பழங்களில் ஹேண்ட்பேக்! ஃபேஷனில் மாஸ் காட்டும் ஆக்‌ஷன் கிங் மகள்!



ஆப்பிள், அன்னாசி, பப்பாளி... இவற்றில் சாலட், ஜூஸ், மில்க் ஷேக், ஐஸ்கிரீம்... வகையறாக்களைக் கூட சாப்பிட்டிருப்போம். ஆனால், ஹேண்ட் பேக் செய்ய முடியுமா?

முடியும் என நிரூபித்து இந்தியாவிலேயே முதன்முறையாக தனது சொந்த பிராண்டையும் நிறுவியுள்ளார் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் அஞ்சனா அர்ஜுன்.
‘‘அப்பா, அக்கானு எல்லாருக்கும் சினிமாதான் வாழ்க்கை. எனக்கு என்னவோ நான் படிச்ச படிப்பிலேயேதான் என்னுடைய கரியரை வளர்த்துக்கணும்னு ஆசை. அதனால அதைச் சார்ந்த எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்துச்சு. அமெரிக்கால பார்சன் ஸ்கூல் ஆஃப் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். ஃபேஷன் டிசைனிங் மேல சின்ன வயசுல இருந்து ஆர்வம் அதிகம்.

அதையும் அங்கயே படிச்சு முடிச்சதும் சூழலுக்கு நண்பனா இருக்கற சஸ்டெய்னபிள் ஃபேஷன் மேல என்னுடைய ஆர்வமும் ஆராய்ச்சியும் திரும்பிச்சு...’’ என்னும் அஞ்சனா, வழக்கமான ஆர்கானிக் மெட்டீரியல்களான காட்டன், லினென் உள்ளிட்ட மெட்டீரியல்களைக் கடந்து யோசித்திருக்கிறார். ‘‘உலக அளவில் பூமிக்கு கேடு விளைவிக்கிற மாசுனு லிஸ்ட் போட்டா அதிலே மூன்றாவது இடம் ஃபேஷன் கழிவுகளுக்குதான். அந்த அளவுக்கு பூமியின் ஆயுளுக்கே சவாலா இருந்துட்டு இருக்கு ஃபேஷன் வேஸ்ட்டேஜ்.

ஒரு ஃபேஷன் டெக்னாலஜி படிச்ச ஸ்டூடண்டா இதுக்கு ஏதாவது தீர்வு செய்யணும்னு நினைச்சேன். வழக்கமா இருக்கற ஆர்கானிக் மெட்டீரியல்களைத் தாண்டி வேறு என்ன செய்யலாம்... குறிப்பா இன்னும் ஆர்கானிக்கா எப்படி யோசிக்கலாம்னு தோணுச்சு. காட்டன், லினென் மேக்கிங்ல கூட குறைஞ்சபட்சம்சில கெமிக்கல் புராஸசஸ் இருக்கு.

ஸோ, இதைக் கடந்து வேறென்னனு யோசிச்சப்ப எனக்கு கிடைச்ச ஐடியாதான் பழங்களில் ஹேண்ட் பேக்...’’ என்னும் அஞ்சனா, பழங்களை ஹேண்ட்பேக்குகளாக மாற்ற ஏராளமான சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்திருக்கிறார்.

‘‘பழங்கள் சீக்கிரம் கெட்டுடும் அல்லது அழுகிடும். இதுக்கு முதல்ல தீர்வு கண்டுபிடிக்கணும். அந்த ஆராய்ச்சிக்கு மட்டுமே எனக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. தொடர்ந்து நிறைய லேப்டெஸ்ட்... ஏகப்பட்ட இண்டஸ்ட்ரி விசிட்... இப்படி நிறைய சவால்களை சந்திச்சுதான் இன்னைக்கு இந்த ஹேண்ட்பேக் உருவாகி இருக்கு.

பெரும்பாலும் ஹேண்ட் பேக் அப்படினாலே நமக்கு முதல்ல நினைவுக்கு வர்றது லெதர்தான். காரணம், அதனுடைய குவாலிட்டி. அதுக்கும் மேல அதனுடைய ஆயுள் காலம். அதனால லெதர் ஹேண்ட்பேக்குகளுக்கு சமமா என்னுடைய ஹேண்ட் பேக் வருஷங்கள் கடந்து உழைக்கணும். இதுக்கு தயாரா இருக்கணும்.

அந்த வகைல இப்ப நான் உருவாக்கி இருக்கற இந்த ஹேண்ட்பேக் கிட்டத்தட்ட 10 வருஷங்கள் வரைக்கும் அப்படியே இருக்கும். அதற்கான ஆராய்ச்சியில்தான் எனக்கு மேற்கொண்டு ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. ஒரு முழு ஹேண்ட் பேக் உருவாக்க சுமார் நாலு வருடங்களுக்கு மேல நிறைய ஆராய்ச்சிகளையும் நிறைய சோதனைகளையும் குறிப்பா நிறைய ரிசல்ட் ஃபெயிலியர்களையும் கூட சந்திச்சேன்...’’ என்னும் அஞ்சனா தன்னுடைய ஹேண்ட் பேக்குகளின் தனித்துவம் குறித்தும் விளக்கினார்.

‘‘பழங்கள், லெதர்... இப்படி எந்த மெட்டீரியல்ல செய்தாலும் இந்திய புராடக்ட்னா அதுக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கும். அப்படி என்ன டிசைன் இதிலே கொண்டு வரலாம்னு யோசிச்சப்ப மெஹந்தி டிசைன்ஸ் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் வந்துச்சு.

ஆர்கானிக் பிரிண்டிங்ல மெஹந்தி டிசைன்ஸை என்னுடைய ஹேண்ட் பேக்ல கொண்டு வந்தேன். இதுக்கு எனக்கு பிரபல நஃப்லா சுலைமான் மெஹந்தி டிசைன்ஸ் ரொம்பவே சப்போட்டா இருந்துச்சு. விதவிதமான மெஹந்தி டிசைன்ஸை இந்த பழங்கள் ஹேண்ட் பேக்ல பார்க்கலாம்...’’ என்னும் அஞ்சனா அர்ஜுன், தன் அப்பா பற்றியும் பேசத் தொடங்கினார்.

‘‘அப்பாவும் சரி அம்மாவும் சரி எப்பவுமே எங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்யணும்னு ஆசைப்படுவாங்க. அதேபோல ஃபேஷன்லதான் எனக்கு ஆர்வம்னு தெரிஞ்சதுமே அப்பா நிறையவே சப்போர்ட் செய்தார், நிறைய உற்சாகப்படுத்தினார். ஃபுரூட் ஹேண்ட் பேக்னு சொன்னதுமே அப்பா அவ்வளவு ஆச்சர்யப்பட்டார். என்னைக்குமே இதைத்தான் செய்யணும்னு அப்பா எங்களை கட்டாயப்படுத்தினதே கிடையாது...’’ நெகிழ்ந்தவர், தன் ஹேண்ட் பேக்கின் விலை பற்றிய விவரங்களையும் பகிர்ந்தார்.

‘‘இப்போதைக்கு இதனுடைய விலை ரூபாய் 24,599 முதல் ரூபாய் 44,599 வரைனு நிர்ணயிச்சிருக்கேன். சுமாரா நான்கு வருடங்கள் இந்த ஹேண்ட்பேக்குகளை உருவாக்க நிறைய மெனக்கெட்டிருக்கேன். ஒவ்வொரு ஹேண்ட்பேக்கும் கைகளால் பார்த்துப் பார்த்து வடிவமைச்சிருக்கோம். இதுக்கு கிடைக்கிற வரவேற்பு, விற்பனை இதைப் பொறுத்து நிச்சயமா எதிர்காலத்தில் மிடில் கிளாஸ் மக்களும் வாங்குற மாதிரி விலையைக் குறைக்கற ஐடியாவும் இருக்கு.

இது மட்டுமில்லாம காய்கறிகள், பூக்கள்ல கூட லைஃப் ஸ்டைல் புராடக்டுகள் டிசைன் செய்கிற திட்டமிருக்கு. மேலும் புதுசா ஒரு பிராண்ட் அல்லது புராடக்ட்டை நாம் அறிமுகம் செய்தாலே அதைத் தொடர்ந்து நிறைய பேர் காப்பி பேஸ்ட் செய்வாங்க. அதை சமாளிக்கவும் நிறைய ஐடியாக்கள் செய்துட்டு இருக்கேன்.

இப்போதைக்கு இந்த ஹேண்ட்பேக்குகளை காப்பி
யடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். காரணம், இத உருவாக்க சுமார் நான்கு வருடங்கள் ஆகியிருக்கு. இந்த ஆராய்ச்சியை ஃபாலோ செய்து ஒரு ஹேண்ட்பேக் முழுமையாக்கவே குறைந்த பட்சம் இன்னொரு பிராண்டுக்கு ரெண்டு வருஷமாவது ஆகும். அதனால் என்னுடைய ஹேண்ட்பேக் மேல எனக்கு அதீத நம்பிக்கை இருக்கு...’’ தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் அஞ்சனா அர்ஜுன்.

ஷாலினி நியூட்டன்