ஆண்கள் நிஜமாகவே பாவம் சார்!



‘‘எவ்வளவு முயற்சி பண்ணியும் உங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறந்திருக்கு... போயும் போயும் ஆம்பள பிள்ளையா பிறந்துட்டியேடா..?’’

இப்படியான வசனங்களுடன் ஆண்களுக்கான குரல் கொடுத்தது முதல் டீசர். தற்போது மொத்த படமும் ஆண்களின் பிரச்னையை பேசும் என்கிறார் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கலையரசன் தங்கவேல்.

ஆண் பாவம் தெரியும்... ஏன் அது பொல்லாதது?

ஓர் இளைஞர் திருமணத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் அந்த ‘ஆண் பாவம்’ படம். அந்தக் கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்கிறதுதான் இந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’. என்னுடைய நண்பர்தான் சிவக்குமார் முருகேசன். இப்போ எஸ்கே ப்ரொடக்‌ஷனில் ‘தாய்க்கிழவி’ படத்தை இயக்கி முடிச்சிருக்கார். 

அவரும் நானும் சேர்ந்து எங்களைச் சுத்தி இருந்த நண்பர்கள் வாழ்க்கையில் என்னென்ன நடந்துச்சோ அதை மையமாக வைத்துதான் இந்தக் கதையையும் திரைக்கதையையும் எழுதினோம். 

வீட்டில் பார்த்து திருமணம் செய்து கொள்கிற இரண்டு பேர், திருமணத்துக்கு நடுவில இருக்கிற மூணு மாசம் தங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லவங்களா காண்பிக்க முயற்சி செய்துகிட்டே இருப்பாங்க. அந்த மொத்த டெம்ப்லேட்டும் கல்யாணத்துக்குப் பிறகு உடையுது. பிறகென்ன என்பதுதான் கதை.

ஆண்கள் பாவம் என கதை எழுதினால், தாய்க்குலங்கள் ஓட்டு கிடைக்காதே?

கல்யாணம், குடும்பம், இந்தக் கட்டமைப்பை விரும்புகிற தாய்க்குலங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். ஆனால், தேவையில்லாம எல்லா விஷயத்திலும் பெண்ணியம் பேசினால் என்னவாகும் என்கிறதுதான் கதை. ஆண் ஆதிக்கமும் தவறு, பெண் ஆதிக்கமும் தவறு. கணவன் - மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து சீராக இழுத்தாதான் திருமண வாழ்க்கை என்னும் வண்டி நகரும். 

மீண்டும் ‘ஜோ’ படத்தின் ரியோ - மாளவிகா மனோஜ் ஜோடி..? 

கதைக் கரு ரியோதான். இதுவரையிலும் பெண்கள் புலம்பிதான் கேட்டிருக்கோம். ஆனால், மொத்த ஆண் வர்க்கமும் புலம்பினால் எப்படி இருக்கும்? அந்த பாத்திரத்தில் ரியோ.
ஜோ படத்தில் உருகி உருகி காதலித்த இரண்டு பேரும் இந்தப் படத்தில் அப்படியே எதிரும் புதிருமாக சண்டை போட்டுக்குவாங்க. ஒரு கட்டத்துக்கு மேல நமக்கே ரியோ மேல பரிதாபம் வந்திடும். இந்தக் கதாபாத்திரத்தை அற்புதமா செய்திருக்கார் ரியோ. 

மாளவிகாவும் அப்படித்தான். கண்களிலேயே பல உணர்வுகளை கொட்டி நடிக்கிற நடிகை. தமிழ் தெரிஞ்ச நடிகை வேணும்னு கறாராக இருந்தேன். ஒரு சிலர் தேர்வானாங்க. ஆனா, தேதி கிடைக்கலை. அப்பதான் மாளவிகாவின் தமிழ் இப்போ எப்படி இருக்கும்னு கூப்பிட்டு பேசினோம். இந்தக் கதைக்கு டப்பிங் அவங்கதான். 

நண்பர் விக்னேஷ்காந்த், ஏ.வெங்கடேஷ் சார், ஸ்டில்ஸ் பாண்டியன் சார்னு பலர் முக்கியமான ரோல் செய்திருக்காங்க. ஜென்சன் திவாகர் சார், அசிஸ்டென்ட் வக்கீல் கேரக்டரில் அதிரடியான ஒரு ரோல் செய்திருக்கார். ‘மண்டேலா’ ஷீலா ராஜ்குமார், ரியோ, மாளவிகாவை அடுத்து ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் செய்திருக்காங்க.

‘ஜோ’ படம் இந்த அளவுக்கு பேசப்பட சித்து குமாருடைய மியூசிக்கில் ரிலீசான ‘உருகி உருகி...’ பாட்டுதான் காரணம். இந்தப் படத்திலும் அவருடைய பாட்டெல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எடிட்டர் கே.ஜி. வருண். சினிமாட்டோகிராபி மாதேஷ் மாணிக்கம். இதுதான் அவருக்கு முதல் படம். 

பெண்ணியம், பெண் சுதந்திரம்... உங்கள் பார்வையில் என்ன?

திருமண வாழ்க்கையைப் பொருத்தவரை ஆண் பெண் இரண்டு பேரும் சமம். ஒருவருக்கொருவர் குடும்ப பொறுப்பை புரிஞ்சு நடந்துக்கணும். எல்லா இடத்திலும் பெண்ணியம் பேச முடியாது, எல்லா இடங்களிலும் ஆண் ஆதிக்கமும் கூடாது. எங்கே கணவன், ஆணாக இருக்கணுமோ அங்கே இருக்கணும். 

அதேபோல் எங்கே மனைவி, பெண்ணாக இருக்கணுமோ அப்படி இருந்தாதான் குடும்பம் சீராக நடக்கும். அதைப்போல் பெண் சுதந்திரமும் பெண்ணியமும் ஆண்கள் செய்கிற அத்தனை தவறையும் செய்யறதுக்கு கிடையாது. எது தவறுனு பேச ஆரம்பிச்சிட்டா ஆண் பெண் பாரபட்சமே கிடையாது. ரெண்டு பேர் செய்வதும் தவறுதான். 

பெண்களுக்கான உரிமை என்ன, எது உண்மையான பெண்ணியம் என்கிற புரிதலே இல்லாம நிறையப் பெண்கள் குடும்பத்துக்குள்ள சண்டைகளை இழுத்து விடுறாங்க. அதைப் போல் ஆண்களும் பெண்களின் உரிமை என்ன என்பது புரியாமல், அவங்களுக்கும் ஸ்பேஸ் வேணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரெண்டு பேருமே ஏதோ ஒரு வகையில குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டாக்கிக்கிட்டே இருக்காங்க. 

வழக்குகளில் கூட பெண்களுக்காக இருக்கும் சட்டங்களை எப்படி பெண்களே தவறா பயன்படுத்தறாங்க என்பதையும் பேசியிருக்கோம்.நல்லா யோசிச்சு பாருங்க... நம்ம அம்மாவும் அப்பாவும் இப்படி ‘என்னுடைய உரிமை... என் வாழ்க்கை’ என பேசி நாம பார்த்ததே கிடையாது. அப்பா கொஞ்சம் அதிகமா செலவு செய்யும்பொழுது கண்களாலேயே அம்மா மிரட்டுவாங்க. 

அதேபோல அம்மாவை அப்பா, தானாக முன்வந்து ப்ரடெக்ட் செய்றதையும் பார்த்திருப்போம். எங்கேயும் இது என் உரிமை, என் வாழ்க்கை, என் சந்தோஷம் இப்படி சண்டை போட்டு நாம பார்த்ததே கிடையாது. 

அவங்களுக்குள்ளேயும் ஆணாதிக்கம் இருந்துச்சு; பெண்ணுரிமை இருந்துச்சு. ஆனால், எந்த அளவுக்கு இருந்துச்சு... எந்த மீட்டரில் அவங்க அதை செயல்படுத்தி குடும்பத்தை நடத்தினாங்க என்பதையும் சேர்த்துதான் இந்தப் படம் பேசும். அதற்காக ஒரு பெண்ணை அடிமைப்படுத்தி வாழும் ஆணுக்கு நிச்சயம் இந்தக் கதை ஆதரவு தராது.ஒரு முக்கிய விவாதத்தை இந்தப் படம் தொடங்கி வைக்கும், அது உறுதி.

ஷாலினி நியூட்டன்