பீர் திருவிழா!



உலகெங்கிலும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் திருவிழாவில் ஜெர்மனியின் புகழ்பெற்ற பீர் திருவிழாவும் ஒன்று. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாத இத்திருவிழா கடந்த வாரம் கோலாகலமாக நடந்தது.
200 ஆண்டுக்கால வரலாற்றில் இதுவரை 26 முறை மட்டுமே இந்த பீர் திருவிழா நடக்கவில்லையாம். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் காரணமாகவும், காலரா வெடிப்பு காரணமாகவும், சமீபத்திய கொரோனா காரணமாகவும் இத்திருவிழா நடக்காமல் போனது.

கடைசியாக 2019ல் இத்திருவிழா நடத்தப்பட்டபோது, ​​​​6.3 மில்லியன் விருந்தினர்கள் 7.3 மில்லியன் லிட்டர் ஜெர்மன் பீரைக் குடித்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்கிறார்கள்.சுமாராக இந்தத் திருவிழா 1.2 பில்லியன் யூரோக்கள் வருமானத்தை ஈட்டும். இந்த எண்ணிக்கை இதுவரை குறைந்ததில்லை. சொல்லப்போனால் இந்த ஆண்டு நிச்சயம் இரு மடங்காக வருமானம் அதிகரித்திருக்கும் என காலரை உயர்த்துகிறார்கள்.

ஏனெனில் கடந்த ஆண்டு சராசரி நுகர்வு 84 லிட்டர்கள் என்ற அடிப்படையில் ஐரோப்பாவின் அதிக பீர் குடிப்பவர்களில் ஜெர்மனியர்கள் முதலிடத்தில் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் இந்த பீர் திருவிழாவைக் கொண்டாடி யிருப்பார்களே!

காம்ஸ் பாப்பா