர் அவிநாசிலிங்கம் பாளையம். எம்சிஏ படிச்சிட்டு ஐடி கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அதேசமயம் சின்னவயசிலிருந்தே மாரியம்மன்னா ரொம்ப பிரியம். சாமிபக்தியும் அதிகம். பழங்கால கிராமியக் கலைகள் மேல சின்ன வயசிலிருந்தே ஆர்வம். பஜன், நாட்டிய, சங்கீதத்தில்தான் நாம் போகணும்னும் நினைச்சிருந்தேன்.

ஒரு கிராமத்தில் அண்ணன்மார்சுவாமி கதை பாடறதை இருபது வயசுல பார்த்தேன். ரொம்பப் புடிச்சுப் போச்சு. அவங்க கூடப் போய் எப்படியெல்லாம் பாடறாங்கன்னு நாலு வருஷம் பார்த்தேன். அதையெல்லாம் உள்வாங்கி எனக்கு நானே வீட்டிலும், கோயில்லயும் பாடுவேன்.

இந்தக்கலை அழிஞ்சு போகக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போகணும்னு இப்ப தொடர்ந்து ஊர் ஊராப்போய் பாடிட்டு இருக்கேன். ஐடி தொழிலை விட்டுட்டேன். என்னோட சொந்த வாழ்க்கையே போனாலும் இந்தக் கலையை எல்லா இடங்களுக்கும் கொண்டு போகணும்னு முடிவு செஞ்சிருக்கேன். இதுவரை ஏழு ஊர்கள்ல அடுத்தடுத்து 48 நாள் புரோகிராம் பண்ணிட்டோம். இப்ப அடுத்த இடம் புக் ஆயிட்டுது. அந்த அளவு இப்ப மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.

எங்களைப் போலவே உடுக்கடி பாடும் குழு கொங்கு மண்டலத்தில் நிறைய இருந்தாங்க. இடையில் எல்லாம் போயிட்டாங்க. இப்ப அவங்க வாரிசுங்க பலபேர் உடுக்கையெடுத்துட்டாங்க. அந்த அளவுக்கு இப்ப கொங்கு மண்டலத்துல புதுப்பொலிவு பெற்றுட்டு வருது இந்தக் கலை!’’ உற்சாகத்துடன் சொல்கிறார் காமராஜ்.
     
கா.சு.வேலாயுதன்