ஏழை மாணவர்கள் போட்டித் தேர்வுக்குத் தங்கிப் படிக்க இலவச கோச்சிங் சென்டர்...
ஒரு கிராமத்து இளைஞரின் நல்முயற்சி
காலநிலை மாற்றத்தால் இயற்கையைப் பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும் இன்று மக்களிடையே பரவலான விழிப்புணர்வு வந்துள்ளது. இத்தகைய விழிப்புணர்வு பணிகளை நல்லுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள் பலர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் இந்தக் கட்டுரையின் நாயகன், ‘பரணம்’ பழனிசாமி. 37 வயதான இந்த இளைஞர். சமீபத்தில் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 710 கிலோமீட்டர் தூரம் சாதாரண சைக்கிளில் பயணித்து நல்லதொரு விழிப்புணர்வை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்.  இது ஒரு பக்கம் இருந்தாலும்கூட, அதைவிட பழனிசாமி செய்துவரும் தன்னார்வ கல்விப் பணிதான் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம். தன்னுடைய சொந்தக் கிராமத்தில் ஏழை மாணவ - மாணவிகள் போட்டித் தேர்வுக்குப் படிப்பதற்காகவே ஓர் இலவச கோச்சிங் சென்டரை நடத்தி வருகிறார் இந்த இளைஞர். இதில் சிறப்பு என்னவென்றால் இந்தக் கோச்சிங் சென்டருக்காக தன்னுடைய சொந்த நிலத்தில் நண்பர்களின் உதவியுடன் ஒரு கட்டடத்தைக் கட்டி வருகிறார் என்பதுதான்.
அதுமட்டுமல்ல, இதில் தமிழகத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்குத் தயாராகும் எளிய பின்புலத்தைக் கொண்ட மாணவ - மாணவிகள் எவரும் தங்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். எல்லாமே இலவசம் என்கிறார் பழனிசாமி.‘‘அரியலூர் மாவட்டத்துல இருக்கிற சின்ன கிராமம் பரணம். நான் அஞ்சாவது படிக்கும்போதே அப்பா தவறிட்டார். அம்மாதான் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தாங்க. அதனால் படிப்புல நல்லா கவனம் செலுத்தினேன்.
பத்தாம் வகுப்புல 452 மார்க் வாங்கினேன். 12ம் வகுப்புல 949 மார்க் எடுத்தேன். அப்புறம், ரெண்டு வருஷம் திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடிச்சேன். பிறகு, வேலை வாய்ப்பு இல்லாததால் சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தேன்.அப்படியே ஆறாவது படிக்கிற மாணவர்கள்ல இருந்து 12வது படிக்கிற மாணவர்கள் வரைக்கும் இலவசமாகவே டியூஷன் எடுத்தேன். ஏன்னா, நான் பல சிரமங்களுக்கு இடையில்தான் படிச்சேன். அதனால் என்னை மாதிரி யாரும் கஷ்டபடக்கூடாதுனு நினைச்சேன்.
இந்நேரம் என்னுடைய ஆசிரியர் ஒருவர், ‘நீ நல்லா மார்க் வாங்கியிருக்க. விளையாட்டுலயும் சிறப்பாக இருக்க. அதனால், போலீஸ் வேலைக்குப் போ’னு சொன்னார். நான் அப்ளிகேஷன் வாங்கக்கூட காசு இல்லாமல் இருந்தேன்.பிறகு அவரே, ‘உனக்காக நானே விண்ணப்பிக்கிறேன்’னு திருச்சி போய் விண்ணப்பம் வாங்கிட்டு வந்து நிரப்பி அனுப்பினார். அப்படியாக 2012ம் ஆண்டு காவலர் தேர்வுக்கு எழுதினேன். 80க்கு 72 மார்க் எடுத்து மாவட்டத்துல முதலாவதாக வந்தேன்.
பிறகு ஆயுதப்படையிலும், எஸ்பி அலுவலகத்திலும் ஐந்தாண்டுகள் வேலை செய்தேன். இதனால் என்னால் மேற்கொண்டு ட்யூஷனை தொடர முடியல. அதனால், எப்படியாவது வேறு தேர்வுக்குப் படிச்சு பாஸ் பண்ணணும்னு முடிவெடுத்தேன்.ஏன்னா, மாணவர்கள் கஷ்டப்படக்கூடாதுனு தோணுச்சு. ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக்குப் படிச்சிருந்ததால 2013ல் டெட் தேர்வுல பாஸ் பண்ணினேன். ஆனா, வெயிட்டேஜ் மார்க் கொண்டு வந்ததால் என்னால போக முடியல.
எனக்கு எப்பவுமே சப்போர்ட் பண்ணினது ஆசிரியர்கள்தான். அதனால்தான் நானும் ஆசிரியராக வரணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்கல. இதுக்கிடையில் கரஸ்ல பி.எஸ்சி மேத்ஸ் பண்ணி முடிச்சேன்.
பிறகு, 2015ல் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்குத் தேர்வெழுதினேன். இதற்கு 2017ம் ஆண்டு ரிசல்ட் வந்தது. இதுலயும் மாவட்ட அளவில் முதலாவதாக வந்தேன். அப்படியாக நான் படிச்ச எங்கக் கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே ஆய்வக உதவியாளராக வேலை கிடைச்சது.
2017ம் ஆண்டு ஏப்ரல் மாசம் ஸ்கூல்ல வேலைக்குச் சேர்ந்ததுமே அடுத்தகட்ட சேவையைத் தொடங்கிட்டேன். அந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி அப்துல் கலாம் அய்யா பிறந்தநாளில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான கோச்சிங் சென்டரை ஆரம்பிச்சேன்...’’ என்கிறவர், அதற்கான காரணத்தைத் தொடர்ந்தார்.
‘‘நான் போட்டித் தேர்வுக்குப் படிக்கும்போது மிகுந்த சிரமப்பட்டேன். குரூப் 1 தேர்வில் பாஸாகி ஒரு அதிகாரியாக வரணும்னு கனவுடன் சென்னைக்குப் போனேன். ஆனா, அங்கிருந்த கோச்சிங் சென்டர்கள்ல என்னால் பணம் கட்டமுடியல. அதனால் வந்த சில நாட்களிலேயே ஊருக்குக் கிளம்ப வேண்டியதாகிடுச்சு.
அப்போ, பஸ்ல போகும்போது என்னை மாதிரி எவ்வளவோ ஏழை எளிய மாணவர்கள் இருப்பாங்களேனு தோணுச்சு. அவங்கெல்லாம் போட்டித் தேர்வுக்கு எப்படி படிப்பாங்கனு யோசிச்சேன். அதனால் முதல்ல கோச்சிங் சென்டரை ஆரம்பிக்கணும்னு ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே முடிவெடுத்திட்டேன்.
பிறகு என் நண்பன் இளவரசனிடம் ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சு இலவசமாகத் தேர்வுக்குப் பயிற்சி கொடுப்போம்னு சொன்னேன். அவரும் அரசுப் பணியில்தான் இருக்கார். என்னுடைய எண்ணத்திற்கு ஓகே சொன்னார். பிறகு இன்னும் சில நண்பர்கள் உதவினாங்க. எல்லோரும் சேர்ந்து இந்தக் கோச்சிங் சென்டரை ஆரம்பிச்சோம். 2017ம் ஆண்டிலிருந்து இப்ப வரை இலவசமாக நடத்திட்டு வர்றோம். இதற்கு ‘ஆரஞ்சு அம்மாள் நல்வழி இலவசப் பயிற்சி மையம்’னு என் அம்மா பேரை வச்சு நடத்திட்டு இருக்கேன். நாங்க டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, போலீஸ் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.கடந்த எட்டு ஆண்டுகள்ல இங்கிருந்து 50க்கும் மேற்பட்டோர் அரசுப் பணிக்குப் பாஸ் பண்ணி போயிருக்காங்க. குறிப்பா, எஸ்ஐ, வனத்துறை, நீதித்துறைனு போயிருக்காங்க.
இவங்களுக்கு வகுப்புகளை தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் எடுக்கிறாங்க. இப்போதைக்கு ஆன்லைன்ல வகுப்புகள் எடுக்கறோம்.
இதன்பிறகு இங்கே வந்து தங்கி படிக்க வசதி செய்யலாமேனு தோணுச்சு.
இந்த ஐடியாவை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அப்படியாக என்னுடைய சொந்த நிலத்தை ஒதுக்கினேன். நண்பர்கள் சிமெண்ட், ஜல்லி, மணல்னு பொருட்களாக வாங்கிக் கொடுத்து உதவினாங்க. அப்படியாக இப்ப ஒரு கட்டடம் கட்டியிருக்கோம். இன்னும் சில வாரங்களில் இந்தக் கட்டடம் திறப்பு விழா காணவிருக்கு. இதில் 50 முதல் 60 பேர் வரை தங்கிப் படிக்கலாம். ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனிக் கட்டடம் என்பது ஐடியா. முதல்கட்டமாக பெண்களுக்குக் கட்டடம் கட்டி முடிக்கப் போறோம். இப்போ, ஆன்லைன் வகுப்புகள் அதிகாலை 4 மணியிலிருந்து 6.30 மணி வரை எடுத்திட்டு இருக்கோம். இந்த கட்டடம் திறந்த பிறகு நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் எடுக்கப் போறோம்.
இப்போ, ஆன்லைன் வழியே எல்லா மாவட்டத்துல இருந்தும் படிக்கிறாங்க. இவங்க கூகுள் மீட் மூலம் கலந்துக்கிறாங்க. இதுக்கு தினமும் பாஸ்வேர்டு சொல்லிடுவோம். ஆப்சென்ட் ஆகாமல் கலந்திருக்கிறவங்களுக்கு மட்டுமே பாஸ்வேர்டு கொடுப்போம்.
ஒருநாள் லீவு போட்டாலும் கொடுக்கமாட்டோம்’’ என்கிறவர், சைக்கிள் பயணம் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘இதுக்கிடையில் நான் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரிசெய்ய இயற்கையை பாதுகாக்கவும், மரம் வளர்க்கவும் நிறைய பிரச்சாரங்கள் செய்திட்டு வந்தேன். 43 மலைப்பயணங்களும் செய்திருக்கேன்.
அப்படியாக பிரபஞ்சத்தைப் பாதுகாக்கணும்னு வலியுறுத்தி சென்னை அண்ணா சமாதியில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தர் மணிமண்டபம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். இதுக்கு மொத்தம் எட்டு நாட்கள் எடுத்தது.
போகும் வழியில் இயற்கையை பாதுகாக்கணும்னா மரங்களை நட்டு வளர்க்கணும்னு விழிப்புணர்வு செய்திட்டு போனேன். கடந்த 2021ல் என் அம்மா இறந்துட்டாங்க. இப்போ, என் மனைவியும் குழந்தைகளும்தான் என்னை ஊக்கப்படுத்துறாங்க.இயற்கையை பாதுகாத்தால்தான் நாம் எல்லோருமே நல்லாயிருப்போம்...’’ என ஆத்மார்த்தமாகச் சொன்னார் பழனிசாமி.
பேராச்சி கண்ணன்
|