மோஸ்ட் வாண்டட் வில்லன்!
‘‘ஹீரோனு இல்ல, நடிக்கறதுக்கான ஸ்கோப் இருக்கும் எந்தக் கேரக்டரா இருந்தாலும் ஓகே சொல்வேன். அப்படி காத்திருந்து கிடைச்ச படம்தான் ‘கலகத் தலைவன்’. எல்லா திசைகள்ல இருந்தும் பாராட்டு கிடைக்குது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...’’ புன்னகைக்கிறார் ஆரவ்.‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்திற்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவெளி..?
 ரொம்ப ஜாக்கிரதையா அடுத்த படம் செய்யணும்னு நினைச்சேன். நிறைய கதைகள், புராஜெக்ட்கள் பேசிட்டு இருந்தேன். 2019 நவம்பரில் அந்தப் படம் வெளியாச்சு. அப்பறம் நிதானிக்கறதுக்குள்ளயே கொரோனா, ஊரடங்குன்னு எல்லா படப்பிடிப்பும் நின்னுடுச்சு. ஆனா, 2020 கடைசிலயே நான் ‘கலகத் தலைவன்’ படத்துக்குள்ள வந்துட்டேன்.
வில்லன் கேரக்டர்... இப்படி வாய்ப்பு வந்தப்ப என்ன யோசிச்சீங்க?
ஹீரோவா நடிச்சுட்டு அடுத்த படம் வில்லனானு ஒரு கேள்வி வந்தாலும் இன்னொரு பக்கம் மகிழ்திருமேனி சார் படம், உதய் சார் ஹீரோ... டிரீம் புராஜெக்ட். இதை விடணுமானு அழுத்தமான கேள்வி. அதனால ஓகே சொல்லிட்டேன்.
 சின்னத்திரை to வெள்ளித் திரை... வெள்ளித்திரை நாயகன் to வில்லன்... இந்தப் பயணத்துல கத்துக்கிட்டது என்ன ?
நான் நினைச்சுப் பார்க்க முடியாத இடத்தை மக்கள் கொடுத்திருக்காங்க. அதுக்கு பொறுப்பா என்ன செய்யணும்னு மட்டும்தான் யோசிக்கறேன். மக்கள் கொடுத்த இந்த இடத்துக்கு நான் நியாயம் செய்யணும். ஹீரோ, வில்லன்... இதெல்லாம் பார்க்காம நல்ல நடிகனா பெயர் வாங்கணும். இதை மட்டும்தான் கத்துக்கிட்டேன்.
ஒரு படத்துல வில்லனா நடிச்சதும் தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்ஸ் வருமே... தயாரா இருக்கீங்களா?
ஹீரோவா நான் நடிச்ச முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகலை. அப்புறம் கொரோனா, ஊரடங்கு, எங்க பார்த்தாலும் ஷூட்டிங் ரத்து. இந்த சூழ்நிலைலயும் என்கிட்ட நடிக்க ஏதோ இருக்குன்னு மகிழ் சார் யோசிச்சிருக்காரே... அதை விட நான் சந்தோஷப்பட வேறென்ன வேண்டும்? வில்லன் என்பவன் சும்மா இல்ல... நடிக்கணும், பெர்ஃபாம் பண்ணணும்.
அப்படிப்பட்ட கேரக்டர் என்னைத் தேடி வருதுன்னா அதுவே பெரிய விஷயமாச்சே! அடுத்தடுத்து வில்லன் கேரக்டரா வந்தா... எனக்கு நடிக்க ஸ்கோப் இருந்தா... நிச்சயம் செய்வேன். ஏதாவது ஒரு சீன்ல வந்துட மாட்டோமான்னு ஒரு காலத்துல ஏங்கியிருக்கேன். மகிழ் சார் படமெல்லாம் பார்த்து ப்ச்... இவர்கூட ஒரு சின்ன சீன் வேலை செய்யமாட்டோமான்னு நினைச்சிருக்கேன்.
அப்படிப்பட்டவனுக்கு அவர் டைரக்ஷன்ல வில்லனா... அதுவும் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு வில்லனா நடிக்க சான்ஸ் வருதுனா அது எவ்வளவு பெரிய அங்கீகாரமா இருக்கணும்!
இயக்குநர் மகிழ்திருமேனியுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
அவருக்கு நான் ஃபேன். அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒண்ணு நம்மளை ஆச்சர்யப்படுத்தற மாதிரி இருக்கும். வெர்சடைல் டைரக்டர். ஆனா, அந்த ஆர்ப்பாட்டமே அவர்கிட்ட இருக்காது. அவருடைய படங்கள்ல வில்லன் கேரக்டர்ஸ் ரொம்ப ஸ்டிராங்கா இருக்கும். அந்த கேரக்டர்ல என்னை அவர் யோசிச்சது பெருமையா இருக்கு. அவர் பேசுகிற விஷயங்களே ரொம்ப இன்டலக்சுவலா இருக்கும். என் கேரக்டரை ரொம்ப நல்லா டிசைன் செய்திருக்கார்.
உதயநிதி..?
அவர் இருக்கற அரசியல் பொறுப்புகளுக்கு, சமூக வேலைகளுக்கு இடைல புரொடக்ஷன், நடிப்பு, டிஸ்டிரிபியூஷன்னு பிசியா இருக்கார். ஆனா, அவர்கிட்ட டென்ஷனைப் பார்க்கவே முடியாது. அவ்ளோ ஃபிரெண்ட்லி அண்ட் கூல் பர்சன்.டைரக்டர் என்ன சொல்றாரோ அதை கேள்வியே கேட்காம செய்வார். அவர் நினைச்சா சீன், ஆக்டர்ஸ்னு எதை வேணும்னாலும் மாத்தலாம். ஆனா, அப்படி செய்யவே மாட்டார். கேப்டன் ஆஃப் த ஷிப் டைரக்டர்தான் என்பதில் உறுதியா இருப்பார். சச் அ ஹம்பிள் பர்சன்.
இதெல்லாம் நான் பாடமா எடுத்துக்கிட்டேன். நம்மளை கம்ஃபோர்ட் ஸோனுக்குக் கொண்டு போயிடுவார். அதிலும் என் கேரக்டர் அவ்ளோ டாமினேஷனா இருக்கும். அதெல்லாம் யோசிக்காம எங்களை எந்த அளவுக்கு புரமோட் செய்ய முடியுமோ அந்தளவுக்கு செய்தார்.
அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கும்?
எதையும் யோசிக்கலை. எதுவும் திட்டமிடலை. ‘கலகத் தலைவன்’ என்னை இன்னொரு லெவலுக்கு எடுத்துட்டுப் போயிருக்கு. அதனால ரொம்பப் பொறுப்பா கதைகள், கேர்க்டர்ஸ் தேர்வு செய்யணும்!
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|