பயோடேட்டா-உதயநிதி ஸ்டாலின்



பெயர் : உதயநிதி ஸ்டாலின்.

பிறந்த தேதி : 27-11-1977.

பிறந்த இடம் : சென்னை.

கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்.

தாத்தா, பாட்டி: கலைஞர், தயாளு அம்மாள்.

உடன் பிறந்தவர்: ஒரேயொரு சகோதரி, செந்தாமரை.

படிப்பு : தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்தவர்; சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி (விஷுவல் கம்யூனிகேஷன்) முடித்திருக்கிறார்.

அடையாளம் : நடிகர், சட்டமன்ற உறுப்பினர், திரைப் படத்தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்.

பெற்றோர் : அப்பா, தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மு.க.ஸ்டாலின்; அம்மா, துர்கா ஸ்டாலின்.

திருமணம் : 2002ம் வருடம் கிருத்திகாவை காதலித்துத் திருமணம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவராக வலம்
வருகிறார் கிருத்திகா. ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களையும், ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் சீரிஸையும்  இயக்கியுள்ளார். இத்தம்பதிக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

தயாரிப்பு : உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ சார்பாக வெளியான முதல் படம், ‘குருவி’ (2008). ‘ஆதவன்’, ‘மன்மதன் அம்பு’, ‘ஏழாம் அறிவு’, ‘நீர்ப்பறவை’, ‘வணக்கம் சென்னை’... என ‘ரெட் ஜெயண்ட்’டின் தயாரிப்பு பட்டியல் நீள்கிறது. இதுபோக ‘லைகா’வுடன் இணைந்து ‘இந்தியன் 2’வையும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து ஒரு படத்தையும் தயாரிக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தை மணிரத்னம் இயக்க, நாயகனாக நடிக்கிறார் கமல்ஹாசன்.

நடிகர் : 2009ம் வருடம் வெளியான ‘ஆதவன்’ திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி, 2012ல் வெளியாகி வசூலை அள்ளிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் கதாநாயகனாக நடித்தார். இதுவரை ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேண்டா’, ‘கெத்து’, ‘மனிதன்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’, ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘கலகத் தலைவன்’... உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தவிர, மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவரது நடிப்பில் ‘மாமன்னன்’ வெளியாகக் காத்திருக்கிறது. மட்டுமல்ல; ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 54வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

விநியோகம் : ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மதராசப்பட்டினம்’, ‘மைனா’, ‘பீஸ்ட்’, ‘டான்’, ‘விக்ரம்’, ‘லவ்டுடே’... என ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகம் செய்திருக்கிறது உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’.

அரசியல் : மிகக் குறுகிய காலத்தில் தமிழக அரசியலில் நுழைந்து, இந்திய அளவில் பெரும் புகழைத் தன்வசமாக்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 2019ம் வருடம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் பிரசாரப் பயணம் செய்ததுதான் அவரது அரசியல் வாழ்வின் ஆரம்பப்புள்ளி.உதயநிதி ஸ்டாலினின் எளிமையான பேச்சும், அணுகு முறையும் மக்கள் திரளைத் திமுகவின் பக்கம் ஈர்த்தது. அதனால் அவர் முழுநேர அரசியல்வாதியாக வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் பொறுப்புக்கு வரவேண்டும் என திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கழகத்துக்கு அனுப்பினார்கள். இதன் விளைவாக ஜூலை 4, 2019ல் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.

முதல் பணி : உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் செயலாளர் பொறுப்பை  ஏற்றுக்கொண்டதும் அவருக்குக் கழகத் தலைவர் அளித்த முதல் பணி, இளைஞர் அணியில் தொகுதிக்கு 10 ஆயிரம் என, 30 லட்சம் முழுநேர உறுப்பினர்களைக் கழகத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான். அந்தப் பணிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களைக் கழகத்தின் பக்கம் ஈர்த்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதும்  ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பெரும்பணியைத் தொடங்கி வைத்தார்.

கட்சியினர் வியப்பது: எந்த இடத்திலும் தன் குடும்பப் பெருமைகளைக் குறிப்பிட்டுப் பேசி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாதது. இதற்கு உதாரணமாக பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறார்கள். அதில் முதன்மையானது உதயநிதியின் கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சம்பவம்.அப்போது டிரிபுள்சில் நண்பர்களுடன் டூ வீலரில் செல்லும்போது போக்குவரத்துக் காவலர்கள் வழிமறித்தனர். அந்தக் காவலர்களுக்கு உதயநிதி யார் என்று தெரியவில்லை.

நண்பர்கள் தாத்தா - அப்பா பெயரைச் சொல்லும்படி வலியுறுத்தியபோதும் உதயநிதி மறுத்துவிட்டார். ‘டிரிபுள்சில் வந்தது நம் தவறு... அதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத் தான் ஆகவேண்டும்’ என்று சொல்லி உரிய ஃபைனைக் கட்டினார்.

அடையாளம்: சிரித்த முகம்; எந்தவொரு பிரச்னையையும் கூல் ஆக எதிர்கொள்ளும் இயல்பு; சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் முக்கியமான சிக்கல்களையும் பிரச்னைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பது.

எம்எல்ஏ : நவம்பர் 20, 2020ல்  கலைஞர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் பிரசாரத்தை சட்டப்பேரவைத் தேர்தல் 2021க்கான  பிரகடனமாக அறிவித்து, முதல் ஆளாகப் பிர்சாரத்தில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அன்றிலிருந்து சுமார் 6 மாதங்கள் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட போதும், தமிழ்நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட பிரசாரம் ஓயவில்லை. 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.

பிரசார ஹைலைட்: ‘மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்...’ என ஒரேயொரு செங்கல் கல்லை எடுத்துக் காண்பித்து சட்டமன்றத் தேர்தலில் இவர் செய்த பிரசாரம் இந்திய அளவிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

டாட்டூ : மகன் மற்றும் மகளது பெயரையும்; தான், நாயகனாக  நடித்த முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யின் சுருக்கமான ‘OKOK’வையும் டாட்டூக்களாகக் குத்தியிருக்கிறார்.l

த.சக்திவேல்