2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போகுது தம்மாத்துண்டு தீவு!



மத்திய அட்லாண்டிக் கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கூட்டம் கேப் வெர்டே. சுமார் ஆறு லட்சம் மக்கள்தொகையே கொண்டது. அப்படியான ஒரு தீவு நாடு முதல்முறையாக வரும் 2026ம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து நடத்தும் 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஐஸ்லாந்திற்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற இரண்டாவது சிறிய நாடு என்ற பெருமையும் கேப் வெர்டேவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனையை கேப் வெர்டே மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்நாட்டின் அதிபர் ஜோஸ் மரியா நெவ்ஸ், இந்தத் தருணத்தை சுதந்திரம் பெற்ற தருணத்துடன் ஒப்பீடு செய்கிறார். 

எப்படி நடந்தது? 

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள செனகல் நாட்டின் தலைநகர் டக்காரில் இருந்து வான்வழி பயணத்தில் 754 கிமீ தொலைவில் வருகிறது கேப் வெர்டே தீவுக்கூட்டம். மொத்தம் பத்து தீவுகள் கொண்டது இந்தத் தீவு நாடு. இது போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கடந்த 1975ம் ஆண்டு சுதந்திரம் பெற்று தனித் தீவு நாடானது. இந்நாட்டு மக்களான கேப் வெர்டேயர்கள் கால்பந்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். இன்னும் சொல்வதென்றால் குட்டித் தீவு நாடான இதில் குறைந்தது 30 கால்பந்து மைதானங்களாவது இருக்கும். அந்தளவுக்குக் கால்பந்து காதலர்கள் இவர்கள்.
1982ம் ஆண்டு இங்கே தேசிய கால்பந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பிறகு 1986ம் ஆண்டு உலகக் கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா உடன் இணைந்தது. தொடர்ந்து கேப் வெர்டே அணி பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் கலந்துவந்தது. 

கேப் வெர்டே நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் மற்ற நாடுகளின் தேசிய கால்பந்து அணிகளில்  இடம்பெற்று விளையாடுகின்றனர். அதாவது இந்த வீரர்களின் அப்பாவோ அல்லது அம்மாவோ கேப் வெர்டே தீவைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.அந்த வகையில் போர்ச்சுக்கல், ஸ்வீடன், செனகல் எனப் பல நாடுகளில் கேப் வெர்டே வீரர்கள் விளையாடி வந்தனர். அதனால், கேப் வெர்டே அணியைப் பலப்படுத்த வெளிநாடுகளில் வசிக்கும் கேப் வெர்டேயர்களின் வம்சாவளியைச் சேர்ந்த இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

அப்படியாக ‘கேப் வெர்டே’ தேசிய அணி கட்டமைக்கப்பட்டது. தற்போதைய அணியில் உள்ள பல வீரர்கள் பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்கள் ஐரோப்பாவில் பயிற்சி பெறுவதால் இன்னும் சிறப்பாக திறனை வெளிப்படுத்துகின்றனர். 

இந்த நிலையில் கேப் வெர்டே நாட்டிற்கு ஆரம்பத்தில் இருந்தே எப்படியாவது உலகக் கோப்பையில் தகுதி பெற்றுவிட வேண்டும் என்ற தீராக்கனவு இருந்தது. இதனால் கடுமையாக உழைத்து கடந்த 2002ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான முதல்சுற்று தகுதிப் போட்டியில் கலந்துகொண்டது. 

இதில் ஒன்றில் டிராவும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. பின்னர் 2006 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குக்கூட தகுதி
பெறாமல் வெளியேறியது.இதன்பிறகு 2013ம் ஆண்டு முதல்முறையாக ஆப்ரிக்க நாடுகள் கோப்பையில் கேமரூன் அணியை வீழ்த்தியது. இதில் சிறப்பாக ஆடிய கேப் வெர்டே காலிறுதிப் போட்டியில் கானாவுடன் தோற்றுப் போனது. 

இதன்பிறகு ஆப்ரிக்க நாடுகள் கோப்பை, உலகக் கோப்பை தகுதிப் போட்டி என கலந்தபடியே இருந்தது. ஆனால், உலகக் கோப்பைப் போட்டி கானல்நீராகவே தொடர்ந்தது. 
இந்தமுறை அப்படி நடக்கவில்லை. உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலேயே சிறப்பாக ஆடியது கேப் வெர்டே. கேமரூன், மொரீஷியஸ், அங்கோலா உள்ளிட்ட பெரிய நாடுகளை வென்றது. லிபியாவுடன் டிரா செய்தது. 

கடைசியாக தென்ஆப்ரிக்கா அருகே உள்ள ஈஸ்வதினி நாட்டினை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதன்மூலம் தனது நீண்ட நாள் கனவை கேப் வெர்டே நிறைவேற்றி சாதித்துள்ளது. கேப் வெர்டே சாதித்த அதேநாளில் சிங்கப்பூர் அணியிடம் தோற்று 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தொடருக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இந்தியா. இதனால், 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு ஏன் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

முதல் முறையாகத் தகுதிபெற்ற ஜோர்டான் மற்றும் உஸ்பெகிஸ்தான்...

கேப் வெர்டே போலவே இந்த 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்றுள்ளன ஜோர்டானும், உஸ்பெகிஸ்தானும். கடந்த 1953ம் ஆண்டிலிருந்து ஜோர்டான் தேசிய கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. ஆனால், 1986ம் ஆண்டுதான் அந்த அணி ஃபிபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கெடுத்தது.

இதில் எவ்வளவோ முயன்றும் உலகக் கோப்பைக்குள் அந்த அணியால் நுழைய முடியவில்லை. ஆனால்,  இந்தமுறை வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறது ஜோர்டான். நாற்பது வருட போராட்டத்திற்கு முடிவு எழுதியிருக்கிறது.தன்னுடைய முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலேயே ஒமான் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து சிறப்பாக ஆடி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. 

அந்த அணிக்கு கடந்த ஆண்டு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ெமாராக்கோ கால்பந்து வீரர் ஜமால் செல்லமியே இதற்குக் காரணம் எனப் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இதேபோல் பல ஆண்டுகளாக கால்பந்து ஆடிவரும் அணி உஸ்பெகிஸ்தான். மத்திய ஆசிய நாடான இதுவும் இந்தமுறை முதன்முதலாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
 
உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் முன்னிலை வகித்தது உஸ்பெகிஸ்தான். பின்னர் மூன்றாம் சுற்று நடந்தது.
இதில் பத்து போட்டிகளில் ஆறு வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வி என புள்ளிப் பட்டியலில் ஈரானுக்கு அடுத்தபடியாக இரண்டாம்இடம் பிடித்து உலகக் கோப்பை போட்டிக்குள் நுைழயும் கனவை நிறைவேற்றியிருக்கிறது.

பேராச்சி கண்ணன்