மமிதா... டிரீம் கேர்ள் ஆகிட்டா!
‘‘என்னை விட பெட்டரான பொண்ணு உனக்குக் கிடைப்பா... இப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்னா உனக்கு பெட்டர் பொண்ணு நான்தான்...’’ இப்படி படம் முழுக்க கேஷுவல் ஸ்டைல், அசால்ட் நடிப்பு, பளிச் பற்கள் தெரிய கள்ளம் கபடமில்லாத சிரிப்பு என ‘பிரேமலு’ படத்தில் சுண்டி இழுத்த மமிதா பைஜு, இப்போது ‘டூட்’ வழியாக 2கே கிட்ஸின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
 ஒரே படத்தில் மொத்த தென்னிந்தியாவையும் கவர்ந்துவிட்டீர்களே?
என்னுடைய கனவு மட்டுமல்ல, என்னுடைய குறிக்கோளும் இதுதான். மறைமுகமாக என் குடும்பம் எனக்கு சவால் வைச்சிருந்தாங்க. நான் சினிமால நடிக்கறதுல அவங்களுக்கு விருப்பமில்ல. ஆனாலும் தடுக்கலை. ‘உன் இஷ்டம்’ என்கிற மாதிரி வேண்டா வெறுப்பாகத்தான் ஓகே சொன்னாங்க. இதை நானே சவாலாக எடுத்துக்கிட்டேன். ‘நான் எடுத்த முடிவு சரி’ன்னு அவங்கள நம்ப வைக்கணும். அதற்கான முயற்சியில இப்ப வெற்றி கிடைச்சிருக்கு.
 சொந்த ஊர் கேரளா, கோட்டயம், கிடாங்கூர். அப்பா டாக்டர் பைஜு கிருஷ்ணன், அம்மா மினி. செம படிப்ஸ் குடும்பம். நானும் கிடாங்கூர் ஹைஸ்கூல்ல படிச்சேன். சைக்காலஜில இளங்கலை படிச்சிருக்கேன். எப்படியாவது ஒரு மாஸ்டர் டிகிரியும் வாங்கிடணும். அப்பதான் வீட்டில் இன்னமும் சந்தோஷப்படுவாங்க.
 சைக்காலஜி ஸ்டூடண்ட் சினிமாவில் எப்படி?
சின்ன வயதிலிருந்தே சினிமா மேல ஆர்வம். சில குட்டிக் குட்டி ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிச்சேன். அதைத் தொடர்ந்து வந்த படம்தான் ‘சர்வோப்பரி பலக்கரன்’ மலையாளப் படம். அதைத் தொடர்ந்து வரிசையாக பல படங்கள்.நிறைய படங்களில் தங்கச்சியா நடிச்சிருக்கேன். ‘கோ-கோ’ மலையாளப் படம் தமிழில் என்னை அறிமுகம் செய்தது. ‘பிரேமலு’ இண்டஸ்ட்ரி ஹிட்.
100 கோடி கிளப் கேர்ள்?
கனவு மாதிரி இருக்கு. என் குடும்பம் இப்ப ஹேப்பி. எங்க குடும்பத்தில் இதற்கு முன்பு யாருமே சினிமால கிடையாது. இப்ப இதில் பிழைச்சிப்பேன்னு நம்பறாங்க. முக்கியமா கதை நல்லா இருந்தா கடல் தாண்டி எங்க போனாலும் ஜெயிக்கும்னு புரிஞ்சுகிட்டேன். மலையாளம் தாய்மொழி, தமிழ் எனக்கு தெரிஞ்ச நெருக்கமான மொழி. இந்தி, தெலுங்குதான் இன்னும் நிறைய கத்துக்கணும்.
கனவு கதாபாத்திரம்..?
எல்லா மொழிகளிலும், எல்லா திறமையான படைப்பாளிகள், நடிகர்கள் கூடவும் நடிக்கணும். இவரைப் பிடிக்கும், இவர் இயக்கத்தில் நடிக்கணும்னு என்னுடைய வட்டத்தை சுருக்கிக்க விரும்பலை. எந்த மொழி கட்டுப்பாடும் இல்லாம நடிக்கணும். வித்யாசமான கேரக்டரில் நடிக்கணும்.
தமிழ் சினிமா எப்படிப்பட்ட வெல்கம் கொடுத்திருக்கு ?
‘பிரேமலு’வுக்கு முன்பே ஜி.வி.பிரகாஷின் ‘ரிபெல்’ ஆஃபர் வந்துடுச்சு. எனக்கு ஜி.வி.பிரகாஷ் மியூசிக் ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே ஏத்துக்கிட்டேன். என்ன... இதற்கு முன்பே ஒரு பெரிய படம் மூலமா நான் அறிமுகமாகியிருக்க வேண்டியது. அதிலும் சூர்யா சார் காம்போவில். ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவிடுச்சு. இருந்தாலும் எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு மீண்டும் நடக்கும்னு காத்திருக்கேன்.
தமிழ் ரசிகர்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கு நன்றி. எங்க போனாலும் கொண்டாடுறாங்க. இன்னொரு மொழியில் ஒரு படம் ஹிட்டாவது பெரிய விஷயம். அதிலும் தீபாவளி ரிலீஸ் ரேசில் என் படமும் இருந்தது சந்தோஷமா இருக்கு.
உங்க அடுத்தடுத்த படங்கள்..?
‘டூட்’ வைப்பில் இருக்கேன். இனிமே கவனமாகத்தான் அடுத்த அடி எடுத்து வைக்கணும். ஒரு மிகப்பெரிய படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். அப்புறம் சூர்யா சார் கூட அவருடைய 46வது படம், தனுஷ் சார் கூட அவருடைய 54வது படம்... பிறகு மலையாளத்திலும் ஒரு சில பெரிய ப்ராஜெக்ட்ஸ் போயிட்டு இருக்கு.l
ஷாலினி நியூட்டன்
|