ஆதிகால மனிதன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு நண்பனைத் தேடவில்லை... நாயைத்தான் தேடினான்!



வரலாற்றை சொல்லும் நடுகற்கள்!

‘‘ஒரு வீரன் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு சொந்தக்காரனாக இருக்கிறான். அதற்கு ஒரு பட்டி அமைத்திருக்கிறான். அந்தப் பட்டியை உடைத்து கால்நடைகளைக் கவர்ந்து செல்ல கள்வர்கள் முயற்சி செய்கிறார்கள்.அந்த நேரத்தில் வீரன் வெளியே வேலையாகச் சென்றிருக்கிறான். அந்த நேரத்தில் கள்வர்களை எதிர்த்துப் போராடுகிறது பட்டிக்கு காவலிருந்த நாய்.
நிறைய கள்வர்களைக் கடித்துக் குதறுகிறது. வீரன் வரும் வரை கள்வர்களுடன் போராடிய நாய், அதன் பின்பு உயிர் துறக்கிறது. அதன் பிறகு கள்வர்களுடன் வீரனும் போராடி இறக்கிறான்.
அவனின் நினைவாக தமிழ் சமூகம் ஒரு நடுகல் எடுத்திருக்கிறது. அதில் அந்த வீரனின் உருவத்தை மட்டுமல்லாது, உயிர்த்தியாகம் புரிந்த நாயின் உருவத்தையும் பொறித்துள்ளார்கள்.

இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எழுத்தானூரில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டு!’’ அது பல்கலைக்கழகம்தான். வரிசையாக நின்றது தமிழ், வரலாறு, பண்பாடு தொல்லியல் பாடங்களைப் படிக்கும் இளங்கலை மாணவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு அந்தப் பெரிய புகைப்படத்தை காட்டிப் பாடம் எடுத்தவர்கள் யாக்கை என்ற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.

மேற்சொன்ன கதையைச் சொன்ன குமாரவேல், ‘‘இன்னும் இதை சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரு முறை குறிப்பிடும்போது ‘என்னைக் கவர்ந்த நடுகல்’ன்னு சொல்லி ஒரு கட்டுரையில் தமிழ் மரபு பற்றி குறிப்பிட்டுள்ளார்!’’ என்று சொல்லும்போது குழுமியிருந்த மாணவ - மாணவியர் முகங்கள் பளிச்சிடுகின்றன.

இது போல ஒன்றல்ல, இரண்டல்ல, பல நூறு புகைப்படங்கள். அத்தனையும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிறநாடுகளிலும், மாநிலங்களிலும் கண்டெடுக்கப்பட்ட ஆதிகால நடுகற்களின் புகைப்படங்கள். எல்லாமே லேமினேஷன் செய்து அங்கே வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆங்காங்கே குழுமிக்குழுமி கதை வடிவில் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பலர். அதை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை அரங்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும், யாக்கை மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய தமிழக நடுகல் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. ஆர்வமுள்ள மாணவர்கள் இதைக் கேட்டு குறிப்பெடுத்து அடுத்தடுத்து வந்த மாணவர்களுக்கு கதை மாறாமல், வரலாறு மாறாமல் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.

இந்த நிகழ்வின் தொடக்கமாக தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் சிறப்புரையாற்றி, நடுகற்கள் என்றால் என்ன... அவற்றை எதற்காக மனிதன் நட்டுவைத்தான்... அவை எப்படியெல்லாம் தொல்லியல் வரலாறு அறிய உதவுகின்றன... என்பதையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தார். ‘‘நடுகற்கள் வடமாவட்டங்களில்தான் அதிகமாகக் காணப்பட்டிருக்கின்றன. நியாயப்படி பார்த்தால் கோயமுத்தூரில்தான் அதிகம் கிடைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இங்குதான் கால்நடை வளர்ப்பு அதிகம் நடந்திருக்கு. அப்படியே கிடைத்தாலும் இங்கே நாயக்கர் காலத்தியதுதான் அதிகம். அதற்கு முன்னே காலத்தாற் முற்பட்ட நடுகற்கள் மிகக்குறைவாகவே கிடைத்திருக்கின்றன.

என் ஆராய்ச்சியின்படி கோவையில் இதுவரை என் பார்வைக்கு சுமார் 150 நடுகற்கள் கிடைத்திருக்கிறது. இன்னமும் நான் பார்க்காதவை இருக்கலாம். அதுல பார்த்தீங்கன்னா பதினேழாம் நூற்றாண்டு அதிகம். பனிரெண்டாம் நூற்றாண்டு ஒண்ணு ரெண்டு, பத்தாம் நூற்றாண்டு ஒண்ணு. இது மேல போகப்போக குறைவாகிறது. பொதுவாகவே நடுகற்களின் ஆதிமூலம் கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என சொல்லலாம். அதாவது தொல்பழங்காலம். அப்போது எதற்காக மனிதர்கள் செயற்கையாக உயிர் விட்டார்களோ, அதையெல்லாம் அடையாளப்படுத்தி குகைகளில் ஓவியங்கள் வரைந்தார்கள். பிறகு கல்லில் பொறித்து வைத்தார்கள்.

அவையெல்லாம் நினைவுச்சின்னங்கள். முதலில் சிற்பங்கள் இல்லை. இறந்தவர்களை புதைத்த இடத்தின் மேலே வெறுமனே நட்டார்கள். பிறகுதான் சிற்பங்கள் செதுக்கி நடும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கல், ஆவிகளை தன்னுள் வாங்கிக் கொள்ளும் என்று நம்பினார்கள். சாதாரணமாக குகையில் வைக்கிற ஆவி, கல் வைக்கும்போது அதில உறுதியா இருக்குன்னு நினைத்தார்கள்...’’ என்று சொல்லும் பூங்குன்றன், தமிழகத்தின் பழமையான நடுகல் எது என்றும் சொன்னார்.

‘‘நம்ம தமிழ்நாட்டில் எழுத்தோட ரொம்ப பழமையான நடுகல்ன்னு பார்த்தால் தேனி மாவட்டத்தில் எழுத்தோட கிடைத்த நான்கு நடுகற்கள்தான். இவை நான்கும் கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆந்திராவில் கங்கப்பேரூர்ன்னு ஒரு ஊர். அங்கே கிடைத்ததுதான் பழமையானதுன்னு நினைச்சாங்க. அது கிபி மூன்றாம் நூற்றாண்டு. ஆனா, தேனியில் கிடைத்தது கிமு மூன்றாம் நூற்றாண்டு. இப்ப நடுகற்கள் மட்டுமல்ல, தொல்லியல் சான்றுகளை ஆராய்வது அவசியந்தானா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். உண்மையில் நாம் எப்படி வந்தோம்ன்னு தெரிந்தால் ஒழிய நாம் எதிர்காலத்தில் எப்படிப் போகணும்ன்னு முடிவு செய்ய முடியாது.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். அஸ்ஸாம்ல ஒரு குறிப்பிட்ட பகுதியில் பழங்குடிகள் அம்மணமாகத் திரிந்துகொண்டிருந்தார்கள். நம் அதிகாரிகள் போய் துணியைக் கொடுத்து போட்டோவும் எடுத்து சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று வெளியிட்டார்கள். மூணுமாசம் கழித்துப் போனால் அவங்க எல்லாம் ஓட்டம் பிடிக்கிறாங்க. ஏன்னா அவங்களுக்கு துணி எப்படி உடுத்தணும், பயன்படுத்தணும்ன்னு கத்துக் கொடுக்கலை. துணி உடுத்தியதால் அழுக்கு மேவி, பேன், பூச்சிகள் பிடித்துக் கடித்து சொறிந்து புண்ணாகி அவர்கள் பாடாய்பட்டிருக்கிறார்கள்.

அதனால் புதுத்துணி கொடுத்தால் வாங்க மறுத்து ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். இந்தத் துணியை பயன்படுத்தியதால்தான்  இந்த  துன்பம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு முடிவுக்குப் போகாதிருக்க நம் தொல்லியல் கல்வி உதவியாக இருக்கும். தொல்லியல் துறையின் மீது நம் இளையதலைமுறையினர் நல்ல ஆர்வம் கொண்டு வருவதைக் காண்கிறேன். அவர்களுக்கு தப்பும், தவறுமில்லாமல் இதை எடுத்துச் சொல்ல இப்படியான கண்காட்சிகளை, பயிலரங்கங்களை நடத்த வேண்டும்!’’
என்கிறார் பூங்குன்றன்.

யாக்கை அறக்கட்டளையின் நிர்வாகியான குமாரவேல் ராமசாமி, இதை ஆமோதித்தபடி தொடர்ந்தார்.  ‘‘ஆதி கால மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு நண்பனைத் தேடவில்லை. ஒரு விலங்கைத்தான் தேடினான். அப்படி அவன் கண்டெடுத்ததுதான் நாய். இது ஒன்று இருந்தால் பத்து நண்பர்கள் பக்க பலமாய் இருப்பது போல. நாய்தான் தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் என நம்பி அதைக் கூடவே வைத்திருந்தான்.

இப்படி ஆதிமனிதனின் நண்பனாக இருந்த நாய்கள் பற்றிய கதைகளை கல்வெட்டுகளில் மட்டுமல்ல, நடுகற்களிலும் காண முடிகிறது. அந்த வகையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திர பல்லவன் காலத்திலேயே ஒரு நடுகல் கிடைத்திருக்கிறது. இப்படியான நடுகற்களை மட்டுமல்ல, தொல்லியல் வரலாறு பேசும் கல்வெட்டுகளையும், பாறை ஓவியங்களையும், பெரும்புடைப்புச் சிற்பங்களையும் ஆவணப்படுத்தும் வேலையை தமிழ்நாடு முழுக்க உள்ள தன்னார்வலர் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு ஐந்தாண்டுகளாக செய்து வருகிறோம்.

இப்படி பயணித்ததில் ஆயிரக்கணக்கான நடுகற்களை இதுவரை ஆவணப்படுத்தியிருக்கிறோம். இந்த ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளை அனைத்துத் தரப்பினருக்கும் - குறிப்பாக மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு சேர்க்கணும்ன்னு சொல்லி தமிழ்நாடு தொல்லியல் துறை, ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இணைந்து தமிழக நடுகல் மரபு என்ற பொருண்மையில் கண்காட்சி நடத்தினோம்.

அதுல பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களிடம் அதன் ஃபீடு பேக் வாங்கியிருந்தோம். அதிலிருந்து இந்தக் கண்காட்சியோட தேவை இதோட முடிந்து விடவில்லை. மாவட்டந்தோறும் தமிழக அளவில் கொண்டு போய் சேர்க்கணும்ன்னு முடிவு செஞ்சோம். அதுல ஒண்ணாத்தான் இங்கே இது நடந்துட்டிருக்கு!’’ என்கிறார் குமாரவேல் ராமசாமி.

முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவியான ஜனனி, ‘‘காண்பவையெல்லாம் அவையே காணல்’ என்ற கூற்றுதான் நினைவுக்கு வருது. இதைப் பார்த்த பின்பு இனி பார்ப்பவை எல்லாமே தொல்லியல் மரபோட ஏதாவது பொருந்தியிருக்குமா என்று பார்ப்பதற்கான அவாவை இந்தக் கண்காட்சி உருவாக்கித் தந்திருக்கிறது!’’ என்றார்.

கோவை அரசுக்கலைக்கல்லூரி முதுகலை முதலாம் ஆண்டு மாணவரான அகில் பிரசாத், ‘‘நாங்க படிச்சதுல நடுகல்ங்கிறது ஒரு வீரனுக்காக எடுக்கப்பட்ட நினைவுச்சின்னம்ன்னுதான் நினைச்சுகிட்டிருந்தோம். ஆனா, இங்கே வந்து பார்த்தால்தான் வீரக்கல், நினைவுக்கல், யானை குத்திக்கல், சதிக்கல்,  புலிக்குத்திக்கல் இப்படி நிறைய இருப்பதைக் காண்கிறோம்.
இது தமிழரின் வீரத்தை மட்டுமல்ல; பண்பாட்டை, கலாசாரத்தை, தமிழ் மரபை பறைசாற்றுவதையும் தெரிந்து கொள்கிறோம்!’’ என்றார்.
                  
கா.சு.வேலாயுதன்