உலக அரசியலைக் கலக்கும் இந்தியர்கள்!



‘என்னதான் செய்றாய்ங்கன்னே தெரியலப்பா இந்த இந்தியன்ஸ்... அங்கங்க பிரான்ச் ஓபன் பண்ணி உலக அரசியல்ல புகுந்து விளையாடுறானுங்க...’இதுதான் உலக அரசியல்வாதிகள், தத்துவ அறிஞர்களின் ஏகோபித்த டீ டைம் சாட்டாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினர் அரசியலில் ஒரு புரட்சியே செய்துவருகிறார்கள்.

சமீபத்தில் மட்டும் கமலா ஹாரிஸ், ரிஷி சுனக்... இதோ அருணா மில்லர்... என இந்த லிஸ்ட் இங்கே ஆரம்பிக்கவில்லை. இப்படி உலக அரசியலில் மாஸ் காட்டிய இந்தியர்கள் லிஸ்ட் நீளம். 100க்கும் அதிகமான இந்திய வம்சாவளி அயல்நாட்டு அரசியல்வாதிகள் இருக்க, அதில் முக்கிய லேட்டஸ்ட் 15 நபர்களின் பயோடேட்டா இதோ...

ரிஷி சுனக் (Rishi Sunak)

25 அக்டோபர் 2022 முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரதமராகவும், 24 அக்டோபர் 2022 முதல் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் அரசியல்வாதி. 2015 முதல் ரிச்மண்ட் (யார்க்ஸ்) நாடாளுமன்ற உறுப்பினராக (MP) ரிஷி சுனக் இருந்து வருகிறார்.குடும்பம்: சவுத்தாம்டனில் பிறந்தவர் ரிஷி சுனக். 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தார். ஆப்பிரிக்க - இந்திய பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிஷி என சுருக்கமாக சொல்லலாம்.

இர்ஃபான் அலி (Mohamed Irfaan Ali )

கயானாவின் (Guyana) முதல் முஸ்லீம் ஜனாதிபதி இர்ஃபான் அலிதான். மார்ச் 2020 பொதுத் தேர்தலில் மக்கள் முன்னேற்றக் கட்சி / சிவிக்-கின் (PPP/C) ஜனாதிபதி வேட்பாளராவதற்கு முன்பு அலி பாராளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் வீட்டுவசதி அமைச்சராகவும் இருந்தார். அவர் கயானாவின் 10வது அதிபராக ஆகஸ்ட் 2, 2020 அன்று பதவியேற்றார்.
குடும்பம்: அலி கயானாவின் லியோனோரா என்கிற கிராமத்தில் இந்திய - கயானீஸ் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர்.

அண்டோனியோ கோஸ்டா (Antonio Luis Santos da Costa)

2015ல் தொடங்கி இப்போது வரை போர்ச்சுகல் நாட்டின் 119வது பிரதமராக பணியாற்றி வருகிறார் அண்டோனியோ கோஸ்டா. முன்னதாக அவர் 1995 முதல் 1997 வரை நாடாளுமன்ற செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை நாடாளுமன்ற அமைச்சராகவும், 1999 முதல் 2002 வரை நீதி அமைச்சராகவும், 2005 முதல் 2007 வரை உள் நிர்வாக அமைச்சராகவும், 2007 முதல் 2015 வரை லிஸ்பன் மேயராகவும் இருந்தவர்.

செப்டம்பர் 2014 ல் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதுவரை போர்ச்சுகலின் பிரதமர் இவர்தான்.குடும்பம்: கோவாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோஸ்டா 1961ல் போர்ச்சுகல், லிஸ்பனில் பிறந்தவர். எழுத்தாளர் ஆர்லாண்டோ டா கோஸ்டா மற்றும் பத்திரிகையாளர் மரியா அன்டோனியா பல்லா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்.

கோஸ்டா பாதி போர்த்துகீசியம் மற்றும் பாதி இந்தியன். அவரது தந்தை ஆர்லாண்டோ, கோவாவைச் சேர்ந்த இந்தியருக்குப் பிறந்தவர்.

கமலா ஹாரிஸ் (Kamala Devi Harris)

அமெரிக்காவின் 49வது துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், வழக்கறிஞரும் கூட. அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவர் மற்றும் அமெரிக்க வரலாற்றில் மிக உயர்ந்த இந்திய வம்சாவளி பெண் அதிகாரி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அதேபோல் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க துணைத் தலைவரும் இவரேதான்.

குடும்பம்: கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். அவரது தாயார் ஷியாமளா கோபாலன், இந்திய உயிரியலாளர். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 1958ல் 19 வயது மாணவியாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கால்பதித்தவர். அங்கேயே மருத்துவர் பட்டமும் பெற்றார். அப்பா டொனால்ட் ஜே. ஹாரிஸ், பிரிட்டிஷ் புரொஃபசர். ஜமைக்காவில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவில் செட்டில் ஆனவர்.

பிரவிந்த் குமார் ஜுக்நாத் (Pravind Kumar Jugnauth)

ஜனவரி 2017 முதல் மொரீஷியஸின் பிரதமராக பிரவிந்த் குமார் ஜுக்நாத்தான் பொறுப்பில் இருக்கிறார். ஏப்ரல் 2003 முதல் சோசலிஸ்ட் இயக்கம் (MSM) கட்சியின் தலைவராகவும் ஜுக்நாத் அங்கே மாஸ் காட்டி வருகிறார். பல அமைச்சர் பதவிகள், அரசியல் பொறுப்புகளைக் கடந்து எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

குடும்பம்: 1961ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மொரீஷியஸில் பிறந்த ஜுக்நாத், ஒரு இந்து யதுவன்ஷி குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா வழக்கு ஆலோசகர் / வழக்கறிஞர். பெயர், அனரூத் ஜுக்நாத். அம்மா, சரோஜினி பல்லா. பள்ளி ஆசிரியையாக இருந்தவர். பல தலைமுறைகளுக்கு முன்பே மொரீஷியஸில் செட்டில் ஆன இந்திய இந்துக் குடும்பம்.

சன் சந்தோகி (Chandrikapersad ‘Chan’ Santokhi )

2020ம் ஆண்டு முதல் சுரிநாம் நாட்டின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் சன் சந்தோகி. முன்னாள் காவல்துறை அதிகாரியாக இருந்த சந்தோகி 2020 தேர்தலின்போது ஜனாதிபதி பதவிக்கு அவர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டார். ஜூலை 13 அன்று, போட்டியின்றி நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சந்தோகிக்கு உண்டு.

குடும்பம்: சந்தோகி சுரிநாமில் உள்ள வனிகா மாவட்டத்தில் இந்திய சுரினாமிஸ் இந்து குடும்பத்தில் பிறந்தவர். அடித்தட்டில் இருந்து வந்த சந்தோகியின் பெற்றோருக்கு அவருடன் சேர்ந்து ஒன்பது குழந்தைகள். அவரது தந்தை பரமரிபோ துறைமுகத்திலும் தாயார் லெலிடோர்ப்பில் ஒரு கடையில் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

லியோ எரிக் வரத்கர்  (Leo Eric Varadkar)

ஐரிஷ் ஃபைன் கேல் அரசியல்வாதி என லியோ எரிக் வரத்கரை சொல்லலாம். அவர் 2017 முதல் 2020 வரை Taoiseach மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர். ஜூன் 2020 முதல் தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக Tanais te மற்றும் அமைச்சராக பணியாற்றுகிறார்.

குடும்பம்: 18 ஜனவரி 1979ல், அயர்லாந்து, டப்ளின் மாகாணத்தில் பிறந்தவர். அப்பா அசோக் மற்றும் அம்மா மிரியம் (நீ ஹோவெல்). அவரது தந்தை அசோக் இந்தியாவிலுள்ள பம்பாயில் (இப்போது மும்பை) பிறந்தவர். 1960களில் மருத்துவராக அசோக்குக்கு பணி கிடைக்க அயர்லாந்தில் செட்டிலானார்.

அலோக் ஷர்மா (Alok Sharma)

2021 - 2022 வரை COP 26-இன் (The 2021 United Nations Climate Change Conference) தலைவராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதிதான் அலோக் ஷர்மா. COP26ல் கிடைத்த பொறுப்பை முன்னிட்டு வணிகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை உத்திக்கான தனது முந்தைய பதவியை ராஜினாமா செய்தவர். அமைச்சரவை அலுவலகத்திற்கான மாநில அமைச்சராகவும் இப்போது பொறுப்பில் இருக்கிறார்.  

குடும்பம்: ஷர்மா, உத்தரப்பிரதேசம் ஆக்ராவில் பிறந்தவர். ஐந்து வயதாக இருந்தபோது தனது பெற்றோருடன் தென்கிழக்கு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கே ஷர்மாவின் தந்தை பிரேம், பெர்க்‌ஷயர் பகுதியில் ரீடிங் நகரத்தின் பழமையான அரசியல் தலைவராக இருந்து அங்கே இருந்த இந்திய நண்பர்களை ஒன்றிணைத்தார்.

காசிவிஸ்வநாதன் சண்முகம்  (Kasiviswanathan Shanmugam)

சிங்கப்பூர் அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞரான கே. சண்முகம், 2008 முதல் சட்ட அமைச்சராகவும், 2015 முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றுகிறார். சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர். 2011 - 2015ம் ஆண்டுகளில் வெளியுறவுத் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

குடும்பம்: அவர் பெயரே அடையாளம். புலம்பெயர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர். அடிக்கடி இந்துத்துவக் கோட்பாடுகளால் விவாதங்கள், சர்ச்சைகள் என சிக்குவதும் அதிகம். போப் குறித்து சர்ச்சையான கருத்துக் கூறி உலக அளவில் பிரேக்கிங் செய்திகளிலும் அடிபட்டவர்.

ஹர்ஜித் சிங் சஜ்ஜன்  (Harjit Singh Sajjan)

கனடா அரசியல்வாதி. அக்டோபர் 26, 2021 முதல் சர்வதேச வளர்ச்சி அமைச்சராக பணியாற்றியவர். ஹர்ஜித் சிங் சஜ்ஜன்தான் கனடாவின் முதல் சீக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சர். இவர் கனடா ராணுவ ரிசர்வ் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய முதல் சீக்கிய - கனடியரும் கூட.

குடும்பம்: பஞ்சாப், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்பேலி கிராமத்தில் பிறந்தவர் சஜ்ஜன். அவரது தந்தை, குந்தன் சஜ்ஜன், பஞ்சாப் காவல்துறையில் தலைமை கான்ஸ்டபிளாகப் பணியாற்றியவர். இப்போது உலக சீக்கிய அமைப்பில் (WSO), சீக்கிய வழக்கறிஞர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.

அனிதா ஆனந்த் (Anita Anand)

கனடா வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி. 2021 முதல் கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றுகிறார். 2019 ஃபெடரல் தேர்தலில் இருந்து, லிபரல் கட்சியின் உறுப்பினராகவும் பொறுப்பில் இருக்கிறார்.குடும்பம்: அனிதா ஆனந்தின் முழுப் பெயர் இந்திரா அனிதா ஆனந்த். கனடா நோவா ஸ்கோடியாவில் பிறந்தவர். அவரது பெற்றோர் இருவரும் இந்திய மருத்துவர்கள். அம்மா மறைந்த சரோஜ் டி. ராம், புகழ் பெற்ற மயக்க மருந்து நிபுணர். அவரது தந்தை எஸ்.வி.ஆனந்த், பொது அறுவை சிகிச்சை நிபுணர். இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்.

பிரீத்தி படேல்  (Priti Patel)

2019 முதல் 2022 வரை உள்துறைச் செயலாளராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதி. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான பிரீத்தி, 2016, 2017ல் சர்வதேச வளர்ச்சிக்கான மாநில செயலாளராக இருந்தவர். 2010 முதல் விதம் (Witham) நகரின் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) இருந்து வருகிறார்.

குடும்பம்: அப்பா சுஷில் மற்றும் அம்மா அஞ்சனா. அவரது தந்தைவழி தாத்தா, பாட்டி குஜராத்தில் பிறந்தவர்கள்; உகாண்டாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். கம்பாலாவில் தொழில் செய்தவர்கள். 1960களில், பிரீத்தியின் பெற்றோர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் குடியேறியவர்கள்.

பிரியங்கா ராதாகிருஷ்ணன்  (Priyanca Radhakrishnan)

2017 பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் பிரதிநிதியாக நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என பிரியங்கா ராதாகிருஷ்ணனை சொல்லலாம். இப்போது நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கிறார். கண்டிப்பும், சமூகப் புரட்சியும் தாங்கி நிற்கும் தைரியமான பெண் என்பது இவரது அடையாளம்.  

குடும்பம்: சென்னை மலையாள நாயர் பெற்றோருக்குப் பிறந்தவர் பிரியங்கா. அவரது முப்பாட்டனார் டாக்டர் சி.ஆர்.கிருஷ்ணா பிள்ளை, இந்தியாவின் இடதுசாரி அரசியலில் தொடர்புடையவர். கேரள மாநிலம் உருவானதில் இவரது முப்பாட்டனார் முக்கியப் பங்கு வகித்தார்.

பிரவீன் ஜம்னாதாஸ் கோர்தான்  (Pravin Jamnadas Gordhan)

தென்னாப்பிரிக்க அமைச்சரவையில் ஏராளமான அமைச்சர் பதவிகளை வகித்த அரசியல்வாதி மற்றும் நிறவெறியை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சியாளர் என்ற அடையாளம் பிரவீன் ஜம்னாதாஸ் கோர்தானுக்கு உண்டு. குடும்பம்: இந்திய - தென்னாப்பிரிக்கரான பிரவீன் நேரடியாகவே 1971ல் நடால் இந்திய காங்கிரஸின் (NIC) உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து அதன் செயல்பாட்டில் பணியாற்றியவர். 1974ல் அதன் நிர்வாகக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ல் பத்மபூஷண் விருது வாங்கிய இந்திய - தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

அருணா மில்லர் (Aruna Miller)

அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை. ஆம். அமெரிக்காவின் தலைநகரை ஒட்டியிருக்கும் மேரிலேண்ட் மாநிலத்தின் லெப்டினன்ட் கவர்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அருணா.குடும்பம்: ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தவர் அருணா மில்லர். அருணா ஏழு வயதாக இருந்தபோது அவர் குடும்பம் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது. அங்கே அவர் அப்பா ஐபிஎம் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராகப்  பணியாற்றினார்.

இது இப்போது பொறுப்புகளில் இருப்பவர்களின் பட்டியல் மட்டுமே. இந்தப் பட்டியலிலும் விடுபட்டவர்கள் ஏராளம். ஆனால், 100க்கும் மேலான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய அரசியல் பொறுப்புகளில் அங்கம் வகிக்கிறார்கள். புரட்சிகள், ஆளுமை என கட்டம் கட்டி விளையாடுகிறார்கள்.

ஷாலினி நியூட்டன்