நடிக்கவே தெரியாதுனு சொன்னாங்க... இப்ப பாராட்டறாங்க!



தன் பயணத்தை விவரிக்கிறார் எதிர்நீச்சல் ஜனனி

சன் டிவியில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாயகி ஜனனி. அப்பாவின் பேச்சையே சாசனமாக மதித்து புகுந்தவீட்டில் அத்தனை கஷ்டங்களை அனுபவித்து, பிறகு அதை தைரியமாக எதிர்கொள்ளும் ஜனனி கேரக்டரை அவ்வளவு நம்பிக்கையாக ரசித்து பார்க்கின்றனர் பார்வையாளர்கள்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் நம் ஜனனியின் நிஜப்பெயர் மதுமிதா ஹெச். தொடரின் பெயரைப் போலவே சின்னத்திரைக்குள்ளும் எதிர்நீச்சல் போட்டே என்ட்ரியானவர். ஷூட்டிங்கில் ஆதிகுணசேகரனை ஹாட்டாக எதிர்கொண்டு வந்தவரை கூலாக எதிர்கொண்டோம்.

‘‘நடிக்கும்போதுதான் எல்லோரும் அவங்க அவங்க கேரக்டரா இருப்பாங்க. மற்றபடி இந்த செட் அவ்வளவு ஜாலியானது. நான் இந்த செட்டை ரொம்ப நேசிக்கிறேன்.
இங்க கனிகா அக்கா, பிரியதர்ஷினி அக்கா, ஹரிப்ரியா அக்கானு எல்லோருமே கூடப் பிறந்த அக்கா, தங்கச்சி மாதிரி அவ்வளவு பாசம் காட்டுவாங்க. அதேபோல இயக்குநர் திருச்செல்வம் சார், மற்ற சக நடிகர்கள்னு எல்லோரும் அன்பா பழகுவாங்க. ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. ஹேப்பியா இருக்கேன்...’’ எனச் சிரிக்கும் மதுமிதாவிடம் சின்னத்திரை என்ட்ரி பற்றிக் கேட்டோம்.

‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர்ல. பி.காம் படிச்சிருக்கேன். நடிப்பிற்காக சென்னை, ஹைதராபாத்னு அலைஞ்சிட்டு இப்ப முழுவதும் சென்னையில் இருக்கேன். அப்பா ஹிரண்யா. கார்மென்ட்ஸ்ல மானேஜரா இருந்து ஓய்வு பெற்றுட்டார். அம்மா பாரிஜாதம், ஒரு கார்மென்ட்ஸ்ல மானேஜர் பொறுப்புல இருக்காங்க. ஒரு அக்கா, ஒரு தங்கச்சி. இதுதான் என் குடும்பம்.
எனக்கு பள்ளியில் படிக்கிறப்ப நடிப்புல பெரிசா ஆர்வமில்ல. ஆனா, கல்ச்சுரல்ஸ்ல நாடகம், டான்ஸ்னு நிறைய பங்கெடுப்பேன். அப்ப அப்பாவின் நண்பர் ஒருத்தர், ‘நல்லாயிருக்காங்க. பெர்ஃபாமன்ஸ் நல்லா பண்றாங்க. ஆடிஷனுக்கு முயற்சி செய்யலாமே’னு சொன்னார்.

பள்ளியில் படிக்கும்போது முயற்சிக்கல. அப்ப பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும். அதனால, வேண்டாம்னு இருந்துட்டேன். கல்லூரி வந்தபிறகு முயற்சி செய்தேன். நிறைய ஆடிஷன் போனேன். எனக்காக அப்பா கூடவே வந்தாங்க. அப்பாவும், அம்மாவும் ரொம்ப சப்போர்ட். என்னைவிட என்மேல் ரொம்ப நம்பிக்கை வச்சது அவங்கதான். அம்மா, ‘நிறைய சீரியல்கள் பாரு. அப்பதான் உனக்கு முகபாவங்களை எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியும்’னு சொல்வாங்க. அவங்களுக்கு நிறைய ஆர்வம். ‘நல்ல வாய்ப்புகள் கிடைக்குது. எதையும் வீணாக்காதே. போ... போ’னு நம்பிக்கை அளிச்சிட்டே இருந்தாங்க.

சீரியல் என்ட்ரியான பிறகுகூட அம்மா என் ஒவ்வொரு சீரியலையும் பார்த்து கமெண்ட் பண்ணுவாங்க. இப்ப, ‘எதிர்நீச்சல்’ சீரியலை பார்க்க எங்க இருந்தாலும் சரியா 9.30 மணிக்கெல்லாம் வீட்டுல ஆஜராகிடுவாங்க. நான் ஒவ்வொரு ஆடிஷன் போகும்போதும் நூறு பேருக்கு மேல் வாய்ப்புக்காக வந்திருப்பாங்க. அவங்களுக்கு ஒரு ஆடிஷன் கிடைச்சாலே போதும்னு இருக்கும். அவங்கள பார்த்து எனக்கு ஆர்வம் அதிகமாசிடுச்சு. இந்த ஃபீல்டுல இன்னும் நல்லா பண்ணணும்னு தோணுச்சு.

அப்படியாக டிகிரி படிக்கும்போதே சீரியல் ஆஃபர் கிடைச்சது. கன்னடத்துல ‘புட் மல்லி’னு ஒரு சீரியல். அதுல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். அங்கிருந்து என் பயணமும் தொடங்குச்சு...’’ என்கிறவர், புன்னகையுடன் தொடர்ந்தார்.‘‘முதல் சீரியல்ல ஓரளவு ரீச் கிடைச்சது. அதுதான் ஆக்டிங்ல என் முதல்படி. அப்ப ஆக்டிங் பத்தி எதுவும் தெரியாது. போவேன். பண்ணுவேன். அவ்வளவுதான். அப்போ ஒரு இயக்குநருக்கு என் ஆக்டிங் பிடிக்கல. ‘இதுதான் உன் கடைசி சீரியல். இதுக்குமேல் நீ போகமாட்டே’னு சொன்னார்.

அந்த பேச்சை நான் சேலஞ்ஜா எடுத்து இன்னும் நல்லா பண்ணணும்னு முயற்சி செய்து நடிச்சேன். நிறைய மெனக்கெட்டேன். பிறகு அவரே என்னைப் பாராட்டும் அளவுக்கு வந்தேன்.  
அடுத்ததா, ‘சனி’னு புராண சீரியல்ல வாய்ப்பு வந்தது.

அப்புறம், சன் நெட்வொர்க்கின் உதயாவுல ‘ஜெய் ஹனுமான்’ சீரியல்ல லட்சுமி கேரக்டர் பண்ணினேன். அப்புறம், தெலுங்குல ஆஃபர் வந்தது. பிறகுதான் தமிழ்நாடு பக்கம் வந்தேன். இங்க ‘பிரியாத வரம் வேண்டும்’தான் என் முதல் சீரியல். அதுல லீட் ரோல் பண்ணினேன். அதேநேரம், தெலுங்குல ‘நம்பர் ஒன் கோடலு’ ஒரு சீரியல் கிடைச்சது. அதையும் செய்தேன். அது நல்லா ரீச்சாகி பெயர் கிடைச்சது.

இந்நேரம்தான் ‘எதிர்நீச்சல்’ வாய்ப்பு வந்தது. இதுவே எனக்கு தமிழ் மக்கள்கிட்ட நிறைய பெயர் வாங்கித் தந்திருக்கு...’’ என நெகிழ்பவர் ‘எதிர்நீச்சல்’ வாய்ப்பு பற்றி பகிர்ந்தார்.
‘‘தெலுங்கு சீரியல் நடிச்சிட்டு இருந்தப்ப ‘எதிர்நீச்சல்’ ஜனனி கேரக்டருக்கு தேடிட்டு இருந்தாங்க. சீரியல் மானேஜர் ஒருவர் ‘இந்தமாதிரி ஒரு சீரியல். ஆடிஷன் வரமுடியுமா’னு கேட்டார். அப்படியாக இந்த சீரியல்ல செலக்ட்டானேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னாடியே சன் டிவி சீரியலில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இவ்வளவு பெரிசா திருச்செல்வம் சார் புரொஜெக்ட் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. ஐ யெம் வெரி லக்கி. தேங்க்ஸ் சன் டிவி.

அதேமாதிரி உண்மையில் இந்த சீரியலின் ரீச்சும் நான் எதிர்பார்க்காதது. இப்ப நான் வெளியே போனால் மாஸ்க்கும் கேப்பும் போட்டுக்கிட்டுதான் போறேன். அந்தளவுக்கு ரீச்சாகி இருக்கு.
எங்க போனாலும், ‘என்னங்க உங்கள அப்படி டார்ச்சர் பண்றாங்க. எப்படி தாங்கிக்கிறீங்க’னு கேட்குறாங்க. நிஜம்னு நினைச்சே பேசுவாங்க.

கேரக்டர்னு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுது.  சமீபத்துல என் அப்பாவின் ஊரான சிக்மகளூர் போனேன். அங்குள்ள மக்கள், தமிழ் சீரியல்லாம் பார்ப்பாங்கனு நான் நினைக்கவே இல்ல. என் வீட்டுக்கு வந்தவங்க, என்னைப் பார்த்து, ‘என்னம்மா இப்படி அமைதியா இருக்கீங்க’னு கேட்டாங்க.  

அப்புறம், ஆதிகுணசேகரன் கேரக்டரை திட்டினாங்க. நான், ‘ஜஸ்ட் கேரக்டர்ங்க’னு சொன்னேன். ஆனா, அவங்க அப்படி திட்டினாலும் அது பெருமைதான்னு புரிஞ்சது. ஏன்னா, சீரியலையும், கேரக்டர்களையும் அவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறாங்க. அதை நினைக்கும்போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. அப்புறம், நான் நடிச்ச மற்ற சீரியல்களுக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அந்த சீரியல்கள் எல்லாம் அப்படியே நாடகமா இருக்கும். இது ஒரிஜினல் மாதிரி இருக்கு. ஒரு பொண்ணு வாழ்க்கையில் எப்படி வாழ்றதுனு அப்படியே நடிக்கிறேன்.

இங்க ஆக்‌ஷனும், ‘அப்படி பண்ணு, இப்படி பண்ணு’னு சொல்லவே மாட்டாங்க. ‘யதார்த்தமா கேரக்டரை ஃபீல் பண்ணி நடிங்க’னு இயக்குநர் சார் சொல்லிடுவாங்க. அதன்படி செய்றேன்.
அப்புறம், டென்ஷன் இல்லாமலும் நடிக்கிறேன். நெகட்டிவ் கேரக்டர் செய்யும்போது கண்ணை ஒருமாதிரி காட்டுறது, ஷாக் கொடுக்குறது, பல்லை கடிக்கிறது மாதிரி செய்யணும், இதெல்லாம் இதுல கிடையாது...’’ என்கிறவரிடம் நிஜத்தில் ஜனனி எப்படி என்றோம்.  

‘‘ஜனனி கேரக்டர் ரொம்ப கீழ்ப்படிதலுள்ள, அப்பா சொல்றதே சாசனம்னு வாழ்ற பொண்ணு. ஆனா, மதுமிதா அப்படியில்ல. மதுமிதா சொல்றதைத்தான் வீட்டுல கேப்பாங்க. அதேநேரம் எனக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் செய்வேன். அப்பாவும், அம்மாவும் உன் மனசுக்கு எது சரினு தோணுதோ அதை செய்னு சொல்லிதான் வளர்த்தாங்க’’ எனச் சொல்லி சிரிப்பவரிடம், எதிர்காலக் கனவு என்றதும், ‘‘ட்ரீம்ஸா... நிறைய இருக்கு. முதல்ல சீரியல்கள் நிறைய பண்ணணும் என்பதுதான். அதேபோல படங்களும் பண்ண ஆசை இருக்கு.

கடந்த ஓராண்டா சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆனா, தேதிகள் கிடைக்காமல் போயிடுச்சு. அப்ப சென்னை, ஹைதராபாத்னு ரெண்டு சீரியல்கள் ரெண்டு இடங்கள்னு அலைஞ்சிட்டு இருந்தேன். இப்ப இது ஒண்ணுதான். இனி நல்ல புரொஜெக்ட் வந்தால் செய்யலாம்னு இருக்கேன்...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறார் மதுமிதா.  

பர்சனல் பக்கம்

பிடித்த ஊர்: பெங்களூர். எல்லா இடத்திலும் சுற்றியிருக்கேன். ஆனா, ஹோம் சிட்டி மாதிரி எதுவும் இல்ல. கிளைமேட், ஃபுட் எல்லாத்துக்கும் மேல, என் வீடு அங்கிருக்கு.

பிடித்த உணவு: வெஜிட்டேரியன் நான். அம்மா செய்த எல்லா உணவும் ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, அக்கி ரொட்டி. அந்த ரொட்டியை அரிசி மாவு வச்சு செய்வாங்க. அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி. அது அம்மா கையில் பண்ணும்போது ஸ்பெஷலா வரும்.

பிடித்த உடை: எல்லா உடைகளும் வசதிதான். ஷர்ட், பேண்ட் போட்டுக்க பிடிக்கும். எனக்கு நல்லா ரெடியாக பிடிக்காது. ஏன்னா, இங்க ரெடியாகி ரெடியாகி அலுத்துப்போச்சு. நார்மல் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டா போதும்னு தோணும்.

பிடித்த நடிகர்: விஜய்சேதுபதி, அஜித்.

பிடித்த நடிகை: சமந்தா, நயன்தாரா.

பிடித்த விஷயம்: சினிமா பார்க்க ரொம்பப் பிடிக்கும். எப்படி நடிக்கலாம்னு யோசிப்பேன்.

பிடிக்காத விஷயம்: போலித்தனம்.

பிடித்த விளையாட்டு: பேஸ்கட் பால், ஷட்டில். ஆனா, என்  பள்ளியில் அதற்கான வாய்ப்பு அமையல.

பிடித்த விளையாட்டு வீரர்: எம்.எஸ்.தோனி, விராட் கோஹ்லி.

ஃப்ரீ டைம் இருந்தால்: நிறைய படங்கள் பார்ப்பேன். வீட்டை சுத்தம் செய்வேன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்