பயோடேட்டா-டுவிட்டர்



பிறந்த இடம் மற்றும் தேதி: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் மார்ச் 21, 2006ல் உதயமானது டுவிட்டர்.

பெயர்: ஃபிரண்ட் ஸ்டாக்கர், வைப்ரேட், டுவிட்ச்...

என பல பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடைசியில் தேர்வான பெயர், டுவிட்டர். டுவிட் என்பது பறவை கிறீச்சிடுதலைக் குறிக்கும்.

உருவாக்கியவர்கள்: ஜாக் டோர்ஸி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ்.

சிறப்பு :  டுவிட்டர் ஆரம்பித்த காலத்தில் டுவிட்டரைப் போலவே நூற்றுக்கணக்கான  தளங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஃபிரண்ட் ஃபீட், பிளர்க், டம்ளர், ஜைக்கு போன்ற தளங்கள் குறிப்பிடத்தக்கவை.  அவற்றில் 90 சதவீத தளங்கள் மூடப்பட்டுவிட்டன. மற்ற தளங்கள் உலகளவில் பிரபலமாக வில்லை. ஆனால், இன்றும் டுவிட்டரை யாராலும் அசைக்க முடியவில்லை.

வரலாறு : மொபைல் எஸ்எம்எஸ்தான் டுவிட்டர் உருவாக்கத்துக்கு மூலகாரணம். 2006ம் வருடம் பிப்ரவரி மாதம் ஜாக் டோர்ஸிக்கு மொபைல் மெசேஜை,  ஒரு பதிவு போல பகிர்வதற்கான தளம் குறித்து ஒரு புராஜெக்ட்டை செய்யலாம் என்ற ஐடியா தோன்றியிருக்கிறது. இதைப்பற்றி நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸுடன் விவாதித்திருக்கிறார் ஜாக். இதற்கு டுவிட்டர் என்ற பெயர் வைக்கலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறார் நோவா.

அடுத்த சில நாட்களில்  டுவிட்டர் தயாரானதும் முதல் டுவிட்டை இட்டு பரிசோதனை செய்து பார்த்தார் ஜாக். மார்ச் 2006ல் டுவிட்டர் உதயமானது.

அடுத்த ஒரு வருடம் பெரிதாக பயனாளிகள் வரவில்லை. 2007ல் சவுத் பை சவுத் வெஸ்ட் என்ற கலைத்திருவிழா குறித்த டுவிட்கள் டுவிட்டருக்கான பெரிய விளம்பரத்தை உண்டாக்கியது. பயனாளிகளின் எண்ணிக்கை எகிறியது.

அதே வருடம் டுவிட்டரில் ஹேஷ்டேக் அறிமுகமாக முக்கியமான சமூக வலைத்தளமாக பரிணமித்தது டுவிட்டர். 2010ல் விண்வெளியிலிருந்து டுவிட் பதிவிட, டுவிட்டரின் புகழ் உலகமெங்கும் பரவியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது டுவிட்டர் கணக்கைத் தொடங்க ஆரம்பித்தனர். பிறகு டுவிட் இடுவதன் மூலம் வருமானம் ஈட்டும் முறை அறிமுகமானது.

2012ல் 10 கோடி பயனாளர்களைப் பெற்று, தினமும் 34 கோடி டுவிட்களை பதிவிடும் ஒரு நிறுவனமாக வளர்ந்தது. 2013ல் பங்குகளை வெளியிடும்பொது நிறுவனமாக உயர்ந்தது. 2019ல் மாதந்தோறும் 33 கோடிப்பேர் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு, அதாவது 3,56,835 கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்கப்போவதாக ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். ஆனால், ஜூலையில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கினார். அதனால் டுவிட்டரின் பங்கு மதிப்பு சரிந்தது. கடந்த அக்டோபர் 4ம் தேதி, முன்பு ஒப்பந்தம் செய்த விலைக்கே டுவிட்டரை வாங்கப்போவதாக மீண்டும் அறிவித்து, அக்டோபர் 27ம் தேதி டுவிட்டரைத் தன்வசப்படுத்தினார் எலான் மஸ்க்.

டுவிட்டரை வாங்கியவுடன் உயர் பொறுப்பிலிருந்த பலரை வேலையை விட்டு நீக்கினார் மஸ்க். இதுபோக புளூ டிக் வாங்கியிருக்கும் பயனாளிகளுக்கு கட்டணத்தை நியமித்திருக்கிறார்.
தவிர, ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக்குறைத்தார். பலர் வேலையை விட்டு தாங்களாகவே கிளம்பிவிட்டனர். டுவிட்டரின் தலைமையகத்திலே தங்கியிருந்து,
நிறுவனத்தை உயர்த்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார் எலான் மஸ்க். இவரது செயல்பாட்டுக்கு விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

மதிய உணவு : என்ன மாதிரியான மதிய உணவைத் தங்களின் மகன்கள் சாப்பிடுகின்றனர் என்பதை தெரிந்துகொள்வதற்காக மட்டுமே உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்
கணக்கான அம்மாக்கள் டுவிட்டரைப் பயன்படுத்துவதாக ஓர் ஆய்வு சொல்கிறது.

பதிவுகள் : ஒவ்வொரு நிமிடமும் டுவிட்டரில் சுமார் 3.5 லட்சம் டுவிட்கள் பதிவிடப்படுகின்றன. ஆனால், ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நிமிடமும் 30 லட்சம் ஸ்டேட்டஸ்கள் பதிவிடப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, ஒரு நாளைக்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமான டுவிட்கள் பதிவிடப்படுகின்றன. ஜப்பானைச் சேர்ந்த யுகாக் டுவான் என்ற பெண் 3,64,02,262 டுவிட்களைப் பதிவிட்டு, அதிக டுவிட்களைப் பதிவிட்டவர் என்ற பெருமையைத் தன்வசமாக்கினார். அளவுக்கு அதிகமான டுவிட்களைப் பதிவிட்டதால் யுகாக் மேலும் பதிவிட தடைசெய்துவிட்டது டுவிட்டர்.

தலைமையகம் : சான்ஃபிரான்சிஸ்கோவில் பிரமாண்டமாக வீற்றிருக்கிறது டுவிட்டரின் தலைமையகம்.

தலைமைச் செயல் அதிகாரி: 2006 - 2008 வரை ஜாக் டோர்ஸியும், 2008 - 2010 வரை இவான் வில்லியம்ஸும், 2010 - 2015 வரை டிக் காஸ்டோலோவும், 2015 - 2021 வரை மீண்டும் ஜாக் டோர்ஸியும், 2001லிருந்து அக்டோபர் 27, 2022 வரை பராக் அகர்வாலும் டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரிகளாக இருந்தனர். இப்போது எலான் மஸ்க்.

பயனாளிகள் : சுமார் 15 கோடிப் பயனாளிகள் நாள் தவறாமல் தினமும் டுவிட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, ஒவ்வொரு மாதமும் சுமார் 50 கோடிப்பேர் லாக் இன் செய்யாமலேயே டுவிட்டரைப் பயன்படுத்துகின்றனர்.

சிறந்த நபர் : நீங்கள் டுவிட்டரில் போப் ஆண்டவரை பின் தொடர்ந்தால் மற்றவர்களைவிட சிறந்த நபராக உங்களை வாடிகன் கருதுகிறது. இதுபோக ஒருவர் இறந்தபோது ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் இடத்தில் செலவிடப்படும் நேரத்தின் அளவும் குறையும் என்று சொல்கிறது வாடிகன். 1.89 கோடிப்பேர் போப் ஆண்டவரைப் பின் தொடர்கின்றனர்.

ஃபாலோயர்: டுவிட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா உள்ளார். இவரை 13.33 கோடிப்பேர் பின் தொடர்கின்றனர். 11. 56 கோடி ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் எலான் மஸ்க்.

140 : ஆரம்ப நாட்களில் 140 கேரக்டர்களுக்குள்தான் டுவிட்டரில் பதிவிட முடியும். காரணம், அப்போது மொபைல் மூலமாக 160 கேரக்டர்களுக்குள்தான் ஒரு மெசேஜை அனுப்ப முடியும்.
மொபைல் மெசேஜ் மூலம் டுவிட்டரில் பதிவிடத்தான் 140 கேரக்டர்கள் திட்டத்தை டுவிட்டர் கொண்டு வந்தது. இப்போது 280 கேரக்டர்கள் வரை பதிவிடலாம். இதை இன்னமும் அதிகப்படுத்தப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எலான் மஸ்க்.

வருகை : ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்காகவும், பாலியல் ரீதியான விசயங்களுக்காகவும் அதிகமானோர் டுவிட்டருக்கு வருகை புரிவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

பறவை : டுவிட்டரின் சின்னத்தில் இருக்கும் பறவைக்கு லேரி என்று பெயர். பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் லேரி பேர்டை கௌரவிக்கும் விதமாக இந்தப் பெயர் என்று டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் டுவிட் செய்திருந்தார்.  

ஊழியர்களின் எண்ணிக்கை : 3,700.வருமானம் : கடந்த ஆண்டின் வருமானம் 41,360 கோடி ரூபாய்.

 த.சக்திவேல்