எலக்ட்ரிசிடி நம்பருடன் ஆதாரை இணைக்காவிட்டால் என்ன ஆகும்..?



மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் அட்டையை மின் நுகர்வோர் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்ற  மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 6ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைக்கு வீடு விடும் போது அவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து மானிய விலையில் மட்டும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ‘ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைத்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் இனி வழங்கப்
படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

யார், யார் இணைக்க வேண்டும்?

தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், ‘ஆதார் எண் இணைப்பில் 2.36 கோடி வீட்டு பயனாளர்கள், 21 லட்ச விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்களும் கட்டாயமாக உள்ளடக்கப்படுவர்’ என்று கூறப்பட்டுள்ளது.இதன்படி, ‘100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

தொற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை’ என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.அதாவது தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை அரசிடமிருந்து எந்தவிதமான மானியமும் பெறுவதில்லை. அதனால் அவர்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய தேவையில்லை.

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்தில் (https://www.tnebnet.org/awp/login) மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை க்ளிக் செய்தால் மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பக்கத்துக்கு செல்லும்.அங்கே மின் நுகர்வு எண்ணை உள்ளிட வேண்டும்.

அதன்பின் நமது மின் நுகர்வு எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை உறுதிப்படுத்தும்படி கேட்கும்.உறுதி செய்து என்டரை க்ளிக் செய்ய வேண்டும்.அதன்பின் நமது கைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். அதை உள்ளிட்டு உறுதி செய்ததும்,Owner  Tenant  Owner but service connection name not transferredஇந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்து, பின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர் நமது ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து JPEG வடிவத்தில் அப் செய்ய வேண்டும். ஃபைல் சைஸ் 300 KBக்கு மேல் இருக்கக்கூடாது.
அப் (Up) செய்ததும் ‘Submit’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆஃப்லைனில் இணைப்பது எப்படி?

மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த செல்லும் போது ஆதார் அட்டையை கையுடன் கொண்டு செல்லவும். அங்கே மின் துறை  ஊழியர்கள் மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உதவுவார்கள்.

காலக்கெடு உள்ளதா?

தமிழ்நாடு அரசு, மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தாலும் அதற்காக இதுவரை எந்த காலக்கெடுவும் அறிவிக்கவில்லை.

ஜான்சி