மாநில உரிமைக்காக தமிழகம் குரல் கொடுப்பதுபோல் மாகாண உரிமைக்காக நியூயார்க் குரல் கொடுக்குமா?
உலக மக்கள் பார்க்க விரும்பும் ஒரு நகரம் என்றால் அது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரமாகத்தான் இருக்கும். காரணம், உலகத்தில் உள்ள எல்லா நகரங்களையும்விட நியூயார்க் நகரம் பலவித புதுமைகளில் மிளிர்வது.  நியூயார்க்கில் சுமார் 800 மொழிகளை பேசக்கூடிய பன்மைத்துவமுள்ள மக்கள் இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே! இத்தோடு நிதி, வர்த்தகம், இயற்கையாக அமைந்த துறைமுகங்கள், கலாசாரம், ஃபேஷன், கலைகள், கட்டடங்கள், தொழில்நுட்பத்தில் எல்லாம் நியூயார்க்கை விட்டால் வேறு நகரங்களை மட்டுமல்ல... வேறு நாடுகளைக் கூட யாரும் கை காட்டமுடியாது. 
இச்சிறப்புகளுடன் கடந்தவாரம் நியூயார்க் நகரம் இன்னொரு புதுமையையும் வெகு விரைவில் காண இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதுதான் நியூயார்க் நகரம் மீண்டும் உலகளவில் ஒரு பேசு பொருளாகியிருக்கிறது.  அது, வரும் நவம்பரில் நடக்க இருக்கும் மேயருக்கான தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்பது.இந்தியாவில் மாநிலங்கள் என்பது மாதிரி அமெரிக்காவில் மாகாணங்கள் என்பது முக்கியமானது. அந்தவகையில் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அதில் ஒரு மாகாணம்தான் நியூயார்க். 
ஆனால், நியூயார்க் மற்ற மாகாணங்களைவிட மக்கள்தொகையில் பெரிது. சுமார் 84 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள். இதில் 30 லட்சம் பேர் பல நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள். அதாவது வேலை தொடர்பாக நியூயார்க்கில் வசிப்பவர்கள்.
இப்படியாக நியூயார்க் நகரம் ஒரு பன்மைத்துவம் உடைய நகரமாக இருந்தாலும் நியூயார்க் வாசிகளில் பலர் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் நிலைதான். ஒரு மாகாணம் சிறப்படைய அரசியல் முக்கியம். அதிலும் ஒரு மாகாணத்தின் மேயர் பதவி என்பது அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று.இதுவரை அமெரிக்காவின் மேயர் தேர்தல்களில் அமெரிக்கர்கள்தான் கோலோச்சினார்கள்.
ஆனால், நவம்பரில் நடக்க இருக்கும் நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியில் வந்த ஒருவர் போட்டிபோடப்போகிறார் என்பது அமெரிக்கர்களை மட்டுமல்லாது உலகத்தையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
அதிலும் அவர் ஓர் இஸ்லாமியர் என்பதும் கூடுதலாக கவனம் பெற வைத்திருக்கிறது. அவர் பெயர் சோரன் மம்தானி.மாமூத் மம்தானி என்பவரின் புதல்வர்தான் சோரன் மம்தானி.மீரா நாயரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘சலாம் பாம்பே’, ‘மிசிசிப்பி மசாலா’ போன்ற படங்களை எடுத்த இந்தியர். இந்த மீரா நாயருக்கும் மாமூத் மம்தானிக்கும் பிறந்தவர்தான் சோரன் மம்தானி.
மாமூத் மம்தானியின் பெற்றோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மாமூத் பிறந்தது பம்பாய் என்றாலும் சிறுவயதிலேயே குடும்பம் உகாண்டா நாட்டுக்குச் சென்றதால் படிப்பு, வேலை எல்லாம் மாமூத்துக்கு உகாண்டாவில்தான். மாமூத் மம்தானி எழுதிய அரசியல் கலாசாரப் புத்தகங்கள் உலகம் முழுக்க பிரபலம்.
அவரின் முதல் புத்தகமான ‘நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்’ தமிழில்கூட மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாமூத் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருந்தவர். மாமூத்தும், மீராவும் உகாண்டாவில் நடந்த உள்நாட்டுக் கலவரங்களால் 1990களில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். அப்படியாக சோரன் தன் 7வது வயதில் அமெரிக்க மண்ணை மிதித்தார். சரி... அமெரிக்காவின் வெள்ளையர் ஆட்சியில் சோரன் எப்படி விரிசலை ஏற்படுத்தினார்? அமெரிக்காவில் அதிலும் நியூயார்க்கின் மேயர் ஆகும் அளவில் சோரன் எதை சாதித்தார்?
இந்தியாவைப் போல எல்லாம் இல்லாமல் அமெரிக்காவில் இரு கட்சிகள்தான் உண்டு. ஒன்று டெமாக்ரடிக் கட்சி.
மற்றது ரிபப்ளிக் கட்சி. அமெரிக்க அதிபராக இப்போது இருக்கும் டொனால்ட் டிரம்ப் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவர். அதற்கு முன்னால் இருந்த ஜோ பைடன் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர். சோரன் டெமாக்ரடிக் கட்சிக்காரர். அதிலும் அந்தக் கட்சிக்குள்ளேயே இருந்த சிறு குழுவான டெமாக்ரடிக் சோஷலிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர். ஓகே. சோரன் மேயருக்கு போட்டியிடும் வாய்ப்பு எப்படி உருவானது?
தமிழ்நாட்டில் சட்டமன்றம் இருக்கிறது அல்லவா? அதுபோல அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு அசெம்பிளி இருக்கும். அப்படிப்பட்ட நியூயார்க் அசெம்பிளியில் நம்ம எம்எல்ஏ போல ஒரு பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் சோரன். இது நடந்தது 2021ல். டிரம்ப் ரிபப்ளிக் கட்சி சார்பில் அதிபராக இருந்தாலும் இன்று அந்த நகரத்தின் மேயராக இருப்பவர் ஒரு டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்தான்.
நவம்பரில் நடக்க இருக்கும் மேயர் தேர்தலுக்கு டெமாக்ரடிக் கட்சி, உட்கட்சி சார்பில் ஒரு புதிய வேட்பாளரை தேடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. காரணம், நடப்பில் இருக்கும் மேயரின் மேல் ஏகப்பட்ட புகார்கள். ஆகவே டெமாக்ரடிக் கட்சி கடந்தவாரம் ஒரு உட்கட்சித் தேர்தலை நடத்தியது.
இது நவம்பர் மாதம் நடக்க இருக்கும் மேயர் தேர்தலுக்கான ஆள் தேடும் படலம். போட்டி பலமாக இருந்தது. ஆண்ட்ரூ குமோ (Andrew Cuomo) என்பவர் சோரனுக்கு டஃப் கொடுத்தார். வயது, அனுபவம், பண பலம், ஆள் பலம் என குமோ தேர்தலில் இறங்கினார். ஆனால், சோரன் வேட்டியை மடித்துக் கட்டித் தெருவில் இறங்குவதுபோல மக்கள் முன் போய் நின்றார்.
முன்னாள் மேயர் ஆட்கள் தேர்தலுக்கு முன் வாயில் வடை சுடுவார்கள். இதற்கு மாறாக நியூயார்க்கின் உழைக்கும் வர்க்கத்தை குறிவைத்து சில திட்டங்களை சோரன் மக்கள் முன் வைத்தார்.
குழந்தைகளுக்கான கட்டாய மருத்துவ உதவி, வீட்டு வாடகையில் ஒரு நிலையான தன்மை, கார்ப்பரேட் - பணக்காரர்களுக்கு மேலும் வரி, கார் டிரைவர்களுக்கு பாதுகாப்பு, சொந்த வீடு, குறைந்தபட்ச வருமானம், அரசு சார்பிலேயே கார்ப்பரேஷன் மளிகைக் கடைகள்... என சாமானிய மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி சோரன் டெமாக்ரடிக் கட்சி சார்பில் மேயருக்கான முதல் கட்ட போட்டியில் பிரசாரத்தில் குதித்தார்.
வீடு வீடாகச் சென்றது, தெருவில் இறங்கி பேரணி, சோஷியல் மீடியாவில் பிரசாரம் என சாதாரண மக்கள் மத்தியில் போய் நின்றார் சோரன். என்றாலும் டெமாக்ரடிக் கட்சிக்காரர்கள் சோரனை தேர்தலில் ஆதரிக்கத் தயாராயில்லை. ஆதரித்தால்தானே சோரனை மேயர் தேர்தலில் போட்டியிட வைக்கமுடியும்?
ஆனால், சோரனின் தேர்தல் பிரசாரத்தால் கவரப்பட்ட நியூயார்க் வாசிகள் அவர் பக்கம் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். இது டெமாக்ரடிக் கட்சிக்காரர்கள் சிலரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. அவர்கள் மனம் கசியத் தொடங்கியது.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சிக்காரர்கள் பலர் சோரனின் பக்கம் சாயத் தொடங்கினர். கடைசியில் சோரன் இந்தத் தேர்தலில் 56 சதவீத வாக்குகளைப் பெற, அவருக்குப் போட்டியாக இருந்த சீனியர் குமோ வெறும் 44 சதவீத ஓட்டுதான் வாங்கினார். 50 எடுத்தாலே வெற்றி எனும் நிலையில் சோரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதிபர் தேர்தலில்கூட டிரம்பின் ரிபப்ளிக் கட்சிதான் நியூயார்க்கிலும் செல்வாக்குடன் அதிக ஓட்டுகளைப் பெற்றது. இது டெமாக்ரடிக் கட்சியின் சரிவாகத்தான் அப்போது பார்க்கப்பட்டது.
ஆனால், சோரன் இந்த முறை மேயருக்கான போட்டியில் அந்தக் கட்சியிலேயே செல்வாக்கான நபராக மாறியதைப் பார்த்த டிரம்ப், ‘100 பெர்சன்ட் கம்யூனிஸ்ட் முட்டாள்’ என சோரனை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு வந்தால் பார்ப்பீர்களா என்று ஒருமுறை ஒரு டிவி பேட்டியாளர் சோரனிடம் கேட்டார்.அதற்கு, ‘குஜராத்தில் கும்பல் கொலையை நிகழ்த்தியவரை நான் பார்க்க விரும்பவில்லை’ என்று சோரன் பதிலளித்தார்.
அதேபோல் ‘இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவுக்கு வந்தால் பார்ப்பீர்களா’ என்ற கேள்விக்கு, ‘அவர் உலக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவரை உடனடியாக கைது செய்வேன்’ என்றார்!
இவையெல்லாம் அமெரிக்காவின் சாதாரண குடிமக்களைக் கவர்ந்திருக்கிறது. ‘சோரன் மேயரானால் அமெரிக்கா ஒரு மாகாணத்துக்கு கொடுக்கவேண்டிய நிதியை நிறுத்திவிடுவேன்’ என டிரம்ப் தன் அதிரடியைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இச்சூழலில் நியூயார்க் மக்களைத்தான் சோரன் பெரிதும் நம்பியிருக்கிறார். இந்தியா போலவே கூட்டாட்சியோடு இயங்கும் நியூயார்க், தமிழ்நாட்டைப் போல (மாநில) மாகாண உரிமைகளுக்காக சண்டை போடும் காலம் சோரன் காலத்தில் உச்சம் தொடும் என்று மட்டும் நம்பலாம். பார்ப்போம், நவம்பரில் என்ன நடக்கிறது என்று. சோரன் ஜெயித்தால் உண்மை ஜெயிக்கும்.
டி.ரஞ்சித்
|