ஊரை எதிர்த்து குடும்பமே கபடி ஆடுகிறது...



இயக்குநர் சற்குணம். பெயர் சொன்னாலே இவருடைய படங்களிலிருந்து மண்வாசம் வீசும். ‘களவாணி’, ‘வாகை சூடவா’ போன்ற படங்கள் காலம் கடந்து இவருடைய பெயரைச் சொல்லும் நேர்த்தியான படைப்புகள். ஓவியா, இனியா, ஜிப்ரான் என பல கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இப்போது அதர்வா, ராஜ்கிரணுடன் ‘பட்டத்து அரசன்’ கூட்டணி.

மதுரை, கோயமுத்தூர் வட்டார மொழிகள் பயணம் செய்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் முதன் முறையாக தஞ்சாவூர் வட்டார மொழியைக் கொண்டுவந்தது ‘களவாணி’. தொடர்ச்சியாக உங்கள் படங்கள் எல்லாமே தஞ்சை மண் சார்ந்ததாகவே உள்ளது. ‘பட்டத்து அரசன்’ அப்படியான படமா?

ஆமாம். திருவையாறு, நடுப்படுகை போன்ற பகுதிகளில் உள்ள வெத்தலை தோட்டங்கள், காவேரி ஆற்றுப் படுகைகளைத்தான் இதில் பதிவு செய்துள்ளேன். தமிழ் சினிமாவில் அதிகம் காண்பிக்கப்படாத  வெத்தலை தோட்டங்களும், தஞ்சாவூரில் அதிகம் காண்பிக்கப்படாத திருவையாறும்தான் கதைக் களம்.

இந்தக் கதை உருவானது எப்படி?

இது உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்ட கதை. என்னுடைய ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலம்பட்டி கிராமம். என்னுடைய ஊரில் கபடி வீரர்கள் அதிகம். நானும் ஒரு கபடி வீரன். சமீபத்தில் எங்கள் ஊரில் வித்தியாசமான கபடி விளையாட்டு நடந்தது.கபடி என்பது சம வயதுடையவர்கள் விளையாடும் விளையாட்டு. சில சமயம் வயது வித்தியாசத்தில் முன், பின் மாற்றங்கள் இருக்கும். ஆனால், எங்கள் ஊரில் களமிறங்கிய டீம்ல தாத்தா ஸ்தானத்தில் உள்ளவர்கள், அப்பா ஸ்தானத்தில் உள்ளவர்கள், இளம் வயதுடையவர்கள் என வெவ்வேறு வயதுடையவர்களாகவும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பதில் வந்தது.

அந்த பதில் எனக்கு வியப்பாக இருந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் கபடி விளையாட வேண்டும் என்ற முதல் கேள்வியை எழுப்பியது. வயதான ஸ்தானத்தில் இருக்கிறவர் ராஜ்கிரண் சாராக இருந்தால் எப்படி இருக்கும், இள வயதுடையவர் அதர்வாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அடுத்தடுத்து கேள்விகள் உதித்தது. அந்தக் கேள்வியின் தொடக்கமே இப்போது ‘பட்டத்து அரசன்’ ஆக உங்கள் முன் வந்து நிற்கிறார்.

உண்மைச் சம்பவத்தின் மூலம் ஏற்பட்ட அந்த இன்ஸ்பிரேஷனைத் தவிர மீதியெல்லாம் என்னுடைய கற்பனை. அதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லி
யுள்ளேன்.உங்கள் இயக்கத்தில் ‘சண்டிவீரன்’ படத்துக்குப் பிறகு அதர்வா; உங்கள் தயாரிப்பில் ‘மஞ்சப்பை’ சினிமாவுக்குப் பிறகு ராஜ்கிரண்... எப்படி இருக்கிறது இந்த காம்போ?
இந்த இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்றதும் நண்பர்கள் பிரமாதமான காம்போ என்றார்கள். முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் அதர்வா, ராஜ்கிரண் காம்பினேஷனைப் பார்க்கவே அவ்வளவு அழகு என்று கமெண்ட்ஸ் வந்தது.

கதை ரெடியானதும் இள வயதுக்கு அதர்வாவும், முதிர் வயதுக்கு ராஜ்கிரண் சாரும் பொருத்தமாக இருப்பார்கள் என்று காஸ்டிங் பண்ணினேன். அதர்வா எப்போதுமே இயக்குநரின் நடிகராக தன்னை வெளிப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். எங்களுக்கான புரிதல் எப்போதும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போகும். தாத்தாவுக்கும் அம்மாவுக்குமான பிரச்னையில் தன் அம்மா ராதிகாவுடன் பிரிந்து வாழ்பவர் அதர்வா. மீண்டும் தாத்தா குடும்பத்துடன் சேர்ந்து வாழணும் என்று நினைக்கக்கூடிய கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.

ராஜ்கிரண் சாருக்கு படத்துல மூணு கெட்டப். நாற்பது, ஐம்பத்தைந்து, எழுபது என மூன்றுவிதமான வயது வித்தியாசம் உடையவராக வருவதோடு மூன்று பரிமாணங்களில் நடிப்பை வழங்கினார். மொத்தத்தில் தாத்தா, பேரன் இருவருக்குமான காம்பினேஷன் அருமையாக ஒர்க் அவுட்டானது. அது ரசிகர்களுக்கு பிடிக்கும்.

மற்ற நடிகர்கள்?

நாயகி ஆஷிகா ரங்கநாத். கன்னடத்தில் முன்னணி நடிகை. தமிழில் முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறோம். பாடலுக்கு மட்டும் வந்துபோகாமல் கதையிலும் பங்கு இருக்கும் வகையில் பவித்ரா என்ற அவருடைய கேரக்டர் கச்சிதமாக இருக்கும்.ராதிகா, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம் புலி, ஜி.எம்.குமார், பாலசரவணன், தெலுங்கிலிருந்து சத்ரு, கன்னடத்திலிருந்து ரவிகாளே என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது.இசையமைப்பாளர் ஜிப்ரான் உங்கள் அறிமுகம். ‘வாகைசூடவா’ முழு ஆல்பம் ஹிட். ‘நய்யாண்டி’ பாடல்ககளும் பெரிய வைரல் ஆச்சு.

இப்போது சொல்லுங்க... இதில் பாடல்கள் எப்படி வந்துள்ளது?

படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். ஒரு பாடல் விவேகா. நான்கு பாடல்கள் ‘அலுங்குற குலுங்கிற...’ பாடல் எழுதிய மணி அமுதவன். நானும் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.
உண்மையில் பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் அழுத்தமாக இருக்கணும்னு ஜிப்ரான் பெரும் ஈடுபாடுடன் செய்து கொடுத்தார். அது எனக்கு பெரிய திருப்தியைக் கொடுத்தது. எடிட்டர் ராஜாமுகமது, சண்டை இயக்குநர் கனல்கண்ணன் ஆகியோரின் பங்கும் பேசப்படும்.

தமிழ் சினிமாவின் முன்னணி படப்பிடிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷனுக்கு படம் பண்ணுவது சந்தோஷம். லைகா சுபாஷ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் என் நன்றி எப்போதும் இருக்கும். பெரிய படங்கள் எடுக்கும் நிறுவனம் இப்படியொரு ஃபேமிலி டிராமா படம் எடுக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம்.

இந்தப் படத்தை ரசிகர்கள் ஏன் பார்க்கணும் என்ற கேள்விக்கு என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்?

விளையாட்டு ஸ்கிரிப்ட் என்றாலே மினிமம் கியாரண்டி என்று சொல்வார்கள். கபடியை மையமாக வைத்து ‘கில்லி’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ என்று வெரைட்டியான படங்கள் வந்துள்ளன. இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்.ஒரு குடும்பம் கபடி விளையாடுவதற்கு தள்ளப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கபடி விளையாடுவது ஒரு புதுமை.

இளம் வயதில் விளையாட்டு வீரர்களாக இருக்கிறவர்கள் வயதான காலத்தில் தன்னுடைய வாரிசுகளை உருவாக்குவார்கள் அல்லது குருவாக இருந்து மற்ற வீரர், வீராங்கனைகளை உருவாக்குவார்கள் என்ற அடிப்படையில்தான் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் விளையாட்டு சொல்லித்தரும் கேரக்டர் களத்தில் இறங்குவது புதுசாக இருக்கும்.

அடுத்து, ஒரு குடும்பம் ஒரு ஊரை எதிர்த்து கபடி விளையாடுகிறது என்பது புதுமை. அந்தக் குடும்பம் ஏன் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறது என்பது விறுவிறு திரைக்கதையாக இருக்கும்.
இது ஒரு விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படமாக மட்டுமில்லாமல், அழகான குடும்பக் கதையாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும்.

தஞ்சை பக்கம் ‘தாரபங்கு’ என்று சொல்வோம். ஒருவருக்கு இரண்டு தாரம் இருக்கும்பட்சத்தில் ஒரு தாரத்துக்கு ஒரு வாரிசும், இன்னொரு தாரத்துக்கு நிறைய வாரிசுகள் இருந்தாலும் சொத்து பிரிக்கும்போது சமமாகப் பிரிக்கப்படும். அப்படி தாரபங்கால் பிரிந்து இருக்கும் குடும்பங்கள்; பிரிந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழ நினைக்கும் தாத்தா, பேரன்; ஒற்றுமை இல்லாத உறவுகள் என அழகான குடும்ப வட்டத்துக்குள் கபடி விளையாட்டும் உட்கார்ந்திருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் ஒரு பாடல் எழுதியுள்ளதாக சொல்கிறீர்கள். ‘களவாணி’யில் ஒரு பாடல் எழுதி அது காட்சிப்படுத்தப்படவில்லை. ஆடியோவுடன் நின்றுபோனது. இப்போது எழுதிய பாடல் விஷுவலாக வருகிறதா? நான் எழுதிய பாடல் இதுதான்... ‘காளையார் கோயிலுள்ள காவேரி பெத்த பிள்ளை, கபடியோட  மூத்த பிள்ள, களத்துல நிக்கயில, பெரிய கோயில் மணி அடிக்கும், இவன் பேரைக்கேட்டா இடி இடிக்கும்...’ இந்தப் பாடல் விஷுவலாகவும் வரும்.அடுத்து யாருக்கு படம் பண்றீங்க?
வெப் சீரிஸ் பண்றேன். படம் இயக்கும் முயற்சிகளும் தொடர்கிறது.

எஸ்.ராஜா