யார் இந்த பென்ஜமின் நெதன்யாகு?
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுக்கு உள்ளூரில் என்ன பெயர் தெரியுமா? மிஸ்டர் செக்யூரிட்டி. ஆனால், சர்வதேச அளவில் அவரது பெயர் என்ன தெரியுமா?
 இட்லர் 2.0.இந்த இன்டர்நேஷனல் பெயரை இஸ்ரேல் மக்கள் விரும்பவில்லை; தங்கள் பிரதமரை அப்படி அவர்கள் அழைக்கப் போவதுமில்லை.
ஆனால், ‘மிஸ்டர் செக்யூரிட்டி’ என தாங்கள் வைத்த பெயரில் இனி அவரைத் தாங்களே அழைக்கப்போவதில்லை என்று மட்டும் உறுதியாக முடிவெடுத்திருக்கிறார்கள். காரணம், சமீபத்தில் ஈரானை இஸ்ரேல் தாக்கியதை அடுத்து நிகழ்ந்த சம்பவங்கள். ஆம்... தங்களைத் தாக்கிய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை சாரை சாரையாக ஈரான் அனுப்பியது. அதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டைத் துளைத்து நொறுக்கின.தங்கள் வாழ்நாளில் இப்படியொரு சேதத்தை அனுபவிக்காத இஸ்ரேல் மக்கள், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.
 இச்சூழலில் எந்த நம்பிக்கையில் அவர்கள் ‘மிஸ்டர் செக்யூரிட்டி’ என பென்ஜமின் நெதன்யாகுவை இனியும் அழைப்பார்கள்?
 தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த ஈரானை ஏன் சீண்ட வேண்டும்..? அப்படி சீண்டியதால்தானே இன்று இஸ்ரேல் சின்னாபின்னமாகி இருக்கிறது... என நெதன்யாகுவை நோக்கி கேள்வி கேட்கும் மக்கள் அவரை எப்படி ‘மிஸ்டர் செக்யூரிட்டி’ என புகழ்வார்கள்?
1948ம் ஆண்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவானபின் இளம் வயதில் பிரதமரான முதல் நபர்; 6வது முறையாக பிரதமராக இருப்பவர்; மொத்தத்தில் 17 வருடமாக ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்... என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்தான் நெதன்யாகு.என்றாலும் ஒரு கெட்ட பெயரும் அவரோடு ஒட்டிக்கொண்டே வருகிறது. அதுதான் போர்த் தலைவர் எனும் பட்டம். அதாவது தன் பதவிக்காக ஏதாவது ஒரு போரை இழுத்துவிட்டுக் கொண்டு சொந்த நாட்டிலும் பக்கத்து நாடுகளிலும் குழப்பமும் உயிர்ச் சேதங்களையும் அவர் ஏற்படுத்தி வருவதால்தான் வார் லீடர் எனும் கெட்ட பெயர்.
1949ல் பிறந்தவர் பென்ஜமின். அப்பா ஒரு யூத வரலாற்று ஆசிரியர் என்பதால் அமெரிக்காவில் இவருக்கு வேலை கிடைத்தது. இதனால் குடும்பமே 1964ல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது.
தன் 18வது வயதில் இஸ்ரேல் திரும்பினார் பென்ஜமின். அங்கு சென்றதுமே இஸ்ரேலிய இராணுவத்தில் இணைந்தார்.
கேப்டன் பதவி வரை பதவி உயர்வு பெற்றார்.இக்காலத்தில்தான் அவரது சகோதரர் ஜோனதன், உகாண்டாவில் பயணக் கைதிகள் மீட்பு தொடர்பான ஓர் இராணுவ நடவடிக்கையில் இறந்தார். இதனையடுத்து இஸ்ரேலில் தீவிரவாத எதிர்ப்பு எனும் ஒரு தனியார் நிறுவனத்தை நெதன்யாகு ஆரம்பித்தார்.
1980களில் அரசு சார்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் இஸ்ரேலின் அமைதிக்கான ஒரு வேலையை எடுத்துச் செய்தார். பிறகு இஸ்ரேல் சார்பாக ஐநா சபையின் தூதுவரானார்.
இப்படி ஒரு சுற்று வந்த நெதன்யாகு, 1988ல் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
1988ல் ‘லிகுட்’ எனும் ஒரு கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்டார். பிரதேச தேர்தலில் வென்று பாராளுமன்றத்துக்குச் சென்றார். இதுதான் அவரது முதல் அரசியல் வெற்றி. இதன் பிறகு அரசியலைவிட்டு அவர் தன் தலையைத் திருப்பவேயில்லை. 1993ல் எதிர்க்கட்சித் தலைவரானவர், 1996ல் முதன்முறையாக இஸ்ரேலின் பிரதமரானார். ஆனால், 1999ல் தேர்தலில் தோல்வியடைந்தார். 2006 முதல் 2009 வரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். 2009ல் மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் பிரதமரானார். 2013, 2015 தேர்தல்களில் வெற்றிபெற்றார். 2018ல் ஒரு சிக்கல் வந்தது. அவரது கட்சியினரே ‘மாறி மாறி பிரதமர்’ எனும் முறையைக் கொண்டு வந்தார்கள். கூடவே கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது.
2019ல் அவர் மீது ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை மூன்று வழக்குகளாக இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2021ல் தோல்வியடைந்தார். ஆனால், மீண்டும் 2022 தேர்தலில் வெற்றியடைந்தார். உடனே சில சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். இதை பெரும்பான்மை மக்கள் எதிர்க்கவே அது நிறைவேறவில்லை. இந்த கிராஃபைப் பார்த்ததும் ஒரு கேள்வி எழும். தோல்வி... வெற்றி... தோல்வி... ரிப்பீட்டு! எப்படி இது சாத்தியம்?
விடை எளிமையானது. ஒவ்வொரு முறை தனக்கு எதிரான கருத்தியல் வலுக்கும்போதும் பக்கத்து நாடுகளைப் போருக்கு இழுப்பார். இஸ்ரேலைக் காப்பாற்றும் ஒரே தேவதூதன் தான்தான் என பிரசாரம் செய்வார். இப்படித்தான் எதிர்ப்பைக் கையாண்டு வருகிறார். உதாரணமாக, லெபனான் நாட்டிலுள்ள இஸ்புல்லா மேல் போர், சிரியாவைச் சீண்டல், பாலஸ்தீனம் மேல் தாக்குதல்... என பட்டியலிடலாம்.
அதேபோல் ஈரானுடன் அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா அமைதி ஒப்பந்தம் போட்டபோது அதை நெதன்யாகு எதிர்த்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் ஒபாமாவின் அமைதி ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். இதற்கும் நெதன்யாகுதான் காரணம் என ஒரு பேச்சு நிலவுகிறது.ஒபாமாவின் அமைதி ஒப்பந்தம் மட்டும் நடைமுறையில் இருந்திருந்தால் ஈரான் மேல் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்திருக்காது... இதற்கு பதிலடியாக இஸ்ரேலை ஈரான் தவிடுபொடியாக்கி இருக்காது என்கிறார்கள்.
2023 அக்டோபரில் காசாவின் ஹமாஸ் குழு, இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் இருந்த யூதர்களைத் தாக்கினார்கள். இதில் 1200 யூதர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 250 பேர் பணயக் கைதிகளாகப் பிடிபட்டார்கள். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி பென்ஜமின் காசாவை முழுமையாக துடைக்க எத்தனித்தார். இதில் காசாவின் ஹமாஸை மட்டும் குறிவைக்காமல் மொத்த மக்களையுமே குறிவைத்துத்தாக்கினார். இதில் சுமார் 60 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இதை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா பென்ஜமின் மீது உலக கிரிமினல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. 2024ல் பென்ஜமின் குற்றவாளி என தீர்ப்பாகி அவர் மேல் அரஸ்ட் வாரண்ட் கூட பிறப்பிக்கப்பட்டது! இந்த கோர்ட் இதுவரை நான்கு பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. அதில் ஒருவர் பென்ஜமின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் லிபியாவின்க டாஃபி, ரஷ்யாவின் புடின் மற்றும் உகாண்டாவின் ஒமர் அல் பஷீர்.
பொதுவாகவே தன்னை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு உடனடியாக யூத மத எதிர்ப்பாளர் எனும் பட்டத்தை வழங்குவார். அது ஒரு யூதனாக இருந்தாலும் இப்படித்தான் பட்டம் வழங்குவார் என்கிறார்கள்.
இது மக்கள் மனதில் மதம் சார்ந்த உணர்வைத் தூண்டி தனக்கு ஆதரவாக அவர்களைச் செயல்பட வைக்கும் என்பது நெதன்யாகுவின் ஃபார்முலா.
ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டபோதும் ‘யூத மத எதிர்ப்பாளர்கள்’ என்பதுடன் அந்நாட்டில் அணு ஆயுதங்கள் இருக்கின்றன... அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள்... என்றும் பிரசாரம் செய்தார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என கிளிப்பிள்ளை போல் 30 ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறார். இதற்கான ஆதாரத்தை இதுவரை அவர் சமர்ப்பிக்கவேயில்லை. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என சர்வதேச அணுசக்தி மையம் தெரிவித்தபோதும் நெதன்யாகு மட்டும் இதே பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இப்பொழுது இந்த பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும் சேர்ந்திருக்கிறார்.
ஈரானின் சுப்ரீம் லீடரான கமேனியை பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நெதன்யாகுவின் வாழ்நாள் கனவு.போகிற போக்கில் பார்த்தால் நெதன்யாகுதான் இஸ்ரேலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என்பதுபோல் தெரிகிறது!
டி.ரஞ்சித்
|