ரூ.850 கோடி பட்ஜெட்டில் ராமாயணா



இந்துக்களின் இதிகாசங்களில் மிக முக்கியமானவை இராமாயணமும் மகாபாரதமும். இதில் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ‘கல்கி’ திரைப்படம். ரூ.600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.1200 கோடி வருமானம் ஈட்டிய திரைப்படம் அது. 
இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது உருவாக்கத்தில் இருக்கும் நிலையில், இந்திய சினிமா இராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்னும் பெயரில் தயாரித்து வருகிறது.ரூ.850 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகிறது. இதன் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல்தான் இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் நிமிர்ந்து உட்காரச் செய்திருக்கிறது.

இந்த படத்தை இயக்கப் போகிறார் நிதீஷ் திவாரி . ‘கில் தில்’, ‘சிச்சோரி’, ‘பூத்நாத்’... குறிப்பாக இந்தியாவின் அதிக வசூல் சாதனைக்குரிய ‘தங்கல்’ உள்ளிட்ட இந்திப் படங்களின் டைரக்டர் இவர்.‘பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக நமித் மல்ஹோத்திரா, ‘அல்லு என்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தின் மதுபிரோக் மற்றும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான  ‘கே.ஜி. எஃப்’ யாஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிப்பது அடுத்த ஹைலைட்.

தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் யாஷ், இப்படத்தில் ராவணனாகவும் நடிக்கிறார். இராமராக ரன்பீர் கபூர், சீதாதேவியாக சாய் பல்லவி, ஹனுமாராக சன்னி தியோல், லட்சுமணராக ரவி துபே, கைகேயியாக லாரா தத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், ஜடாயுவாக அமிதாப் பச்சன், மேக்நாதனாக விக்ராந்த் மஸ்ஸி, தசரதராக பழைய ராமாயண தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்த அருண்... என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர கும்பகர்ணனாக பாபி தியோல், மற்றும் ரம்யா கிருஷ்ணன், அனில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் பிரம்மாண்டம்தான். திரைக்கதை எழுதும் பணியை தர் ராகவன் மேற்கொண்டிருக்கிறார். இவர் இந்தியில் ‘பதான்’, ‘டைகர் 3’, ‘வார்’, ‘த நைட் மேனேஜர்’, தமிழில் ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார்.

இசையமைப்பாளர்களாக இரண்டு உலகத் தர இசைஞர்கள் - ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஸிம்மர். ஹான்ஸ் ஸிம்மர், ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘டாப் கன்’ உள்ளிட்ட மாஸ் ஹாலிவுட் படங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவர். ‘மேட் மேக்ஸ்’ புகழ் கை நோரிஸ் ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்குகிறார்.

 உலகத்தரம் வாய்ந்த motion capture, 3D facial tracking, volumetric lighting போன்ற தொழில்நுட்பங்களை இப்படத்தில் பயன்படுத்துகிறார்கள். அதாவது இந்தியப் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு நவீன VFX இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

படத்தின் முதலாவது பாகம் மட்டும் ரூ. 835 கோடியாம்! இதில் VFX மற்றும் தயாரிப்பு செலவு மட்டும் ரூ.400 கோடியை நெருங்குகிறதாம். சிஜி மற்றும் மோஷன் கேப்சர் வேலைகளுக்காக 600 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படம் - முதல் பாகம் - 2026ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027ல் வெளிவரும்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும். ‘கிளாடியேட்டர்’, ‘லார்ட் ஆப் த ரிங்ஸ்’, ‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்’, ‘ஹாரி பாட்டர்’ பாகங்கள், ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் காஸ்ட்யூம் டிசைனர்களாக - ஆர்ட் டைரக்டர்களாக பணியாற்றிய கலைஞர்களே இப்படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

இந்தோனேஷியா, அமெரிக்கா, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். வெறும் புராணக் கதையை படமாக எடுக்காமல், இந்திய கலாசாரத்தையும் அதன் பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துச்சொல்லும்வகையில் இந்த ‘ராமாயணா’ இருக்குமாம். பார்க்கலாம்!

ஷாலினி நியூட்டன்