இந்தியா அழகான நாடு... தமிழ் அழகான மொழி! கண்சிமிட்டுகிறார் பிரின்ஸஸ் மரியா



‘பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிளாப்பி...’ என நடனமாடி தமிழகத்தை ஒரு புரட்டுப் புரட்டி எடுத்துவிட்டு சென்றிருக்கிறது அந்த உக்ரைன் நாட்டுப் புயல். உக்ரைன் நாட்டு தக்காளியே, எங்கள் பப்பாளியே என கவிதையே எழுதும் அளவுக்கு மரியா ரியாபோஷப்காவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.  அந்த அளவுக்கு ஒரே படத்தில் பொண்ணுக்கு ஏகோபித்த மவுசு. ‘அன்பே மரியா...’ என நாம் தட்டிய மெயிலுக்கு ‘ஹலோ...’ என பதில் மெயில் வர மனதில் வைத்திருந்த அத்தனை கேள்விகளையும் கேட்டு விட்டோம்.சொல்லுங்க...சொல்லுங்க...சொல்லுங்க... நீங்க யாருங்க..?

எனக்கு சொந்த ஊர் உக்ரைன், மரியுபோல் (Mariupol). யுத்தம் தொடங்கறதுக்கு முன்னாடி வரைக்கும் உக்ரைன் தலைநகரம் கீவில்(Kyiv)தான் இருந்தேன். உக்ரைன் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படிச்சேன். இது தவிர முறைப்படி நடிப்புக்கும் பயிற்சிகள் எடுத்திருக்கேன்.

தமிழ் சினிமா கதவைத் தட்டியது எப்படி?

‘ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ (Special Ops 1.5: The Himmat Story, 2021 வெப்சீரிஸ்) புராஜெக்ட்டுக்குப் பிறகு திரும்பவும் இந்தியாவில் ஒரு நல்ல வெப் சீரிஸோ, படமோ கிடைச்சா நடிக்கணும்னு காத்திருந்தேன். ‘ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ பாத்துட்டு ‘பிரின்ஸ்’ டீம் என்னை கூப்பிட்டாங்க. இந்த படம்தான் வேணும்னு காத்திருந்த காரணத்தினாலேயே நானும் என் மானேஜரும் அடுத்தடுத்த புராஜெக்ட் விஷயமா பேசறதையே நிறுத்திட்டோம். முழுக்க முழுக்க ‘பிரின்ஸ்’ படத்துக்காகவும் அந்த கேரக்டருக்காகவும் காத்திருந்தேன். நினைச்ச மாதிரியே நான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைச்சது.

இதுக்கு முன்னாடி தமிழ் சினிமா குறித்து கேள்விப்பட்டதுண்டா... ஏதேனும் படம் பார்த்திருக்கீங்களா?

ஃபிளைட்ல ஏறின உடனேயே நான் பார்த்த முதல் படம் தமிழ்ப் படம் ‘வாழ்’. அதுவும் என்னுடைய கோ-ஸ்டார் சிவகார்த்திகேயன் தயாரிப்பிலே உருவான படம்தான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. இப்ப நிறைய இந்திய படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கிறேன். தொடர்ந்து இந்திய சினிமாவில் வேலை செய்யவும் காத்துட்டிருக்கேன். இப்பவும் ஃபேவரைட் சாய்ஸ்ல ‘3 இடியட்ஸ்’ படம் இருக்கு.

உங்க நாட்டைப்பற்றி சொல்லுங்களேன்! நான் ஒரு உக்ரேனியன்னு சொல்றதுக்கு ரொம்பவே பெருமைப்படுறேன். எங்களுடைய வாழ்க்கை முறையே இயற்கையும் இயற்கை சார்ந்ததுமாதான் இருக்கும். எங்க கடவுள்கள் கூட சூரிய கடவுள், காடுகளின் கடவுள்னு இருப்பாங்க. யெஸ். இயற்கையை கடவுள்களா வழிபடற மக்கள் நாங்க. ரொம்பவே பழமையான கலாசாரம், கதைகள், வரலாறு... இப்படி எங்க மக்கள்கிட்ட நிறையவே இருக்கு. நிறைய திறமையான மனுஷங்களும் இருக்காங்க.

ஆனா, இந்த ஒரு போர் காரணத்தால் அத்தனையும் நிலைகுலைஞ்சு கிடக்கு. 1990 வரைக்கும் சோவியத் யூனியனா இருந்தோம். 1991ல்தான் சுதந்திரம் அடைஞ்சோம். அந்த சுதந்திரத்தை முழுசா கொண்டாடுறதுக்குள்ள அடுத்த போரும் ஆரம்பிச்சிடுச்சு. இதனாலேயே சினிமா, கலை... இப்படி நிறைய விஷயங்கள்ல எங்களால பெரிய அளவில் முன்னேற முடியல. சினிமாவும் கூட அதிகமாக எங்களுடைய வாழ்வியல், போர், அதனால் மக்கள் படுகிற துன்பம், அதைச் சார்ந்த படங்கள், கதைகள்... இப்படித்தான் வருது. அதிலே பெரும்பாலும் சோகம்தான் இருக்கும். இந்த நிலை சீக்கிரம் மாறணும்.

தமிழ் சினிமாவில் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?

என்னை ரொம்ப கவனமா பார்த்துக்கிட்டாங்க. குறிப்பா ‘பிரின்ஸ்’ ஹீரோ சிவகார்த்திகேயன் பக்கா ப்ரொஃபஷனல். வேலைன்னு வந்துட்டா கடின உழைப்பாளி. நிறைய உதவி செய்கிறார். அதே மாதிரி இயக்குநரும் கலகலன்னு கேஷுவலா பேசினார். ரெண்டு பேரும்தான் எனக்கு நிறைய தமிழ் சினிமா பற்றி சொல்லிக் கொடுத்தாங்க.

மொத்த டீமும் என்னைய ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டாங்க. இந்தியா வந்ததிலிருந்து எங்கே போனாலும் எனக்கு அன்பு மட்டும்தான் அன்பளிப்பா கிடைச்சது. ஷூட்டிங் இடையிலே உக்ரைன் நாட்டுப் போர் தொடங்கிய செய்தி மட்டும்தான் என்னை கொஞ்சம் நிலைகுலைய வச்சது. அந்த நேரத்திலும் கூட ஷூட்டிங், நடிப்பு... இப்படி எல்லாம் எதுவும் சொல்லாம படக்குழு எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தாங்க.

இந்தியாவுடைய லைஃப் ஸ்டைல் உங்களுக்கு பிடிச்சிருக்கா?

உங்க நாட்டைக் காட்டிலும் இங்கே வெப்பம் அதிகம் ஆச்சே...முதல் ரெண்டு நாட்கள் என்னால் சரியா மூச்சு விடக் கூட முடியல. அந்த அளவுக்கு வெப்பமா இருந்துச்சு. அப்பதான் கேட்டேன், ‘இங்கே இப்படித்தான் எப்பவுமே ஹாட்டா இருக்குமா’னு. அதுக்கு எல்லாரும் சிரிச்சிட்டே ‘என்னது இது ஹாட்டா... அப்ப சம்மர்ல என்ன சொல்லுவீங்க’னு கேட்டாங்க.
அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனாலும் ஒரு வாரத்துல நான் இந்திய வெதருக்கு பழகிட்டேன். இந்திய சாப்பாடு எல்லாமே எனக்கு ஃபேவரைட் ஆயிடுச்சு. நிறைய ஃபுட் மெனுக்கள் கூட எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.

ஒரு விஷயம்தான் எனக்கு புரியவே இல்லை... எப்படிதான் இவ்வளவு மசாலா, காரம் சாப்பிடறீங்களோ தெரியல. என்னால இவ்வளவு காரமெல்லாம் தாங்க முடியாது. ஆனா, இந்திய ஸ்வீட் ஐட்டம்ஸ்... சான்சே இல்ல. செம டேஸ்ட்டி ஸ்வீட்ஸ்.

சூப்பரா டான்ஸ் ஆடறீங்களே... எத்தனை நாட்கள் ரிகர்சல் எடுத்துக்கிட்டிங்க?

ரொம்ப நன்றி. எங்களுக்கு நிறைய நேரம் இல்லை. ஒண்ணு அல்லது ரெண்டு நாட்கள்ல சாங் ஷூட் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அவ்வளவு சீக்கிரம் முடிச்ச சாங் அது. அவ்வளவு சீக்கிரமாவும் கத்துக்கிட்டேன்!

ஓய்வு நேரங்களில் என்ன செய்வீங்க?

நிறைய எழுதுவேன். கவிதை எழுதப் பிடிக்கும். எழுதும்போது நம்ம கற்பனைத் திறன் அதிகரிக்கும். என்னை மறந்து பாடல்கள் பாடுறக்கு பிடிக்கும். இப்ப இன்னொரு ஹாபியா தமிழ் சினிமா பாடல்கள் கேட்க பிடிச்சிருக்கு. நிறைய பாடல்கள் கேட்கறேன். நிறைய பாடல்களை எனக்கு நானே பாடியும் பார்த்துக்கறேன். உங்க தமிழ் மொழியே ரொம்ப அழகா இருக்கு.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யார்?

உங்க மொழியில நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருக்காங்க. யாரைத் தேர்வு செய்றது, யாரை விடறதுனு எதுவுமே புரியல. தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை முழுசா புரிஞ்சுக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். முழுமையா புரிஞ்சதுக்கு அப்புறம் இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் சொல்றேன்.

மீண்டும் இந்திய மற்றும் தமிழ் சினிமாவில் உங்களைப் பார்க்கலாமா?

உங்களுடையது ரொம்ப அழகான நாடு. இந்த நாட்டில் இருக்கிறதுக்கே நான் சந்தோஷப்படுறேன். அதிலும் சினிமாவை நீங்க நேசிக்கிற விதமும் படமாக்குற விதமும் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நிச்சயமா இப்படிப்பட்ட படங்களில் நடிக்க யார்தான் வேணாம்னு சொல்லுவாங்க! இன்னொரு படத்துக்கு காத்திருக்கேன்.

ஷாலினி நியூட்டன்