சிறுகதை - கள்ளூரப் பார்க்கும் பார்வை..!



இன்று அவளின் பிறந்த நாள். இரண்டு நாளில் கார்த்திகை தீபமும் வரப் போகிறது. ஆனாலும் வீடு அமைதியாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே இப்படித்தான்.

நிரஞ்சனும் வர்ஷாவும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் போய்விட காமாட்சி ஓய்வெடுக்கவும் பொன்னி கடைக்கும் போய்விட, இந்த அமைதியில் மனம் தத்தளித்து எங்கெங்கோ தறிகெட்டு ஓடியது.
‘காத்திருப்பாய்தானே?’

ஏழு வருடங்களுக்கு முன்னே இதே நாளுக்கு முதல்நாளில் காதருகே கனிந்த குரல் இன்றுமே அதே வெதுவெதுப்புடனும் மீசை குறுகுறுப்புடனும் கேட்டது. இப்போதும் முகம் சிவந்து போய் விட்டது.அவள் காத்துக் கொண்டுதானிருக்கிறாள். அவன்தான் வரக்காணோம். அன்றைக்கு அவன் அவசரமாய் கொல்கத்தா புறப்படுகிற சமயம். 

கோயிலுக்குப் போயிருந்தாள். மறுநாள் அவளின் பிறந்த நாள். அப்பா இருந்தவரை எல்லாமே குதூகல கொண்டாட்டம்தான்.அப்பா இறந்ததுமே அண்ணி முகம் காட்ட ஆரம்பித்தாள். பேச்சு ஒவ்வொன்றும் கத்தி போல் விழுந்தது. அப்போதுதான் அப்பாவின் நண்பர் மூலம் கேர்டேக்கர் வேலைக்காக இங்கே வந்து சேர்ந்தாள்.

அம்மா, தன்னை கவனித்துக் கொள்வதாகவும் கவலைப்பட வேண்டாமென்றும் சொன்னதோடு ‘கவனமாக இரு. சம்பளத்தை சேமித்து வை. கல்யாணத்திற்கு உதவும். அண்ணன் செய்ய மாட்டான். புத்தியாய் பிழைத்துக் கொள்’ என்று கூறிவிட்டாள். வருடமொருமுறை போய் பார்த்து விட்டு வருவாள். மூன்று வருடங்கள் முன்பு அம்மா விஷக்காய்ச்சலில் இறந்து போய்விட அண்ணன் வீட்டு பாதையே மறந்து போய்விட்டது. அண்ணியும் அவளை ‘இரு’ என்றெல்லாம் சொல்லவுமில்லை. அண்ணன் கண்டும் காணாமல் நழுவி விட்டான்.

இங்கேயே தங்கியுமாகி விட்டது. முதலில் தட்டுத்தடுமாறியவள் குழந்தைகளுடனும் வீட்டுடனும் பொருந்திப் போனாள். வீட்டு எஜமானி காமாட்சியும் அன்பால் நிறைத்தாள். குழந்தைகளும் ஒட்டிக் கொண்டு விட சுலபமானது. காமாட்சியின் இளைய மகன் மனுரஞ்சனாலும் எந்த பிரச்னையுமில்லை.

அப்படித்தான் நினைத்திருந்தாள்... அந்த நாள் வரும் வரை!
பிரகாரம் சுற்றிவிட்டு வந்து குளத்தின் படித்துறையில் உட்கார்ந்தாள். அருகே நிழல் தெரிய நிமிர்ந்து பார்க்க மனுரஞ்சன். 

‘ஏதும் பிரச்னையோ வீட்டில்... இவரே தேடி வந்திருக்கிறாரே’ என்று பதறியெழ...
‘‘உட்கார் சந்தியா! உன் கிட்டே ஒரு விஷயம் பேசணும்...’’ 
‘‘எ... எ... என்ன என்ன பேசணும்?’’

இத்தனை நாளாகியும் மனுரஞ்சனுடன் அத்தனை பேச்சு வார்த்தையில்லை. குழந்தைகள் படிப்போ, காமாட்சியின் ஹெல்த் பற்றியோ மட்டுமேதான் பேசியிருக்கிறாள். அதையுமே விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போதென்ன புதிதாக..?

சிலசமயம் அவனுடைய பார்வை இவளை சுவாரஸ்யமாகத் தொட்டுத் தொடரும். அம்மாதிரியான வேளைகளில் இவள் கவனமாய் நழுவிவிடுவாள். ஆனால், மனசு ஒருமுறை அந்த வீச்சைத் தாங்கமாட்டாமல் பூத்து உதிரும். ‘‘சந்தியா! நேரே விஷயத்துக்கே வரேன். நாம கல்யாணம் பண்ணிக்கிடலாமா?’’
‘‘என்ன?’’அவள் எழுந்து நின்றே விட்டாள்.

‘‘ஹேய்! எதுக்கு இத்தனை பதட்டம்? கல்யாணம் பண்ணிக்கலாமான்னு தானே கேட்டேன்? நான் என்னவோ ஓடிப்போலாமான்னு கேட்டாமாதிரி பயந்து போய் நிக்கிறே! உண்மையாத்தான் சொல்றேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னைப்போல ஒருத்தி என் வாழ்க்கையிலே வந்தா  நல்லாயிருக்கும்ன்னு தோணுச்சு. அதான் நேராவே கேட்டேன்...’’
அவளுக்கு காரணமே தெரியாமல் முணுக்கென்று கண்ணீர் வந்தது.

‘‘சந்தியா நான் கட்டாயப்படுத்தலை. உன் சம்மதம் தெரிந்தால் அம்மாகிட்டே சொல்லிட்டு மேலே விஷயத்தை கொண்டு போலாம்ன்னு...’’
‘‘...’’‘‘உன்னைப் பார்த்ததுமே பிடிச்சதுன்னு சொல்ல மாட்டேன். அம்மா அப்பா இல்லாத என் அண்ணன் குழந்தைகளை கையாள்ற விதம்... அம்மாவை பார்த்துக்கிடுற பாசம்... பொறுமை... இதெல்லாம்தான் ஈர்த்தது. உனக்கு ஓகேன்னா நான் அதிர்ஷ்டசாலி...’’அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். மாநிறம். நல்ல உயரம். திருத்தமான முகம். எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும் சின்னப் புன்னகை. வெளிநாட்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் தூக்கியெறிந்து விட்டு குடும்பத்துக்காக இங்கேயே வேலை தேடிக் கொண்டான். நிதானமாக இருப்பான். அதே சமயம் தன் முடிவுகளையும் அழுத்தமாகக் கூறிவிடுவான்.

‘வேண்டாம்’ என்று கூறி ஒதுக்க காரணம் ஏதுமில்லைதான். அதிலும் நேரடியாக திருமணத்துக்கு சம்மதம் கேட்டது இவளுக்கும் புன்னகையை வரவைத்தது. 
‘‘என்ன மேடம்... ஓகே வா?’’அவளுக்கு கன்னக் கதுப்புகள் சிவந்தன. அவள் தலையாட்டினாள்.
‘‘ஊஹும். வாயினால் சொல்லு. என்னைப் பிடிக்குமா?’’
‘‘பிடிக்கும்!’’
‘‘ஹூர்ரே!’’ என்று கத்தினான். சன்னமாய் விசில் அடித்தான்.

”சரி. ஊருக்குப் போயிட்டு வந்து அம்மாகிட்டே பேசிட்டு உங்க வீட்டுலேயும் பேசச் சொல்றேன். தேங்க்யூ... தேங்க்யூ தியா குட்டி...’’
‘‘தியாவா..?’’“சந்... தியா...’’ அழுத்தமாய் சொன்னான்.அட! இந்த அழைப்பு புதுமையாயிருந்தது. அவளுக்குப் பிடிக்கவும் செய்தது.‘‘ம்... நாளைக்கு உன் பர்த்டே. அப்போ ப்ரபோஸ் பண்ணலாம்னு இருந்தேன். திடீர்ன்னு ஊருக்குப் போற வேலை வந்திடவே முன்னாலேயே சொல்ல வேண்டியதாயிருச்சு. பர்த்டேக்கு எனக்கு கிஃப்ட் ஏதும் இல்லையா?’’அவள் திருதிருத்தாள். 

‘‘சரி போ! நாளைக்கு உன் பிறந்தநாளுக்காக நான் இப்பவே ஒரு பரிசு தரப் போறேன்...’’‘‘அச்சோ... அதெல்லாம் வேண்டாமே...’’‘‘ஷ்! முதல்முறையா காதலைச் சொல்லி கல்யாணத்துக்கே சம்மதம் வாங்கிருக்கேன். இதுதான் நான் ப்ரபோஸ் பண்ணியதும் வரும் முதல் பிறந்த நாள்! பரிசு இல்லாமலா! கண்ணை மூடு...’’கண்ணை மூடிக் கொண்டாள். அவளுக்குமே புது அனுபவம். மனத்துள் ஆனந்தம் அலையடித்தது. காதல் சொல்லி கல்யாணம் பேசியவன் மீது நேசம் பொங்கியது.

அவள் விரலைப்பிடித்து மாட்ட அவள் கண்ணைத் திறந்தே விட்டாள். பூ வடிவில் பொன் மோதிரம். விரலில் பாந்தமாய்...
‘‘அச்சோ... இதென்ன... இதெல்லாம் வேண்டாமே...’’
அவள் அதைக் கழற்றப்போக அவன் கைபிடித்து தடுத்தான். ‘‘இது எப்பவுமே உன் கூடவேயிருக்கணும் தியா. கழட்டாதே...’’
பிறகு அதைக் கழற்றாமல் அதையே பார்த்துக் கொண்டிருக்க...

‘‘தியா! எனக்காகக் காத்திருப்பாய்தானே?’’
விருட்டென்று நிமிர்ந்தாள். ‘‘கண்டிப்பா... காலமெல்லாம் காத்திருப்பேன்...’’அவன் சந்தோஷமாக லேசாக அவளை அணைத்து விடுவித்தான். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பதை மறந்து போய் இருவரும் பேச... வார்த்தைகள் அங்கே தம் வலிமையைக் காட்டின.ஆயிற்று...ஒருமாதம்! அப்படியே ஆறுமாதம்... ஒருவருடம்... இரண்டு... மூன்று... ஏழு வருடங்கள். 

அவன் வரவேயில்லை. அவனைப் பற்றிய செய்திகளுமில்லை. ஆற்றில் வெள்ளம் வந்து பேருந்து கவிழ்ந்ததில் அவன் மூழ்கிப் போய் விட்டான் என்று அவனுடைய அலுவலகம் சொல்லிவிட்டு ஒரு தொகையை தந்துவிட்டு ஒதுங்கிப் போய் விட்டது. வீடு தத்தளித்தது. ஏற்கெனவே மூத்த மகனையும் மருமகளையும் விபத்தில் வாரிக் கொடுத்தாயிற்று. அப்போதே நடைப்பிணமாகி விட்டார் பெரியவர். 

இப்போது இளைய மகனின் உடல்கூட கிடைக்காததில் காமாட்சி மதிமயங்கினார். ஆண் துணையில்லாத வீடு தத்தளித்தது. அதுவரை மனுரஞ்சனை, தன் மகளுக்கு பேசி முடிக்க விரும்பிய காமாட்சியின் அண்ணனும் ஒதுங்கி விட்டார். நிலம் வீடு என்றும் கொஞ்சம் பணம் வங்கியிலுமிருந்ததும் வீடு ஓட உதவியது. இந்த நிமிடம் வரையும் காத்துக் கொண்டுதானிருக்கிறாள் அவள்.

வருவான்! வந்தே தீருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். இன்னும் ஓரிரு நாளில் கார்த்திகை தீபம். ஏழு கார்த்திகை தீபம் போய்விட்டது.

எங்கோ பட்டாசு வெடிக்கிறார்கள். சப்தம் காதைப் பிளந்தது. வாணவேடிக்கையில் வர்ணஜாலமாய் ஜிகினாப் பூக்களாய் நெருப்பு பூத்துச் சிந்தியது. இங்கே மாற்றமேதுமில்லை. பொன்னி மட்டும்தான் பிள்ளைகளிருக்கும் வீடு என பலகாரம் செய்து கொண்டிருக்கிறாள். 

இன்று என்னவோ மனம் படபடத்துக் கொண்டேயிருந்தது. அடிக்கடி உள்ளுக்குள்ளே மனுரஞ்சனின் குரல் ஒலித்தபடியேயிருக்க பொறுமை கட்டவிழ்ந்து... ‘நான் காத்திருக்கிறேனடா... உனக்காக... உன்னைத்தானே காணோம்...’ என்று தன்னைமீறிக் கத்திவிடுவோமோ என்று தோன்றியது.விளக்கேற்றி வைத்து விட்டு இந்த கார்த்திகை தீபமாவது இந்த வீட்டில் மகிழ்ச்சியைக் கொண்டு வருமா... மனம் நெக்கு விட்டது. அமைதியாய் ஏற்றிவைத்த தீபச்சுடரை மனதுள் வாங்கி அமைதி கொடு என்று போராடினாள்.

தியானத்தில் அமர்ந்தாள். எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ? 

யாரோ அழைப்பது போல்... ஏதோ அரவம் கேட்டது. வெளியே வந்தாள்.காமாட்சியின் காலடியில் இரு குழந்தைகளையும் இரு பக்கமும் அணைத்தபடி அ... அஅவ... அவன்ன்ன்... நால்வரும் கண்ணீர் சிந்தியபடியிருக்க கவிதையாய் காட்சி உள்ளுக்குள்ளே இறங்கி அவளைப்புரட்டிப் போட்டது.‘‘மனு... மனு...’’ உடலும் உள்ளமும் பரபரத்தது. அவள் பனிச்சிலையாக உறைந்து விட்டாள்.நிரஞ்சனும் வர்ஷாவும் கேட்பவைகளுக்கு பதில் சொல்ல, காமாட்சி அம்மாள் கதறி அழுதார். தள்ளி நின்றிருந்த பொன்னியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

பேருந்து  பாலம் உடைந்து ஆற்றில் அடித்துப் போக... தண்ணீரில் இழுபட்டு பாறையொன்றில் மோதி சுயநினைவை இழந்து விட்டான். எங்கோ எப்படியோ இழுபட்டு நதியோரக் கிராமம் சேர... கிராமத்தவர்களால் சிகிச்சை தரப்பட்டாலும் அவனுடைய பெயர்கூட ஞாபகமில்லாமல் போனது துரதிர்ஷ்டமே!உடல்நிலை தேறியபின்பு அவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டான். தான் யார்? எந்த ஊர் எதுவுமே புரியாத நிலை என்பது எத்தனை வேதனை.

ஒரு  படகுக்காரனின் உதவியோடு மணிப்பூரின் காங்களா கோட்டை வந்து சேர்ந்தான். அவன் வந்த நேரம் திருவிழாக்காலம். இம்பால் ஏரியில் கேரளா போல படகுப்போட்டி நடக்கும். 
இம்மாதிரி, தான் முன்பே எங்கோ பார்த்திருப்பது நினைவிலாடியது. கூடவே அவ்வப்போது கள்ளூறும் விழிகளிரண்டும் நினைவின் உள்ளூடாகப் பாய்ந்து  புரட்டிப் போட்டது. யாரோ தன்னை அழைப்பது போலவே புரியாத ஒலியாய் மன இடுக்கில் எதிரொலிக்கும்.

அவ்வப்போது சின்னச்சின்ன கூலிவேலை செய்து ரயில் மார்க்கமாக சிறிதுசிறிதாக பயணத்தைத் தொடர்ந்தான். மொழி புரியாததால் பெரும்பாலும் சைகை பாஷைதான். வாய் பேச முடியாதவன் என்று பரிதாபப்பட்டு உதவியோர் பலர். எல்லோருமே நல்லவர்களாக இருக்க முடியுமா என்ன? இவனையும் வெறுத்து அடிபின்னியெடுத்தான் ஒருவன் காரணமேயில்லாமல். மனித மனத்தின் குரூரத்துக்கும் வக்கிரத்துக்கும் காரணம் வேண்டுமா என்ன?

இவனை எட்டி உதைத்ததில் ஒரு விளக்குக்கம்பம் மீது தலை இடிபட ரத்தம் வழிய ஆரம்பித்தது. அந்த வழியே வந்த அந்த ஊர் காவல்துறை வண்டி இவனைக்கண்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தது. காயங்கள் ஆறி வந்த வேளை  கெட்டதில் நல்லதாக இவனுக்கு நினைவு திரும்பியிருந்தது. ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்துவிட்ட ஏழு வருடக்கதையைச் சொல்லி முடித்தான்.

வீடு ஆசுவாசப் பட்டது. சந்தியா பூஜையறைக்குள் நுழைந்தாள். கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. மனசு லேசாகியிருந்தது.திரும்பினாள். சுவரில் சாய்ந்து நின்று கைகளை மார்பில் கட்டிக் கொண்டு ஒருகாலை மடித்து சுவரில் தாங்கியபடி அவளையே பார்த்தான். என்ன நினைத்தானோ, கையை விரித்து நீட்ட அவள் சரண் புகுந்தாள். நெஞ்சில் புதைந்ததில் கண்ணீர் சட்டையை நனைத்தது. உடல் மெலிந்து கருவளையமிட்டு முகமும் நிறமுமே கருத்துப்போய், பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது.

“தியா...’’ 
‘‘ம்ம்...’’
‘‘தியா...’’ 
வேறு பேச்சே இல்லை. மௌனம் மட்டுமே. மௌனம் அத்தனை விஷயங்களையும் சுயாதீனமாகப் பேசியது. மொழியை விழுங்கிவிட்ட மௌனம் அங்கே ரீங்கரித்துக் கொண்டேயிருந்தது. 

வாழ்க்கையைத் தொலைத்தே விட்டோம் என்று விரக்தியிலிருக்கும்போதும் சிரிப்பை மறந்து அழுகையில் தோய்ந்து நிற்கும்போதும் மனதுக்குப் பிடித்த பாட்டு ஒன்று முணுமுணுவென்று கிசுகிசுப்பாய் மனதைத் தேற்றுமே... 

அந்தக்குரல் இம்மாதிரி நேரத்தில் அத்தனை ஸ்பெஷல். அம்மாதிரிதான் மனுவின் தியா எனும் விளிப்பு அவளை படிவம் படிவமாய் அமைதியுறச் செய்தது.
அவள் கையை அவன் விரல்கள் வருடின. நிதானித்தான். வெறுமையான விரல். வேதனையாயிருந்தது.‘‘தியா! மோதிரம் எங்கே?’’

அவள் அவனை விட்டு விலகி தன் கழுத்திலிருந்த சங்கிலியை ப்ளவுஸிலிருந்து இழுத்து வெளியே போட்டாள். அதில் அந்த மோதிரம் கோர்க்கப் பட்டிருந்தது.

அவன் விழிகள் மின்னின.‘‘ஹேய்! இந்த மோதிரத்துக்கு எத்தனை தைரியம் ? என் அனுமதியின்றி...’’அவள் அவன் வாயைப் பொத்தினாள். சன்னச் சிரிப்பின் ரேகை ஓடியது. ஒரு பெரிய பாரம் இறங்கிய நிம்மதி. அவளுடைய நாடியை ஒற்றை விரல் கொண்டு தூக்கியவன், ‘‘நினைவழிந்த வேளையிலும் இதோ இந்த நீள் விழிகள் நினைவின் அடுக்குகளில் இம்சித்தன தியா. இந்தக்  கள்ளூரப் பார்க்கும் பார்வை உள்ளூரப் பாய்ந்து என் ஜீவனை மீட்டுக் கொண்டிருந்தது. இல்லை மீட்டிக் கொண்டிருந்தது...’’அவள் வாய்விட்டுச் சிரித்தாள். 

‘‘மனு நீங்கள் கவிஞராகிட்டீங்க...’’ 
அவனும் வாய்விட்டுச் சிரித்தான். 
புரிந்துகொள்ளுதலும் உணர்ந்து கொள்ளுதலும்தானே நேசத்தின் அடி நாதம். 
இருநாட்களுக்குப் பின்னே...

அந்த வீடே தீபங்களால் நிறைந்து வெளிச்சப் பூக்களால் ஜொலித்தது. காமாட்சியம்மாள், பொன்னியை சமையலறையில் ஏதோ ஏவிக் கொண்டிருந்தார். “ஹேப்பி கார்த்திகை தீபம் தியாக்குட்டீ...’’ மனுரஞ்சன் கண்சிமிட்டினான். நீண்ட வருடங்களுக்குப்பின்னே பெரியவரின் குரலும் சிறியவர்களின் சிரிப்பொலியும் அந்த வீட்டில் கேட்டன!

 - ஜே.செல்லம் ஜெரினா