ஓ மை சன்னி!



உலகளவில் புகழ் பெற்ற சன்னி லியோன் நடிக்கும் நேரடி தமிழ்ப் படம் ‘ஓ மை கோஸ்ட்’. யுவன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கி நடித்திருந்தவர்.
அடுத்த படத்தை இயக்குவதற்கு இவ்வளவு சிந்தனை ஏன்?தெலுங்கில் பிரபல ஹீரோ படம் பண்ணுவதற்கு கமிட்டாகியிருந்தேன். அவருடைய கால்ஷீட் பல முறை தள்ளிப்போனதால் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை. அத்துடன் உடனே படம் பண்ணணும்னு பெரியளவில் நானும் முயற்சி பண்ணவில்லை.

என்ன காரணம் என்று கேட்டால் கூட பதில் இல்லாமல்தான் இருந்தேன். இவ்வளவுக்கும் சினிமா மட்டுமே என்னுடைய புரொஃபஷன். அப்படியிருந்தும் இடைவெளி எப்படி வீழ்ந்ததுனு  தெரியவில்லை. ‘ஓ மை கோஸ்ட்’ வாய்ப்பு எப்படி கிடைச்சது?தயாரிப்பாளர்கள் வீரசக்தி, சசிகுமார் கதை கேட்பதாக கேள்விப்பட்டு அவர்களிடம் கதை சொன்னேன். முதலில் வேறு கதை பண்ணுவதாக இருந்தேன். ஆனால், ‘ஓ மை கோஸ்ட்’ லைன் அவர்களுக்குப் பிடித்திருந்தது.

அப்பொழுதே இந்தக் கதைக்கு சன்னி லியோன் இருந்தால் பிரமாதமா ஒர்க் அவுட்டாகும் என்றேன். தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக ஒப்புதல் வழங்கியது. தடுக்கி வீழ்ந்தால் பேய்மீது விழுமளவுக்கு பேய்க் கதைகள் வருகின்றன... அப்படியிருக்க உங்கள் படம் எப்படி புதுசாக இருக்கும்..?

ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வரலாற்றுப் பின்னணியில் உருவான திகில் கதைகள் தமிழில் ஏராளமாக வந்திருக்கின்றன. ‘காஞ்சனா’ சீரிஸை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் திகிலாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும்.இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ராணிதான். ரெகுலர் ஹாரர் கதையில் ஒரு பேய், அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் என்ற டெம்ப்ளேட் இருக்கும். இந்தப் படமும் அப்படித்தான். ஆனால், திரைக்கதை ஃப்ரெஷ்ஷா, கேரக்டர்ஸ் வித்தியாசமாக இருக்கும்.

பேயின் பழிவாங்கும் படலம் புதுசாகக் காட்சி தரும்.இது 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கற்பனைக் கதை. அதற்காக வரலாற்றுப் படம் என்று அர்த்தமல்ல. விஜய் சார் நடித்த ‘புலி’ போல் கற்பனையான காலகட்டம் என்று சொல்லலாம்.  சவால்கள் அதிகம் இருக்குமே?இல்லாமல் இருக்குமா..! படப்பிடிப்புக்கு பல மாதங்கள் முன்பே அந்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டோம். படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்த டீமும் மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்.

சன்னி லியோன் மேடத்துக்கு பெர்சனல் காஸ்டியூமர் இருக்கிறார். அவருடன் டிஸ்கஸ் பண்ணி ஆடைகளை வடிவமைத்தோம். ரோமானியர்களின் ஸ்டைலை ஃபாலோ செய்துள்ளோம். உடை, ஆயுதங்கள் எல்லாமே ஐரோப்பிய ஸ்டைல்தான். இதன் கான்சப்ட் அப்படி.மும்பையில் பல பிரம்மாண்ட அரங்குகளை அமைத்தோம். அதில் சில செட், மும்பையில் பெய்த கனமழையில் முற்றிலும் பாழாகிவிட்டது. மறுபடியும் அதே மாதிரி செட் அமைத்து படமாக்கினோம்.

சன்னி லியோன் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர்... என்னென்ன நிபந்தனைகள் விதித்தார்?அவரை மும்பையில் சந்தித்தபோது ‘எனக்கு ஆங்கிலத்தில் கதை சொல்ல வேண்டும்’ என்றார். அதற்காகவே ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஒரு மணி நேரம் கதை சொன்னேன். அவருக்கு புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியவில்லை.

ஆனால், ஆர்வத்தோடு ரசித்துக் கேட்டார். ‘நான் நடித்த படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும்’ என்றார்.அவருடைய டெடிகேஷன் வேற லெவல். சன்னி லியோன் மும்பையிலிருந்து வெகு தொலைவில் வசித்து வருகிறார். ரெண்டு, மூணு மணி நேரம் பயணம் செய்தால் மட்டுமே படப்பிடிப்புத் தளத்துக்கு வரமுடியும். காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு சரியாக வந்துவிடுவார்.

ஒருமுறை கேரவனை விட்டு வெளியே வந்து விட்டால் அன்றைய காட்சிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்த பிறகே மீண்டும் கேரவனுக்குள் செல்வார். நாளின் தொடக்கத்தில் இருக்கும் அதே உற்சாகம் நாள் முழுவதும் அவரிடத்தில் இருப்பதைப் பார்க்க முடியும். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அந்தக் காட்சிக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாக இருப்பார்.

ப்ராம்ப்டிங் பண்ணமாட்டார். டயலாக் பேசி நடித்தால்தான் ஆக்டிங் வரும் என்பது அவரது பாலிசி. அதைக் கெடுக்காமல் கட் பண்ணி கட் பண்ணி எடுத்தோம். சன்னி லியோன் என்றாலே அவருடைய அழகுதான் ரசிகர்கள் மனதில் வந்துபோகும்... அவரை பேயாகக் காண்பிக்க எப்படி உங்களுக்கு மனசு வந்தது?ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லா அழகும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும். சன்னி லியோனிடம் என்ன திறமை இருக்கிறதோ அதைப் பயன்படுத்தவே இந்தப் படத்தை எடுத்தோம். கவர்ச்சி, எமோஷன், ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கலவையான ரோல்.
வேற யாரெல்லாம் நடிக்கிறார்கள்?

சதீஷ் கேரக்டர் புதுசா இருக்கும். யோகிபாபுவுக்கு ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் அமைச்சர் கேரக்டர். ரவிமரியா, ராஜா கேரக்டர் பண்ணியிருக்கிறார். ரமேஷ் திலக், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தர்ஷா குப்தா... என அறிந்த முகங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஜாவித் ரியாஸ் மியூசிக். ‘மாநகரம்’ பண்ணியவர். பாடல்கள் பா.விஜய். பின்னணி இசை தரண். ஒளிப்பதிவு தீபக் மேனன். மலையாளத்தில் நயன்தாரா நடித்த ‘நிழல்’ பண்ணியவர். இப்போது ‘ஹிப்ஹாப்’ ஆதியின் ‘வீரா’ பண்ணுகிறார்.

‘தேஜாவு’ அருள் சித்தார்த் எடிட்டிங். வா மீடியா என்டர்டெயின்மென்ட் வீரசக்தி, ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சசிகுமார் தயாரித்திருக்கிறார்கள். நடிகராகத்தான் உங்க கேரியர் ஆரம்பமானது... நடிப்பதை நிறுத்திவிட்டீர்களா?நான் ராம் கோபால் வர்மாவின் மாணவன். என்னுடைய அண்ணன் ‘அம்மா’ ராஜசேகர்.

தெலுங்கில் ரவிதேஜா, கோபிசந்த் படங்கள் பண்ணியவர். திரைக்கதை எழுதுவதில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். ராம் கோபால் வர்மாவிடம் ஒரு படத்துக்கு என்ன தேவையோ அதை எடுத்தால் போதும் என்பதைக் கற்றுக்கொண்டேன். உதாரணமாக, திரையில் என்ன வரும் என்ற வியூ பாயிண்ட் இருக்கும். அதை மட்டும் எடுத்தால் போதும். தேவையில்லாததை எடுக்க வேண்டாம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அண்ணனிடம், எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் அவர்களை எப்படி ஹேண்டில் பண்ணுவது, தயாரிப்பு நிறுவனத்துக்கு எப்படி பட்ஜெட்டுக்குள் படம் பண்ணுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். நான் நடிகனானது ஒரு விபத்து. ‘சிந்தனை செய்’ படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோ வராததால் அந்த காஸ்டியூமை நான் போட்டேன். நடிப்பில் ஆர்வமில்லை. என்னுடைய லட்சியம் டைரக்‌ஷன் மட்டுமே.

எஸ்.ராஜா