34 வருஷம் அங்கன்வாடியில் வேல... இப்ப நடிகை...



இது சாப்த்தூர் விஜயலட்சுமியின் கதை

கஸ்தூரி பாட்டி (‘மயக்கம் என்ன’), ராகுல் தாத்தா (‘நானும் ரவுடிதான்’), டான்சிங் ரோஸ் (‘சார்பட்டா பரம்பரை’), ஏஜெண்ட் டீனா(‘விக்ரம்’), கான்ஸ்டபிள் நெப்போலியன் (‘கைதி’ ஜார்ஜ் மரியான்)... இப்படி பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் தகுந்த அடையாளமும் அங்கீகாரமும் இல்லாமல் இருக்கும் நடிகர்கள் சட்டென ஒரே ஒரு கதாபாத்திரத்தில் அல்லது ஒரு காட்சியில் மொத்த பார்வையாளர்களையும் கைதட்ட வைத்து விடுவார்கள்.

இப்படி சினிமா கடந்து வந்த திடீர் ட்ரெண்டிங் நடிகர்கள் ஏராளம். இதோ அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் சாப்த்தூர் விஜயலட்சுமி. ‘‘34 வருஷங்களா பஞ்சாயத்து அங்கன்வாடிகள்ல ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, மதிய உணவு, ஊட்டச்சத்து மாவு, முட்டை இதெல்லாம் கொடுக்கிறதுதான் எனக்கு வேலையா இருந்துச்சு.

ஆனா, இன்னைக்கு ஒரு குழந்தையை கடத்துறவளா வந்து பிரபலம் ஆகியிருக்கேன்...’’ சுருங்கிய கன்னங்கள் மேலும் சுருங்க சிரிக்கிறார் 70 வயது விஜயலட்சுமி ‘டிஎன்ஏ’ படத்தில் மருத்துவமனைகளில் குழந்தைகளை கடத்திச் செல்லும் வயதான முறுக்கு, தின்பண்டங்கள் விற்கும் பாட்டியாக நடிப்பில் அசத்தி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார் சாப்த்தூர் விஜயலட்சுமி.

‘கயல்’ படத்தில் கயல் ஆனந்திக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜயலட்சுமி, 30க்கும் மேலான படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறார். இப்போது ‘டிஎன்ஏ’, அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. ‘‘சொந்த ஊரு மதுரையிலிருந்து ரெண்டு மணி நேரம் பயணம் செஞ்சா வருகிற சாப்த்தூர். மலை அடிவாரத்துல வீடு. பத்தாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். ஆனா, முழுசா முடிக்கலை.

அப்பா சண்முகநாதன், பாரஸ்ட் ஆபீசர். அம்மா வரதம்மா. வீட்டில் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தாங்க. அவர் பெயர் புளுகாண்டி. விவசாயம்தான் அவருக்குத் தொழில். ஒரு கட்டத்துல விவசாயத்துக்கு பெருசா வேலை இல்லாம குறைஞ்சிடுச்சு. என்னவோ நல்லாதான் இருந்தார் மனுஷன்... ஆனா, புள்ளைங்க பிறந்ததும் கஷ்டம் அதிகம். குடிக்க ஆரம்பிச்சாரு. அப்படியே எங்களுக்குள்ள சண்டை சச்சரவு, தினம் பிரச்னைதான்.

ஒரு கட்டத்துக்கு மேல பொறுக்க முடியாம ‘உன் கூட வாழ்ந்த வாழ்க்கை போதும்’னு என் ஐயா(அப்பா) வீட்டோட வந்துட்டேன். மூணு பிள்ளைங்க. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. மூணையும் காப்பாத்த ஏதாவது வேலை பார்த்துதானே ஆகணும்?

அப்படிதான் என் ஐயா ஏற்கனவே கவர்மெண்ட் உத்தியோகத்துல இருந்த காரணத்தால எனக்கு அங்கன்வாடியில வேலை வாங்கிக் கொடுத்தார். 90 ரூவா சம்பளம்.

காலையிலேயே ஒவ்வொரு குழந்தைகளும் எடை பார்த்து அவங்களுக்கு ஏத்த மாதிரி ஊட்டச்சத்து உருண்டைக கொடுக்கணும். மதியம் அங்க இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பாடு சமைப்போம். அந்த சாப்பாட சாப்பிடறதுக்காகவே புள்ளைங்க எல்லாம் ஓடிவரும்.

மாசமா இருக்க பொண்ணுங்க கூட அந்த சோறு சாப்பிட நல்லா இருக்கு அப்படின்னு தூக்கு சட்டிய தூக்கிட்டு வருவாங்க. 2014 வரைக்கும் அங்கதான் வேலை செய்தேன். அந்த வேலையிலதான் எனக்கு இப்ப பென்ஷனும் வருது...’’ பல நினைவுகள் ஒருசேர பேசிக்கொண்டிருந்த விஜயலட்சுமி சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி என விவரித்தார்.

‘‘என் வீட்டுக்காரர் சாப்த்தூர் அரண்மனை நிலத்துலதான் வேலை செய்தாக. நான் அரண்மனையில வேலை செய்தேன். அங்க வேலை செய்திட்டு இருந்தப்பதான் பிரபு சாலமன் சார் ‘கயல்’ படத்துக்காக அங்கே வந்தார்.

படப்பிடிப்பெல்லாம் முடிஞ்ச கையோட பொருட்களை எல்லாம் அங்கேயே வச்சுட்டு அவங்க ரூமுக்கு போயிடுவாங்க. அதிகாலையில வந்து அந்த பொருட்களை எல்லாம் பாதுகாக்கிறது எனக்கு வேலை. ராஜாவுக்கு, பிரபு சாலமன் சார் சிநேகிதர். அதனால் இந்தப் பொருட்களை எல்லாம் பத்திரமா பாத்துக்கணும்னு எனக்கு சொல்லியிருந்தாங்க. அங்க அதிகமா ஷூட்டிங் எல்லாம் எடுக்க மாட்டாங்க. பர்மிஷனும் கிடைக்காது.

அதனால ஊரே திரண்டு வந்து அந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தாங்க. இந்தக் கூட்டத்துக்கு நடுவுல எந்தப் பொருள் காணாமல் போனாலும் யாரையும் கேட்க முடியாதுனுதான் என்னைப் பார்த்துக்க சொன்னாங்க. 

இப்படியான நேரத்துலதான் பிரபு சாலமன் சார், ‘ஒரு கேரக்டர் இருக்கு... நீங்க நடிக்கிறீங்களா’னு கேட்டார். எனக்கு படபடன்னு வந்துருச்சு. ‘அதெல்லாம் சினிமா தியேட்டர்ல பார்த்தது, இப்ப டிவி வரவும் பார்க்கறேன். நடிப்பு பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது சார்’னு சொன்னேன்.

‘அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லைம்மா... நான் சொல்லிக் கொடுக்கிறதை அப்படியே செய்தால் போதும்’னு சொன்னார். அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்தேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. 

இப்ப கடைசியா ‘செம்பி’ வரை என்னை தவறாமல் கூப்பிட்டு இருக்கார். ‘தொடரி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மெய்யழகன்’, ‘சங்கத்தமிழன்’... இப்படி 30 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். இப்ப ரெண்டு சீரியல்களில் நடிச்சிட்டு இருக்கேன். இது இல்லாம நான்கைந்து படங்களும் நடிச்சு முடிச்சிருக்கேன்...’’ என்றவர், ‘டிஎன்ஏ’ படத்தில் தனது கேரக்டர் பற்றி தொடர்ந்தார்.

‘‘படத்துல வேலை செய்த அசிஸ்டென்ட் டைரக்டர்தான் என்னை கூப்பிட்டாங்க. ஆடிசன் எல்லாம் வச்சு பார்த்தாங்க. வீடியோவை பார்த்ததும் இயக்குநர் நெல்சன் சார் உடனே ஓகே சொல்லிட்டார். அப்ப கூட எனக்குத் தெரியாது எனக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் இருக்கும்னு. ஆரம்பத்தில் ஒரு நாள் இரண்டு நாள் இருக்கும்னு சொன்னாங்க. ஆனா, தொடர்ந்து எனக்கான சீன் இருந்துச்சு. அந்த டயலாக் கூட இயக்குநர் சொல்லிக் கொடுத்து பேசுனதுதான்.

‘சும்மா ஏதாவது பேசாத, குப்பைத்தொட்டி, சாக்கடை இப்படி எத்தனை குழந்தைங்க கிடந்து அது எல்லாம் இன்னைக்கு பெரிய பெரிய வீட்ல சொகுசா வாழுது. அதெல்லாம் என்னாலதான்...’ இப்படி வசனம் பேசச் சொன்னார். அந்த வசனத்தைதான் இப்ப எல்லாரும் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பத்து வருடங்களா நடிச்சிட்டு இருக்கேன். நிறைய பேர் என்னை கூப்பிட்டு பாராட்டுறாங்க. பேட்டிகள் கேக்கறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பிரபு சாலமன் சார் 5000 ரூபா கொடுத்து ஆரம்பிச்சு வச்சாரு. இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் 5000 ரூபாய் வாங்கறேன். என் பிள்ளைகள எல்லாம் கட்டிக் கொடுத்து, பேரன் பேத்திகள் கூட காலேஜ்ல படிக்கிறாங்க. பெரிய பையன் இறந்துட்டார். சின்ன பையன் கோயம்புத்தூரில் கவர்ன்மெண்ட் பஸ் டிரைவராக வேலை செய்கிறார். படப்பிடிப்பு இருந்தால் அவங்களே ரூம் போட்டுக் கொடுப்பாங்க. சீரியல் மாதிரி தொடர்ந்து நடிக்கணும்னா நானே பக்கத்தில் வீடு எடுத்து தங்கிப்பேன்.

பென்ஷன் 2000 ரூபாய் வருது. ஆனா, அது இன்னும் கொஞ்சம் அதிகமா கிடைச்சா நல்லா இருக்கும். எனக்காவது இன்னொரு வேலை இருக்கு. ஆனா, என் கூடவே வேலை செய்த நிறைய பேருக்கு இந்த பென்ஷன்தான் வாழ்வாதாரமே. இன்னும் கொஞ்சம் ஏத்தி கொடுத்தா அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும்...’’ எதிர்பார்ப்புகள் கண்களில் மின்ன அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து அக்கறையுடன் பேசி முடித்தார் சாப்த்தூர் விஜயலட்சுமி.

செய்தி: ஷாலினி நியூட்டன்

 படங்கள்: ஆ.வின்சென்ட் பால்