நம்ம வீட்டுக் கதைதான் இந்த ‘தலைவன் தலைவி’!
தமிழ் சினிமாவின் வெற்றிப்பட இயக்குநர்களில் முக்கியமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டித் தூக்கியவர். ‘பசங்க‘, ‘மெரீனா’. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற பல ஹிட் கொடுத்தவர். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களை இயக்கியவர்.
 இப்போது முதன் முறையாக விஜய் சேதுபதியை வைத்து ‘தலைவன் தலைவி’ இயக்கியுள்ளார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ரிலீஸ் பரபரப்பில் இருந்த பாண்டிராஜ் நேரம் கொடுத்து நம்மிடம் பேசினார்.
படத்துக்கான தலைப்பில் கம்பீரம் தெரியுதே?
‘தலைவன் தலைவி’ என்று சொல்லும்போதே அது ஒரு கம்பீரமான தலைப்புதான். இந்தச் சொல்லாடல் சங்க இலக்கியங்களிலிருந்து தொடர்கிறது. அது படத்துக்கு சரியான தலைப்பாகவும் இருந்துச்சு. நிறைய பேர் ‘இப்படியொரு தலைப்பு இவ்வளவு நாள் எப்புடி யாரும் வைக்கல’னு கேட்டாங்க. இந்தப் படத்துக்கு என்றே அந்தத் தலைப்பு காத்திருந்துச்சுன்னுதான் சொல்லணும். பொதுவா பேச்சுவாக்குல சிலரைத் ‘தலைவா’ என்றும், அரசியல்வாதிகளை ‘தலைவா’ என்றும், பிடிச்ச நடிகரை ‘தலைவா’என்றும் சொல்வாங்க. ‘தலைவா’ என்பது அன்றாட வாழ்க்கையில் உள்ள சொல். ரேஷன் அட்டையில் கணவனை குடும்பத் தலைவர், மனைவியை குடும்பத் தலைவி என்று குறிப்பிடுவது மாதிரிதான் இதுல அர்த்தப்படுத்தியுள்ளோம்.
கல்யாணமாகாதவர்களுக்கு அவர்களுடைய அப்பா, தலைவன், அம்மா தலைவி. இந்தப் படத்துக்கு ‘தலைவன் தலைவி’ பொருத்தமான தலைப்பு என்பதால் அதையே செலக்ட் பண்ணிட்டோம்.
இந்தப் படத்துல வர்ற ஆகாச வீரன், பேரரசி, சித்திரை, பொற்செல்வன், அரசாங்கம், அமரசிகாமணி, நயினாவதி, ராகவர்த்தினி, பொட்டு, ஆவர்ணம், செம்பையா, ஒத்தாசை, மகிழினி... என எல்லாருடைய பேரும் தமிழில் இருப்பதால் தலைப்பையும், கேரக்டர்கள் பேர்களையும் சோஷியல் மீடியாவுல கொண்டாடும்போது சந்தோஷமா இருக்கு. உங்கள் படங்களில் சமூகப் பார்வை இருக்கும்.
டீசரைப் பார்க்கும்போது உணவு அரசியலை பேசுவீங்கன்னு எதிர்பார்க்கலாமா?
இந்தப் படத்துல ஒரு குடும்பமே சேர்ந்து ஹோட்டல் நடத்துறாங்க. மதுரை ஒத்தக்கடையில அந்த ஹோட்டல் நடக்குது. அந்த ஹோட்டலுக்குள் உள்ள உணவுகளின் வெரைட்டி சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். உணவுப் பிரியர்களுக்குப் பிடிச்ச படமாகவும் இருக்கும். படம் பார்க்கும்போது இடைவெளி நேரத்துல இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கணும்னு சொல்லத் தோணும். படம் முடிஞ்சதும் நேரா ஹோட்டலுக்கு போகணும் என்ற தூண்டுதலைக் கொடுக்கும்.
ஏனெனில், இதுல விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டரா வர்றார். அதுக்காக அவர் இரண்டு மாசம் பரோட்டா கிச்சன் செட்டப்பை உருவாக்கினார். ஆபீசுக்கு வர்ற எல்லாருக்கும் பரோட்டா போட்டுக் கொடுத்ததோடு, ‘டேஸ்ட் எப்படியிருக்கு’ன்னு அவங்க சொல்வதைக் கேட்டு அந்த கேரக்டராகவே மாறினார். படப்பிடிப்புலேயும் அது தொடர்ந்துச்சு.
சில பேர் விஜய் சேதுபதி சார் கையால பரோட்டா சாப்பிடுவதற்காகவே சாப்பிடாம இருப்பாங்க. பரோட்டா மட்டும் கிடையாது. சிக்கன் ஃப்ரை, மட்டன் ஃப்ரை, ஆஃப் பாயில், முட்டை மாஸ், சாக்லேட் பரோட்டா, இளநீர் பரோட்டா, தர்பூசணி பரோட்டா என புதுசு புதுசா வெரைட்டியான அயிட்டங்களை சமைக்கக் கத்துக்கிட்டார்.
இதுல உணவு அரசியல் இருக்காது. ஆனா, அரசியல் அங்கங்கே இருக்கும். குடும்பத்துக்குள் நடக்கும் ஓர் அழகான கதை. உங்கள் குடும்பக் கதை கண்டிப்பாக இந்த படத்துக்குள் தெரியும்! ‘எங்கள் குடும்பக் கதையை திருடி விட்டீர்கள் பாண்டிராஜ்’ என்று நெறைய பேரு சொல்லலாம்.
முதன் முறையாக விஜய் சேதுபதியை இயக்கிய அனுபவம் எப்படி இருந்துச்சு?
சினிமாவுக்கு வந்து 17 வருஷங்களாயிடுச்சு. ஏன் இவ்வளவு நாள் அவருடன் வேலை செய்யவில்லை என்ற ஃபீல் அவருடன் வேலை செய்யும்போது கொடுத்துச்சு. சேர்ந்து ஒர்க் பண்ணுவதற்கான நேரம் அமையவில்லை. அவருடைய ஸ்டைல் ஆஃப் ஆக்டிங் அழகா இருக்கும். ஒரு காட்சியை நிதானமா படிப்பார். படிச்சுட்டு ‘ஐயா சீன் பிரமாதமா இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க’ன்னு மனசுவிட்டு பாராட்டுவார்.
அந்தக் காட்சியை எடுத்து முடிச்சதும் ‘நல்லா நடிச்சிருக்கீங்க’னு சொன்னதும் ‘ஐயா அப்படி இல்ல, உங்க எழுத்து அப்படி இருந்துச்சு. ஸ்கிரிப்ட்ல இருக்கிறதை அப்படியே பண்ணிடனும் என்ற பயம் இருந்துச்சு. ஒருவேளை பயந்து பயந்து பண்ணியதால நல்லாயிருந்திருக்கும்’னு ரொம்ப தன்னடக்கத்தோடு சொல்லுவார். எனக்கும் அவரை அடுத்த சீன்ல இன்னும் நிறைய பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கும்.
பேப்பரில் என்ன சீன் எழுதியிருந்தாலும் அந்தப் பேப்பர்ல இருந்ததைவிட பெட்டரா பண்ணிடனும்னு நினைப்பார். அவர் செட்டுக்கு வரும்போதே ஆர்வமா இருக்கும்.
‘நேத்து சிறப்பா இருந்துச்சு. இன்னிக்கு என்ன எடுக்கப்போறோம்’னு கேட்பார். அது எனர்ஜியா இருக்கும். செட்டுக்கு வந்துட்டா கூடவே இருப்பார்.
எல்லாரிடமும் சகஜமா பேசுவார். உதவியாளர்கள், லைட்மேன் என எல்லோருடைய உழைப்பையும் கவனிச்சு பாராட்ட மறக்கமாட்டார்.
யாராவது நின்னு கையை காமிச்சா அவங்ககிட்ட நின்னு பேசுவார். கேரவன்ல இருந்து ஸ்பாட்டுக்கு வருவதற்கே அரை மணி நேரமாகும். ஏனெனில், வழியில அவ்வளவு பேரிடமும் பேசி, கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து, போட்டோ எடுத்தபிறகுதான் வருவார்.கடந்து வந்த பாதையை அடிக்கடி நெனைச்சு பார்ப்பார் போலனு புரிஞ்சுகிட்டேன். அவர்களால்தான் நாம நல்லாயிருக்கிறோம்னு உணர்வதை பார்க்க முடிஞ்சது. அவருடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம்.
நித்யா மேனனை நாயகியாக எப்படித் தேர்வு செய்தீங்க?
இந்தக் கதையை எழுதும்போதே ‘நீ பாதி நான் பாதி’ என்பதுபோல் இருவருக்கும் 50 - 50 சதவீதம் ஈக்குவல் கேரக்டராக இருக்கும்படி எழுதினேன். டைட்டில் 50 - 50 என்று கூட வைக்கலாம். அப்படியொரு கதை.
விஜய் சேதுபதி சார் ஆகாசவீரனா இருக்கும்போது, நித்யா மேனன் பேரரசியா இருந்தாதான் நல்லாயிருக்கும் தோணுச்சு.தயாரிப்பாளரிடம் கதை சொல்லும்போதே நித்யா மேனன் நாயகின்னு சொன்னேன். லவ் சீன், எமோஷனல் சீன் என எந்த சீனா இருந்தாலும் அதுல பல பரிமாணங்களை வெளிப்படுத்துவார். படத்துல லவ் சீன் இருக்கு. கணவன், மனைவிக்கிடையே ஆர்க்யூமெண்ட் இருக்கு.
குழந்தைக்கு அம்மாவா இருக்கணும். மருமகளா இருக்கணும். நாத்தனாரா இருக்கணும். அப்படி எல்லா இடத்திலும் டஃப் கொடுக்கணும். அதே சமயம் எல்லாருக்கும் பிடிச்சவராகவும் இருக்கணும். அது எல்லாமே நித்யாவிடம் இருந்துச்சு.
என் படங்களில் நான் நினைச்சு எழுதிய கதாநாயகிகள் படத்துக்குள் வரமாட்டாங்க. ஆனால், இந்தப் படத்தில் இவர்தான் வேணும்னு தெளிவா இருந்தேன். தயாரிப்பு நிறுவனமும் அதை ஏத்துக்கிட்டாங்க. பேரரசி கேரக்டரை எவ்வளவு பெஸ்ட்டா தரமுடியுமோ அவ்வளவு சிறப்பா கொடுத்திருக்கார். வழக்கம்போல் பெரிய நட்சத்திர பட்டாளம் திரண்டு இருக்காங்களே?
ஆமா. இதுல பெரிய கூட்டம் இருக்கு. கதை எழுதும்போது 10 கேரக்டர்ல முடிச்சுடணும்னு நினைப்பேன். ஆனா, எழுதும்போது கேரக்டர் விரிவடையும். ஆனாலும் எத்தனை கேரக்டர் வந்தாலும் அத்தனை கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
யோகிபாபுவுக்கு படம் முழுக்க வர்ற ரோல். காமெடியை மீறி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவும் இருப்பார். விஜய் சேதுபதி சாருடைய அம்மாவா தீபா வர்றார். மனோரமா ஆச்சி மாதிரி தீபா. காமெடி, வில்லத்தனம், எமோஷனல் என எல்லா வெரைட்டியும் பண்ணக்கூடியவர். ‘பருத்திவீரன்’ சரவணன் சார், தீபா கணவரா வர்றார். இருவருக்குமான காம்பினேஷன் நிஜமான தம்பதி மாதிரி இருக்கும். அந்தளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியிருக்கும். நாயகியோட தங்கச்சி கேரக்டர்ல வர்ற ரோஷிணி அழகாக பண்ணினார். செம்பன் விநோத் கேரக்டர் புதுசா இருக்கும். அவருக்கு பல பரிமாணம் இருக்கும். ஆர்.கே.சுரேஷ் மீசைய முறுக்கிவிட்ட வில்லன் மாதிரி பார்த்திருப்போம். இதுல அவருக்கு வேற பரிமாணம் கிடைக்கும்.
காளி வெங்கட், மைனா ஃபேமிலி தனி கதையா வரும். அவர்களுடைய கேரக்டர் பலருடைய குடும்பங்களை கனெக்ட் பண்ணும். ஷூட்டிங் எடுக்கும்போதும் சரி, டப்பிங் பண்ணும் போதும்சரி அழாதவங்க இருக்க மாட்டாங்க. சென்றாயன் இருக்கிறார்.
இவ்வளவுதான் லிஸ்ட்னு நினைக்காதீங்க. இன்னும் சில சஸ்பென்ஸ் கேரக்டர் இருக்கு. படம் பார்க்கும்போது அது சுவாரஸ்யமா இருக்கும். கூட்டமா இருந்தாலும் அந்தக் கூட்டம் எல்லாருக்கும் பிடிச்ச கூட்டமா இருக்கும். ஒரு குட்டி தேவதை மகிழினி இருக்கா. விமர்சனத்துலே திருஷ்டி சுத்தி போடுங்கனு நீங்க எழுதுவீங்க! ‘பொட்டல முட்டாயே...’ பாடல் சூப்பர் ஹிட். சந்தோஷ் நாராயணன் உடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்துச்சு?
பாடல் பெரிய ஹிட். ரீல்ஸ் பறக்குது. அடுத்து ‘ஆகாச வீரன்னு...’ காதல் பாடல் வரப்போகுது. சந்தோஷ் நாராயணனுடன் எனக்கு இதுதான் முதல் படம். 5 பாடல்கள். எல்லாமே வெரைட்டியா வந்திருக்கு. எல்லாமே, எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன். அவருடன் வேலை செய்யும்போது ஜாலி வைப் கிடைக்கும். அவருடைய சவுண்டிங் எனக்கு பிடிக்கும். பின்னணி இசை பிரமாதமா இருக்கும் இசைக் கோர்வை லண்டனில் நடக்கிறது.
ஒரு படத்துக்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் முக்கியம். எம்.சுகுமார் அசத்தியிருக்கிறார். எடிட்டிங் பிரதீப் ராகவ். ஒரு படத்துக்கு இயக்குநர், கேமராமேன், மியூசிக் டைரக்டர், எடிட்டர் என நாலு பேரும் வேலையை சரியா செய்யணும். அப்படி இதுல அவரவர் வேலையை சரியா செஞ்சிருக்கோம்னு நம்புறேன். பாத்துட்டு சொல்லுங்க.
எஸ்.ராஜா
|