#boycott bollywood... என்ன நடக்கிறது இந்தித் திரையுலகில்..?



அலசுகிறார்கள் திரையுலக விமர்சகர்கள்

‘தடை செய்’ என்பதற்கும் ‘மறுத்துவிடு‘ என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதுதான் இப்போது இந்தி(ய) சினிமாவில் நடந்து வருகிறது. ‘பாய்காட் பாலிவுட்’ என்ற எதிர்பாராத தாக்குதலால் அமீர்கான், ஷாருக்கான், ஹிர்த்திக் ரோஷன், ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய சவால்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து் வருகின்றன.  

இந்த பாய்காட் கலாசாரம் இப்போதைய டிரெண்ட் என்று சொல்ல முடியாது. 2014ல் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடித்த ‘பிகே’ படம் பாய்காட் பிரச்னையை சந்தித்தது. ‘வேற்று மதத்தைச் சேர்ந்த அமீர்கான் எப்படி சிவன் வேடத்தில் நடிக்கலாம்’ என்று சில இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. படக்குழு முறையான விளக்கம் அளித்த நிலையிலும் அந்தப் படத்தின் வசூல் பாய்காட் பிரச்னையால் பாதிக்கப்பட்டது. அந்த நிலையிலும் ‘பிகே’ உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூல் செய்தது.

சில வருடங்களுக்குப் பிறகு அமீர்கான், தன் மனைவி கிரண் ராவ் ‘இந்தியாவில் வசிப்பது பாதுகாப்புக்குரியது அல்ல’ என்று தன்னிடம் சொன்னதாக பொதுவெளியில் சொன்னது சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. அதன்பிறகு வெளிவந்த அமீர்கானின் ‘டங்கல்’ நஷ்டத்திலிருந்து தப்பியது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ‘லால்சிங் சத்தா’ பழைய சர்ச்சைகளால் பலத்த காயமடைந்தது. அதில் நாயகியாக நடித்த கரீனா கபூர் ஒரு பேட்டியில், ‘என்னுடைய படங்களைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் ரசிகர்களின் சுதந்திரம். யாரையும் நான் வற்புறுத்தமாட்டேன்’ என்று கூறியிருந்தார்.

விதி வலியது! அவர் சந்திக்க வேண்டிய நஷ்டத்தை அவருடைய உறவினர் ரன்பீர் கபூர் சந்தித்தார். கரீனா கபூரின் நெருங்கிய உறவினரான ரன்பீர் கபூர் நடித்த படம் ‘பிரம்மாஸ்திரம்’. கரீனாவுக்காக ரன்பீரை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருக்காது. சில ஆண்டுகளுக்கு முன் ரன்பீர் கபூர் ஒரு பேட்டியில் ‘நான் மாட்டிறைச்சி பிரியர்’ என்று தெரிவித்ததோடு,  சாப்பாட்டுத் தட்டோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்பு வரவே, யூ டர்ன் அடித்து ‘அது மாட்டிறைச்சி இல்ல’ என்று மழுப்பினார்.

இவை எல்லாம் சேர்ந்து ‘பிரம்மாஸ்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே படத்துக்கு எதிர்ப்பு (பாய்காட் பாலிவுட்)  வர ஆரம்பித்தது.

‘பிரம்மாஸ்திரம்’ வெளியீட்டுக்கு முன் படக்குழு வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் வழிபாட்டுக்குச் செல்ல திட்டமிட்டது. படத்தின் நாயகன் ரன்பீர் கபூர், நாயகி ஆலியாபட் ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் விசிட்டை தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. கடைசியில், இயக்குநர் மட்டுமே பூஜையில் பங்கேற்றார்.

ஹிர்த்திக் ரோஷன் ‘லால்சிங் சத்தா’ படத்தை லைக் பண்ணி டுவிட் பண்ணியதால் ‘பாய்காட் விக்ரம் வேதா’ என்று அவர் வீட்டுக் கதவையும் பாய்காட் தட்டத் தொடங்கியுள்ளது.

ஷாருக் கான் 2015ல், ‘இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதையடுத்து ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ‘தில்வாலே’ பலத்த அடிவாங்கியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜவான்’ என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கும் என்ற அச்சம் இப்பொழுதே தோன்ற ஆரம்பித்துவிட்டது. சினிமாவை அச்சுறுத்தும் ‘பாய்காட் பாலிவுட்’ என்ற தாக்குதலால் சினிமா துறை எந்தளவில் பாதிக்கப்படும் என்பதைக் குறித்து பாலிவுட் சினிமாவை நன்கு அறிந்த சிலரிடம் பேசினோம்.

*டாக்டர் தனஞ்செயன் (தயாரிப்பாளர், இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர்)
‘‘‘பாய்காட் பாலிவுட்’ பெரிய அதிர்வை ஏற்படுத்தல. ‘பிரம்மாஸ்திரம்’ படத்தை பாய்காட் பண்ணணும்னு சொன்னாங்க. ஆனா, அது நடக்கல. எல்லாத்தையும் மீறி படம் பெரிய வெற்றி.
‘பாய்காட் பாலிவுட்’ ஒரு தற்காலிக நிகழ்வு. சினிமாக்காரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு எதையாவது செய்யணும் என்ற அஜண்டா சிலருக்கு இருக்கும். அதனால் சில படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அது எல்லா படத்துக்கும் நடக்காது.

படங்கள் நல்லா இல்லாத சமயத்தில் மட்டுமே ‘பாய்காட் பாலிவுட்’ ஒர்க் அவுட்டாகும். ‘பாய்காட் பாலிவுட்’ என்று ‘லால்சிங் சத்தா’ படத்துக்கு எதிராகப் பேசினார்கள். அந்தப் படம் மக்களிடையே கவனம் பெறவில்லை. அதுதான் உண்மை. கவனம் பெறாதபோது ‘பாய்காட் பாலிவுட்’ அசைன்மென்ட் வெற்றியடைந்த மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. படம் நல்லா இருந்தால் மட்டுமே மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். எதிர்ப்புகளை மீறி ‘பிரம்மாஸ்திரம்’ மிகப் பெரிய அளவில் கலெக்‌ஷனைப் பார்த்து வருகிறது. இதுல கவனிக்க வேண்டியது... குறிப்பிட்ட நடிகர்களை மத ரீதியாக வேறுபடுத்திக் காட்டுவதுதான் இவர்களுடைய வேலை.

கன்டன்ட் நல்லா இருந்து பாய்காட் பண்ணிய சமயத்தில் படம் ஓடவில்லை என்றால் மட்டுமே பாய்காட் பார்முலா ஒர்க் அவுட்டாகிறது என்று நினைக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகள்தான் இண்டஸ்ட்ரியில் இருக்கிறவர்களை அச்சத்தில் ஆழ்த்தும். ‘விக்ரம் வேதா’ இந்தி டிரைலர் வெளியானபோது அவங்களுக்கும் இந்தப் பிரச்னை வந்தது.

அதையும் மீறி டிரைலருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. ஆக, ‘பாய்காட் பாலிவுட்’ என்பதெல்லாம் தற்காலிக நிகழ்வுகள் மட்டுமே. எதிர்மறை பிரசாரங்கள், ‘பாய்காட் பாலிவுட்’, ‘நெப்போடிசம்’ போன்ற பிரச்னைகளைத் தாண்டி ‘பிரம்மாஸ்திரம்’ ஓடுகிறது.

ஒரு விஷயம்... ‘பாய்காட் பாலிவுட்’ என்பது தேவையில்லாத பிரிவை உண்டாக்குவதாகத் தெரிகிறது. இது ஒரு தவறான முன் உதாரணம். மத ரீதியாக, வாரிசு ரீதியாக பிரிவுகளை உண்டாக்கப் பார்க்கிறார்கள். சினிமா என்பது திறமையை அடிப்படையாகக் கொண்டது.

திறமை இருந்தால் வெற்றி உறுதி. திறமையால் முன்னேறுபவர்களின் வெற்றியைத் தடுப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. பெருந்தொற்றுக்குப் பிறகு பாலிவுட் படங்கள் ஓடவில்லை என்றும், ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப்’ போன்ற தென்னிந்திய படங்கள் ஓடியது என்றும் தோற்றம் இருக்கிறது.

பெருந்தொற்றுக்குப் பிறகு பாலிவுட்டில் ‘பூல் பூலாயா - 2’, ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்கள் வெற்றியடைந்துள்ளன.

ரன்பீர் கபூர், சஞ்சய்தத் நடிச்ச ‘ஷம்ஷேரா’, அக்‌ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’, ‘ரக்ஷாபந்தன்’, ‘லால்சிங் சத்தா’ போன்ற படங்கள் சரியாகப் போகாததற்குக் காரணம் படத்தின் கன்டண்ட் நன்றாக இல்லாததுதான்.’’  

*பரத்வாஜ் ரங்கன்(மூத்த பத்திரிகையாளர் - சிறந்த விமர்சகருக்கான தேசிய விருது வாங்கியவர்)

‘‘‘பிரம்மாஸ்திரம்’ படத்துக்கு ‘பாய்காட்’ பிரச்னை வந்ததை மறுக்கமுடியாது. ஆனா, அதையும் தாண்டி படம் சூப்பரா ஓடுது. இந்திய அளவில் பெருந்தொற்றுக்குப் பிறகு ‘கேஜிஎஃப்’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற தென்னிந்திய படங்கள் வெற்றி்கரமாக ஓடின. ‘பிரம்மாஸ்திரம்’ அந்தளவுக்கு ஓடவில்லை என்றாலும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. இதிலிருந்து மக்கள் ‘பாய்காட் பாலிவுட்’ விஷயத்தை பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.

வெகுஜன மக்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரி இல்லாததால்தான் ‘லால்சிங் சத்தா’ ஓடவில்லை. அதே மாதிரி ரன்பீர் கபூரின் முந்தைய படமான ‘ஷம்ஷேரா’வும் ‘பாய்காட்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். இது டுவிட்டர் டிரெண்ட் மட்டுமே. நம் நாட்டில் பல கோடிப் பேர் இருக்கிறார்கள். குறைந்த சதவீத மக்கள்தான் டுவிட்டர் பயன்படுத்துபவர்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கும் டுவிட்டருக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது.

பாலிவு்ட்டில் பெருந்தொற்றுக்குப் பிறகு எந்தப் படமும் வெற்றியடையவில்லை என்கிறார்கள். சவுத்ல மட்டும் என்ன நடந்தது? ‘விக்ரம்’, ‘திருச்சிற்றம்பலம்’ தவிர வேற படங்கள் ஓடவில்லை. 

தமிழ் சினிமாவில் ஸ்டார் இல்லாத படம் ஓடியிருக்கு என்று உங்களால் சொல்ல முடியாது. ‘விக்ரம்’ மல்டி ஸ்டார்ஸ் படம். ‘திருச்சிற்றம்பலம்’ படத்துல தனுஷ் இருந்தார். ஒவ்வொரு வாரமும் படங்கள் வெளியாகி, தோல்வியைத் தழுவி வருவதை மறந்துவிடக்கூடாது.

இப்போது தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் தெளிவாக இருக்கிறார்கள். எந்த மாதிரி படங்களை எந்த தளங்களில் பார்க்கணும் என்று தெரிகிறது. ‘விக்ரம்’ மாதிரியான ஆக்‌ஷன் படம், ‘திருச்சிற்றம்பலம்’  மாதிரியான ஃபேமிலி படத்தை தியேட்டரில் பார்த்தால் நல்லா இருக்கும்னு வர்றாங்க. சின்ன பட்ஜெட் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் வரும்போது ஓடிடியில் பார்க்க முடிவெடுக்கிறார்கள். நான் பெயர் குறிப்பிடவில்லை. சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் நல்ல படங்கள் என்ற வரவேற்பு கிடைத்தும் ஓடவில்லை.

கான்(களின்) படம் ஓடாததற்கு ‘பாய்காட் பாலிவுட்’ காரணமென்றால் இந்தச் சமயத்தைச் சேர்ந்த அக்‌ஷய்குமார் படம் ஓடியிருக்க வேண்டுமே! படம் பிடித்தால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவாங்க. வாய்மொழியாக படம் நல்லா இருக்குன்னு சொல்லும்போது அதற்கு நல்ல ரீச் கிடைக்குது. அடுத்து,  ஃபில் குட் படம், ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படத்துக்கு வர்றாங்க. நேட்டிவிட்டி, ரியாலிட்டி, அழுகைப் படங்களுக்கு வருவதில்லை.

‘பாய்காட்’ சினிமாக்காரர்களுக்கு அச்சுறுத்தல் இல்ல. ‘பத்மாவதி’ டைம்ல கதையில் தவறான கருத்து சொல்லியிருக்கிறார் என்று அதன் இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியை சில அமைப்பினர் தாக்கினார்கள். அதையும் மீறி  அந்தப் படம் 300 கோடி கலெக்ட் பண்ணியது’’என்கின்றனர்.

இந்தியாவுல கிரிக்கெட்டும், சினிமாவும் இரண்டு கண்கள் மாதிரி. கிரிக்கெட்டை ஆதரிக்கும் மக்கள் சினிமாவையும் பாரபட்சமில்லாமல் ஆதரிக்க முன்வரவேண்டும் என்பதே சினிமாவை நேசிப்பவர்களின் எதிர்பார்ப்பு.அதுவரை இந்த ‘பாய்காட்’ பிரச்னை எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்பதை சொல்வது கடினம். ஒரே தீர்வு... வழக்கமான பதில்தான். நல்ல படங்கள் எடுங்கள்!

தொகுப்பு: எஸ்.ராஜா