டுவிட்டர் மூடப்படுமா..?



#RIPTwitter இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. டுவிட்டர் காலி... டுவிட்டர் இறந்து போய்விட்டது... டுவிட்டரை இழுத்து மூடப் போகிறார் எலன் மஸ்க்... இப்படி செய்திகள் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன.

என்ன நடக்கிறது டுவிட்டரில்?

எலன் மஸ்க் டுவிட்டரை வாங்கியதும் செய்த முதல் காரியம், அதன் தலைமை அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சார்ந்த பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்தது. அடுத்து சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்த விஜயா காடே என்ற பெண்மணியை நீக்கினார்.

ஆக, கொள்கை சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்த விஜயா காடே நீக்கப்பட்டிருப்பதால் டுவிட்டரின் கொள்கைகள் மாறப் போகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தது.
இந்தப் பரபரப்புகளைத் தொடர்ந்து ஐம்பது சதவீத ஊழியர்களை நீக்கினார். சுமார் 3700 ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். நீக்கியதைவிட நீக்கப்பட்ட விதம் கொடூரமாக இருந்தது.
‘அலுவலகத்தில் இருந்தால் வீட்டுக்குப் போங்கள், அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தால் அப்படியே வீட்டுக்குத் திரும்பிப் போங்கள். உங்களுக்கு வேலை இல்லை’ என்றது டுவிட்டரில் இருந்து வந்த மெயில்.

தினமும் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், விடுமுறைகள் கிடையாது, வாரத்தில் ஏழு நாட்கள் பணி செய்ய வேண்டும் என்று டுவிட்டர் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.இந்நிலையில் டுவிட்டர் ஊழியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. ‘ஊழியர்கள் அனைவரும் நீண்ட நேரம் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். உறுதி மொழி எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம்’ என்று ஒரு செய்தி ஊழியர்களுக்கு வந்தது.
இந்த உத்தரவைப் பார்த்ததும் அதிர்ந்த சுமார் 1200 ஊழியர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார்கள். எதிர் நடவடிக்கையாக எலன் மஸ்க், டுவிட்டர் அலுவலகங்களை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான் #RIPTwitter டிரெண்ட் ஆனது.இப்போது டுவிட்டரில் 2000 ஊழியர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. டுவிட்டர் போன்ற உலகம் முழுதும் பரந்து கிடக்கும் நிறுவனத்துக்கு 2000 ஊழியர்கள் என்பது மிகக் குறைவு. அப்படியானால் டுவிட்டர் மூடப்படுமா என்ற கேள்வி எழுகிறது.எலன் மஸ்க் எப்போதுமே அதிரடியாகச் செயல்படுபவர்.

அதனால் இந்த அதிரடிகளையெல்லாம் சமாளித்து டுவிட்டரை மீண்டும் வேறு வழியில் திசை திருப்பிவிட்டுவிடுவார் என்று தொழில் நிபுணர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ... டுவிட்டரின் எதிர்காலம் இப்போது எலன் மஸ்க் கையில் என்பது மட்டும் உண்மை!

என்.ஆனந்தி