முதல் மேடை தோல்வி... அதனாலதான் ஹீரோயினா உங்க முன்னாடி நிக்கறேன்!



 சொல்கிறார் டெம்பிள் குயின் சித்தி

‘‘கேமரா முன்னாடியும், கேரக்டருக்கும் நேர்மையா இருக்கணும்... இதுதான் சிம்பு சார் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம்...’’ கொஞ்சம் தமிழ், கொஞ்சம் வெட்கத்துடன் கன்னங்களில் பளிச்சென குழி விழ சிரிக்கிறார் ‘வெந்து தணிந்தது காடு’ சித்தி இத்னானி.முத்துவின் பாவை... எப்படி இந்த வாய்ப்பு கிடைச்சது? சசி சார் டைரக்‌ஷன்ல ‘100 கோடி வானவில்’ படம் முடிச்சிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறதுக்குள்ள கொரோனா ஊரடங்கு வந்திடுச்சு. நானும் அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம வீட்டுக்குள்ள அடங்கிட்டேன்.

அப்பதான் ‘பத்து தல’ படத்தின் டைரக்டர் கிருஷ்ணா சார் என்னுடைய மேனேஜர் அருண்கிட்ட கௌதம் மேனன் சார் அவருடைய அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடுறதா தகவல் சொன்னார். காலைல நாலு மணிக்கு ஃபிளைட் பிடிச்சு சென்னை வந்தேன்.
கௌதம் சார் ஹயாத் ரெசிடென்சியில் ஷூட்டிங்கில் இருக்கார்னு சொன்னாங்க. சரி நிச்சயமா ஆடிஷனா இருக்கும்னு நினைச்சு அங்க போனேன். என்ன பார்த்த உடனேயே கெளதம் சார் ‘ஹலோ நான் கௌதம் மேனன்...’னு அறிமுகம் செய்துட்டு ஒரு புளூ கலர் புடவை கொடுத்தாங்க. இது ஏதோ லுக் டெஸ்ட், ஆடிஷனா இருக்கும்னு நினைச்சு புடவை கட்டிட்டு வந்தேன்.

கொஞ்ச நேரத்துல சிம்பு சாரும் அங்க வந்தார். அவர பார்த்ததுமே ‘கங்ராஜுலேசன் ஃபார் ‘மாநாடு’ சக்சஸ்’னு சொன்னேன். சிரிச்சார். அப்புறம் எங்க ரெண்டு பேரை வைச்சு ஒரு சீன் ஷூட் செய்தாங்க.  இந்தப் படத்துல நான் இருக்கேனா, இல்லையா, திரும்ப எப்ப வரணும்... இப்படி நிறைய கேள்விகள். கௌதம் சார்கிட்ட போய் கேட்டேன்.
‘நான் இந்த படத்துல இருக்கேனா’னு கேட்டேன். ஒரு நிமிஷம் என்னை நிமிர்ந்து பார்த்தவர் ‘சிம்பு கூட ஒரு சீன் முடிச்சிட்டோம்’னு சொன்னார். ‘அது லுக் டெஸ்ட்னு நினைச்சேன்’னு சொன்னேன். அதுக்கு கௌதம் சார் ‘ஆர் யூ மேட்... சிம்பு கூடவா லுக் டெஸ்ட் எடுப்பாங்க’ன்னு கேட்டார்.

இப்ப வரைக்கும் இந்த மொமெண்ட என்னால மறக்கவே முடியாது. இப்படிதான் நான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். கௌதம் மேனன் ஹீரோயின்... இதற்கு நிறைய மெனக்கெடணுமே?
நிச்சயமா. கௌதம் மேனன் சார் படத்தில் வருகிற ஹீரோயின் சும்மா வந்தாங்க, ஒரு டான்ஸ் ஆடினாங்கனு இருக்க மாட்டாங்க.
பாடி லாங்வேஜ் முதற்கொண்டு முழுசாமாறணும். பெரும்பாலும் கெளதம் மேனன் சாருடைய ஹீரோயின்ஸ் ரொம்ப அமைதியா, கொஞ்சம் அறிவா, அதேசமயம் அழகா ஸ்கிரீன்ல தெரிவாங்க. குறிப்பா நேச்சுரலா இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் கௌதம் மேனன் சார் ஹீரோயின்ஸ் அத்தனை பேரும் ஒரே நைட்ல செம ஃபேமஸ் ஆகி யிருக்காங்க. அப்படி இருக்கும்போது இந்த படம் என்னுடைய கரியர்ல ரொம்ப முக்கியமான படம்.

மும்பை பொண்ணு... எப்படி தமிழ் இவ்வளவு நல்லா பேசுறீங்க? சசி சார் படத்துக்காக சுமார் 7 மாசம் சென்னை வளசரவாக்கத்துல தங்கியிருந்தேன். அங்க இருக்கும்போது பக்கத்துல கடைகள், மார்க்கெட்னு போயி தமிழ் கத்துக்க ஆரம்பிச்சேன். அது மட்டுமில்லாம டைரக்டர் சசி சார் கூட வேலை செய்யும் பொழுது தமிழ், தமிழ் மொழியினுடைய பல்ஸை எனக்கு பக்காவா புரிய வெச்சார். அவரைப் பொறுத்தவரைக்கும் ஒரு சிரிப்புனா அது ஒரு சிரிப்புதான்... ஒரு துளி அழுகைனா ஒரு துளி அழுகையாதான் வரணும். இப்படி நிறைய விஷயங்களை தமிழ் மொழிக்காக சொல்லிக் கொடுத்தார்.

அப்பா குரல் பயிற்சியாளர், அம்மா டிவி நடிகர்... இந்த காம்போ உங்களுக்கு எப்படி எல்லாம் உதவி செய்தது? ‘ஒருவேளை நீ டிவி சீரியலுக்கு போனா ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் உன்னுடைய வாழ்க்கை மொத்தமாக மாறும். ஒண்ணு நீ நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு மேலே போவ... இல்ல மொத்தமா தெரியாமலே போயிடுவ. அதனால் எப்போதும் இந்த ஏற்ற இறக்கத்தை ஏத்துக்கக்கூடிய மனநிலைய மட்டும் வளர்த்துக்கோ...’ இதுதான் அம்மா சொன்ன அட்வைஸ்.

அப்பாவுக்கு நிறைய மொழிகள் கத்துக்க பிடிக்கும். இந்தியாவிலே இருக்கற நிறைய மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருப்பார்.     ‘எந்த அளவுக்கு உன் நடிப்பு முக்கியமோ அதைவிட முக்கியம் உன்னுடைய குரல்...’ அதுதான் அப்பா சொன்ன அட்வைஸ். அவர் கொடுத்த ஊக்கத்துல ‘வெந்து தணிந்தது காடு’ல நானே டப்பிங் பேசி யிருக்கிறேன்.
சிம்பு ஒவ்வொரு சீனையும் ஒரே டேக்கில் ஓகே செய்திடுவார்... அவர் கூட நடிக்கறது சிரமமா இருந்துச்சா?

அது எப்படி இல்லாம இருக்கும்! அவர சிங்கிள் டேக் ராஜானு சொல்றதுல தப்பே கிடையாது. அவர்கூட நடிக்கும்போது நிறைய கத்துக்கிட்டேன். அவர் முகம் மட்டுமில்ல... மொத்த உடம்பும் நடிக்குது. முத்து கேரக்டருக்காக சின்னச் சின்ன விஷயத்தைக் கூட பார்த்துப் பார்த்து நடிச்சார். சட்டையைப் பிடிச்சிக்கிட்டே இருக்கறது... தலையை லைட்டா சொறிஞ்சிட்டு இருக்கறது... காலை இழுத்து நடக்கறது... இதெல்லாம் பார்க்க அவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு. மிகப்பெரிய பாடமா கத்துக்கிட்டேன்.

2018 பாரிஸ்... ஏன் மாடலிங், அழகிப் போட்டிகளில் தொடர்ந்து பயணிக்கல?
என்னுடைய 17 வயசிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்த மேடை அது. ‘மிஸ் இந்தியா சூப்பர் டேலண்ட்’ போட்டிக்காகத்தான் நான் அவ்வளவு மெனக்கெட்டு என்னை நானே தயார் செய்தேன். ஆனா, ஜஸ்ட் லைக் தட் ஒரு நாலு பேரை செலக்ட் செய்துட்டு ‘நீங்க எல்லாம் போகலாம்’னு கூட்டமா அனுப்பிட்டாங்க. அதை என்னால ஏத்துக்கவே முடியல. அந்த மேடை கொடுத்த தோல்விதான், தொடர்ந்து ஒருசில படங்கள் எனக்கு தோல்வியைக் கொடுத்தாலும் அதை பாசிட்டிவா எடுத்துக்கற மனப்பக்குவத்தைக் கொடுத்திருக்கு.

தவிர முதல் மேடையே எனக்கு தோல்வியைக் கொடுத்ததால தொடர்ந்து அந்த வயசிலே அதிலே ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்ல. எனக்கு கடவுள் வேற ஏதோ திட்டம் வச்சிருக்காருனு தோணுச்சு. இதோ இப்ப உங்க முன்னாடி சசி சார், கௌதம் மேனன் சார் ஹீரோயினா உட்கார்ந்து இருக்கேன். கடைசியா என்ன படம் பார்த்தீங்க?

‘விக்ரம்’... செம படம். அடுத்து ‘மாநாடு’. லிஸ்ட் கேட்டா இன்னைக்கு ஃபுல்லா நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். டுவிட்டர்ல எப்பவுமே ஆக்டிவா இருப்பேன். அதனால எல்லா  விமர்சனமும் படிச்சிடுவேன். ஏதாவது ஒரு படம் டிரெண்ட்ல வந்துச்சுன்னா அந்தப் படத்தை எப்படியாவது பார்த்திடணும்னு டார்கெட் செஞ்சிடுவேன். இப்பகூட ‘திருச்சிற்றம்பலம்’ செம டிரெண்ட்ல இருக்கு. அந்தப் படம் பார்க்கறதுக்கு இன்னமும் எனக்கு டைம் கிடைக்கல. ஆனா, எப்படியாவது பார்த்துடணும்.

தமிழ்ப் படங்கள் பற்றி என்ன நினைக்கறீங்க..? தமிழ்ப் படங்கள் மட்டுமில்ல, தமிழ் டைரக்டர்கள் பத்தியும் சொல்லணும். கதைகளையும் கேரக்டர்களையும் ரொம்ப நேச்சுரலா எடுக்கறாங்க. எடுத்துக்கிட்ட கதைக்கு ஹானஸ்ட்டா வேலை செய்யறாங்க. நான் பார்த்த வரைக்கும் தமிழ்ப் படங்கள் உணர்வுபூர்வமா இருக்கு. அப்படிப்பட்ட கதைகள்ல நானும் ஒருத்தியா இருக்கேன்னு நினைக்கும் பொழுது ஹேப்பியா இருக்கு.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்