சிறுகதை - சம்பிரதாயம்



‘‘ஆட்டோ எல்லாம் உள்ளே விட முடியாதுங்க...” காவலாள் கண்ணியமாகத்தான் சொன்னாலும் பேரம் பேசமுடியாத கறார்த்தனமும் தெரிந்தது.சங்கர் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் இறங்கி உள்ளே பார்த்தான். வாழை மரப் பந்தல் கட்டி ‘நித்யா வெட்ஸ் ராம்’ பல வண்ணங்களில் தெர்மோகோலில் ஜொலித்தது. 
பிரம்மாண்டமான இரும்புகேட்டை அதன் ஓரத்தில் மூன்றடிக்கு மூன்றடியில் இருந்த கூண்டு திறந்து மூடிக்கொண்டிருந்தது. உள்ளே பாதை இரண்டாகப் பிரிந்து கார்கள் மைதானத்தில் கோலமாவு போட்டிருந்த பார்க்கிங்குக்குச் செல்ல, நடப்பவர்களை வரவேற்க பட்டுப் பாவாடைச் சிறுமியர் பன்னீர் சொம்புடன் இன்னொரு வழியில் காத்திருந்தனர்.

ஒரு டிஜே வரும் ஆட்களுக்குத் தகுந்த பாட்டுகளைப் போட்டுக் கொண்டிருக்க பகலிலும் எரிந்துகொண்டிருந்த விளக்குத் தோரண வழியில் நடப்பவர்களை “ஆடுங்க மாமி...” என்று இளம்பெண்கள் ஊக்குவித்துக்கொண்டிருந்தார்கள். வீடியோவில் அவர்கள் ஆடுவதைப் பார்க்க இரண்டு மூன்று டிவிக்கள் வேறு இருந்தன. அப்பாவைக் கூட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இவர்களையும் ஆடச் சொல்வார்களா? ஆட்டோவுக்குக் காசு கொடுத்துவிட்டு அப்பாவைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான் சங்கர்.

காவலாளி பின்னாலே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். “சார் இதுல பேர், ஃபோன் நம்பர்...”அப்பா பொறுமையாக நடந்தார். “என்னடா அவசரம், ஒன்பது மணிக்குத்தானே முகூர்த்தம்?”

சிறுமிகள் இவர்களைப் பார்த்து “சந்தனம் எடுத்துக்கங்க...”யாரோ ஒருவர் “சாருக்கு ஒரு வீல்சேர் கொண்டு வாடா...” பணக்காரக் கல்யாணங்களில் எல்லாவற்றையும் யோசிக்கிறார்கள். சங்கர் வீல்சேரில் அப்பாவை உட்கார்த்தி நகர்த்தினான். “மணமாலையும் மஞ்சளும் சூடி...” என்றது பாட்டு. அந்த டிஜேவுக்கு அப்பாவுக்குப் பொருத்தமாக வேறு எந்தப்பாட்டும் தோன்றவில்லை போல. ஏதாவது சோகப்பாட்டு போட்டிருக்கலாம். 

அவனுக்கென்ன தெரியும் பாவம். அந்தப் பாதையைத் தாண்டியவுடன் ஒரு கோட் ஆசாமி “நேரா டிபன் சாப்பிட்டிடலாம் சார். நான் வழி காட்டறேன்...” கல்யாணம் போலவே இல்லை. திருவிழா போல இருந்தது. ஒருபக்கம் மருதாணி இட்டுவிட ஒரு ராஜஸ்தானிப் பெண்ணுக்கு முன்னால் வரிசை நீண்டுகொண்டிருந்தது.

டீக்கடை போல முகப்பு அமைக்கப்பட்டு காபி பட்டுவாடா நடந்துகொண்டிருந்தது. மினரல் வாட்டர் டம்ப்ளர்கள் ஐந்தடிக்கு ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. பானி பூரி கடை ஃபோட்டோ பூத் எல்லாம் தாண்டி சாப்பாட்டு ஹால். பட்டுப்புடவை சரசரக்க  மாமிகள் “அசோகா அல்வாவா அது? நான் கோதுமை அல்வான்னு நினைச்சேன்...” “மாமண்டூர் ப்ரதர்ஸ் கேட்டரிங்னா சும்மாவா? இவங்களைப் பிடிக்கவே ராமச்சந்திரன் ஆறுமாசம் காத்திருந்தாராம் தெரியுமா?” என்று பேசிக்கொண்டு கையலம்பிக் கொண்டிருந்தார்கள்.

பெரிய இலையில் பெயர் தெரியாத பல பதார்த்தங்களைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பா பொறுமையாகப் பார்த்து பரிசாரகர்களை “இது என்ன... அது என்ன...” என்று கேட்டு எல்லாவற்றையும் விலக்கிக் கொண்டிருந்ததால் அவர் இலையில் ஒரு இட்லியும் கொஞ்சம் சட்னியும் மட்டும் இருந்தது. “ஒரு நாள் சாப்பிடுப்பா, ஒண்ணும் ஆகாது...” சொன்ன சங்கரை அப்பா முறைத்தார்.

“அவளுக்கு இப்பவோ அப்பவோன்னு இருக்கு. இந்த நேரத்துல நான் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடணுமா?”

“வாப்பா சங்கர். வாங்கோ அண்ணா... எங்க வராம இருந்துருவீங்களோன்னு நினைச்சேன். இப்பதான் டிவில நீங்க வரது தெரிஞ்சது. உடனே நான் வந்துட்டேன். ராம் இதோ வந்துருவார்...” சித்தி இப்போதே ஒன்பது கெஜப் புடவை கட்டிக்கொண்டு தயாராக இருந்தாள். முகத்தில் சிரிப்பு இருந்தாலும் கொஞ்சம் போல கலக்கமும் தெரிந்தது. குரலைத் தாழ்த்தி “மன்னிக்கு இப்ப எப்படி இருக்கு?”

வடையைப் பிய்க்காமல் வாய்க்குள் போட்டிருந்த சங்கர் அதை விழுங்குவதா, விழுங்காமல் பேசமுடியுமா என்று அரைநொடி குழம்பினான். “உங்களுக்குத் தெரியாததா சித்தி? சித்தப்பாதான் டாக்டர்கிட்ட பேசிகிட்டிருக்கார். நாங்க மாத்துத்துணி எடுத்துட்டுப் போறதோட சரி...” என்றான். சித்தப்பாவும் வேகமாகவே வந்தார். “சொல்லியிருந்தா கார் அனுப்பியிருப்பேனில்ல. ஏன் ஆட்டோவில வரணும்?” கோபமாகத்தான் கேட்டார்.

அப்பா “சங்கரோட கார் என்னாச்சுன்னு உனக்குத் தெரியும். நாங்க என்ன நிலைமைல இருக்கோம்ன்றதும் உனக்குத் தெரியும். அப்புறம் கேள்வி மட்டும் கேக்கறே?”
“என்னண்ணா இப்படி பேசறே? ஒரு போன் பண்ணியிருந்தா கார் அனுப்பியிருக்கமாட்டேனா? உனக்கு இல்லாம வேறெதுக்கு பத்துக் காரை வாடகைக்கு எடுத்திருக்கேன்?” ராமச்சந்திரன் சுற்றுமுற்றும் பார்த்து குரலைத் தழைத்தார். 

‘‘மேலே போய் உட்காருங்க. கல்யாணம் முடிஞ்சவுடனே நானும் வரேன், மன்னியைப் போய்ப் பார்க்கலாம். டாக்டர்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கு. எப்பாடு பட்டாவது காப்பாத்திருவார்...”டாக்டரைப் பிடிக்கத்தான் முடிவதில்லை. எப்படியோ சித்தப்பா மட்டும் பேசிவிடுகிறார்.

லிஃப்டில் மாடி ஏறித்  திருமண அரங்கத்துக்கு உள்ளே நுழைந்தபோதுதான் சங்கருக்குத் தனிமை உரைத்தது. சித்தப்பாவுக்கு ஒரே அண்ணன், ஒரே பெண். இந்தப்பக்கம் கூட்டமே இல்லை. சித்தியின் உறவுக்காரர்களோடு அவ்வளவு பழக்கமில்லை. சில ‘‘எப்படி இருக்கீங்க”க்களை எங்கோ பார்த்தது போல இருந்தது. பதிலுக்குச் சிரித்துவைத்தாலும் “நான் யாரு தெரியுதில்ல?” வந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. அப்பா யாரையும் கவனிக்கவில்லை. வீல்சேரில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சித்தப்பாவின் பணம் எல்லா இடத்திலும் தெரிந்தது. பிரம்மாண்டமான அரங்கம். ஆனால், அவ்வளவு கூட்டமில்லை. மணமேடையில் இருந்து தள்ளி ஆங்காங்கே வட்ட மேஜைகள் மரியாதையான தூரத்தில் இருந்தன. மேஜையைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் பெயர் எழுதப்பட்டு ஒரு பை இருந்தது. 

‘சங்கர் சுப்பிரமணியன்’ என்னவோ பாஸ்போர்ட்டுக்குப் பெயர் கொடுப்பது போல. பையைப் பிரித்துப் பார்த்தான். தாம்பூலத் தேங்காய், கல்யாண பட்சணம், ஒரு சிறு ஜிப்லாக் பையில் அட்சதை, ஒரு பளபள காகிதத்தில் எந்த வேளைக்கு என்ன உணவு என்று மெனு. மனிதத் தீண்டலே இல்லாமல் கல்யாணத்துக்கு வந்து சென்றுவிடலாம்.

பக்கத்து வட்டமேஜையில் இருந்த வயதானவர் அப்பாவிடம் வந்து மரியாதையாகக் குனிந்தார். “மணிசார்... என்னைத் தெரியுதா?” இப்போது அப்பாவுக்கு கேள்விநேரம் போல.
சங்கர் அவரிடம் “சார் அப்பாவுக்குக் காது அவ்வளவா கேக்கறதில்லை. தவிர வேற சில யோசனைகள் வேற. நீங்க வேணா இங்கே உட்கார்ந்து பேசுங்களேன்...’’
அப்பா அவரை ஏறிட்டுப் பார்த்தார். 

“சேஷாத்ரிதானேடா நீ?”“மணிசாருக்கு ஞாபகசக்தி அபாரம். பார்த்து பதினஞ்சு வருஷத்துக்கு மேலே இருக்கும். ராமச்சந்திரன்தான் என்கிட்ட அடிக்கடி வருவார். உங்க குடும்பத்துல இருந்து யாரும் வந்ததில்லை...” இப்போதும் சங்கருக்கு அவர் யார் என்றெல்லாம் தெரியவில்லை.

அப்பாவே அந்தக் கேள்விக்குப் பதிலும் சொன்னார். “இன்னும் ஜோசியம்தான் பாத்துக்கிட்டிருக்கியா?”

“இல்லையா பின்ன? ஜோசியம் ப்யூர் சயன்ஸ் இல்லையா? ராமச்சந்திரன் சொல்வார் - உங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லைன்னு...”
அப்பா பதில் பேசவில்லை. “ஆனா, பாக்கறவங்க பார்த்தா எல்லாம் சரியா நடக்கும். உங்க தம்பி ஏன் இவ்ளோ நம்பறார்? எல்லாம் சொன்னபடி நடக்குது, அதனால நம்பறார்...”
‘‘காக்கா உட்கார்ந்தா பனம்பழம் விழுது?” அப்பா பொது இடத்தில் இப்படியெல்லாம் பதிலுக்குப் பதில் பேசுபவர் இல்லை. இப்போதைய மனக்கவலைக்கு சண்டை போட்டாவது மனதை மாற்ற நினைக்கிறார்.

“பெரியவங்க, அப்படியெல்லாம் பேசக்கூடாது. ராமச்சந்திரன் உங்க நிலைமையைக்கூட என்கிட்ட சொன்னார்...” சங்கர் அதிர்ந்தான். யாரிடமும் சொல்லாதே, கல்யாணம் நல்லபடி நடந்து முடிந்துவிடட்டும் என்று என்னிடமும் அப்பாவிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டிருந்த சித்தப்பா இந்த ஆளிடம் சொன்னாரா?“என்ன சார் சொன்னார்?”“ஒண்ணும் பெரிசா சொல்லலை. அண்ணா குடும்பத்தோட கும்பகோணத்துல இருந்து வரப்ப ஆக்சிடெண்ட் ஆயிடுத்துன்னார். கல்யாணம் நடத்த முடியுமோன்னு கேட்டார்...”ஆக்சிடெண்ட் நடந்தே மூன்று நாட்கள்கூட ஆகவில்லை. சித்தப்பாக்கு மன்னியின் உயிரைவிட கல்யாணம்தான் பெரிதாக இருந்திருக்கிறது.

“நீங்க என்ன சொன்னீங்க?”

“பொண்ணுக்குத் தோஷமில்லை. அவ வேற கோத்திரம் ஆகப்போறவ. ஆனா, எதாச்சும் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிருத்துன்னா மணைல நீங்க உக்காரப்படாது, மண்டபத்துக்கும் நீங்க வரப்படாதுன்னு எனக்குத் தெரிஞ்ச சம்பிரதாயத்தைச் சொன்னேன்...”“அப்படியா? அதெல்லாம் ஒரு பிரச்னையுமில்லைன்னு சொன்னதாக் கேள்விப்பட்டோமே?”“ஒவ்வொரு பரம்பரை பஞ்சாங்கத்துக்கு ஒவ்வொரு சம்பிரதாயம். 

ராமச்சந்திரனுக்கு நான் சொல்றதுதான் வொர்க் அவுட் ஆறது...’’உழக்குக்குள் கிழக்கு மேற்கு. ஒவ்வொரு வழக்கம் சொல்லும்போதும் அதுதான் வழிவழியாக வந்தது எனச் சொல்கிறார்கள். சித்தப்பாவும் நானும் ஒரே குடும்பம் - இருந்தாலும் சம்பிரதாயங்கள் வெவ்வேறு ஆவதையெல்லாம் யாராவது ஆராய்ச்சி செய்யவேண்டும்.

சேஷாத்ரி மெல்லிய குரலில் தொடர்ந்தார். “நான் சொன்னேனா? அவரும் உங்க சித்தியோட தம்பி குடும்பத்தை மணைல உட்கார ஏற்பாடு பண்ணி, ஹோட்டல்ல ரூம் போட்டு, மண்டபத்துல இருந்து அத்தனை கேமராவும் ரிலே பண்ண எல்லாம் ஏற்பாடெல்லாம் பண்ணினதாச் சொன்னார். 

‘ஏறத்தாழ இந்தக் கல்யாணத்துக்கு ஒருகோடிக்கு மேலே செலவு பண்ணியிருக்கேன்... டிவில பார்க்கத்தான் கொடுத்து வச்சிருக்கு’ன்னு சொல்லிக் கஷ்டப்பட்டார் பாவம். அப்புறம்தான் நேத்து காலைல போன் பண்ணி, இல்லை, எதுவும் தேவையில்லை, நானே உட்கார் றேன்னுட்டார். அம்மாவுக்குத் தேவலையாயிருத்தோ இப்ப?”

நேற்று காலையில் என்ன நடந்தது? மூன்று நாட்களும் அதே நிலைதானே? டாக்டர்கள் கைவிரித்து வெண்டிலேட்டரில்தானே அம்மா இருக்கிறாள். சங்கர் யோசித்தான். ஏதோ புரிந்ததுபோல் இருந்தது.“அப்பா... ஒருநிமிஷம் பேசிண்டிருங்க. நான் கொஞ்சம் போயிட்டு வந்துடறேன்...” சித்தப்பாவிடமே கேட்டுவிடவேண்டியதுதான். 

என்னவோ திரிசமம் செய்கிறார்.மேடையில் ஹோமம் தீவிரமாக எரிந்துகொண்டிருந்தது. மந்திரங்களைச் சிரத்தையாகச் சித்தப்பா திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார். மேடைக்குச் செல்லும் வழியில் சித்தப்பாவின் போன் ஒலித்துக்கொண்டிருந்தது. எடுத்துக் காட்டும்போதே அழைப்பு முடிந்துவிட்டது.

“யாராச்சும் வழி கேட்பாளா இருக்கும். மிஸ்டு கால் பார்த்து நீயே பேசிடு சங்கர்...” சித்தி மேடையில் இருந்து வேகமாக இறங்கி வந்து, போனைத் திறந்துகொடுத்தாள்.  
சொன்னது சரிதான். வழிகேட்டு யாரோ நண்பர். பேசிவிட்டு வைக்கும்போது பழைய அழைப்புகளில் டாக்டர் வின்சென்டைப் பார்த்தான். அவசரமாக எண்ணை மனப்பாடம் செய்துகொண்டு போனை வைத்துவிட்டு ஹாலைவிட்டு வெளியேறினான்.

மண்டபத்தை விட்டு வெளியே வந்ததும் தன் போனை எடுத்து நம்பரை அடித்தான்.  “டாக்டர் வின்சென்ட்? நான் சங்கர் பேசறேன் சார். அந்த ஆக்சிடெண்ட், ஐசிசியூ...”
“ஆமாம்... ஞாபகம் இருக்கு, சொல்லுங்க...”“அம்மாவோட சான்ஸஸ் என்னன்னு நீங்க சொன்னீங்கன்னா...”“சாரி மிஸ்டர் சங்கர். ரெண்டு நாள் முன்னயே உங்க சித்தப்பாக்கிட்டே சொல்லிட்டேனே... அவங்க வரும்போதே ப்ரெயின் டெட்டாதான் வந்தாங்க.

 ஃப்யூடைல்... வெண்டிலேட்டர்கூட வேணாம்னுதான் சொன்னோம். ஆனா, உங்க சித்தப்பா ரெண்டு நாள் மட்டுமாவதுன்னு கேட்டார்...”அவர் பேசியதில் இருந்த டெக்னிகல் விஷயங்கள் சங்கருக்கு உரைக்கவில்லை. கோபம் மட்டும்தான் இருந்தது.மேடை தூரத்தில் தெரிந்தது. அப்பா கைகாட்டியதை மதிக்காமல் நேராக மேடைக்குச் சென்றான்.சங்கர் அழுதுகொண்டே “சித்தப்பா... அம்மா... நம்மளை விட்டு...”,

 - பினாத்தல் சுரேஷ்