Must Watch
 கம்பேனியன்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஆங்கிலபபடம், ‘கம்பேனியன்’. இப்போது ‘ஹாட்ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது. முதன்முதலாக தனது பாய் ஃபிரண்டான ஜோஸை சந்திக்கிறாள் ஐரிஸ்.
பிறகு இருவரும் சேர்ந்து தன்னந்தனியாக ஏரிக்கரையோரம் இருக்கும் ஒரு வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கே நண்பர்களான கேட், எலி, பாட்ரிக், சர்ஜியும் இருக்கின்றனர். கேட்டின் பாய் ஃபிரண்டுக்குச் சொந்தமான வீடு அது. நண்பர்கள் எல்லோரும் அங்கே ஜாலியாக பொழுதைக் கழிக்கின்றனர்.
இச்சூழலில் ஐரிஸின் மீது சர்ஜிக்கு ஈர்ப்பு உண்டாகிறது. அடுத்த நாள் ஏரியில் தனியாக இருக்கும் ஐரிஸுடன் தவறாக நடந்துகொள்ள முயல்கிறான் சர்ஜி. தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு சர்ஜியைக் கொன்றுவிடுகிறாள் ஐரிஸ். மகிழ்ச்சியாக இருந்த இடம் ஒரே களேபரமாக மாறுகிறது. ஐரிஸ் வீட்டுக்குள் வந்து நடந்ததை ஜோஸிடம் தெரிவிக்கிறாள்.
ஐரிஸ் ஒரு பெண் அல்ல; கம்பேனியன் ரோபோ என்று தெரியவர, சூடுபிடிக்கிறது திரைக்கதை.சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் வகைமை படங்களை விரும்புகிறவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. ஐரிஸ் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் ஷோபி தாட்சர். இப்படத்தின் இயக்குநர் ட்ரூ ஹேங்காக். ஒன் லவ்
ஜமைக்காவின் பிரபல பாடகரான பாப் மார்லியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தழுவி உருவாகியிருக்கும் ஆங்கிலப் படம், ‘ஒன் லவ்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. ஜமைக்காவில் 1976ல் அரசியல் சூழ்நிலை சரியில்லை. எங்கேயும் அமைதியற்ற நிலை. அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. வீட்டைவிட்டு வெளியில் வரவே மக்கள் பயப்படுகின்றனர்.
இந்நிலையில் அமைதி திரும்புவதற்காக ஓர் இசைக் கச்சேரியை ஜமைக்காவில் நடத்தப் போவதாக அறிவிக்கிறார் பாப் மார்லி. இசைக் கச்சேரிக்காக தயாராகிக் கொண்டிருக்கும்போது ஒரு கும்பலால் பாப் மார்லியும், அவரது குழுவினரும் சுடப்படுகின்றனர்.
பாப் மார்லிக்குக் கையில் காயம் ஏற்படுகிறது. அவரது மனைவிக்கு தலையில் காயம். இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு நெஞ்சில் காயம் என்று எல்லோருமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களே தன்னையும், மனைவியையும், குழுவினரையும் தாக்கியது குறித்து மிகவும் வருத்தமடைகிறார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இசைக் கச்சேரி நடந்ததா? மார்லி என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.படத்தின் இயக்குநர் ரெய்னால்டோ மார்கஸ் கிரீன்.
நரிவேட்டை
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப் படம், ‘நரி வேட்டை’. இப்போது ‘சோனி லிவ்’வில் காணக்கிடைக்கிறது.நல்ல அரசு வேலைக்குப் போக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான், வர்கீஸ்.
ஆனால், அவனுக்கு உரிய வேலை எதுவும் கிடைப்பதில்லை. கடைசியாக கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்குப் போக வர்கீஸுக்கு மனமில்லை. அவனுக்கு ஒரு காதலியும் இருக்கிறாள். வேலைக்குப் போகாமல் வெட்டியாக இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் அவனுக்கு மரியாதை இல்லை.
வேண்டா வெறுப்புடன் கான்ஸ்டபிள் வேலைக்குச் செல்கிறான் வர்கீஸ். வயநாட்டில் மலைவாழ் மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த டிஐஜியின் தலைமையில் ஒரு குழு செல்கிறது.
அதில் வர்கீஸும் இருக்கிறான். மலைவாழ் மக்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள்? அந்தப் போராட்டத்தை தடுப்பதற்காக காவல்துறையினர் என்ன செய்கின்றனர்? வர்கீஸ் என்னவாகிறான் என்பதை அழுத்தமாகச் சித்திரிக்கிறது அரசியல் திரைக்கதை.உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கியிருக்கிறார் அனுராஜ் மனோகர். சுசீலா சுஜீத்
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளைக் குவித்து வரும் மராத்தி மொழிப்படம், ‘சுசீலா சுஜீத்’. மகாராஷ்டிராவில் ஒரு முக்கியமான நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது கணவன் ரமாகாந்துடன் வசித்து வருகிறாள் சுசீலா.
அதுவும் 36வது மாடியில் இருக்கிறது சுசீலாவின் வீடு. அவர்கள் வீட்டில் உள்ள படுக்கையறையின் கதவு பழுதாகிவிடுகிறது. ஒருமுறை கதவை மூடிவிட்டால், உள்ளேயிருந்து அதை திறக்க முடிவதில்லை. தவிர, குளியலறையிலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. இதைச் சரி செய்வதற்காக சுஜீத் என்ற பிளம்பரை அழைக்கிறார் ரமாகாந்த். சுஜீத் வருவதற்குள் வேலைக்குச் சென்று விடுகிறார் ரமாகாந்த். சுசீலா மட்டுமே வீட்டிலிருக்கிறாள்.
குளியலறையிலும், படுக்கையறையிலும் என்ன பிரச்னை என்று சுசீலா சுஜீத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது பலமாக காற்று அடிக்கிறது.
அதில் படுக்கையறையின் கதவு மூடிவிடுகிறது. உள்ளே சுசீலாவும், சுஜீத்தும் இருக்கின்றனர். உள்ளேயிருந்து கதவைத் திறக்க முடியாது. இந்த தர்மசங்கடமான சூழலிலிருந்து இருவரும் எப்படி வெளியேறினார்கள் என்பதே மீதிக்கதை.படத்தின் இயக்குநர் பிரசாத் ஓக்.
தொகுப்பு: த.சக்திவேல்
|