முட்டைக்கு என்றே உணவகம்!



முட்டை ஒரு ஸ்டேப்பில் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமான உணவு. பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம்... என எல்லா உணவுக்கும் பெஸ்ட் காம்போ.

ஆனால், சிக்கனுக்கு இருப்பதைப் போன்ற தனிப்பட்ட உணவகம் முட்டைக்கு இல்லை.
அப்படி எல்லோரும் விரும்பக்கூடிய உணவான முட்டையை பலவித சுவையான உணவாகக் கொடுத்து வருகிறார்கள் நிர்மல் யுவராஜும் ஷாகுல் ஹமீத்தும். இவர்கள் சென்னை, பெங்களூரூ, மதுரை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் ‘எக்ஸ்டிக்கா’ என்ற பெயரில் முட்டைக்கு என தனிப்பட்ட உணவகங்களைத் தொடங்கியுள்ளனர்.

‘‘முட்டையில் ஆம்லெட், கலக்கி, ஹாஃப் பாயில்... இதைத் தாண்டி என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காகவே இந்த உணவகத்தை 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று சென்னை மெரினா மாலில் ஆரம்பித்தோம். ஆனால், தொடங்குவதற்கு முன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இதற்காக நானும் ஷாகுலும் ஆய்வு செய்தோம்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் நிர்மல்.
‘‘என் நண்பர் வழியாகத்தான் ஷாகுல் எனக்கு அறிமுகமானார். அவர் ஏற்கனவே உணவுத்துறையில் ஈடுபட்டிருப்பதால், ஓர் உணவகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

நான் ஐடி துறையில் இருக்கிறேன். அதனால் எப்படி சோஷியல் மீடியாவில் மார்க்கெட் செய்ய முடியும் என்பதை அறிவேன். இப்படி அவரவர் துறையில் அனுபவம் வாய்ந்த நாங்கள் இருவரும் கைகோர்த்தோம். உண்மையில் இந்த ஐடியா ஷாகுலுக்குத்தான் முதலில் தோன்றியது...’’ என்ற நிர்மலைத் தொடர்ந்தார் ஷாகுல்.

‘‘உணவு சார்ந்த வீடியோக்களை அடிக்கடி பார்ப்பேன். அப்படி ஒருமுறை முட்டை உணவு குறித்த வீடியோவை ரசித்தேன். அது கொரியாவின் ஸ்ட்ரீட் ஃபுட். முட்டையை லாலிபாப் போல் சமைத்தார்கள்.

அதைப் பார்த்தவுடனேயே இம்ப்ரஸாகி விட்டேன். நம் தமிழ்நாட்டு மக்களுக்கு சிம்பிலான முட்டையில் ஆரோக்கியமான உணவைக் கொடுக்கலாம் என நிர்மலிடம் சொன்னதுமே அவர் சம்மதித்தார்.ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. லாலிபாப் போல் முட்டையைக் கொண்டு வருவதற்கு அவர்கள் ஒரு தனிப்பட்ட இயந்திரத்தை பயன்படுத்தியிருந்தார்கள். அதேபோல் இயந்திரம் இங்கு கிடையாது. எங்கு கிடைக்கும் என்று தேடியபோது, சீன நிறுவனம் ஒன்று அதுபோல் ஓர் இயந்திரத்தை அமைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால், அந்த இயந்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பதால், நாங்கள் எதிர்பார்த்த அவுட்புட்டை கொடுக்க முடியவில்லை. தவிர அந்த இயந்திரமும் மூன்றே மாதங்களில் பழுதாகிவிட்டது. அதை சீர் செய்யவும் முடியவில்லை.

எனவே, எங்களுக்கு ஏற்ற இயந்திரத்தை நாங்களே உருவாக்கத் திட்டமிட்டோம். இதற்கு இரண்டு வருட காலமானது. காம்ப்ரமைஸ் ஆகாமல், எதிர்பார்த்தது வரும்வரை தொடர்ந்து டிசைன் செய்து முயற்சித்தோம். அதன் செயல்முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினோம். எங்கள் இயந்திரம் மின்சாரத்தில் இயங்குவதால் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். அந்த நிலை எது என்று கண்டறிய பலமுறை டிரையல் செய்ய வேண்டியிருந்தது.

கடைசியாக நாங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்தவுடன், இதில் என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் என எங்கள் செஃப் பாஸ்கருடன் நாங்கள் இருவரும் கலந்தாலோசித்து ன்ட்ரஸ்டிங்கான மெனுவை உருவாக்கினோம்...’’ என்று ஷாகுல் முடிக்க, தொடர்ந்தார் நிர்மல். ‘‘இப்போது மக்கள் விரும்பிச் சாப்பிடுவது பர்கர், சாண்ட்விச், டாகேஸ் போன்ற உணவுகள்தான். இதையே ஆரோக்கியமாக மாற்ற நினைத்தோம். எங்களின் பிரதான உணவு முட்டை என்பதால் அதை பலவித ஃபிளேவர்களில் ஸ்டிக் முறையில் கொடுக்கிறோம்.

அதாவது பார்க்க குச்சி ஐஸ் போன்றிருக்கும். அது எப்படி குச்சி ஐஸ் போல முட்டை வரும் என யோசிக்கலாம். அதற்குத்தான் நாங்கள் பிரத்தியேகமான முறையில் இயந்திரங்களைத் தயாரித்திருக்கிறோம். சின்ன துவாரம் கொண்ட இந்த இயந்திரத்தில் முட்டைக் கலவையைச் சேர்த்து எண்ணெயை ஊற்றி நடுவில் ஒரு குச்சியை வைத்தால் போதும்... முட்டை நன்கு வெந்து, தானாக மேலே வரும்.

தெரியாக்கி, மலேசியன், மதுரை மட்டன் கீமா, மெட்ராஸ் சிக்கன் கொத்து... என பல ஃபிளேவர்களில் எங்கள் ஸ்டிக்கா கிடைக்கும். கிளாசிக் எக் என்பது மிளகுத் தூள், உப்பு சேர்த்து வரும். முட்டையில் பச்சை மிளகாய், சீஸ் சேர்த்துக் கொடுப்பது சில்லி சீஸ். தெரியாக்கி என்பது ஒரு வகையான ஜாப்பனீஸ் சாஸ். அதை முட்டையில் சேர்த்து ஸ்டிக் வடிவமாகக் கொடுப்பது தெரியாக்கி சிக்கன்.

பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவியில் முட்டை சேர்த்து வருவது பள்ளிப்பாளையம் சிக்கன். இதேபோல் மெட்ராஸ் சிக்கன் கொத்து மசாலா மற்றும் மதுரை மட்டன் கீமா மசாலாக்களை எல்லாம் முட்டைக் கலவையுடன் சேர்த்து ஸ்டிக் வடிவமாகக் கொடுக்கிறோம். சிலர் மட்டன், சிக்கன் வேண்டாம் என்பார்கள்.

அவர்களுக்கு பன்னீரில் தெரியாக்கி சாஸ், மலேசியன் சாம்பல் தொக்கு போன்றவற்றை முட்டையில் சேர்த்து ஸ்டிக் வடிவத்தில் கொடுக்கிறோம். இந்த ஸ்டிக் வடிவத்தில் உள்ள முட்டைதான் எங்களின் பிரதான உணவு. இதில் கொடுக்கப்படும் அனைத்து ஃபிளேவர்களையும் ராப், டாக்கோஸ், பர்கர், சாண்ட்விச், நாச்சோசில் உள்ளே ஸ்டஃப் செய்து கொடுக்கிறோம்.

நாச்சோஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் ஒருவகையான சிப்ஸ். இரண்டு நாச்சோ சிப்ஸ் இடையே விரும்பும் ஃபிளேவர்களில் எக் ஸ்டிக்கில் ஒரு துண்டை வைத்து அதன் மேல் சீஸ் துருவித் தருகிறோம். சாண்ட்விச், டாக்கோஸ், ராப் மற்றும் பர்கரிலும் இதேபோல் எக்ஸ்டிக் மற்றும் காய்கறிகள், வெங்காயம் வைத்து டோஸ்ட் செய்து தருகிறோம். பர்கரில் நாங்கள் பர்கர் பன்னை பயன்படுத்துவதில்லை. மாறாக பாவ் பன்னையே கொடுக்கிறோம்.

இவை தவிர ரைஸ் பவுல், பாஸ்தா, ரேமன் நூடுல்சும் இங்கு உண்டு. ரேமன் நூடுல்ஸ் சூப் போன்றிருக்கும். தெரியாக்கி சிக்கன், பன்னீர், மலேசியன் சாம்பல் பன்னீர் மற்றும் சிக்கன் என நான்கு ஃபிளேவர்களில் இது கிடைக்கும். ரைஸ் பவுலில் பன்னீர், பள்ளிப்பாளையம் சிக்கன், கோரி காசி, மெட்ராஸ் சிக்கன் கொத்து, மதுரை மட்டன் கீமா என கொடுக்கிறோம். இதில் சாதத்துடன் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவியைச் சேர்த்து அதனுடன் விரும்பிய எக் ஸ்டிக்கா கொடுக்கிறோம். இதேபோல்தான் மற்ற ரைஸ் பவுலும்.

முட்டை மற்றும் சிக்கன், மட்டனைப் பொறுத்தவரை நாங்கள் அன்று தேவையானதை அன்றுதான் வாங்குகிறோம். முட்டை ஃபிரஷ்ஷாக இருந்தால்தான் அதில் உள்ள மஞ்சள் கரு நன்றாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு மேலானால் அந்த முட்டையை உடைக்கும்போது மஞ்சள் கரு கலங்கி விடும்.

ஸ்டிக் வடிவில் இதைக் கொடுப்பது கடினம். அதனால் ஃபிரஷ்ஷான முட்டையையே தினமும் பயன்படுத்துகிறோம்.மட்டன், சிக்கனையும் நாங்கள் வாங்கி ஸ்டோர் செய்வதில்லை. ஒரு ஸ்பூன் அளவே மசாலா சேர்ப்பதால், ஒரு நாளைக்கு ஒரு கிலோ வாங்கினாலே போதுமானதாக இருக்கும்...’’ என்ற நிர்மல் இதனை பிரான்சைசி முறையிலும் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

‘‘சென்னை மெரினா மாலில் உள்ள உணவகம்தான் எங்களுடையது. மற்றவை அனைத்தும் நாங்கள் பிரான்சைசிக்கு கொடுத்ததுதான். பெங்களூரில் மூன்று அவுட்லெட்கள் உள்ளன. பாண்டிச்சேரியிலும் பிரான்சைசிதான்.

ஒரிசா, கேரளாவில் தொடங்கப் போகிறோம். அடுத்து டயர் 2 சிட்டிகளான திருச்சி, சேலம், ஈரோடு, நாகர்கோயில், தருமபுரி போன்ற நகரங்களில் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. பிரான்சைசி எடுக்கும் போது உணவைத் தயாரிக்கும் முறைகள், கடையின் உள்ளலங்காரம், கடைக்குத் தேவையான பொருட்கள்... என அனைத்தையும் நாங்கள் கொடுத்து விடுவோம். அதற்கு அவர்கள் ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.

 சிலரால் முழுநேரமும் கடையில் இருக்க முடியாது. எனவே, பயிற்சி பெற்ற ஆட்களையும் கொடுக்கிறோம். வரும் லாபத்தில் எங்களுக்கு ஒரு சிறு சதவிகிதம் மட்டுமே கொடுத்தால் போதும்.

ஆனால், கடையின் இடத்தை தேர்வு செய்வதில் மட்டும் ரொம்பவும் கவனமாக இருக்கிறோம். காரணம், யார் பிரான்சைசி எடுத்தாலும் அவர்கள் லாபம் பார்க்க வேண்டும். எனவேதான், கடை தொடங்கும் இடத்தில் அவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்...’’ என்ற நிர்மலின் கூற்றை புன்னகையுடன் ஆமோதித்தார் ஷாகுல்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்