அரண்மனை குடும்பம்-46



குலசேகர ராஜா, கைலாச ராஜாவிடம் மாரப்ப வாத்தியார் பற்றி சொல்லச் சொல்ல கைலாச ராஜாவும் சரி கஸ்தூரியும் சரி இமைக்கக் கூட மறந்து போனார்கள். அந்த வசிய மருந்துக்கு 20 கோடி ரூபாய் விலை என்பதை மட்டும் குலசேகர ராஜா, கைலாச ராஜாவிடம் சொல்லவில்லை. அது தேவையில்லாத பல கேள்விகளை எழுப்பும் என்பதால் அதை மட்டும் தவிர்த்து விட்டு நடந்தவைகளைக் கூறி முடிக்கவும் இருவரும் உறைந்தே போய் விட்டனர்.

“என்ன அத்தான்... நான் சொன்னதையெல்லாம் நம்ப முடியலியா, இல்ல... நான் எப்படியோ சாதிச்சிட்டேன்கற பிரமிப்பா...” என்கிற கேள்வியால் அவர்கள் இருவரையும் கலைக்கவும் செய்தார்.
“நீ இப்படி ஒரு வழில போவேன்னு நான் எதிர்பார்க்கல குலசேகரா... ஆமா... இப்பவும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்காங்களா?” என்று கைலாச ராஜாவும் கலைந்தார்.“என்ன அத்தான் நீங்க... டிவி பாக்கறீங்கதானே?”“பாக்காம..?”“அதுல குபேர விளக்கு, அதிர்ஷ்ட மோதிரம், வாஸ்து யந்திரம்னு எத்தனை விளம்பர நிகழ்ச்சிங்க... பாத்துருக்கீங்க
தானே?”“அதுக்கென்ன..?”

“என்ன அத்தான் அதுக்கென்னன்னு கேக்கறீங்க..? அதுலயே இப்ப மலையாள பிரசன்னம் பாத்து பலன் சொல்றதும் வந்துடுச்சி. நீங்க வீட்ல இருந்துகிட்டே போன்ல உங்க பிரச்னையை சொன்னா போதும். உடனே சோழி குலுக்கிப் போட்டு பார்த்து உங்களுக்கு பலன் சொல்லிட்றாங்க...”“புளுகற கூட்டம் டிவியையும் விடலன்னு சொல்லு...”“அதை நம்பவும் ஆட்கள் இருக்கறதுதானே இதுக்கு காரணம்?”“நீ எப்படி இவனை நம்பினே?”

“நம்பவெச்சானே அத்தான்... இதோ ஆளானப்பட்ட நம்ப கணேஷே மனம் மாறிட்டத பாக்கறோமே..?”
“அங்கதான் எனக்கும் இடிக்குது... இதை எப்படி எடுத்துக்கறதுன்னே தெரியல எனக்கு...”
“அத்தான்... உங்க சந்தேகம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம கணேஷ் மனம் மாறி இருக்கற இந்த சமயத்தைப் பயன்படுத்தி இதை எப்படியாவது கல்யாணத்துல முடிச்சிடணும் அத்தான்...”
“கணேஷ் மாறிட்டா மட்டும் ஆச்சா... இந்த வடக்கத்திக் காரி சம்மதிக்க வேண்டாமா..?”

“இப்ப அதுதான் அத்தான் நம்ம முன்னால இருக்கற ஒரே விஷயம்...”
“இவனுக்கு மருந்த கொடுத்த மாதிரி அவளுக்கும் கொடுத்து நம்ம பேச்ச கேக்க வெக்க முடியாதா?”
“அதுக்கு நான் என்ன பண்ணணுமோ பண்றேன் அத்தான்...”
“எல்லாத்துக்கும் மேல இது வெளிய தெரிஞ்சா நம்ம கௌரவம் என்னாகும்னும் யோசிக்கணும்...”
“ஏன் தெரியணும்? எதுக்கு தெரியணும்..? நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் அத்தான்...”

“இதோ பார்... முதல் தாரம் விவாகரத்தானாலோ இல்லை இறந்து போய்ட்டாலோ இரண்டாம் தாரம்கறது பெரிய விஷயமாகாது. இங்க ரத்தியும் அவ குழந்தையும் உயிரோட இருக்காங்க. அத மனசுல வெச்சு பேசு...”“சரி அத்தான்... எல்லாத்துக்கும் தகுந்த மாதிரி நான் ஒரு வழிய கண்டு பிடிக்கறேன். அப்ப உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?”
“எனக்கென்ன ஆட்சேபணை... ஆனா, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிடக் கூடாது... ஞாபகம் வெச்சுக்கோ...”“சரி அத்தான் நான் பாத்துக்கறேன்...” குலசேகர ராஜா தற்காலிகமாக கைலாச ராஜாவை சமாளித்துவிட்டு நகர்ந்து மனைவி சுந்தரவல்லியிடம் வந்தார்.

“என்னங்க யோசனை?”
“அத்தான் நான் நினைச்ச மாதிரி ஸ்டெடியா இல்ல சுந்தரம்...”
“அப்படி என்ன சொல்லிட்டாரு?”“மஞ்சுவுக்கும் கணேசுக்கும் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அதனால கெட்ட பேர் வந்துடுமோன்னு பயப்பட்றார்...”
“சிலர் சிலமாதிரி பேசலாம்... அதுக்கெல்லாம் பார்த்தா முடியுமாங்க...”“எந்த பிரச்னையுமில்லாம அதே சமயம் முதல் முதலா இந்த கல்யாணம் நடந்தா எப்படி நடந்திருக்குமோ அப்படி நடக்கணும்னு ஆசைப்பட்ற மாதிரி தெரியுது...”“அது எப்படிங்க முடியும்?”
“முடியணும்... முடிக்கணும் சுந்தரம்...”
“அதான் எப்படிங்க..?”

“இப்ப என்ன எதுவும் கேட்காதே... போகப் போகப் பார்...”
“பாத்துங்க... இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு திரும்ப கிடைக்காது...”
“தெரியும் சுந்தரம்...” என்ற குலசேகரர் அடுத்து மஞ்சுவுக்குத்தான் போன் செய்தார்.
அவளும் லைனில் வந்தாள். “அப்பா...”

“எங்கம்மா இருக்கே... பேசலாமா?”
“தியேட்டர்ல படம் பாத்துகிட்டிருக்கேன்பா... என்னப்பா திடீர்னு..?”
“கணேஷ் கூட இருக்கானா?”
“ஆமாம்... என்ன விஷயம்பா..?”
“எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்குதானே?”
“நல்லா போய்க்கிட்டிருக்குன்னா... புரியல...”
“என்னம்மா நீ... கணேஷ் நல்லா பிரியமா இருக்கானா?”

“ஓ... அதுவா? சூப்பர்ப்பா. ஆனா, இப்ப எதுவும் பேச வேண்டாம். நான் வீட்டுக்கு வந்ததுக்குப் பிறகு விவரமா சொல்றேன்...”
“விட்றாதம்மா... அத சொல்லத்தான் கூப்பிட்டேன்...”“விட்டா உயிரை விடுவேன்... அத்தானை விட மாட்டேன். நீ போனை வை...”
அவள் சொன்ன விதம், அந்த உறுதி எல்லாமே குலசேகர ராஜா முகத்தில் ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிற்று. அதைப் பார்த்தபடியே இருந்த சுந்தரவல்லியும் “என்னங்க... என்ன சொல்றா நம்ம பொண்ணு...” என்றாள்.

‘‘எல்லாம் கரெக்டா போய்க்கிட்டிருக்கு சுந்தரம்... மஞ்சுவும் தெளிவா இருக்கா...”
“சரி அடுத்து என்ன பண்ணப் போறீங்க?”“இந்த வடநாட்டுக்காரியை கட்டிப் போடணும். இல்ல கதையை முடிக்கணும்...”
“பாத்துங்க... எத செஞ்சாலும் கவனமா செய்யுங்க...” சுந்தரவல்லியின் எச்சரிக்கையோடு புறப்பட்டார்!
சேர்வராயன் மலையின் முகட்டு மண்டப்பாறை குகைப் பகுதி.

குகைக்கு மேல் தட்டையான பாறை மேல் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர் போதி முத்துவும், ஜல்லியும்.
அப்போது போதி முத்துவின் செல்போனில் அமட்டல். நம்பரை பார்க்கவுமே “அந்த அரம்மணக்காரன்தான்...” என்றபடி காதில் வைத்தான் போதிமுத்து.
“நான்தான் பேசறேன்...”“தெரியுது தெரியுது... என்ன எல்லாம் நல்லபடி முடிஞ்சிச்சா?”

“கொடுக்க வேண்டியத கொடுத்துட்டோம்... அது எப்படி வேலை செய்யுதுன்னு இனி போகப் போகத்தான் தெரியும். அது போகட்டும்... நான் இப்ப வாத்யார் கூட பேசணுமே..?”
“கொஞ்சம் இருங்க... வாத்யார்கிட்ட தரேன்...” போதி எழுந்து குகைக்குள் எதையோ காய்ச்சிக் கொண்டிருந்த மாரப்ப வாத்யாரிடம் போனைக் கொடுத்தான்.
“சொல்லுய்யா பெரிய மனுஷா... மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு போல...”

“அது... அது... தெரியல. என் பொண்ணும், மருமகனும் வெளிய போயிருக்காங்க. வந்தாதான் தெரியும்...”
“நீ எமகாதகன்யா... எப்பவும் உள் கணக்கோடயே பேசறியே... சரி என்ன விசயம் சொல்லு...”
“என் மருமகன் மனசு மாறிட்டா ஆச்சா... அவன் பொண்டாட்டி வழி விட
ணும்ல?”

“ஓ... இப்ப உன் பிரச்னை அதுவா?”
“ஆரம்பத்துல இருந்தே அதானே என் பிரச்னை...”
“அதான் சொன்னேனே... புருஷன் போக்கு பிடிக்காம தற்கொலை பண்ணிக்கிட்டான்னு
விஷயத்தை முடின்னு...”
“அவ பண்ணிக்கணுமே..?”

“அப்ப அவ கதையை என்னக் கொண்டே முடிக்கச் சொல்றே... அது தற்கொலையாகவும் இருக்கணும்... அப்படித்தானே?”
“ஆமாம்... என் மருமகப் பிள்ளைக்கு மருந்து வெச்ச மாதிரி அவளுக்கும் ஏதாவது இருக்கும்ல..?”
“ஏன் இல்லாம... ஆனா, இதுக்கு தனி ரேட்டு...”

“இதோபார்... இவ சாகணும். என் மருமகன் என் மக கழுத்துல தாலிய கட்டணும். அதுக்காக நீ எவ்வளவு கேட்டாலும் தரேன். அவ சாக என்ன வழி?”
“ராத்திரி அன்னிக்கு மாதிரியே வழுக்குப் பாறைக்கு வா... எல்லாத்தையும் நேர்ல சொல்றேன்...”
போன் கட் ஆனது. குலசேகர ராஜா முகமும் பளிச்சென்று ஆனது!

(தொடரும்)

மண்ணாங்கட்டியார் முன்னால் அசோகமித்திரனிடம் ஒருவகை மௌனம். மௌனத்திற்கு பல பொருள் உண்டு. அதுதான் பெருஞ்சப்தம் என்பதும் அதில் ஒன்று. மௌனம் அதிகமாகும் போதுதான் ஒருவன் ஞானத்தை நோக்கி நகரத் தொடங்குகிறான்.புத்தனும் கேள்விகளாய் கேட்டான். போகிற வருகிறவர்களிடம் எல்லாமும் கேட்டான். எல்லோருமே தங்களுக்கு தெரிந்த பதிலை சொன்னார்கள். அந்த பதில்கள் அப்போதைக்கு ஏற்புடையதாகவும் இருந்தது.

குறிப்பாய் தாசி ஒருத்தியிடம் “உன் தொழில் இழி தொழில் அல்லவா?” என்று கேட்ட கேள்விக்கு அவள் அளித்த பதிலால் அயர்ந்தே போய் விட்டான் புத்தன்.“இது எப்படி இழி தொழில் ஆகும்..? நாம் கூடும்போது நீயும் மகிழ்கிறாய்... நானும் மகிழ்கிறேன்... இது உடல் நமக்கு அளித்திருக்கும் வாய்ப்பு. இதை பயன்படுத்தி மகிழத்தானே செய்தோம்? இதில் எது குறைந்து போனது... யாருக்கு இதனால் என்ன கேடு நேரிட்டது? ’’ என்ற அவள் கேள்வி புத்தனை லேசாக கட்டிப் போட்டது.

“நான் மகிழ்ச்சியை வாரி வழங்குபவள்... இந்த மகிழ்ச்சியும் நாம் வாழ்நாள் முழுக்க அனுபவித்திட கிடைக்காது. இளமையில்தான் இதனை அனுபவித்து துய்க்க முடியும். இந்த தருணத்தை விட்டு விடுவதா புத்திசாலித்தனம்! புத்தி எதற்கு உள்ளது..? நம்மை நாம் சந்தோஷமாக வைத்துக் கொள்ளத்தானே?”என்கிற அவளின் அடுத்த கேள்வி புத்தனை மேலும் கட்டிப் போட்டாலும் ஒரு கேள்வி எழாமல் இல்லை.“அப்படியானால் இந்த உலகம் எதனால் இத்தனை மகிழ்வு தரும் உங்களை வேசி என்று இகழ்கிறது?” என்கிற கேள்விதான் அது.

“அது உடல் தளர்ந்தவர்கள் சொல்வது... பொறாமையும் ஆத்திரமும் அதன் பின்னால் உள்ளது. அதை பொருட்படுத்தக் கூடாது. உலகில் எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்தும் இருக்கும். இதை புரிந்து கொண்டு அப்படிப்பட்ட கருத்துடையவர்களைக் கடந்துவிட வேண்டும்...” அந்த தாசி புத்தரை அன்று முற்றாக கட்டிப் போட்டு விட்டாள். புத்தரும் ‘காமம் பிழையில்லை, அது ஒரு வாய்ப்பு’ என்று அன்று நம்பத் தொடங்கினார். ஆனால், தன் நெடிய யாத்திரையில் தாய், தந்தை யார் என்றே தெரியாத ஒரு வாலிபனைச் சந்தித்தபோதுதான் காமம் கட்டுப்பாடின்றிப் போனால் அது உயிர்ப்பிழையில் முடியும் என்பது புரிந்தது.

“என் தாய் ஒரு விபச்சாரி... நான் யாருடைய உறவால் பிறந்தேன் என்பதே அவளுக்குத் தெரியவில்லை. இனியும் எனக்கு அது தெரியப் போவதில்லை. நான் அடையாளங்கள் அற்றவன். விலங்குக்கு ஒப்பானவன். ஆனால், தோற்றத்தில் மனிதன்...” என்று அவன் கூறியது புத்தரைக் குத்திக் கிழித்து விட்டது.அப்போதுதான் உண்மை என்பது தீச்சுடர் போன்றது என்பதும், மின்னுவதெல்லாம் உண்மையில்லை என்பதும் புத்தருக்கு புரிந்தது.அசோகமித்திரனுக்குள்ளும் அப்போது, தான் படித்த புத்தன் குறித்த சிந்தனைதான்!
தானும் புத்தனைப் போலவே உண்மைகளை அறிந்திட அல்லல்படுவது போலத் தோன்றிற்று.

“என்ன... என் பதில் உன்னை புத்தனை சிந்திக்க வெச்சிடிச்சா?” என்று இடைவெட்டி சரியாகக் கேட்டார் மண்ணாங்கட்டியார்.“ஆமாம் சாமி... உங்க கேள்வி எனக்கு பல கேள்விகளை எழுப்பிடிச்சு. என் எல்லா அனுபவங்களையும் நான் யாருக்கும் நிரூபிக்க முடியாது. அது எனக்கு மட்டுமேயானது...”
“இதுதான் முடிவான உண்மை... அது உனக்குப் புரிஞ்சா போதும். அப்புறம் எதையும் யாருக்கும் நிரூபிக்க நினைக்காதே. அது ஆணவம்...”
“தப்பா எடுத்துக்காதீங்க... அது எப்படி ஆணவமாகும்? உண்மை இதுதான்னு புரிய வைக்கற ஒரு செயல்தானே அது?”

“இப்படி நினைச்சுதான் நாம் தப்பு பண்றோம். எப்பவும் அனுபவங்களை மட்டும் யாருக்கும் புரிய வைக்கவே முடியாது. நிதர்சனங்கள் வேற, அனுபவம் வேற...”
“அப்ப இங்க உங்களாலயும் எனக்கு எதையும் புரியவைக்க முடியாதா?”“இப்பதான் நீ சரியான கேள்விய கேட்ருக்கே... பள்ளிக் கூடத்துல முதல்ல எண்ணையும் எழுத்தையும் சொல்லித் தருவாங்க... அப்புறமா பாடங்களை சொல்லித் தருவாங்க. அப்படி படிச்ச நம்ம படிப்புக்கும் வாழ்க்கைக்கும் நேரா ஏதாவது தொடர்பு உண்டா? இல்ல பாக்கற வேலைக்கும் அதற்கும்தான் ஏதாவது தொடர்பு உண்டா?”“அதனால..?”

“இங்க என் மூலமா நீ தெரிஞ்சிக்கப்போற விஷயங்களும் அப்படிதான். நான் உனக்கு கைதான் காட்டமுடியும். கை காட்டி மரம் மாதிரி. மரம் கூட வராது... நீ தான் போகணும்...”
“இப்படி நாம எவ்வளவு பேசினாலும் எனக்கு புரியப் போறதில்ல சாமி. தயவு செய்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. அது போதும்...”
அசோகமித்திரன் அலுப்போடு கேட்ட கேள்விக்கு சற்று சிரித்துவிட்டு “சரி கேள்...” என்றார் மண்ணாங்கட்டியார்.

“நீங்க இப்ப உயிரோட இருக்கறவரா... இல்ல நான் பாக்கற நீங்க யார்?”
“உன் கேள்வியை முதல்ல சரியா... தெளிவா கேள்...”“இதுக்கு மேல எப்படி கேக்கறது... தெரியலியே? எப்பவோ சமாதியாயிட்ட நீங்க எப்படி திரும்ப நடமாட முடியும்? நடமாட முடியும்னா சமாதியாகியிருக்க வாய்ப்பில்ல... இந்த கருத்தைத்தான் மணிமொழியனார் சொன்னார்...”“உன்னப் போலவே தேடல் கொண்ட ஒருத்தர்தானே அவர்?”“ஆமாம்... நான் இப்ப உங்ககிட்ட பேச காரணமும் அவர்தான்...”“ஆக இரண்டுபேரும் சேர்ந்து என்ன ஆராயத் தொடங்கிட்டீங்க... அப்படித்தானே?”
“ஆமாம் சாமி... நீங்கதான் தெளிவான புரிதலைத் தரணும்...”

“நீ தட்சிணாமூர்த்தி விக்ரகத்தை பாத்துருக்கியா?”
“ம்...”“அந்த சிலைல தட்சிணாமூர்த்தி சிலைக்குக் கீழ நாலுபேர் இருப்பாங்க... பாத்துருக்கதானே?”
“ம்...”“அவங்க யார் தெரியுமா?”“சனகாதியர்கள்... அதாவது பிரம்மாவோட பிள்ளைகள்னு கேள்விப்பட்டிருக்கேன்...”

“அவங்க ஏன் தட்சிணாமூர்த்தியான சிவபெருமான்கிட்ட போனாங்கன்னு தெரியுமா?”“புராணங்கள்ல எனக்கு பெருசா ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்ல. அதனால எனக்கு அதைப்பற்றி பெருசா தெரியாது...”“நல்லது... நான் சொல்றேன் இப்ப... கேட்டுக்கோ. அது ஒரு ஞானோபதேச காட்சி. சனகாதியர்கள் அங்க மாணவர்கள். சிவன்தான் குரு. சிவன் சின் முத்திரை காட்டி மௌனமா உபதேசம் செய்யறார். நல்லா கேட்டுக்கோ... பேசி இல்ல... மௌனத்தால. ஏன் தெரியுமா..?”

மண்ணாங்கட்டியார் கேட்க, அசோகமித்திரன்
“தெரியல... நீங்களே சொல்லிடுங்க...” என்றார்.
“சொல்லி புரியவைக்க முடியாது. அதனாலதான் மௌனம்...”
“சொல்லியே புரியாதது மெளனத்தால புரிஞ்சிடுமா..?”

“உனக்கு அது போகப் போகப் புரியும் பார்...”
“எப்படி கேட்டாலும், எவ்வளவு பேசினாலும் இப்படியே
பதில் சொன்னா எப்படி சாமி?”

“சரி... நீ இனி அனுபவங்களுக்கு தயாராகு. அதுக்கு உன் உடம்பும் தயாராகணும். ஆனா, அது தயாராகணும்னா என் ஆயுள் உனக்கு தேவை. அதுக்கு இப்ப காலமில்ல. நான் என் சக்தியை உனக்கு தரேன். இனி நீ சாமான்ய அசோகமித்திரனில்ல... மண்ணாங்கட்டி அசோகமித்திரன்!” என்று எழுந்த மண்ணாங்கட்டியார், அசோகமித்திரன் தலைமேல் தன் ஒரு காலைத் தூக்கி வைத்தார்!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி