பொன்னியின் செல்வன் ஒன்பது பாடல்கள் எழுதியிருக்கேன்!



இந்தியாவே திரும்பிப் பார்க்கும் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் குங்குமம் குழுமத்தைச் சேர்ந்த குங்குமம் டாக்டர் மாதமிருமுறை பத்திரிகையின் பொறுப்பாசிரியரான கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்

‘பொன்னி நதி பாக்கணுமே...’ பாடல் வெளியானதுதான் தாமதம்... யார் இந்த இளங்கோ கிருஷ்ணன் என்னும் கேள்வி இணையம் முழுக்க பரவியது. தொடர்ந்து ‘சோழா... சோழா...’ பாடலும் அதிரிபுதிரி ஹிட். ‘தேவராளன் ஆட்டம்’... பாடலும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடியோ லாஞ்ச் அறிமுகமும் ‘யாருப்பா இவரு’ என்று கேட்க வைத்திருக்கின்றன.இலக்கிய வட்டத்தில் இளங்கோ கிருஷ்ணனைத் தெரியும்... பொதுவான மக்கள் நீங்கள் யாரெனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..?அடிப்படையிலே நான் ஒரு நவீன கவிஞன். புத்தகங்கள், கவிதை நூல்கள் என எழுதியிருக்கிறேன். சினிமா, திரைப்படப் பாடலுக்கு நான் புதியவன்.

பிறந்த ஊர் கோவை, அப்பா பாலகிருஷ்ணன். அவருடைய பெயரின் பின்பகுதியை என் பெயரில் இணைத்துதான் நான் இளங்கோ கிருஷ்ணன். அவர் ஒரு ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. அம்மா இல்லத்தரசி. மனைவி யுவராணி. ஒரே மகள் லயாஸ்ரீ, 5ம் வகுப்பு படிக்கிறார். கடந்த பத்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். சில முக்கிய பத்திரிகைகளில் வேலை செய்த அனுபவம் உண்டு. இப்போது ‘குங்குமம்’ குழுமத்தில் வேலை செய்துவருகிறேன். சின்ன வயதில் இருந்து கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ‘பொன்னியின் செல்வன் -1’ படத்தின் மூலம் அறிமுகம்... இந்த வாய்ப்பு கிடைத்தது எப்படி?

இதற்கு நிச்சயம் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத்தான் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும். படத்திற்கு 10ம் நூற்றாண்டுத் தமிழ் தேவைப்பட்டபோது ஜெயமோகன்தான் என்னுடைய பெயரைப் பரிந்துரை செய்திருக்கிறார்.
இயக்குநர் மணிரத்னம்  சாரைச் சந்திக்கும்போது எவ்வளவுக்கு எவ்வளவு என்னால் முடியுமோ அந்த அளவுக்குத் தயாராகச் சென்றிருந்தேன். சிறுவயது முதலே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பலமுறை படித்தவன் நான். எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதையெல்லாம் மனதில் கொண்டுதான் ஏற்கனவே நானும் சில வரிகள், எழுத்துக்கள், கவிதைகள் என தயாராகச் சென்றிருந்தேன்.

இயக்குநர் மணிரத்னத்துடன் முதல் சந்திப்பும், உரையாடலும் என்னவாக இருந்தது?
நான் மணிரத்னம் சாரை சந்திக்கும்போது இந்தப் பாடல் ஆசிரியருக்காக மிகப்பெரிய தேடலை அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அத்தனை பேரைக் கடந்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதைப் புரிந்துகொண்டேன். சென்றவுடன் மணிரத்னம் சார் என்னிடம் கேட்டது, ‘10ம் நூற்றாண்டுக் கால தமிழ் வேண்டும். மேலும் சோழர்களுக்காக ஒரு கீதம் எழுத வேண்டும்’ எனக் கூறினார்.

இந்த ஒரு பாடல் மட்டும்தான் எழுதச் சொல்லப் போகிறார்கள் என நினைத்துதான் நானும் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால், ஆச்சரியமாக ஒரு பாடல் முடிய அடுத்த பாடல், அடுத்த பாடல்... அதற்கடுத்த பாடல் என தொடர்ந்துகொண்டே இருந்தது. இப்போது நினைத்தாலும் அது கனவு போன்ற தருணம்.இசைப்புயல் உடன் முதல் சந்திப்பு எப்படிச் சென்றது?

மணிரத்னம் சார் என்னை அழைத்து ‘இன்று மாலை ரஹ்மானுடன் சந்திப்பு இருக்கிறது... ஸ்டூடியோவிற்கு வந்துவிடுங்கள்’ என்று சொன்னார். நான் செல்லும்போதே என்னுடைய கவிதைப் புத்தகங்களுடன் சென்றிருந்தேன். அந்தப் புத்தகங்களை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, ரஹ்மான் சார் ‘நான் படிச்சிட்டு சொல்றேன்’ என்றார்.பிறகு ட்யூன் கொடுத்தார்கள். ‘ஒரு டம்மி லிரிக்ஸ் எழுதிடலாமா’ எனக் கேட்டார். என்னை எழுதச் சொல்லிவிட்டு எனக்குப் பின்புறமிருந்து மணிரத்னம்சாரும், பக்கத்தில் ரஹ்மான்சாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட பரீட்சை வளாகத்தில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பின்புறம் இருந்து வாத்தியார் ‘எழுதுடா... எழுது...’ என சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்... அப்படியான உணர்வைத்தான் கொடுத்தது.பிறகு, என் மனநிலையைப் புரிந்துகொண்டு, ‘மேலே இருக்கும் ஹாலில் சென்று எழுதுங்கள்’ என ரஹ்மான்சார் அனுப்பிவைத்தார். எழுதி முடித்து்த் திரும்
பியவுடன் படித்துப் பார்த்தவர் ‘பாடலுக்குள் போயிடலாமா, பாட்டை இன்னைக்கு முடிச்சிடலாமா?’ என்று கேட்டார்.

நான் தயக்கத்துடன் தலையசைக்க, என்னைப் புரிந்துகொண்டவர், ‘சரி... இன்னைக்கு வேண்டாம். வீட்டுக்கு போயிட்டு டியூனை நல்லா கேளுங்க, நாளைக்குப் பாடல் முடிச்சிடலாம்’ என என்னை அனுப்பிவைத்தார்.ஒரு பாடல் பல பாடல்கள் ஆக மாறியது எந்த தருணத்தில்? உங்கள் மீது இருவருக்கும் நம்பிக்கை வரக் காரணம் என்ன?திரைப்படப் பாடல்கள் என்பது ஓர் இயக்குநர், ஓர் இசையமைப்பாளர், ஒரு பாடலாசிரியர் என மூவர் இணைந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு குழு வேலை.

இதனாலேயே ஆரம்பத்தில் எனக்கு பதட்டமும் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பல இடங்களில் நான் தடுமாறினேன். மணிரத்னம்சாரும்  சரி, ரஹ்மான் சாரும் சரி, இருவருமே அவரவர் துறையில் மிகப்பெரும் ஜாம்பவான்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து முப்பது வருடங்களாகப் பயணித்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குள் இருக்கும் புரிதல் ஆழமாக இருக்கும்.

அந்தப் புரிதலுக்கிடையே நானும் பொருந்திப் போக வேண்டும்... இதைத்தான் மனதில் எடுத்துக் கொண்டேன். இருவருமே என் பதட்டத்தைப் புரிந்துகொண்டு என்னை ஆற்றுப்படுத்தினர். எனக்குப் புரிந்துகொள்ள நிறைய நேரம் கொடுத்தனர்.

அவர்களின் தேவை என்ன என்பதை சரியாகத் தெரியப்படுத்தினர். அதை நானும் சரியாகப் புரிந்துகொண்டேன் என நினைக்கிறேன். எனவேதான் ஒரு பாடல் பல பாடல்களானது.
‘பொன்னி நதி...’ பாடல் படத்தில் எங்கே, எத்தருணத்தில் இடம்பெற இருக்கிறது?எத்தருணத்தில் வரும் என்பது பாடல் கேட்டவுடன் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

வந்தியத்தேவன் ஒரு ஆடிப்பெருக்கில் வீரநாராயண ஏரிக் கரையில் இருந்து கிளம்பி தஞ்சாவூர் நோக்கிப் பயணிக்கிறான். என்னதான் அவன் பெரிய வீரன், சாதுர்யன் என்றாலும் அவனுக்குள் சின்ன வயதில் இருந்தே காவிரி நதியையும், அதன் அழகையும் காண வேண்டும் என்னும் ஆசை கொண்டவன். வானர்குல தலைவன். மேலும், ஆதித்த கரிகாலனின் தளபதி.

அந்த ஆதித்த கரிகாலன் ஒரு வேலை கொடுத்து வந்தியத்தேவனை காவிரிக் கரை நோக்கி அனுப்புகிறார். அவனது எண்ண ஓட்டங்கள்தான் ‘பொன்னி நதி...’ பாடலாக உருவாகியிருக்கிறது.

அதனால்தான் ‘பொன்னி நதி பாக்கணுமே...’ என்னும் ஏக்கத்துடன் வரிகள் வரும்.‘பொன்னி நதி...’ பாடலை எழுதி முடிக்க எவ்வளவு காலமானது?ஒன்றரை மாத காலமானது. நிறைய சவால்களை உள்ளடக்கிய பாடல் இது. இதே படத்தில் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்த பாடல்கூட உள்ளது. எனக்கு எந்த அளவுக்கு சவால்கள் இருந்தனவோ அதைக் காட்டிலும் சவால்கள் மணிரத்னம் சாருக்கும், ரஹ்மான்சாருக்கும் உண்டு. அதனால்தான் இந்தப் பாடலுக்கு ஒன்றரை மாத காலமானது.

‘சோழா... சோழா...’ பாடலுக்கான சூழல் நாவலில் உள்ளதா?இருக்கிறதுதான். ஆனால், ஒரு பாடல் இடம் பெறவேண்டிய அளவுக்குத் தீவிரமாக இல்லை. படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் விஸ்தீரணமாகக் காட்டியிருக்கிறோம். இராஷ்ட்ரகூடப் போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாடுவதைப் போன்ற சூழலில் அந்தப் பாடல் வருகிறது.
‘தேவராளன் ஆட்டம்...’ பாடலைப் பற்றிச் சொல்லுங்கள்?அது நாவலிலேயே ‘நடுநிசிக் கூட்டம்’ பகுதியில் வருவதுதான்.

இந்தப் பாடலுக்காக பாலி சென்று மணிரத்னம் சாரும் ரஹ்மான் சாரும் ஆராய்ச்சி செய்தார்கள். ‘மங்கி சாண்ட்’ எனப்படும் அந்தப் பூர்வகுடிகளின் பிரார்த்தனை வடிவில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என இருவரும் சொன்னார்கள். நான் எழுதுவதற்கு ஸ்வரக் கட்டுமானம் கேட்டேன். ரஹ்மான் சார் மூன்று ஸ்வரக் கட்டுமானங்கள் கொடுத்தார்.

அந்த மூன்றையும் பயன்படுத்தி இரண்டு வெர்ஷன் எழுதிக்கொண்டு போனேன். பிற்பாடு ரஹ்மான்சார் அதைப் பயன்படுத்தி இப்போது நாம் கேட்கும் வடிவத்தில் அதனை வார்த்தெடுத்தார். உண்மையிலேயே ‘தேவராளன் ஆட்டம்...’ ஒரு மேஜிக். அதை ரஹ்மான்  சார் செய்துகாட்டியதை விழி விரியப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலின் முக்கியத்துவத்தை இக்கால இளைஞர்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா..? எல்லோருக்குமே வரலாற்றுப் பிரக்ஞை என்பது மிகவும் அவசியம். சேரன், சோழன், பாண்டியன் மூன்று அரசர்களும்தான் நம்மை ஆட்சி செய்தவர்கள். என்றாலும் அவர்களில் வணிகம், ஆட்சி, கல்வி, கலை, இலக்கியம், கட்டடக் கலை என பலவற்றிலும் முதன்மையான விஷயங்களைச் செய்தவர்கள் சோழர்கள்.

இப்போது நம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டிருக்கும் ஏரிப்பாசனங்களில் பல சோழர் காலத்தில் உருவானவை. இன்றைய ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் ஆகியவற்றில் பெரும்பான்மையை வடிவமைத்தவர்கள் சோழர்கள்.  நமது கலை, இலக்கியம் என அத்தனைக்குமான மத்திய கால ஆதாரப் புள்ளி சோழர்கள்தான். இன்று உலகம் முழுதும் உள்ள மியூசியங்களில் இருக்கும் தமிழர்களின் பெருமை சொல்லும் செப்புத்திருமேனிகள் சோழர்கள் காலத்தில் வார்க்கப்பட்டவைதான்.

தென்னிந்திய கட்டடக் கலையை மிகச் சிறப்பாக வளர்த்தெடுத்தவர்கள் சோழர்கள். அந்தப் பெருமை சொல்லும் கோயில்கள் பல இங்குள்ளன. தெற்காசியா முழுக்கவும் பிரசித்தி பெற்ற
கட்டடக் கலை அது. அவர்கள் ஆட்சி செய்த மூன்று நூற்றாண்டு காலங்களும் நம்மை யாருமே தொட முடியாத அளவுக்குப் பெருமையுடன் இருந்திருக்கிறோம். இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா வரைகூட தமிழர்கள் வியாபித்தது சோழர்களால்தான்.

இப்படிப்பட்ட சோழர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் அடியை உருவாக்கிக் கொடுக்கிறது என்ற வகையில் இது ஒரு முக்கியமான படம்.உங்களின் அடுத்த படங்கள்..?ரஹ்மான் சாருடனேயே சில பாடல்கள் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில படங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல தமிழ் வார்த்தைகளுடன் பாடல்கள் எழுதவேண்டும் என்பதே என் எண்ணம். அதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அதைப் பயன்படுத்தத் தயாராகவே இருக்கிறேன்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்