சூரியன் எஃப்எம்மில் சவுண்ட் எஞ்சினியராக வேலை செய்தேன்! சொல்கிறார் 3.6.9 பட இசையமைப்பாளர்



சேலத்திலிருந்து சினிமாத்துறைக்கு வந்த ஜாம்பவான்கள் பலர். அந்த வரிசையில் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த கார்த்திக் ஹர்ஷா, ‘3.6.9’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நடிக்க, அறிமுக இயக்குநர் சிவ மாதவ் இயக்கியிருக்கிறார்.
சினிமா வரலாற்றில் முதல்முறையாக 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு உலக சாதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது இத்திரைப்படம். இந்நிலையில் பாடல்கள், பின்னணி என இசையமைப்பில் கலக்கியிருக்கும் கார்த்திக் ஹர்ஷாவிடம் பேசினோம்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் இசையமைப்பில் வெளியாகவுள்ள முதல் படம் இது. முதல்ல பின்னணி இசைக்காகவே கூப்பிட்டாங்க. பிறகு மேக்கிங் மியூசிக், தீம் மியூசிக்னு மெல்ல பிக்அப்பாகி பாடல்கள் பண்ணினேன்.
இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜர்னர் மூவி. அதுக்கேற்ப இசையமைச்சிருக்கேன்...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் கார்த்திக் ஹர்ஷா.‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சேலம். அப்பா டாக்டர். அம்மா ஹவுஸ் வொய்ஃப். ஒரு தம்பி இருக்கான். நான் அங்க ஸ்கூல் முடிச்சவுடன் மியூசிக் படிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஏன்னா, எனக்கு பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஆர்வம் வந்திடுச்சு. 2005ல் என் நண்பன் ரூபன் கீபோர்டு வாசிச்சிட்டு இருந்ததைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சது. பிறகு, கோயமுத்தூரில் பியானோ கிளாஸ் போய் இரண்டு கிரேடு கத்துக்கிட்டேன். அப்பவே இசையமைப்பாளராக ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பள்ளிப் படிப்பு முடிச்சதும் இசைக் கல்லூரியில் சேர்த்துவிடுறதா வீட்டுல சொல்லியிருந்தாங்க. ஆனா, அவங்க அப்படி செய்யல. ‘டிகிரி படி, அப்புறம் சேர்த்துவிடுறோம்’னு சொன்னாங்க. உறவினர்கள் எல்லோரும் இசை வேண்டாம்னு நின்னாங்க.

அதனால நான் கோபப்பட்டு வீட்டைவிட்டு போயிட்டேன். வீட்டுல பதட்டமாகி என்னைத் தேட ஆரம்பிச்சாங்க. பிறகு என்னை சமாதானப்படுத்தினாங்க. அப்புறமே கோவையில் உள்ள அரசு இசைக்கல்லூரில அப்பா சேர்த்துவிட்டார். அங்க போய் ஆசைப்பட்ட இசைக் கலையை கத்துக்கிட்டேன். வயலின் முதல் எல்லா இன்ஸ்ட்ரூமெண்ட்டையும் வாசிச்சேன். என் திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. வகுப்பில் நல்ல மார்க்கும் வாங்கினேன்.

பிறகு காலேஜ் முடிச்சதும் என் சித்தப்பா டாக்டர் முத்துராஜின்  மூலமா சவுண்ட் எஞ்சினியரிங் படிச்சேன். சவுண்ட்டெக் மீடியா பிரவீன் லூயிஸ் சார்தான் எனக்கு குருநாதர். மியூசிக்கில் ஒவ்வொரு விஷயத்தையும் எனக்கு துல்லியமா சொல்லிக் கொடுத்தார். அந்நேரம், திடீரென என் அப்பா காலமாகிட்டார். அப்ப பிரவீன் லூயிஸ் சார் ரொம்ப ஆறுதலாக இருந்ததுடன் இப்ப
வரைக்கும் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கார். அவருக்கு நான் ரொம்ப நன்றிக் கடன்பட்டிருக்கேன். அப்புறம், எல்லா எஃப்.

எம்.க்கும் வேலைக்காக விண்ணப்பிச்சேன். பாண்டிச்சேரியில் ஒரு தனியார் எஃப்.எம்.மில் வேலைக்கு ஆஃபர் வந்தது. அடுத்த நொடியே சூரியன் எஃப்எம்ல இருந்தும் ஆஃபர். நான் சூரியன் எஃப்எம்மை தேர்ந்தெடுத்தேன். அங்கே ஒருமாசமே வேலை செய்தேன். பிறகு கோயமுத்தூருக்கு மாற்றினாங்க.

அங்க பகுதி நேரமா ஜிங்கிள் விளம்பரம் செய்ய ஆரம்பிச்சேன். நிறைய ஆல்பம் பண்ணினேன். அங்கிருந்து என் சினிமா பயணமும் தொடங்குச்சு...’’ என்கிறவர், சிரித்தபடி தொடர்ந்தார்.‘‘ஆறு குறும்படங்களுக்கு மியூசிக் பண்ணி விருதுகள் வாங்கினேன். நான் வொர்க் பண்ணின என்னுடைய ‘முள்ளின் நிழலும் குத்திற்று’ என்ற குறும்படம் லண்டன் ஃபிலிம்பேர்ல வெளியிட்டாங்க.

அதை பெரிய படமா எடுக்கிற ஐடியாவும் இருக்கு. அதுக்கு மியூசிக் பண்ணினேன். பெஸ்ட் சாங்ஸ், பெஸ்ட் மியூசிக், பெஸ்ட் சவுண்ட் டிசைன்னு மூணு அவார்டுகள் வாங்கினேன்.
அடுத்து திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக ஆகணும்னு அதுக்கான முயற்சியில் இறங்கினேன். ‘சமரன்’னு முதல் பட வாய்ப்பு வந்தது. அது ஒரு போர் சம்பந்தமான படம். ஆறு பாடலும் சூப்பரா பண்ணிக் கொடுத்தேன்.    

அப்போ நான் சூரியன் எஃப்எம்ல வேலை பாத்துக்கிட்டே ‘சமரன்’ படத்துக்கான வேலைகளைச் செய்தேன். ‘எவ்வளவு செலவானாலும்  பரவாயில்ல; நீங்க பெரிய பாடகரை வைச்சி பாடல்கள் பண்ணிக்கொடுங்க’னு இயக்குநரும் சொல்லியிருந்தார். அதனால, பிரபல பாடகர்களை வைச்சி பண்ணினேன். அதன் இயக்குநர் மோகன் செல்வகுரு சார். அவரும் நிறைய நம்பிக்கை அளிச்சார். அந்தப் படத்தின் ஆடியோ கூடிய விரைவில் வெளியாக இருக்கு.

எனக்கு 2018ல் திருமணமாச்சு. மனைவி சேலத்தில் ஹோமியோபதி டாக்டராக இருக்காங்க. இதுக்கிடையில் முதல் படம் தாமதமானதால் நான் துபாய்ல தமிழ் எஃப்எம்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க ஒவ்வொருவிதமா ரேடியோ ஜிங்கிள் பண்ணிக் கொடுத்தேன். காஃபி பத்தி வித்தியாசமா ஒரு ஜிங்கிள் பண்ணினேன். அது ரொம்ப ஃபேமஸ் ஆனது.
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பிபி சார் இந்த ஜிங்கிள் பாட்டை கேட்டு மகிழ்ந்தார். அவரே, ‘காஃபி சூப்பர்; பிரமாதம் பேஷ்பேஷ்’னு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைச்சார். அது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.

திருமணத்தையொட்டி சேலத்திற்கு வந்தப்பதான் புரொடியூசர் பிஜிஎஸ் சார் எனக்கு ‘லிவிங் டுகெதர்’ என்ற படத்தை இசையமைக்க கொடுத்தார். நானும் இசையமைத்து டியூன் கொடுத்தேன். அந்நேரம் கொரோனா வந்திடுச்சு. பிறகு அதே பிஜிஎஸ் சார் என்னை நம்பி மறுபடியும் கொடுத்த படம்தான் ‘3.6.9’. இதன் இயக்குநர் சிவமாதவ் சாரும் நம்பிக்கை கொடுத்தார்.

முதல்ல பின்னணி இசைக்குதான் கூப்பிட்டாங்க. பிறகு, தீம் மியூசிக் பண்ணிக்கொடுத்தேன். டைரக்டருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்புறம், ஒரு மேக்கிங் சாங் பண்ணுவோம்னு சொன்னாங்க. அடுத்து, வில்லனுக்கு ஒரு சாங் பண்ணலாமானு கேட்டாங்க. அப்படியாக பாடல்கள் பண்ணினேன்.

இந்தப் படத்துல பாலிவுட் ஃபேமஸ் சிங்கர் சிவம் சார் பாடியிருக்கார். எல்லா பாடல்களும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்ப ஆடியோ, டீஸர் எல்லாம் வெளியாகியிருக்கு.
இயக்குநர் சிவ மாதவ் சாரும், பிஜிஎஸ் சாரும் என்மேல் நம்பிக்கை வச்சு இந்த வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி சொல்லிக்கிறேன். இந்தப் படம் எனக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கித்தரும்னு நம்புறேன். இப்ப, ‘இடும்பன்காரி’னு ஒரு படத்துக்கு வொர்க் பண்ணிட்டு இருக்கேன். எதிர்காலத்துல சிறந்த இசையமைப்பாளரா வரணும் என்பதே என் கனவு...’’ என கண்களில் நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் கார்த்திக் ஹர்ஷா.  
 
ஆர்.சந்திரசேகர்