கோல்ட் வுமன்ஸ்..!



சமீபத்தில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து முடிந்தது. இதில், 12 பதக்கங்களைத் தட்டி வாகைசூடியிருக்கிறது இந்தியா.
63 கிலோ எடைப் பிரிவில் பர்வீன் ஹூடாவும், 75 கிலோ பிரிவில் லவ்லினா போர்ஹோகைனும், 81 கிலோ பிரிவில் சாவீட்டி பூராவும், 81 ப்ளஸ் கிலோ எடைப் பிரிவில் அல்ஃபியா பதானும் தங்கம் தட்டிய வீராங்கனைகளாக ஜொலிக்கின்றனர். 12 பதக்கங்களில் கிடைத்த நான்கு தங்கப்பதக்கமும் இந்தத் தங்கங்கள் தட்டியவைதான்.

லவ்லினா போர்ஹோகைன்

அசாம் மாநிலம் கோலாகாட் நகரைச் சேர்ந்த லவ்லினா, கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றவர். அசாம் மாநிலத்திலிருந்து ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற பெயரைப் பெற்றவர். கடந்த 2020ல் இந்திய அரசின் உயரிய அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் கிக்பாக்ஸிங்கில்தான் பயிற்சியெடுத்தார் லவ்லினா. காரணம், இவரின் இரு சகோதரிகளும் கிக்பாக்ஸிங் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. சகோதரிகளைப் பார்த்து கிக்பாக்ஸிங்கில் நுழைந்தவர் பிறகு தன் கேரியரை பாக்ஸிங் நோக்கி திருப்பினார். அதற்கு இவரின் பயிற்சியாளர் பதும்போரோ சப்போர்ட்டாக இருந்து சிறந்த பயிற்சி அளித்தார். 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இப்போது 75 கிலோ எடைப் பிரிவுக்கு மாறி தங்கம் வென்று சாதித்திருக்கிறார்.

பர்வீன் ஹூடா

இருபத்திரெண்டு வயதே நிரம்பிய பர்வீன் அரியானா மாநிலத்தின் ரூர்க்கி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்று உலகளவில் முத்திரை பதித்திருக்கிறார். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட பர்வீனின் குடும்பம் வறுமையானது. இதனால், அவரின் பாக்ஸிங் கனவு கானல்நீர் என்றே நினைத்து வந்தார்.
இந்நேரம், அந்த ஊரைச் சேர்ந்த சுதிர் ஹூடா என்பவர் தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும், வேலையின்மையால் கஷ்டப்படுவதும் கண்டு ஹேண்ட்பால் மற்றும் பாக்ஸிங் மட்டும் கற்றுத் தரும் ஒரு ஸ்போர்ட்ஸ் அகடமியைத் தொடங்கினார்.

அது பர்வீனுக்கு சாதகமானதாக மாற, அங்கிருந்து தன் பயிற்சியைத் தொடங்கினார் பர்வீன். கடும் பயிற்சிக்குப் பிறகு 2018ல் நடந்த தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்குச் சென்றார். அதில் அவர் தகுதிபெறவில்லை. இந்நிலையில் 2019ல் இன்னும் தீவிர பயிற்சியுடன் களம் கண்ட பர்வீன், தெற்காசிய போட்டியில் தங்கம் வென்றார். பிறகு, கடந்த மே மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் தட்டினார்.

இப்போது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். ‘‘அடுத்து காமன்வெல்த் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என் இலக்கு...’’ என நம்பிக்கை மிளிரச் சொல்கிறார் பர்வீன் ஹூடா.

சவீட்டி பூரா

அரியானாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை சவீட்டி பூரா. அங்குள்ள ஹிசார் நகரைச் சேர்ந்தவர். உண்மையில் சவீட்டி தேசியளவிலான கபடி வீராங்கனை. தந்தையின் ஆசைக்காக பாக்ஸிங்கிற்கு மாறினார். அதற்கு காரணமும் இருக்கிறது. பள்ளியில் இவர் அவ்வளவாகப் பேசமாட்டாராம். கையாள முடியாத சூழலில் அவரின் கை அதிகம் பேசுமாம். அதனாேலயே தந்தை பாக்ஸிங் போகச் சொன்னதாகச் சொல்கிறார் சவீட்டி பூரா.

2009ல் பயிற்சியைத் தொடங்கியவர் அடுத்த 15 நாட்களில் மாநிலத்திற்காக தங்கப் பதக்கம் வென்று தந்திருக்கிறார். பிறகு அடுத்த 30 நாட்களில் தேசிய அளவு போட்டிக்குச் சென்றுவிட்டார்.
2011, 2012ம் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான யூத் போட்டிகளில் தங்கம் வென்று அசத்திய இந்திய பாக்ஸிங் வீராங்கனைகளில் ஒருவராக ஜொலிக்கத் தொடங்கினார். 2014ல் டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார் சவீட்டி.

பிறகு, 2021ல் துபாயில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றும், அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், கோபமான சவீட்டி இனி கபடிக்கே போய்விடலாம் என முடிவெடுத்தார். ‘‘தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று ஒலிம்பிக் போகவேண்டும் என்பதே அனைவரின் கனவாக இருக்கும். அப்படியிருக்கையில் ஒலிம்பிக் போகத் தகுதியில்லை என்னும்போது என்ன செய்ய?’’ என்றவர், இப்போது ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கத்துடன் நிற்கிறார்.

2024 ஒலிம்பிக் கனவுடன் உள்ள சவீட்டி பூரா அதற்கான பயிற்சியிலும் இறங்கிவிட்டார். இப்போது அவர் அப்பா மட்டுமல்ல. அவரின் கணவரும், இந்திய கபடி அணியின் கேப்டனுமான தீபக் ஹூடாவும் உத்வேகம் அளித்து வருகிறார்கள்.

அல்ஃபியா பதான்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் மகாராஷ்டிரா பெண் என்கிற பெயரைப் பெற்றுள்ளார் அல்ஃபியா பதான். அதுவும் தங்கப் பதக்கம். நாக்பூரைச் சேர்ந்த பத்தொன்பது வயதே ஆன இவர் 81 ப்ளஸ் பிரிவில் இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.

2017ல்தான் குத்துச்சண்டை விளையாட்டிற்குள் நுழைந்தார் அல்ஃபியா. இவரின் தந்தை அக்ரம்கான் நாக்பூரில் காவல் உதவி ஆய்வாளராக இருக்கிறார். இரண்டு சகோதரர்களில் ஒருவர் எறிபந்திலும் மற்றொருவர் குத்துச்சண்டையிலும் தேசிய அளவில் விளையாடி பதக்கங்கள் வென்றவர்கள்.  

ஆனால், இதைவிட 2014ல் வெளியான குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் பயோபிக் திரைப்படம்தான் அல்ஃபியாவிற்கு குத்துச்சண்டை விளையாட்டுக்குள் வர உத்வேகம் அளித்திருக்கிறது. பயிற்சியெடுத்து மாநில, தேசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார். 2018ல் செர்பியாவில் நடந்த ஜூனியர் வுமன் நேஷன்ஸ் கப்தான் இவர் கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டி. இதில், வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைதேடித் தந்தார்.

2019ல் நடந்த ஏஎஸ்பிசி ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இப்போது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் தட்டி வந்திருக்கிறார். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்து 2023ல் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதே என் கனவு...’’ என்கிறார் அல்ஃபியா பதான்.

பேராச்சி கண்ணன்