அப்பாவால் முடிக்க முடியாத வழக்கை மகன் முடிக்கிறான்!



‘‘நான் யார்கிட்டயும் சினிமா கத்துக்கல. சுயாதீன இயக்குநர். படிச்சது என்ஜினியரிங். சினிமா பிடிக்கும் என்பதால் இந்த ஃபீல்டுக்கு வந்தேன். ஆசைக்காக ஒரு படம் பண்ணுவோம்னு ஆரம்பிச்சதுதான் ‘டார்லிங்’.
அந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பால் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘100’, ‘கூர்கா’னு வரிசையா படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்.அதர்வாவின் ‘டிரிக்கர்’ என்னுடைய ஐந்தாவது படம். இந்தப் படமும் ரசிகர்களால் கவனம் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார் இயக்குநர் சாம்ஆன்டன்.
‘டிரிக்கர்’ ஆக்‌ஷன் படமா?

யெஸ். இது ஆக்‌ஷன் ஜானர். ஆனா, அதுல ஆக்‌ஷனை மட்டும் சொல்லாம ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிடிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறோம். ஒரு அப்பா - பையன் சென்டிமென்ட்தான் மொத்தப் படமும். அதை நாங்க டிரைலர்ல சொல்லியிருக்க மாட்டோம். படத்தோட கோர் எமோஷன் என்னவென்றால், அருண்பாண்டியன் அப்பா, அதர்வா பையன். அப்பாவால் முடிக்க முடியாத ஒரு வழக்கை பையன் எப்படி முடிக்கிறான் என்பதுதான் கதை. இதுல லவ், காமெடினு கமர்ஷியல் கலந்திருக்கும்.

படத்துல போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டைப் பத்தி பேசியிருக்கிறோம். அப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சாதாரண சப் இன்ஸ்பெக்டரா இருந்தவர். பையனும் போலீஸ்.
‘100’ படமே புது களமா இருந்திருக்கும். அதுபோல இதுலயும் புதுசு இருக்கு. அது என்னன்னா போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இன்டர்னல் அஃபையர்ஸ்னு ஒரு தனி பிரிவு இருக்கிறது. அவங்களோட வேலையே போலீஸ் பண்ற தப்பை கண்டுபிடிப்பதுதான்.

படத்துல ஒரு இடத்துல இப்படி டயலாக் வெச்சிருப்பேன்... ‘வீடு சுத்தமா இருந்தாதான் நாடு சுத்தமா இருக்கும் என்பதை விட ஒரு போலீஸ் ஸ்டேஷன் சுத்தமா இருந்தாதான் அதைச் சுற்றியுள்ள ஊர் சுத்தமா இருக்கும்’னு சொல்லியிருப்போம். இதுதான் படத்தோட கான்செப்ட். அந்த தப்பை கண்டுபிடிக்கிறவர்தான் ஹீரோ.
‘டிரிக்கர்’ குறி யாருக்கு வைக்கப்படுகிறது?

யாரை நோக்கியும் கிடையாது. சமூக அக்கறையுடன்தான் இந்தப் படத்த எடுத்தோம். இப்ப ஒரு படத்தைப் பார்க்க ஓடிடி, சாட்டிலைட் சேனல் என பல தளங்கள் வந்துவிட்டது. ஆனா, இந்தப் படத்தை தியேட்டர்லதான் பார்க்கணும் என்பதற்கு என்ன அவசியம் என்று கேட்டால், இதுல இருக்கிற ஆக்‌ஷன் சீக்வன்ஸ், க்ளைமாக்ஸ் சேஸிங், படம் முழுக்க வரும் ஆக்‌ஷன் ப்ளாக் எல்லாத்தையும் தியேட்டர்ல பார்க்கும்போது அதோட அனுபவம் வேற லெவலில் இருக்கும்.

அதனால ரசிகர்களுக்கு நான் சொல்வது, இந்தப் படத்தோட ஆக்‌ஷன் சீக்வன்ஸ்க்காகவே தியேட்டர்ல படம் பாருங்க.அதர்வாவுடன் உங்களுக்கு இது இரண்டாவது படம்... உங்க கூட்டணி ஸ்பெஷல் என்ன?‘100’ பெரிய ஹிட். அதுக்கப்புறம் ‘கூர்கா’ பண்ணினேன். அடுத்த படத்தை ஆக்‌ஷன் ஸ்டோரியா பண்ணணும் என்பதுல தெளிவா இருந்தேன். ஏன்னா, ஒரு படம் ஆக்‌ஷன், ஒரு படம் காமெடி என்பதுதான் என்னுடைய ஐடியா. ஒரே ஜானர்ல டிராவல் பண்ணக்கூடாது என்று நினைப்பேன்.

‘கூர்கா’ நல்லா ஓடுச்சு. அடுத்ததும் காமெடி பண்ணலாம்னு ஜட்ஜ்மெண்ட் பண்ணி எடுக்கக் கூடாதுனு முடிவு பண்ணினேன். அதனால் ‘டிரிக்கர்’ பண்ணினேன்.
இது அதர்வாவுக்காகவே எழுதப்பட்ட கதை. கதை எழுதி முடிச்சதும் அதர்வாவிடம் சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்தது. 45 நாட்கள் பிரேக் இல்லாம ஒரே ஷெட்யூலில் எடுத்தோம். டெய்லி ஷூட் நடக்கும்.

பொதுவா தினமும் படப்பிடிப்பு நடத்தறது ஓர் இயக்குநருக்கு பிடிச்ச விஷயமா இருக்கும். ஆனா, ஹீரோவுக்கு பெரிய அழுத்தம் கொடுக்கும். படப்பிடிப்பு நடந்த 45 நாட்களில் 29 நாட்கள் ஆக்‌ஷன் சீன்ஸ் எடுத்தோம். அதுக்காக அதர்வா உடலை வருத்திக்கொள்ள வேண்டி இருந்தது. டெய்லி உடலில் ரோப் கட்டிக்கணும், பல்டி அடிக்கணும். தன்னை வருத்திக்கொண்டுதான் பண்ணினார். படம் பார்க்கும்போது ஈஸியா தெரியும். அதுக்கு பின்னாடி இருக்கும் உழைப்பு அதிகம்.

அதர்வா, பிரபாகரன் என்ற கேரக்டர்ல வர்றார். அதர்வாவிடம் எனக்கு பிடிச்ச விஷயமே கஷ்டமான சீனை கஷ்டமா பார்க்கமாட்டார் என்பதுதான். அதை முகத்திலும் வெளிப்படுத்தமாட்டார். எரிச்சலையும் நேரடியா காட்டமாட்டார். சொல்ற வேலையை அழகா செய்துவிட்டு போய்விடுவார். டைரக்டர் ஆக்டர்னு சொல்வேன். எதுக்காகவும் கேள்வியே கேட்கமாட்டார்.

கதை சொன்ன டைம்ல ஓகே சொன்னவர் அதுக்கப்புறம் எந்த கேள்வியும் கேட்டதில்ல. ‘நீங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும்’னு இயக்குநர் மீது நம்பிக்கை வைப்பார். முதல் படத்திலேயே நல்லா பேசுவார். இந்தப் படத்துல செம ஜாலியா இருந்தார்.

அதர்வா - தான்யா ஜோடிப் பொருத்தம் எப்படி?

தான்யா ரவிச்சந்திரன் ரொம்ப ஸ்வீட். செட்டுக்கு நான்தான் முதல் ஆளா போவேன். ஆனா, எனக்கு முன்னாடி செட்டுக்கு வர்ற ஒரே ஆள் யாருன்னா அது தான்யாதான். பங்க்ச்சுவாலிட்டிக்கு பேர் போனவங்கனு சொல்லலாம். ஜனனி என்ற கேரக்டர் பண்றார். அதர்வா - தான்யா காம்போவுக்கு நிறைய லைக்ஸ் கிடைக்கும்.  

முக்கியமான வேடத்துல அருண்பாண்டியன் சார் வர்றார். அருண்பாண்டியன் சாரிடம் கதை சொல்லப்போகும்போது, ‘இப்ப நான் படம் பண்றதில்ல. ‘அன்பிற்கினியாள்’ என் பொண்ணுக்காக பண்ணினேன்’ என்றார். நான் விடாம, ‘கதையை கேட்டுட்டு உங்க விருப்பத்தை சொல்லுங்க சார்’னு கதை சொன்னேன்.

கதை பிடிச்சதால் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சார் சீனியர் என்பதோடு பார்க்க மிலிட்டரி ஆபீஸர் மாதிரி இருக்கிறாரே என்று கொஞ்சம் உதறல் இருந்துச்சு. ஆனா, சார் ரொம்ப ஃபன் கேரக்டர். எங்களைவிட ஜாலியா இருந்தார். பல நாள் கண்விழித்து பண்ணிக்கொடுத்தார். இவர்களுடன் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், ‘அறந்
தாங்கி’ நிஷா இருக்காங்க.  

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு பண்றார். என்னுடைய ஐந்து படங்களுக்கும் அவர்தான் கேமரா. மொத படத்திலேயே எங்களுக்கிடையே சிங்க் ஆகிடுச்சு. என்னுடைய படங்களை ஃபாஸ்ட்டா முடிக்க காரணம் கேமராமேன்தான். அந்தந்த படத்துக்கு ஏத்தமாதிரி அடாப்ட் பண்ணி வேரியேஷனோட பண்றார். இதுதான் தொடர்ந்து அவருடன் டிராவல் பண்ண வைக்கிறது.
ஜிப்ரான் மியூசிக். இந்தப் படத்துக்கு உயிர்னு சொல்றதா இருந்தா பேக்ரவுண்ட் மியூசிக்கை சொல்லலாம்.

மிகச் சிறப்பா பண்ணியிருக்கிறார். இன்னொரு முக்கியமான டெக்னீஷியன் ஃபைட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். படத்தின் பெரும்பகுதி ஆக்‌ஷன் சீக்வன்ஸ் என்பதால் எல்லா நாளும் எங்களோடு இருந்தார். அவர் பண்ற படங்களைவிட இது சின்ன படம். ஆனா, பெரிய படத்துக்கு என்ன மெனக்கெடல் தருவாரோ அதைவிட அதிகமா தந்தார்.

‘பிரமோத் ஃபிலிம்ஸ்’ பிரதீக் சக்கரவர்த்தி, ஸ்ருதி ஆகியோர் பாலிவுட்ல பெரிய தயாரிப்பாளர்கள். இது அவங்களுடைய 25 வது படம்னு நினைக்கிறேன். பாலிவுட்ல அக்‌ஷய்குமாரை அறிமுகப்படுத்தியவர்கள். தமிழில் பிரபுதேவா நடிச்ச ‘லஷ்மி’, மாதவன் நடிச்ச ‘மாறா’ படங்களைத் தயாரிச்சவங்க. கதை சொன்ன நாள் முதல் ரிலீஸ் தேதி வரை படத்துக்கு எவ்வளவு அதிகமா செலவு பண்ணமுடியுமோ அவ்வளவு அதிகமா செலவு பண்ணுங்க என்று சுதந்திரம் கொடுத்தாங்க.

நாங்க ஒரே ஷெட்யூல் பண்ணதைப் பார்த்துவிட்டு ரெண்டு நாள் பிரேக் எடுத்துட்டு பண்ணுங்கனு எங்க ஹெல்த் மீது உள்ள அக்கறையால் கேட்டார்கள். இவ்வளவு நல்ல தயாரிப்பாளருக்கு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும்னு எல்லாரும் சின்சியரா ஒர்க் பண்ணினோம். நான் இதுவரை ஒர்க் பண்ணிய கம்பெனிகள் எல்லாமே பெரிய நிறுவனம். அதுல இவங்க த பெஸ்ட். படப்பிடிப்பு நடந்த 45 நாட்களும் தயாரிப்பாளர் ஸ்ருதி கூடவே இருந்தாங்க. மானிட்டர் பக்கம் வராம ஸ்பாட்ல என்ன தேவை இருக்குன்னு கண்காணிச்சு வேண்டியதை செய்து கொடுத்தாங்க.

‘100’, ‘கூர்கா’ போன்ற கவனம் பெற்ற படங்கள் செய்த இயக்குநர் நீங்கள்... பெரிய நடிகர்களிடமிருந்து அழைப்பு வருகிறதா..? அடுத்து யாரை வைத்து இயக்கவுள்ளீர்கள்?
சினிமா எனக்கு பிடிச்ச வேலை. பெரிய ஹீரோ படம் பண்ணுவதை பிரஷ்ஷரா எடுத்துக்கக்கூடாதுனு நெனைக்கிறேன். பிடிச்ச வேலையில் எதுக்கு பிரஷ்ஷரை ஏத்தணும்..? ‘100’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும் என்னுடைய நலவிரும்பிகள் பெரிய ஹீரோவுக்கு போயிடு என்றார்கள். ஆனா, யோகிபாபுவை வெச்சு பண்ணேன். அது என்னுடைய முடிவு.

‘100’படத்தை பாலிவுட்ல பண்ண கூப்பிடுறாங்க. எனக்கு என்ன பிடிக்குதோ அதைப் பண்ணுவேன். விஜய், அஜித், அல்லு அர்ஜுன் போன்ற ஜாம்பவான்களுடன் படங்கள் பண்ணணும். அதுக்கு நான் இன்னும் கூட சூப்பர் ஹிட் கொடுத்துட்டு, அனுபவத்தோட பொறுமையா போகலாம்னு இருக்கேன். ஒரு படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானவுடனேயே அப்பட்டமான ஹாலிவுட் காப்பினு சமூக வலைத்தளங்களில் கமெண்ட்ஸ் தாறுமாறா வருகிறது... ஓர் இயக்குநரா உங்கள் பதில்?

விமர்சனம் எல்லோரும் செய்வாங்க. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். நாம் பண்ணும் படத்துக்கும் தயாரிப்பாளருக்கும் உண்மையா இருந்தால் போதும்.
‘கூர்கா’ படத்தை ‘மால்காப்’, ‘டை ஹார்ட்’  இன்ஸ்பிரேஷன்ல பண்ணினேன். டிரைலரில் புளூசட்டை மாறன் மாதிரி ஒரு கேரக்டர வெச்சு இது ஹாலிவுட் இன்ஸ்பிரேஷன் படம்னு சொல்லியிருப்பேன்.

விமர்சனம் செய்வது மக்களோட சுதந்திரம். சினிமா விமர்சனத்துக்குரிய ஃபீல்ட். விமர்சனம் செய்வது ஆடியன்ஸ் உரிமை. யார் வேண்டுமானாலும் இன்ஸ்பிரேஷன்ல படம் பண்ணலாம், காப்பி அடிக்கக்கூடாது என்பதைத் தாண்டி ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி படம் பண்ணணும். இங்கு எல்லா இயக்குநர்களும் நேர்மையா கதை பண்றாங்க.

எஸ்.ராஜா