ஐடி துறை ஆட்குறைப்புகள் ஏன் நாம் என்ன செய்யலாம்?



பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களுக்கான சமூக ஊடகத் தளம்தான் LinkedIn. பெரிய நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள், தலைவர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், மாணவர்களெல்லாம் அங்கு ஒருவரோடொருவர் அறிமுகமாகி உரையாடுவார்கள், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள், எதிர்வினையாற்றுவார்கள். கிட்டத்தட்ட கோட், சூட் போட்ட ஃபேஸ்புக் என்று சொல்லலாம்.அந்த லிங்க்டின் இணையதளத்தில் கடந்த பல மாதங்களாக ‘வேலைக்கு ஆள் தேவை’ வகைப் பதிவுகள் ஏராளமாக நிறைந்திருந்தன.

இந்த நிறுவனத்தில் இந்தப் பொறுப்புக்கு இத்தனை பேரை எடுக்கிறார்கள், அதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது, நேர்காணலுக்கு எப்படித் தயாராவது என்பதுபோன்ற குறிப்புகள் ஒருபக்கம்; நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன் என்று அறிவிக்கிறவர்களும் அவர்களை வாழ்த்துகிறவர்களும் இன்னொருபக்கம். இதையெல்லாம் பார்க்கும்போது உலகம் மிக வளமாக இருக்கிறது என்கிற ஒரு தோற்றம்தான் நமக்குக் கிடைத்தது.

ஆனால், இப்போது, லிங்க்டினில் பசுமை தீர்ந்த வறட்சிச் சூழல். எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘எனக்கு வேலை போய்விட்டது, உங்கள் நிறுவனத்தில் வேலை காலியாக இருந்தால் சொல்லுங்கள்’ என்று சொல்கிறவர்கள் மிகுதியாகிவிட்டார்கள். முன்பும் இதுபோன்ற வேலை தேடும் பதிவுகள் ஆங்காங்கு இருக்கும் என்றாலும், இப்போது இதன் சதவிகிதம் மிகவும் கூடுதலாகிவிட்டது.
குறிப்பாக, Amazon, Meta (Facebook), Twitter உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் Layoff, அதாவது, தங்கள் ஊழியர்களைப் பெரும் எண்ணிக்கையில் வேலைநீக்கம் செய்கிற அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதால் மற்ற நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களும் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள்.

ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை போகிறது. அதுவும் திறமையாளர்கள், பல ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர்கள், வேலையில் கில்லாடி என்று சிறந்த மதிப்பெண் வாங்கியவர்களெல்லாம்கூட வெளியேற்றப்படுகிறார்கள் எனும்போது, இன்றைக்கு அங்கு நடப்பது இன்னொரு நாள் தங்கள் நிறுவனத்திலும் நடக்கக்கூடும் என்று அவர்கள் எண்ணுவது இயல்புதான்.உண்மையில் ஐடி துறையில் என்ன நடக்கிறது?

ஏன் இத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள்? இதன்மூலம் இந்த நிறுவனங்கள் என்ன சாதிக்க நினைக்கின்றன? இப்படி நீக்கப்படுகிறவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? இதனால் மற்றவர்கள், குறிப்பாக, இப்போது படிப்பை முடித்துவிட்டு நிறுவனங்களுக்குள் நுழையவுள்ள அடுத்த தலைமுறை மாணவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்?

ஐடி நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்துவந்துள்ளன. இவை மிக விரைவாக வளரும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இவற்றில் முதலீடு செய்கிறார்கள், அதற்கேற்ப பெரிய லாபமும் சம்பாதிக்கிறார்கள். ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்வதன்மூலம் சில ஆண்டுகளுக்குள் பணத்தை இருமடங்காக்கியவர்கள்கூட உண்டு.ஆனால், இயல்புக்கு மீறிய இந்த வளர்ச்சியை நெடுங்காலத்துக்குத் தொடர்வது சாத்தியமில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட எந்த நிறுவனமும் அதன் உண்மையான மதிப்பை நோக்கி விழத்தான் செய்யும். இதனால் சிறு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும், பெரிய நிறுவனங்களுக்கும் அடி விழும், அழுத்தம் உண்டாகும்.

எடுத்துக்காட்டாக, ஃபேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் ஓராண்டுக்குமுன் (நவம்பர் 2021) 340 டாலர் அளவில் இருந்தன. இன்றைக்கு (நவம்பர் 2022) அதன் மதிப்பு சுமார் 112 டாலர். அதாவது, ஓராண்டுக்குமுன் அங்கு முதலீடு செய்த ஒருவர் தன் பணத்தில் மூன்றில் இரண்டு பங்குக்குமேல் இழந்திருப்பார்.

இதுபோல் அமெரிக்க, இந்திய, மற்ற நாடுகளின் ஐடி துறை பங்குகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் பல கதைகளைச் சொல்லலாம். இத்துடன் கோவிட் முடக்கம், அதனால் பொருளாதாரம் மெதுவாக நகரத் தொடங்கியது, தகவல் தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்யும் நிறுவனங்கள் சற்று யோசிக்கத் தொடங்கியிருப்பது, பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்கிற ஊகங்கள்... இவையெல்லாம் சேர்ந்து இந்த நிறுவனங்கள் ‘எதாவது செஞ்சாகணும்’ என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

தனிநபர் ஒருவருக்கு அடுத்த ஆறு மாதம் சம்பளம் வராது அல்லது குறைவாக வரும் என்று தெரிந்தால் அவர் என்ன செய்வார்? தன்னுடைய சேமிப்பை உறுதியாக்கி, செலவுகளைக்
கட்டுப்படுத்தி, நிலைமை சரியாகும்வரை மிகக் கவனமாக இருப்பார். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குப் பார்க்கத் தொடங்குவார், பெரிய முதலீடுகளைத் தள்ளிப்போடுவார்... இதைத்தான் இந்த நிறுவனங்கள் பெரிய அளவில் செய்கின்றன. அதன் ஒரு பகுதிதான் ஆட்களை நீக்குவது.

ஐடி நிறுவனங்களுக்கு அவற்றின் பணியாளர்கள்தான் பெரிய சொத்து. அதே நேரம், அவர்களுக்குத் தரும் சம்பளம், மற்ற வசதிகள் அவர்களுடைய மிகப் பெரிய செலவுகளில் ஒன்றாக இருக்கும். அதனால், வேலைநீக்கம் அந்நிறுவனங்களுக்குக் கணிசமான உடனடி லாபத்தைத் தரும். தொலைநோக்கில் அதனால் இழப்புகள் உண்டு என்றாலும், இப்போது அவர்களுக்கு உடனடி நன்மை பெரிதாகத் தெரிகிறது.

இன்னொரு காரணம், எந்த ஐடி நிறுவனமும் வருங்காலத்தை மனத்தில் கொண்டு பலவிதமான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கும். அதில் சில வெற்றியடையும், சில சுமாராக ஓடும், சில தோற்றுப்போகும். அதைப்பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால்தான் இந்தத் துறையில் முன்னணியில் இருக்க இயலும்.
ஆனால், இதுபோன்ற நெருக்கடி நேரங்களில் சரியாகச் செயல்படாத திட்டங்களைக் கவனித்து நீக்கினால் நல்லது என்று நிறுவனங்கள் நினைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஆட்களைச் சேர்த்திருக்கின்றன. வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு செய்தார்கள். இப்போது அந்த வருங்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போது, வேகத்தைக் குறைப்பது கட்டாயம்.இப்படிப் பல கோணங்களில் விளக்கினாலும், வேலைநீக்கம் என்பது ஒரு நிறுவனத்துக்கு மிகப் பெரிய அடிதான். ஏனெனில், பொதுமக்கள், வருங்காலத்தில் அந்நிறுவனத்தில் சேரக்கூடிய எதிர்காலச் சொத்துகளாகிய வல்லுனர்கள் பார்வையில் அந்நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துபோகும்.

அதனால், பல நிறுவனங்கள் இயன்றவரை வேலைநீக்கத்தைத் தவிர்க்க முயல்கின்றன. ஆட்களைச் சேர்ப்பதை நிறுத்துவது, திட்டங்களைக் குறைத்து அந்த மக்களை வேறு திட்டங்களில் பயன்படுத்துவது, மற்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றைப் பின்பற்றி நிலைமையைச் சமாளிக்கப் பார்க்கிறார்கள். இவையெல்லாம் சரிப்படாது அல்லது போதாது எனும்போது, வேலைநீக்கத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

இவ்வாறு நீக்கப்படும் ஊழியர்கள் என்ன ஆவார்கள்?

முதலில், இவர்களில் யாரும் முட்டாள்கள் இல்லை. திறமை மிக்க ஊழியர்கள்தான்; பல கட்டங்களில் நேர்காணல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். அதனால், மற்ற நிறுவனங்களில் இவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கும்.ஆம், ஒருபக்கம் வேலைநீக்கச் செய்திகள் குவிகிற இன்றைய சூழ்நிலையிலும் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு இவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டிப்பாகப் பெறலாம்.

ஆனால், ஒன்று. பழைய திறமைகளைக் கொண்டு புதிய வாய்ப்புகளைப் பெறுவது கடினமாக இருக்கும். அந்தத் திறமைகளைப் பயன்படுத்திப் புதியவற்றைக் கற்றுக்கொள்கிற மனநிலையைக் காண்பிக்க வேண்டியிருக்கும்.சொல்லப்போனால், இந்தத் துறையில் நுழைவதற்கு, வளர்வதற்கு, தொடர்ந்து முன்னேறுவதற்கு எளிய விதி இதுதான்: நம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது. சுற்றி நடப்பவற்றைக் கவனித்து, தேவையானவற்றை மேலோட்டமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொண்டே இருப்பது. அதைச் செய்தால் இதுபோன்ற சூழ்நிலையிலும் புதிய கதவுகள் திறக்கத்தான்
செய்யும்.

இந்தப் பின்னணியில், ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற நம் பழமொழியைத் ‘தொடர்ந்து கற்போர்க்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு’ என்று மாற்றிக்கொள்ளலாம்.
இந்தச் செய்திகளைப் பார்த்து ‘எனக்கு ஐடி துறையே வேணாம்’ என்று யாராவது தீர்மானித்தால், அது அறிவார்ந்த செயலாக இருக்காது.

எதிர்காலம் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியின்றி நகர இயலாது. ஐடி நிறுவனங்களும் விரைவான முன்னேற்றம், வளர்ச்சிக்குப் பழகியவை. அவர்களால் இதுபோல் நெடுநாள் முடங்கியிருக்க இயலாது. அதனால், இந்தச் சுழலின் அடுத்த நிலை வரும், நிறுவனங்கள் மீண்டும் பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். அது எப்போது என்று யாருக்கும் தெரியாது. பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருக்கவேண்டியதுதான்.

என். சொக்கன்