ரூ.620 கோடி வெல்லப்போவது யார் யார்..?
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூலை 13ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.35 கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனும், 2வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக பிரெஞ்சு ஓபனும், 3வது போட்டியாக விம்பிள்டனும், நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக அமெரிக்க ஓபனும் நடைபெறும். 
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரராக ஜன்னிக் சின்னரும் (இத்தாலி), மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவும் உள்ளனர்.
ஆடவர் பிரிவில் கடந்த 2 ஆண்டுகளாக பட்டம் வென்றுள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் இம்முறையும் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறார். அதேநேரத்தில் டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இம்முறை பட்டம் வெல்லும் உறுதியுடன் வந்துள்ளார்.
அவர் இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இம்முறை அவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (ஆடவர், மகளிர் இருபிரிவிலும்) வென்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
மகளிர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் இதுவரை ஒற்றையர் பிரிவில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆடவர் பிரிவில் ஜன்னிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), ஜாக் டிராப்பர் (இங்கிலாந்து), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் பட்டம் வெல்வதற்கு ஆயத்தமாகி உள்ளனர். மகளிர் பிரிவில் கடந்தாண்டு பட்டம் வென்ற பார்பரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு), முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) உள்ளிட்டோர் களம் கண்டுள்ளனர்.விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அறிவித்துள்ளது.
இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனை தலா சுமார் ரூ.35 கோடியை பரிசுத்தொகையாக பெறுவர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11.1 சதவீதம் கூடுதல். 2வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.17.75 கோடி பரிசாகக் கிடைக்கும். இரட்டையர் போட்டிகளில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.8 கோடி வழங்கப்படும்.
காம்ஸ் பாப்பா
|