உலகின் நீளமான பாதம்!



அமெரிக்காவில் பெண்கள் அணியும் ஷூக்களின் சராசரி அளவு, 8.5 - 9. இந்த அளவு தன்யா ஹெர்பர்ட் என்ற பெண்மணிக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஆம்; அவரது வலது பாதத்தின் அளவு, 33.1 செ.மீ. இடது பாதத்தின் அளவு, 32.5 செ.மீ. இதனால் அவருக்கு 18 அளவிலான ஷூதான் பொருத்தமாக இருக்கும். 13 அளவுள்ள ஷூ கிடைப்பதே ரொம்பவே அரிது.  சில வருடங்களுக்கு முன்பு தனக்கான ஷூக்களைத் தேடி அலைந்து எங்கும் கிடைக்காமல் ஆர்டர் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் தன்யா.

இப்படி ஆர்டர் கொடுத்ததால் அவரது வங்கிக்கணக்கில் இருந்து கணிசமான தொகையும் காலியானது. கடந்த வாரம் உலகின் நீளமான பாதங்களைக் கொண்ட வாழும் பெண்மணி என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் தன்யா.

இந்தச் சாதனை மூலம் தன்யாவின் பிரச்னையும் வெளி உலகுக்குத் தெரிய வர, ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள் தன்யாவுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்திருக்கின்றன. மட்டுமல்ல; தன்யாவின் உயரம் 6 அடி, 9 அங்குலம். உலகிலேயே உயரமான பெண்மணியான ருமேயிசாவை விட 3 அங்குலம்தான் குறைவு.

த.சக்திவேல்