மாணவர்கள் vs போலீஸ்!



‘‘சினிமா எனக்கு பிடிக்கும். சினிமா வழியாக சமூகத்துக்கு பல நல்ல விஷயங்களை சொல்ல முடியும் என்பதால் சினிமாவுக்கு வந்தேன்...’’ என்கிறார் அறிமுக இயக்குநர் த.ஜெயவேல். 
இவர் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 

படம் எதைப்பற்றி பேசுகிறது?

மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. சமூக அக்கறையுடன் துணிச்சலாக ஒரு விஷயத்தை சொல்லியுள்ளேன். இன்றைய சூழ்நிலையில் சமூகத்துக்கு அவசியமான படம். குடிசைத் தொழில் செய்கிறவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில கஷ்டங்களைப் பற்றி சொல்லி உள்ளேன். அது என்ன மாதிரி குடிசைத்தொழில் என்பது சஸ்பென்ஸ். 
ஒரு வரியில் கதையைச் சொல்வதாக இருந்தால் மூன்று மாணவர்கள் ஒரு குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள். படிக்கும் வயதில் ஏன் அவர்கள் குற்றச் செயலைச் செய்தார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளேன்.

ஹீரோ யார்?

மூன்று சிறுவர்கள் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஆண்டனி கேரக்டரில் பூவையார், ராம் கேரக்டரில் அஜய் அர்னால்ட், அப்துல் கேரக்டரில் அர்ஜுன் நடிக்கிறார்கள். 
பூவையார் கேமரா அனுபவம் உள்ளவர் என்பதால் சொன்னதை மிக அழகாகச் செய்தார். மற்ற சிறுவர்களிடம் எப்படி வேலை வாங்கப்போகிறோம் என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர்களும் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்கள். 

படத்தோட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சவுந்தரராஜா நடிக்கிறார். கான்ஸ்டபிள் கருடன் என்ற கதாபாத்திரத்துல வரும் அவருடைய ஆக்ட்டிங் மிரட்டல் ரகம்னு சொல்லலாம்.  

மற்ற வேடங்களில் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, வினோதினி, சாம்ஸ், ரமா, வனிதா விஜயகுமார் என பலர் இருக்கிறார்கள்.
டி.ஆர்.கிருஷ்ண சேத்தன் மியூசிக் செய்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்தவர். பாடல்கள், பின்னணி இசை என இரண்டுமே பேசப்படுமளவுக்கு பிரமாதமான மியூசிக் கொடுத்தார்.  

எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சீனியர் கேமராமேன். எனக்கு முதல் படம் இது. ஈகோ பார்க்காமல் அவரிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ். முதல் பட இயக்குநரான என்னை நம்பி தயாரிக்க முன்வந்தார்.  

படத்துல என்ன மெசெஜ் சொல்லப்போறீங்க?

தெரிஞ்ச முகங்கள் இல்லையே, எதுக்கு இந்தப் படம் பார்க்கணும்னு கேட்பாங்க. இந்தப் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே என்று பார்க்காதவங்க ஃபீல் பண்ணுவாங்க. அப்படி ஒரு அழுத்தமான விஷயம் சொல்லியுள்ளோம்.

உங்களைப்பற்றி சொல்லவே இல்லையே?

எனக்கு சொந்த ஊர் சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளூர். படிச்சது ஐடிஐ. வெல்டராகத்தான் வாழ்க்கை ஆரம்பமாச்சு. சினிமா பிடிக்கும் என்பதால் அந்தக் கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்தேன். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை. ஷார்ட் ஃபிலிம் செய்து சினிமாவை கற்றுக்கொண்டேன். ‘வடபழனி டிப்போ’, ‘மெளன மின்னல்’, ‘மோடி மஸ்தான்’ போன்ற ஷார்ட் ஃபிலிம்கள் பேசப்பட்டன.

எஸ்.ராஜா