தங்க மகன்!
வேறு யார், நீரஜ் சோப்ராதான்! இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர், இப்பொழுது மீண்டும் களத்தில் இறங்கி வெற்றி வாகை சூடிவருகிறார்.யெஸ். முதல் சுற்றில் Foul செய்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது சுற்றில் 83.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். ஆனால், மூன்றாவது சுற்றில் நீரஜ் சோப்ரா தன்னுடைய சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி 85.29 மீட்டர் தூரத்தை வீசினார்.
 இதேபோன்று நான்காவது சுற்றில் 82.17 மீட்டரும், ஐந்தாவது சுற்றில் 81.01 மீட்டர் தூரமும் வீசி யிருந்தார்.இந்தப் போட்டியில் 85 மீட்டரைக் கடந்து வீசிய ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டும்தான். இதனால் அவர் முதலிடம் பிடித்தார்.
தென்னாப்பிரிக்கா வீரர் டவ் ஸ்மித் 84.12 மீட்டர் வீசி இரண்டாவது இடத்தையும், கிரனிடாவைச் சேர்ந்த 2019 உலக சாம்பியன் ஆன கிரனிடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் வீசி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதன் மூலம் ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கத்தை இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா கைப்பற்றினார். 27 வயது நீரஜ் சோப்ராவை மூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் ஜாம்பவான் ஜான் ஜெலன்சி வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீரஜ் சோப்ரா இந்தத் தொடரில் உடல் தகுதி காரணமாக பங்கேற்கவில்லை. எனினும் நடப்பாண்டு நீரஜ் சோப்ரா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த மே மாதம் நடைபெற்ற தோகா டைமண்ட் லீக் தொடரில் 90 மீட்டர் தூரம் தாண்டி ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தற்போது பாரிஸ் டைமண்ட் லீக் மற்றும் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தொடரில் நீரஜ் தங்கம் வென்று உள்ளார். இதனால் மீண்டும் பெரிய தொடரில் நீரஜ் சோப்ரா கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஆனந்தி
|