கத்தார் தேவதை!



கத்தார் தேசத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளுடன் வந்தவர் ரக்‌ஷனா. ‘மார்கழி திங்கள்’ படத்தில் அறிமுகமானார். தற்போது ‘மருதம்’ வெளியாகியுள்ளது. அடுத்து ‘திரெளபதி 2’. 
‘‘பாரதிராஜா சார் டைரக்‌ஷனில் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் ‘மார்கழி திங்கள்’ படத்தில் நடித்தது பெருமை. அதுமட்டுமல்ல, ‘ஆர்’ வரிசையில் எனக்கு பெயர் வைத்ததும் அவர்தான்!’’ புன்னகைக்கிறார் ரக்‌ஷனா. 

சினிமா அறிமுகம் எப்படி நடந்துச்சு? 

பல ஆடிஷன்களுக்குப் பிறகு ‘மார்கழி திங்கள்’ வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக ஐந்து பேரை ஃபைனல் லிஸ்ட்டில் வைத்திருந்தார்கள். அந்த ஐந்து பேரின் பெர்ஃபாமன்ஸ் வீடியோக்களை வெங்கட் பிரபு சார் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அதிக லைக்குகள் பெறும் ஒருவர்தான் நாயகியாக தேர்வு செய்யப்படுவார் என்பது நிபந்தனை. எனக்கு அதிக லைக் கிடைத்ததால் நாயகியாக செலக்ட் ஆனேன். 

சினிமா அனுபவம் ரொம்ப புதுசாக இருந்தது. அந்த ஒரு நாளுக்காக காத்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பாரதிராஜா சாருடன் நடிக்கும் வாய்ப்பு, மனோஜ் சார் டைரக்‌ஷன், சுசீந்திரன் சார் தயாரிப்பு... என முதல் படம் மறக்க முடியாத அனுபவம். மிகப் பெரிய ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன். 

‘மருதம்’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மா..?

முதலில் ஐந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கஜேந்திரன் சார் சொன்னதும் தயங்கினேன். ஆனால், அது எல்லோரையும் கனெக்ட் பண்ணக்
கூடிய ஸ்கேம் பற்றிய கதை. விவசாயிகளை அதிகம் பாதிக்கக்கூடிய விஷயம். அது எனக்குப் பிடித்திருந்ததால் ‘மருதம்’ செய்தேன். 

‘திரௌபதி 2’..?

இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. ரிச்சர்ட் சார் ஜோடியாக நடிக்கிறேன். திரெளபதியே நான்தான் என்பதால் என்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவம் புரியும்னு நினைக்கிறேன். மோகன்ஜி டைரக்‌ஷன்ல நடித்தது பெரிய அனுபவம். படத்தில் நிறைய சுவாரஸ்யம் இருக்கிறது. ரிலீஸ் டைமில் அது தெரியவரும்.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும்போது நீங்கள் எப்படி தயாராகிறீர்கள்?

ஸ்கிரிப்ட் ரெடியாகும் சமயத்தில் நானும் கலந்துகொள்வேன். இதுவரை நடித்த மூன்று படங்களிலும் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. ‘மருதம்’ படத்தில் அம்மாவாக நடித்தது கொஞ்சம் சவாலாக இருந்துச்சு. ஏனெனில் நான் என்னுடைய அம்மாவைப் பார்த்துதான் வளர்ந்துள்ளேன். மற்ற அம்மாக்கள் எப்படி யோசிக்கிறார்கள், பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாது. 

அதையெல்லாம் அப்சர்வ் பண்ணினேன். ‘மார்கழி திங்கள்’ படத்தில் கேரக்டர் தன்மையை குறித்து நோட்ஸ் எழுதியிருந்தார்கள். நானும் கேரக்டருடைய ஸ்கெட்ச் எப்படி இருக்கும் என்று தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் இந்த மாதிரி பயிற்சியை ஃபாலோ பண்ண முடிகிறது.

சினிமா துறையில் உங்களை அதிகமாக உற்சாகப்படுத்திய தருணம் எது?

ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகு என்னுடைய நடிப்பு பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஆர்வமாக இருக்கும். மறக்க முடியாதது என்றால் ‘மார்கழி திங்கள்’ படத்தில் எனக்கும் பாரதிராஜா சாருக்கும்தான் க்ளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார்கள். டப்பிங் சமயத்தில் பாரதிராஜா சாரிடமிருந்து அழைப்பு. 

‘எங்கே இருக்கிறீங்க, வரமுடியுமா’ என்று கேட்டார். ‘இன்னொரு படப்பிடிப்பில் இருக்கிறேன்’ என்று சொன்னேன். ‘நீ எங்கே இருந்தாலும் பரவாயில்லை. லொகேஷன் அனுப்பு, நான் வர்றேன்’னு என்னைத் தேடி வந்து, ‘க்ளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக பண்ணியிருக்க, சான்ஸே இல்லை’ என்று பாராட்டினார். 

இன்னொரு முக்கியமான விஷயம், அவர்தான் எனக்கு ‘ஆர்’ வரிசையில் ரக்‌ஷனா என்று பேர் சூட்டினார். ‘நான் பேர் வெச்சு அறிமுகப்படுத்தியவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். நீயும் அதுமாதிரி பெரிய படங்கள், பெரிய புகழ் அடைவாய்’ என்று வாழ்த்தினார். அது வாழ்நாளில் மறக்க முடியாது. 

கத்தார் டூ கோடம்பாக்கம்..?

கத்தார் டூ பெங்களூர் என்று சொல்லலாம். பெங்களூரில்தான் டிகிரி முடித்தேன். கத்தாரில் இருக்கும்போது சினிமா ஆசை இல்லை. ஸ்கூல் படிக்கும்போது மோனோ ஆக்டிங் பண்ணுவேன். எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இல்லை. பெங்களூருவில் தியேட்டர் பண்ணினேன். அப்போதுதான் சினிமா ஆசை வந்துச்சு. ஸ்கிரீன் ஆக்டிங் கேரளாவில் கத்துக்கிட்டேன். டிகிரி முடிச்சதும் கேப் எடுத்து நடிக்கப்போகிறேன் என்று வீட்டில் ஒரு வருடம் அவகாசம் கேட்டேன்.

அந்த ஒரு வருடத்தில் ‘புளோரா’ ஷார்ட் ஃபிலிம், சில விளம்பரங்கள் பண்ணினேன். பஸ், ரயில் என டிரிப் அடிச்சு சென்னையில் வாய்ப்பு தேடினேன். அப்போது சோஷியல் மீடியா இல்லை. ஆடிஷன் நடக்கும் இடத்துக்கு நாம்தான் போகணும். அப்போது லாஸ்லியாவுடன் ‘பிரேக்கப்’ ஆல்பத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. அது கோலிவுட்டை புரிஞ்சுக்க யூசாச்சு.l

எஸ்.ராஜா