இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 பெண்கள் வரதட்சணையால் இறக்கிறார்கள்...
சமீபத்தில் வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரையைச் சேர்ந்த ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் உறைய வைத்துள்ளது.  இதில் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமாகி நான்காவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் லோகேஸ்வரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்னும் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு சவரன் நகைக்காக அவர் கணவர் வீட்டாரால் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நம் சமூகத்தில் வரதட்சணைக் கலாசாரம் எந்தளவுக்கு நோயாகப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன இந்தச் சம்பவங்கள். இந்தியாவில் கடந்த 1961ம் ஆண்டு வரதட்சணைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. காரணம், அந்தக் காலத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமிருந்ததுதான்.
இந்தச் சட்டம் வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் குற்றம் என்கிறது. ஆனாலும் இந்த அறுபது ஆண்டுகளில் பெரிதாக எதுவும் மாறவில்லை.அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வரதட்சணை மரணங்களும் குறையாமலேயே இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்படி வரதட்சணைக் கொடுமையால் இந்தியா முழுவதும் 6 ஆயிரத்து 450 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 ஆயிரம் மரணங்கள் பதிவாகிறது எனவும், ஒவ்வொரு நாளும் 20 பெண்களின் மரணத்திற்கு வரதட்சணை காரணமாக இருப்பதாகவும் சொல்கிறது அந்தப் புள்ளிவிவரம். இந்நிலையில் இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான செல்வகோமதியிடம் பேசினோம்.
‘‘இன்னைக்கு வரதட்சணை என்பது ஒரு சமூக ஒப்புதலாகவே மாறிடுச்சு. என்னதான் நவீன கல்வி, தொழில்நுட்பம் எல்லாம் வளர்ந்தாலும்கூட வரதட்சணை என்பது இன்னைக்கும் மரபாக இருக்குது.
உலகில் நான் எவ்வளவுசெல்வாக்குடன் இருக்கிறேன் என்பதை பெருமையாகக் காட்ட வரதட்சணைதரப்படுது. இதுதவிர ஒரு கடமையாகவும் அதனை பார்க்கிறாங்க. முதல்ல இந்த மனப்போக்கு மாறணும்...’’ என்றபடி ஆரம்பித்தார் அவர்.
‘‘பொதுவாகவே பெண் குழந்தைகளின் பெற்றோர் மகளுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்கணும்னு அதிக வரதட்சணையை கொடுக்க நினைக்கிறாங்க. அவங்களுக்கு 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வரதட்சணை தடைச் சட்டம் என்ன சொல்லுதுனு தெரியும். ஆனா, உண்மையில் எப்ப வரதட்சணையை ஒரு பெரிய கொடுமையாக நினைக்கிறாங்கனா அவங்க சக்திக்கு மீறிப் போகும்போதுதான். இப்ப நூறு சவரன் கொடுக்க இவங்க தகுதியாக இருக்குறாங்க. ஆனா, மாப்பிள்ளை வீட்டில் 150 சவரன் டிமாண்ட் பண்றாங்கனு வையுங்க. அப்பதான் அது பெண்ணின் பெற்றோருக்குக் கஷ்டமாக இருக்கும். வரதட்சணை கொடுப்பதைத் தவறாகப் பார்ப்பாங்க.
இருந்தும் கஷ்டப்பட்டு கொடுக்க முயற்சிப்பாங்க. இதற்காக எந்தப் புகாரும் கொடுக்காமல் எப்படியாவது தன்னுடைய குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சால் போதும்னு இருந்திடுவாங்க. அதனால், பிரச்னைகள் பெரிதாக வெளியில் தெரியறதில்ல. கோடிக்கணக்காக செலவு பண்ணி திருமணம் பண்றதை இப்ப நடுத்தர வர்க்க மக்களும் பின்பற்றுறாங்க. பணம் இருக்கிறவங்க செய்திடுவாங்க. பணம் இல்லாதவங்க கடன்வாங்கி சீர்வரிசை செய்றாங்க.
அதனால்தான் பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாதுனு மாப்பிள்ளை வீட்டில் உள்ள கஷ்டங்களைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க.
இப்ப பெண்களுக்காக குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் உள்பட நிறைய சட்டங்கள் வந்திடுச்சு.
இருந்தும் பெண் குழந்தைகளுக்கும் சரி, ஆண் குழந்தைகளுக்கும் சரி போதிய விழிப்புணர்வு இல்ல.விழிப்புணர்வு இருந்தாலும் பல பெண்கள், தனித்து வாழ்வதால் சமூகம் என்ன சொல்லுமோனு பயப்படுறாங்க. பெண்ணின் பெற்றோரும் திருமணம் முடிந்ததும் தங்கள் கடமை முடிந்ததுனு நினைக்கிறாங்க. அந்தப் பெண்ணாலும் தனித்து எந்த முடிவும் எடுக்கமுடியல.
காரணம், சின்ன குழந்தைகளில் இருந்தே பெண் குழந்தைகளை முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையில்தான் இந்தச் சமூகமும் வீடும் வச்சிருக்கு. சில வீடுகள்ல ரொம்ப செல்லம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் எதையும் தெரியாமல் வச்சுப்பாங்க.
சில வீடுகளில் கட்டுப்பாடு என்ற முறையில் வெளிவிஷயங்களைத் தெரியாமலேயே ஆக்கிடுவாங்க.அதனால், வீடுகளில் பெண் குழந்தைகள் வளரும்போது அவங்களுக்கு முடிவெடுக்கக்கூடிய திறமையை பழக்கப்படுத்தணும். திருமணமாகி போகிற இடத்தில் இதுபோல நடந்தால் என்ன செய்யலாம் அப்படிங்கிற நம்பிக்கையை வளர்க்கணும். ஆனா, பலரும் சின்ன வயசுல இருந்தே பெண் குழந்தை என்றாலே திருமணம்; ஆண் குழந்தை என்றால் வேலைவாய்ப்பு, வருமானம்னு சொல்லி வளர்க்கிறாங்க. இந்த மனப்போக்கை மாத்தணும்.பெண் குழந்தைனா திருமணம் மட்டுமில்ல;வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம் என்கிற விஷயங்களை அவங்களுக்குச் சொல்லணும். உற்றார் உறவினர் எப்படியிருந்தாலும் நம்ம குழந்தைதான்னு பெற்றோர் துணிந்து செயல்படணும்.
பிரச்னைனா அதை கையாளணும். அதைவிடுத்து ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா... இப்படிதான் இருக்கும்’னு அந்தப் பெரிய விஷயத்தை சிறிய விஷயமாகச் சொல்லக்கூடாது.
பெற்றோர் பெண் குழந்தைகளின் பிரச்னையை காதுகொடுத்துக் கேட்கணும்.நாங்க நிறைய வரதட்சணை வழக்குகளைப் பார்க்கிறோம். ஆனா, அது விவாகரத்துனு வரும்போதுதான் தெரிய வரும். முதல்ல வரதட்சணை கேட்டிருப்பாங்க. அது அப்படியே புகைந்து பிரச்னையாகி இருக்கும். அந்தப் பிரச்னை கருத்து மோதலாகி விவாகரத்து கேட்டு நம்மிடம் வருவாங்க.
அதனால் இதுகுறித்த விழிப்புணர்வை இரண்டு தரப்பிலும் ஏற்படுத்த வேண்டியிருக்கு. முதல்ல இரண்டு தரப்பினரின் மனசும் மாறணும். இதில் நாம் பெண் குழந்தைகளின் பெற்றோரைத்தான் பார்க்குறோம்.
ஆண் குழந்தைகளின் பெற்றோர் பத்திப் பேசறது கிடையாது. அதனால், ஆண் குழந்தைகளுக்குச் சுயமாக சம்பாதிப்பதுதான் மரியாதைக்குரிய விஷயம்னு சொல்லிக் கொடுக்கணும். வரதட்சணை வாங்கி திருமணம் செய்வது ஒரு அவமானமான செயல்னு சொல்லி வளர்க்கணும்.
அப்புறம் பெண்களை ஒரு வியாபாரப் பொருளாக பார்க்கிற மனநிலை மாறணும். பெண் குழந்தைகளை நன்றாக படிக்கவைக்கணும். வேலைக்குப் போகவைக்கணும். அவங்க சுதந்திரத்துடன் இருக்கணும்.பிறகு அவங்களே அவங்க திருமணத்தை முடிவு பண்ணட்டும். ஏன்னா, சாதியைத்தாண்டி, மதத்தைத் தாண்டி திருமணம் செய்யும்போது வரதட்சணை என்பது குறையுது.
அப்புறம் வரதட்சணை பத்தியும், அதனால் என்ன பிரச்னை, அதை ஏன் வேண்டாம்னு சொல்றோம் என்பது குறித்தும் பள்ளி அளவில் இருந்தே விழிப்புணர்வாக தொடர்ந்து கொடுத்திட்டு வரணும்.
இரண்டு மனசு இணைகிற இடத்தில் சமமாக இருப்பதே முக்கியம். ஜனநாயகபூர்வமாக இருக்கணும்னா யாரும் பணம் கொடுக்கத் தேவையில்லை. பெண்களை ஒரு மாண்புடன் நடத்தினால் போதும். வரதட்சணைப் பிரச்னையே வராது...’’ அழுத்தமாகச் சொல்கிறார் சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான செல்வகோமதி.
பேராச்சி கண்ணன்
|