ஏழைக் குழந்தைகளைக் காவு வாங்கும் அமெரிக்கா..?
அமெரிக்கா இதுவரை ஏழைகள் பெரும்பாலும் வாழும் மூன்றாம் நாடுகளுக்கு மனிதாபிமானமிக்க நிதி உதவிகளை செய்து வந்தது. இதனால் ஏழைக் குழந்தைகள் பலனடைந்தனர்.

இப்பொழுது இந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்துகிறது; நிறுத்திவிட்டது. காரணம், டிரம்ப்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதும் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
இதனால் வரும் 2030ம் ஆண்டுக்குள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழைகளில் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பேர் சுகாதாரக் கேடால் பலியாகலாம் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு வெளியாகி உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன் பண பலத்தால் பல்வேறு ஏழை மற்றும் மத்திய தர நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவிகளை செய்யத் தொடங்கியது. ஒருவகையில் அந்நாட்டிலுள்ள வளங்களை சொந்தமாக்கத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது... அதற்கு பிராயச்சித்தம்தான் இது என்றாலும் இந்த நிதி உதவிகள் அந்நாட்டிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு பலனளித்தது என்பதை மறுப்பதற்கில்லை.
இப்படியாக சுமார் 60 நாடுகள் அமெரிக்க உதவியால் பலனடைந்து வந்தன. இதுவரை இந்த உதவிகளால் 2001 மற்றும் 2021க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில் இந்த நாடுகளில் உள்ள ஏழைகளில் சுமார் 9 கோடிப் பேரின் இறப்பை அமெரிக்கா தடுத்திருக்கிறது.
இந்த ப்ராசஸுக்குதான் இப்பொழுது அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபரானதும், தன் நண்பரும், அமெரிக்காவின் பலம் வாய்ந்த செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் இந்த நிதிஉதவிகள் எல்லாம் வேண்டாத ஆணிகள் என நிறுத்தினார். இதுதான் 2030ம் ஆண்டுக்குள் பல உயிர்களைக் காவு வாங்கும் என ஆய்வு செய்திருக்கிறது பிரபல மருத்துவ இதழான ‘லான்சட்’. மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழைகள் பல்வேறு நோய்களால் இறந்துபோக இருந்தனர். 2001 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் இந்த உதவிகளால் இப்பலி தடுத்து நிறுத்தப்பட்டது. அந்தவகையில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சுமார் 15 சதவீத மக்களை இந்த நிதி உதவிகளே காப்பாற்றின.
இதில் சுமார் 32 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்ததக்கது. 15 சதவீத மக்கள் என்றால் சுமார் 9 கோடிப் பேர் என ‘லான்சட்’ இதழ் கணக்குக் காட்டுகிறது. இதன்படி நிதி உதவி நிறுத்தப்பட்டதால் 2030க்குள் ஒரு கோடியே 40 லட்சம் பேர் இறப்பார்கள் என்றால் அதில் 45 லட்சம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள் என ‘லான்சட்’ சுட்டிக்காட்டுகிறது. சரி... இந்த உதவிக்காக எவ்வளவு செலவு செய்தது?சென்ற வருட கணக்குப்படி ரூ.68 ஆயிரம் கோடி.
டி.ரஞ்சித்
|