பயோடேட்டா-மன்னர் மூன்றாம் சார்லஸ்



பெயர் : சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ். சுருக்கமாக சார்லஸ். இப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ்.

மூன்றாம் சார்லஸ் : இங்கிலாந்தின் வரலாற்றில் சார்லஸ் என்ற பெயரில் அரியணை ஏறும் மூன்றாவது மன்னர் இவர் என்பதால் இந்தப் பெயர்.
1625 முதல் 1649 வரை இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மன்னராக இருந்தார் முதலாம் சார்லஸ்.
1660 முதல் 1685 வரை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மன்னராக இருந்தார் இரண்டாம் சார்லஸ்.
337 வருடங்களுக்குப் பிறகு சார்லஸ் என்ற பெயரில் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார் மூன்றாம் சார்லஸ்.

பிறந்த தேதி மற்றும் இடம் : 14-11-1948. இருபதாம் நூற்றாண்டில் பக்கிங்காம் அரண்மனையில் பிறந்த முதல் ராயல் குழந்தை சார்லஸ்தான்.

வயது : 73. இங்கிலாந்தின் வரலாற்றில் அதிக வயதில் மன்னராக கிரீடம் சூட்டப்பட்டவர் இவர்தான். தவிர, நீண்ட காலம் அடுத்த மன்னர் என்ற வாரிசு உரிமையில் இருந்தவரும் இவரே. ஆம்: மூன்று வயதிலேயே வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

பெற்றோர் : தந்தை-இளவரசர் பிலிப். தாய்-ராணி இரண்டாம் எலிசபெத்.

படிப்பு : ஐரோப்பாவின் புகழ்பெற்ற பள்ளிகளான சீம் மற்றும் கோர்டோஸ்டௌன் பள்ளிகளிலும், ஆஸ்திரேலியாவில் உள்ள கீலாங் கிராமர் ஸ்கூலில் உள்ள டிம்பர்டாப் கேம்பஸிலும் பள்ளிப்படிப்பைப் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

திருமணம் மற்றும் குழந்தைகள் : 1981ல் டயானா ஸ்பென்சரைத் திருமணம் செய்தார் சார்லஸ். இத்தம்பதியினருக்குப் பிறந்தவர்கள்தான் இளவரசர் வில்லியமும், இளவரசர் ஹாரியும்.
1996ல் டயானாவுடன் விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற முதல் மன்னர் வாரிசு இவர்தான். பிறகு தனது நீண்டநாள் காதலியான கமீலா பார்க்கரை 2005ல் திருமணம் செய்துகொண்டார் சார்லஸ்.

இராணுவப் பணி : 1971 முதல் 1976 வரை ராயல் கப்பற்படையிலும், ராயல் விமானப் படையிலும் பணிபுரிந்தார்.

சிறப்புகள் : இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இங்கிலாந்தின் ஓவியர்களில் குறிப்பிடத்தக்கவர் மூன்றாம் சார்லஸ். வாட்டர் கலரில் நிலப்பரப்புகளை வரைவதில் கெட்டிக்காரர். 1997லிருந்து அவர் வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் 3 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகியிருக்கிறது. அதன் இந்திய மதிப்பு சுமார் 23 கோடி ரூபாய். ஓவியங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை நற்பணிகளுக்காகச் செலவிடுகிறார்.

விவசாயத்திலும், தோட்டக்கலையிலும் பெருங்காதல் கொண்டவர் மூன்றாம் சார்லஸ். தனது தோட்டத்தில் உள்ள செடிகளுடன் உரையாடுவதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். தவிர, சுற்றுச்சூழல் , ஆர்கானிக் உணவு போன்றவற்றின் மீது ஈடுபாடுகொண்டவர். ஆர்கானிக் உணவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‘Duchy Originals’ என்ற உணவு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் தனது ஆஸ்டின் மார்ட்டின் காரை வடிவமைத்திருக்கிறார். உபரியாகும் இங்கிலீஷ் ஒயினிலிருந்து உருவாகும் பயோ எத்தனால் எரிபொருளில் இயங்குகிறது இந்த கார். மட்டுமல்ல; ஹோமியோபதிக்கும், மாற்று மருத்துவத்துக்கும் குரல் கொடுப்பவர்.ஹோம் ஸ்கூலிங் முறையில் அரண்மனைக்குள் கல்வி கற்காத, முதல் முறையாக பள்ளிக்கூடம் சென்று பாடம் கற்று, பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற மன்னர் வாரிசும் இவர்தான்.

அதுமட்டுமல்ல... ‘The Old Man of Lochnagar’, ‘A Vision of Britain: A Personal View of Architecture’ போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும் கூட. இதுபோக மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்தும் சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஏராளமான புத்தகங்களுக்கு அணிந்துரையும், முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.

மூன்றாம் சார்லஸ் ஒரு தேர்ந்த பைலட்டும் கூட. இதுபோக நூற்றுக்கும் மேலான கௌரவங்களையும், பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.வேல்ஸின் இளவரசராக ராணியின் அலுவலக வேலைகளை சார்லஸ்தான் பார்த்துக்கொண்டார். ‘‘ராயல் குடும்பத்தின் கடின உழைப்பாளி...’’ என்று 2008ல் சார்லஸைப் பாராட்டியிருக்கிறது ‘த டெய்லி டெலிகிராஃப்’. அந்த வருடம் மட்டும் 560 அலுவலக வேலைகளை முடித்துக்கொடுத்திருக்கிறார் சார்லஸ்.

தேநீர் : என்ன வேலையிலிருந்தாலும் மாலை 4 மணிக்கு தேநீர் குடிப்பதைத் தவறவிட மாட்டார். தேனும், பாலும் கலந்த டார்ஜிலிங் தேநீர் தான் அவரது ஃபேவரிட்.

பிடித்த எழுத்தாளர் : வில்லியம் ஷேக்ஸ்பியர். மூன்றாம் சார்லஸ் பேசும் போது ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம்.

ஆர்வங்கள் : இளம் வயதில் போலோ விளையாட்டில் தீவிர ஆர்வமுடையவராக இருந்தார் சார்லஸ். இந்த விளையாட்டின்போது பலமுறை அவருக்கு அடிபட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டிருக்கின்றன. 44 வயது வரை போலோவை அவர் விடவே இல்லை. கலைத்துறையின் மீதும் தீராத ஆர்வமுடையவர்.

ராயல் காலேஜ் ஆஃப் மியூசிக், தி பிரின்ஸ் ஃபவுண்டேஷன் ஃபார் சில்ட்ரன் அண்ட் த ஆர்ட்ஸ் போன்ற இருபதுக்கும் மேலான கலை நிறுவனங்களின் புரவலராகவும், பிரசிடென்ட்டாகவும் இருக்கிறார். இதுபோக உலகின் முக்கியமான 400 அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் புரவலராகவும், பிரசிடென்ட்டாகவும், உறுப்பினராகவும் உள்ளார்.

சொத்து மதிப்பு : சமீபத்தில் இறந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் சொத்தான 4000 கோடி ரூபாய் மகன் மூன்றாம் சார்லஸுக்கும், ராயல் குடும்பத்துக்கும் சேரப்போகிறது. மன்னர் ஆகும் முன்பே 3500 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருந்தார் சார்லஸ்.

த.சக்திவேல்