மூன் ரெசார்ட்!
துபாய் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, அதன் ஆடம்பரமும், விண்ணைத் தொடும் உயர்ந்த கட்டடங்களும்தான். ஆனால், 2027க்குப் பிறகு துபாய் என்றாலே ‘மூன் ரெசார்ட்’தான் முதலில் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது இந்த ரெசார்ட்.
 அதென்ன மூன் ரெசார்ட்?
கனடாவைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், துபாயில் நிலா வடிவத்தில் மாபெரும் ரெசார்ட்டைக் கட்டப்போகிறது. துபாயின் முக்கியமான இடங்களில் ஒன்றான பாம் ஜுமேரியாவுக்கு அருகில் வரப்போகிறது மூன் ரெசார்ட்.  கோள வடிவில் வடிவமைக்கப்படும் இந்தக் கட்டடத்தின் உயரம் 735 அடி. இதில் 4000 சொகுசு அறைகளும், 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட 300 நவீன வீடுகளும், 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கமும் வரப்போகின்றன. இதுபோக உலகின் முன்னணி பிராண்டுகளின் கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உணவகங்கள் என அனைத்து முக்கியமான வணிக விஷயங்களும் வரப்போகின்றன. 
நிலாவில் நடப்பதைப் போன்ற உணர்வைத் தரும் வகையில் இந்த ரெசார்ட்டை வடிவமைத்திருக்கின்றனர். இதற்காக விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின்படி, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த மூன் ரெசார்ட்டை இன்னும் இரண்டு வருடங்களில் கட்டி முடித்துவிடுவார்கள். 2027ம் வருடம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெசார்ட்டைக் கட்டுவதற்கு இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம் கோடி பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. துபாயின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை விரிவாக்கவும் இந்த மூன் ரெசார்ட் வரப்போவதாகச் சொல்கின்றனர்.
முக்கியமாக பூமியிலேயே விண்வெளி சுற்றுலா அனுபவத்தை தரவேண்டும் என்பது மூன் ரெசார்ட்டின் நோக்கம். இந்த ரெசார்ட் திறந்த பிறகு வருடத்துக்கு 25 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் வரப்போகும் மூன் ரெசார்ட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, வட அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள நான்கு இடங்களில் இதே மாதிரி மூன் ரெசார்ட்டுகளைக் கட்டுவோம் என்கிறார் கனடாவைச் சேர்ந்த கட்டுமானத்தின் நிறுவனர் மைக்கேல் ஹெண்டர்சன்.
த.சக்திவேல்
|