சிறுகதை -அவ்வையார் பள்ளி



ஏகலைவனை நான் முதன் முதலில் சந்தித்த நாளை மறக்கவே முடியாது. நடந்து விட்ட எல்லா துர்ப்பாக்கிய நிகழ்வுகளுக்கும் நான் ஒருவனே காரணம் என்பதை எப்படிச் சொல்வது. யாரிடம் சொல்வது. மொத்தம் முப்பத்தி இரண்டு பேர் இருந்தார்கள்.

‘‘அவ்வையார் பள்ளிக்கு சும்மா ஒருமுறை வந்து எங்களது மாணவர்களை சந்திக்க முடியுமா... பிளீஸ்...’’ அவர் தலைமை ஆசிரியை மங்கை மேடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நாங்கள் ஒரு ரோட்டரி சங்க மாநாட்டு விழாவில் சந்தித்து  இருந்தோம். அவ்வையார் பள்ளி, அதாவது எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகம் ஆவதற்கு முன் ஔவையார் பள்ளியாக இருக்கும்போது  நானும் அந்த மங்கையர்க்கரசியும் (இப்போதுதான் மங்கை மேடம்) அங்கே ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தோம். நாங்கள் படித்த பள்ளியிலேயே அவர் மங்கை மேடம் - தலைமை ஆசிரியை ஆனது தனிச் சிறப்பு. நான் தமிழ் இலக்கியம் படித்து பல்கலைக்கழகப் பணியில் இருந்தேன்.

‘‘எப்போது பார்த்தாலும் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கைபேசி, ஆன்லைன் என்றே இருக்கிறார்கள். எங்கள் மாணவர்களிடம் நீங்கள் பேசினால் இலக்கிய படைப்
பாக்கம் என்று கொஞ்சமாவது ஆர்வம் வரும்...’’ என்றார் அவர்.‘‘எங்களுக்கும் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய ஆய்வு - கலாசாரத் தேடல், என்று வருபவர்கள் ரொம்பவே குறைந்து விட்டார்கள்...’’ என்றேன் நான். உண்மையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இலக்கிய ஆய்வு மாணவர் என்றால் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் எல்லாம் சேர்த்தே பத்துபேர்கூட  கிடையாது. எல்லாரையும் அறிவியல் துறையே தன் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டது.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த பள்ளிக்கு இம்முறை சிறப்பு அழைப்பாளராகச் சென்றேன். மேல்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கொஞ்சம் பெரிதாக இருந்த வகுப்பறையில் உட்கார வைத்திருந்தார் அவர்.‘‘நம் பள்ளியில் படித்தவர்... பல நூல்களை எழுதியவர்... தமிழ் இலக்கிய வித்தகர்...’’ பலவாறு
அறிமுகம் செய்யப்பட்டேன்.நானும் இலக்கியத்தின் முக்கியத்துவம், தமிழ் இலக்கியத் தொன்மை, அதன் மகத்துவம் என்று பேசத் தொடங்கினேன்..

யாருமே அசையவில்லை. அவையில் குண்டாக, ரொம்ப முரட்டுத்தனமாக இருந்தார் ஓர் ஆசிரியர். தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடலானார். என்னை, என் பேச்சை கவனித்ததை விட அந்த அறையில் மாணவர்கள் அந்த குண்டு முரட்டு ஆசிரியரின் அசைவுகளையே அதிகம் கவனித்த வண்ணம் இருந்தனர்.“உங்களுக்கு நம் பள்ளியின் பெயராகிப்போன அவ்வையார் ஒரு பெரும்புலவர் என்று தெரியுமா?’’ என்று நான் சொன்னபோது அவர்களில் பெரும்பாலோரின் கவனம் என்பக்கம் திரும்பியதை கவனித்தேன்.

அவ்வை பற்றிப் பேசும்போது மட்டும் அங்கே ஒருவித ஈர்ப்பு உருவாவதைப் பார்த்தேன். ‘‘அவ்வையார் தமிழ் இலக்கியத்தில் உள்ளதிலேயே பெரிய புலவரா சார்..?’’ என்று ஒரு குரல் வந்தது. இரண்டாவது வரிசையில் உயரமாக இருந்தான் அவன். அவன்தான் ஏகலைவன் என்பது எனக்கு அப்போது தெரியாது.

‘‘கல்வியொழுக்கம், நன்னூற் கோவை, ஆத்திச்சூடி, நான்மணிக்கோவை, அருந்தமிழ் மாலை, கொன்றைவேந்தன், மூதுரை என பலநூல்களின் படைப்பாளி... யெஸ்... அவ்வை தமிழின் ஆகச்சிறந்த புலவர்களில் ஒருவர்...’’ என்றேன்.‘‘சங்ககாலம் என்பது 2000 வருடம் இருக்குமா..?’’ அதே பையன் மீண்டும் கேட்கிறான். அவர்களது ஆர்வம் என்னை ஈர்த்தது.

‘‘சங்ககாலம் என்பது கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது...’’ என்று ஆரம்பித்து சங்ககாலம் ஏன் பொற்காலம் என விவரித்தேன்.
மேலும் அரைமணி நேரம் உரை நிகழ்த்திவிட்டு தலைமை ஆசிரியை அறைக்குத்  திரும்பினேன். படித்த காலத்தில் இருந்த அதே எச்.எம். ரூம்தான்.

மங்கை மேடத்தோடு தேநீர். அங்கே  வாசலில் நிழலாடியது. அதே பையன்.‘‘சங்ககாலத்தில் அவர்களது தமிழ் மொழி நம் மொழியோடு மாறுபட்டதா சார்..?’’ அவன் உள்ளே வரலாமா,  கேள்வி கேட்கலாமா, முன் அனுமதி அது இது என்ற எந்த சம்பிரதாயமும் இன்றி நேரடியாகக் கேள்வியோடு நிற்கிறான்.

நான் விடைபெற எழுகிறேன்.‘‘நாம் பேசும் தமிழ்... அவர்களுக்குப் புரியுமா..?’’ அவன் மீண்டும் கேட்டான். ‘‘ஏறக்குறைய அதேதான்... அவ்வை காலத்தில் இருந்து நம் காலத்திற்கு தமிழ் ரொம்ப மாறவில்லையே...’’ என்றேன். ‘‘ஆங்கிலக் கலப்பின்றி பேசவேண்டும்...’’‘‘அவ்வையார் பற்றிப் பேச மீண்டும் வரமுடியுமா?’’ என்றான் ஏகலைவன்.‘‘தயவுசெய்து மறுபடி வாங்க சார்...’’ என்றார் மங்கை மேடம். வரப்போகும் ஆபத்தை உணராமல் ஒப்புக்கொண்டேன்.

அடுத்த சனிக்கிழமை சென்றேன். பள்ளி விடுமுறை போலிருக்கிறது. ஆனால், நான் வருகிறேன் என்பதற்காக அதே அறையில் அவர்கள் - ஏறக்குறைய  முப்பது முப்பத்தைந்து பேர் கூடி இருந்தார்கள். முரட்டு குண்டு ஆசிரியர் இல்லை. தலைமை ஆசிரியை மங்கை மேடம் அவசரமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்.

‘‘சார்... டி.இ.ஓ மீட்டங் சார்... உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்... அலுவலக உதவியாளர் மணி உங்கள்  உதவிக்கு இருப்பார். மதியம் வந்துவிடுவேன்...’’ போய்விட்டார்.நான் அன்றைய உரைக்காக அவ்வையார் பற்றி நிறைய படித்துப்போயிருந்தேன். முதலில் அனைவரையும் பாராட்டினேன்.

‘‘நன் மாணாக்கர் இயல்பு இதுவே...’’ என்றான் ஏகலைவன். ‘‘ஆகா... சங்ககாலத்து மாந்தர் போலவே பேசுகிறாய்...’’ என்றேன்.‘‘சும்மா இல்ல சார்... அருந்தமிழ்மாலை, கொன்றைவேந்தன், நன்னூல்கோவை ஆகிய அவ்வை நூல்களை ஏகலைவன் மனப்பாடமா சொல்வான் சார்...’’ யாரோ கத்தினார்கள்.‘‘அப்படியா’’ என்றேன். என்னால் நம்பமுடியவில்லை. ‘‘எங்கே கொன்றைவேந்தன் சொல்லு...’’ என்றேன்.அவ்வளவுதான், ஏகலைவனின் கணீர்குரல்...

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டை தீயார் கொள்வார்...’

மடைதிறந்த வெள்ளம்போல பாய்கிறது ஊற்று. நான் எழுந்து நின்று கரஒலி எழுப்புகிறேன். அவனை நிறுத்தவே முடியவில்லை. நூறு பா வரிகளையும் நூற்றுச் செல்கிறான்.
‘ஒத்த இடத்து நித்திரை கொள்ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்...’அவன் முடித்தபோது எனக்கு வியர்த்திருந்தது.

ஏனோ அவனைக் காண விநோதமாக இருந்தது. ‘‘ஆனால், அவ்வை என்பது ஒரே நபர் அல்ல...’’ என் உரையைத் தொடங்கினேன். ‘‘அவ்வையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் பல காலங்களில் வாழ்ந்திருக்கவேண்டும் என்று வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்...’’அப்போதுதான் முதன் முறையாக வேறுமாதிரி வகுப்பை நான் எதிர்கொண்டேன்.

‘‘ஆறு பேராவது இருந்திருக்கலாம்... அவர்கள் பல்வேறு காலங்களில் வசித்தார்கள். சங்ககாலப் புலவரான அவ்வையார், கபிலரின் மகள்களான அங்கவை, சங்கவைக்கு மணம் செய்து வைத்த அவ்வை, அறநூல் புலவர் அவ்வை, அசதிக் கோவை எனும் நூலை படைத்த 12ம் நூற்றாண்டின் அவ்வை... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...’’ என்றேன்.‘‘அவ்வையார் என்பது ஒரே நபர்தான் சார்... அவர் ஒரு குழு என்பதை எங்களால் ஏற்கமுடியவில்லை...’’ என்றான் ஏகலைவன்.

‘‘ஆனால், வரலாற்றாளர்கள்...’’ நான் தொடங்கினேன். அவர்கள் யாவரும் இணைந்து எழுந்து நின்றிருந்தார்கள். எனவே  பேச்சு வரவில்லை. என்ன நடக்கிறது இங்கே..?
‘‘சார்... அவ்வையார் ஒரே ஆளா இல்லையா என்பதைப் பார்த்துவிடலாம். இன்று தெரிந்துவிடும்...’’ என்றான் ஏகலைவன். ‘‘என்ன... நீ... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?’’ என்றேன்.‘‘எங்க கூட வாங்க சார்...’’ ஏகலைவன் முன்னால் போகிறான். பள்ளி வளாகத்தையே ஒரு சுற்று சுற்றி வயல்புறத்தில் ஒரு வைக்கோல் அடுக்கிய உயர மறைவுக்குப் பின் அழைத்துச் சென்றார்கள்.

‘‘இந்த வருடம் இன்ஸ்பையர் புத்தாக்க விருதுக்கு எங்கள் பள்ளியின் அறிவியல் புராஜக்ட் சார்...’’ என்றான் ஏகலைவன். அரசுப் பள்ளியில் இப்படியும் மாணவர்களா என வியப்பாக இருந்தது.

ஒரு பஸ் மாதிரி இருந்தது. நீண்ட ஊர்தி. ஆனால், இருக்கைகள் இல்லை. மாறாக கைப்பிடிகள் மட்டும் வரிசைக்கு மூன்று பேர் நிற்கும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். ஓட்டுநர் இருக்கைபோல... ஆனால், நட்ட நடுவில் இருந்தது. அந்த ஊர்திமாதிரி அமைப்பில் சக்கரமும் இல்லை. நான் இதுவரை அப்படி பார்த்தது இல்லை.‘‘இது... என்ன..?’’ என்றேன். யானைத் தந்தம் போன்ற ஒன்றால் ஆன கைப்பிடிகள். வெள்ளிபோல பளபளத்த அடிப்பாகம்... மேல் கூரையே இல்லை.

‘‘இத்தனை நேரம் உங்கள் இலக்கியத்தை நாங்கள் கேட்டோம் அல்லவா... இப்போது எங்கள் அறிவியலை நீங்கள் கேளுங்கள்...’’ யாரோ சத்தமாகக் கூறினார்கள். சுற்றிலும் பார்த்தேன். தலைமை ஆசிரியர் திரும்பி வரும் சுவடும் இல்லை; அலுவலக உதவியாளர் மணியும் தென்படவில்லை.

‘‘இது டி2 மாடல் சார்...’’ ஏகலைவன் தொடங்கினான். ‘‘இதுதான் பெர்மி எனும் அறிஞரின் முரணிலைக் கோட்பாட்டின் காலப்பயண வடிவம். ஐன்ஸ்டீனின் நான்காம் பரிமாணமாக காலத்தை ஏற்ற திசை திருப்பப்படாத புறவெளிக்கால பிரதேசத்தில் பயணிக்கும் கால ஊர்தி சார்...’’ அவன் ஏதேதோ சொல்கிறான்.

‘‘புரியும்படி சொல்லப்பா...’’ ‘‘இந்த ஊர்தி நின்ற இடத்திலேதான் இருக்கும்...’’ என்றான். ‘‘நம்மைச் சுற்றி காலம் மட்டுமே பின்நோக்கிச் செல்லும். உதாரணமாக, நம் பள்ளி 100 வருடம் முன் எப்படி இருந்தது என நாம் அந்த வருடத்திற்கு போக முடியும்... பிறகு திரும்பிவிடவும் முடியும்...’’‘‘அய்யா... சும்மா ஏறிப்பாருங்க...’’ யார் யாரோ உற்சாகப்படுத்தினார்கள். நான் ஏறி சுற்றிப்பார்க்க முடிவு செய்தேன். எனக்கு அவர்கள்  சொன்ன எதிலுமே நம்பிக்கை இல்லை. ஆனாலும் சிரித்தபடியே அதில் ஏறி ஒவ்வொரு கைபிடியாக தடவிப்பார்த்தது ஞாபகம் உள்ளது.

திடீரென்று நாங்கள் யாவருமே ஊர்தியில் இருந்தோம். எப்போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை... தலையை ஒரு சுழற்று சுழற்றியதில் நான் மயக்கமுற்றேன்.
கண் விழத்தபோது ஊர்தியில் யாருமில்லை. அவர்கள் யாவரும் இறங்கி பக்கத்து மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். நான் ஓடினேன்.

யாரோ பழங்கால மன்னரின் வாயில் காப்போன் போல ஓர் ஆள் நின்றிருந்தார். ‘‘உங்களைப் பார்த்தாலே விநோதமாக உள்ளது... நீங்கள் எந்த நாடு..?’’ என்கிறார்.‘‘நாங்கள் அவ்வை எனும் பெண் புலவரைத் தேடி வந்திருக்கிறோம்...’’ என்றான் ஏகலைவன்.

எனக்கு அப்போதுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது. காலப்பயணம்... என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. எப்பேர்ப்பட்ட தருணம் என நெஞ்சு அடித்துக்கொண்டது.
‘‘ஓ... அவ்வைப் பிராட்டியாரா... நேற்று நம் ஊர் திருமண பெருவிழாவில் நாள் முழுதும் பாடி களிப்புறச் செய்தார்... இப்போது அதோ தெரிகிறதே... அங்கே நதியோரம் குடிலில் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது...’’ என்றார் அந்த ஊர்க்காரர்.

அந்தக் காலத்தின் மனிதர். தமிழர்.‘‘ஆகா... இதோ வைகை நதி...’’ அத்தனை பிள்ளைகளும் ஆரவாரத்தோடு ஓடினார்கள். நதியோரம் நாணல்கள். ஆள் உயரம். நூறு அடிக்கு அப்பால் பச்சைப் பசேலென்று கீத்துவேய்ந்த அக்குடில். அதன் வாசலில் ஒரு கற்பாறை. அதன்மீது அமர்ந்திருந்தார் அவர்.

ஓசை எழுப்பாது அவர்முன் அவ்வையார் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவராகச் சென்றமர்ந்தனர். இதற்கெல்லாம் எப்போது ஒத்திகை பார்த்தார்களோ தெரியவில்லை.
நான் அசடுமாதிரி பின்னே ஓடுகிறேன்.கண்விழித்த அவ்வை புன்னகைக்கிறார். ‘‘யார் நீங்கள்..?’’ என்றார். ‘‘தெய்வீகப் பிறவிகளாகவே இருக்கவேண்டும்...’’
‘‘நாங்கள் எதிர்காலத்தின் உங்கள் சந்ததிகள் அம்மா...’’ என்றான் ஏகலைவன்.

லேசாகச் சிரிக்கிறார். ‘‘உணவு உண்டீர்களா..?’’
பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் இதோ... தன் தோள்
பையில் இருந்து வழங்கிக்கொண்டே இருந்தார்.
‘‘அம்மா... நாங்கள் உங்களுக்கு தேன், நெல்லி கொண்டுவந்தோம்...’’ என்றபடி ஒரு பாட்டிலை நீட்டுகிறான் ஏகலைவன். அத்தனை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டார்.

‘‘அவ்வை என்றால் என்ன பொருள் அம்மா..?’’ என்று முதல் கேள்வியைத் தொடுக்கிறான் ஏகலைவன்.‘‘‘அவ்வா...’ என்பதே சரி. தவப்பெண் என்று பொருள். மணம் புரியாத தெய்வப்பெண் என்பதே சரியான விளக்கம்...’’ என்றபடி தேன், நெல்லியைப் புசிக்கிறார்.‘‘அம்மா... இது 10ம் நூற்றாண்டு... சங்க கால அவ்வையும் நீங்களும் வேறு வேறா அம்மா..?’’ என்கிறான் ஏகலைவன்.
பெரிய சிரிப்பு. ஆனால், அதில் எத்தனை தெய்வீகம்... ‘‘நேற்றுதான் கபிலரின் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்தது... இது மூவேந்தர் காலம். நம் தனிப்பாடல் திரட்டு தயாராகி வருகிறது...

அரியது கேட்கின் வரிவடிவேலோய்...’’ அவ்வை தொடங்கிட -
ஏகலைவன் உடனே மீதியைத் தொடர்ந்தான்...
‘‘‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்…
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...’

அம்மா... நாங்கள் அறிவோம். அரியது பெரியது, இனியது, கொடியது... உங்கள் செய்யுள் எங்களை செப்பனிடும் மருந்து...’’ என்கிறான்.‘‘சங்க நூல்களில் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை சேர்த்து 50 பாடல்களும்; புறநானூற்றில் ஒன்பது பாடல்களும் நான் புனைந்தவை... சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் நான் ஒன்பதாவது இடம்...’’ என்கிறார் அவ்வை.‘‘12ம் நூற்றாண்டில் ஆத்திச்சூடியுடன் அசதிச்சோழனின் அவைப்புலவராக... 14ம் நூற்றாண்டில் விநாயகர் அகவல் தந்த மாமணியாக... அதியன் புகழ்பாடி போரை நிறுத்திய சமாதானப் புறாவாக...’’ ஏகலைவன் அடுக்குகிறான்.

‘‘எல்லாமே நான்தான்...’’ என்றாள் அவ்வை.
‘‘ஒரே அவ்வை... புரிகிறதா சார்...’’
என்னை நோக்கி அவன் சொல்கிறான்.
திகைப்பில் எனக்கு வார்த்தை வரவில்லை.
‘‘ஆனால், இது எப்படி சாத்தியம்..?’’ நான் திணறினேன்.

‘‘அதோ என் ஊர்தி...’’ என்று அவ்வை காட்டிய திசையில் பிரமாண்ட பொன்னிற நெல்லிக்கனி.‘‘ஓ... அதியமான் கொடுத்தது காலம் கடந்து வாழவைக்கும் நெல்லிக்கனி அல்ல... காலப் பிரயாண ஊர்தி...’’ நான் ஏறக்குறைய அலறினேன். ‘‘உலகம் தவறாக நினைத்துக்கொண்டுள்ளது...’’அவ்வை முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு. எத்தனை நேரம் பேசினோமோ. நாங்கள் விரைவில் எங்கள் ஊர்திக்கு அருகே இருந்தோம். சுற்றுலா சென்று திரும்பும் குழுவை வழிநடத்தும் ஆசிரியர் போல தலைகளை எண்ணினேன்.

மொத்தம் முப்பத்தி இரண்டு.முதலில் நான் ஏறினேன். அதுதான் நான் செய்த முதல் தவறு. அவர்கள் ஊர்தியைச் சுற்றி நின்றார்கள். ‘‘ஏறுங்கள் சீக்கிரம்...’’ என் மனம் துடித்தது. நிகழ் காலத்திற்கு திரும்பி என் பேராசிரியப் பெருமக்கள் மத்தியில் முதலில் இந்தச் செய்தியை அறிவித்து புகழ்பெறவேண்டும். ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவேண்டும். பிரஸ்மீட் கூட நடத்தலாம்.

‘‘சார்... அந்த கைப்பிடியை ஒரு சுழற்று சுழற்றுங்கள் பிளீஸ்...’’ புகழ் மயக்க சிந்தனையில் ஏகலைவன் குரலுக்கு செயிசாய்த்து அதைச் சுழற்றினேன். அடுத்த தவறு.
அவ்வளவுதான்... அவ்வை பள்ளி மாணவர்கள் நிஜ அவ்வையோடு அங்கேயே தங்கிவிட நான் மட்டும் சுழல்கிறேன். ‘‘அம்மாவின் கால ஊர்தியில் நாங்கள் வந்து விடுவோம்...’’ ஏகலைவன் கடைசியாகக் கத்துகிறான்.

அதை முழுதுமாக காதில் வாங்குவதற்கு முன் -‘அரசுப்பள்ளி மாணவர் 32 பேர் மாயம்... தலைமை ஆசிரியர் பணிநீக்கம்... கைது... மாணவர்களைக் கடத்திய பேராசிரியரைத் தேடும் பணியில் தனிப்படை போலீஸ் விசாரணைக் கமிஷன் அமைப்பு...’ போன்ற பரபரப்புச் செய்திகளுக்கு நடுவே நிகழ்காலம் வரவேற்றது.    

அவ்வையின் வரலாற்று உண்மை... காலப்பயண அனுபவம்... ஆய்வுக்கட்டுரை பிரஸ்மீட்... எதையும் நினைக்கமுடியவில்லை. இப்போது என்ன செய்வது... யாரிடம் சொல்வது... நம்புவார்களா..?‘கொடிது கொடிது... உன்னிலை கொடிது...’ அவ்வையே நேரில் என்னைப் பார்த்துப் பாடுவது போலிருந்தது.

ஆயிஷா இரா.நடராசன்